மறதி இனிது - வ.வடிவழகையன்

மறதி இனிது - வ.வடிவழகையன்
 
றதியொரு நோயென்று மருந்தெடுக்க முயல்வோரே
மறதியொரு பிணியன்று மறதியொரு பிழையன்று
மறதியொரு கறையன்று மறதியொரு குறையன்று
மறதியொரு வரமாகும் மறதியது இனிதாகும்.

நடந்ததையே நினைந்திருக்க நாளும் பொழுதுமது
மடங்குகளாய் பெருகி தினம் மனத்திடையே குடையாமல்
படமதனைப் பார்த்துப்பின் பற்றின்றி அதை மறக்கும்
விடயமதாய் துயரதனை விடும் மறதி இனிதாகும்.

பாயதனின் சுகமதனால் பாவையவள் கருவாகி,
சேயொன்று உருவாகி சேர்ந்து வரும் பிரசவத்தில்
நோயதனைத் தாங்காது நொந்திடினும் சிலநாளில்
தாய் அதனை 'மறப்பதினால்' தந்திடுவாள் இன்னொருசேய்.

கண்ணாளா! நானுன்னைக் காணா திருப்பேனோ?
உண்ணல் தொலைத்தேனே உறக்கமதும் மறந்தேனே
மண்ணதனில் நீயின்றேல் மாள்வேன்நான் என்றவளோ
'அண்ணா'வென் றழைக்கையிலே அம்மறதி மருந்தாகும்.

முத்தே!யென் முழுமதியே! முழுவாழ்வும் நீதானே!
பத்துப் பிறப்பெடுத்தும் பாவையுனை அகலேனே!
இத்தரையில் வாய்த்திட்ட என்சொர்க்கம் என்றவனோ
சொத்துக்காய் பிரிகையிலே சுகமாகும் மறதி அதும்.


கொத்துக் கொத்தாக தினம் குலைகுலையாய் எம்மவரை
சுத்தித்தான் நின்றன்று சுட்டெரித்து புதைத்தவரை
ஒத்துழைத்து நாமெல்லாம் உருப்படுவோம் என்கையிலே
நித்தியமாய் வருகின்ற நீள் மறதி இனிதாகும்.

கூட இருந்தபடி குழிபறித்த கூட்டமதை
சூடு சுரணையிலா சுற்றத்தின் முற்றமதை
ஆடு நனையுதென அழுகின்ற தலைமையதை
வீடு மறந்திடவே வெலும் மறதி இனிதாகும்.

அல்லும் பகலுமென அன்றாடம் வளர்த்தெம்மை
கல்வியதும் ஊட்டிக் காவாந்து பண்ணியரை
இல்லமதில் சேர்த்து ஏதிலியாய் விடுகையிலே
பொல்லாத்தனம் மறக்க புகும் மறதி இனிதாகும்.
 
                                           ☼☼☼☼☼
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.