இருபெரும் தூண்களை இழந்தனள் தமிழ்த்தாய் - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

இருபெரும் தூண்களை இழந்தனள் தமிழ்த்தாய் -  கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
ள்ளமது பதைபதைக்க உயிரும் வாட
ஒப்பற்ற இரண்டு பெரும் தூண்கள் தன்னை
நல்லவர்கள் மனம் வாடத் தமிழ்த்தாய் ஏங்க
நமனவனும் பறித்தேதான் நலிவு செய்தான்
வெல்லமெனத் தமிழதனை உலகிற்கீந்து
விருப்போடு பலர் மனதை ஈர்த்து நின்ற
கள்ளமில்லா பெருமனத்தோர் இருவர் தாமும்
காலத்தில் கரைந்ததனை என்ன சொல்ல?
 


தமிழதனைத் தன் வாழ்வு ஆக்கி என்றும்
தரணி அது பயன்கொள்ள வாழ்ந்த ஐயன்
அமிழ்தணைய சிலம்பதனைக் கற்றுத் தேர்ந்து
அனைவர்க்கும் அச்சொத்தை அளித்த வள்ளல்
நிமிர்ந்து நிதம் நெடுமாலின் புகழைப்பாடி
நெஞ்செல்லாம் அவன் பெருமை நிரப்பி நின்றோன்.
திமிரதனைச் சிறிதேனும் அறியாச் சான்றோன்.
சிந்தனையால் அறம் வளர்த்த சிறந்த செம்மல்.

செல்லப்பப் பெயருடைய சீரோன்தானும்
சிலம்போடு தன் நாமம் இணைத்துக் கொண்டான்.
உள்ளமதைப் போல் உலகில் உயர்ந்து நின்றும்
ஒரு நொடியும் அறம் விட்டு நகரா வள்ளல்
வெல்லுதமிழ் முருகன் அவன் பெயரைக் கொண்ட
வீறான தா.கு.சு. விளங்கும் நல்ல
தள்ளரிய திருமாலின் புகழைப்பாடி
தரணியிலே தன் நாமம் நிலைக்க வைத்தான்.

கள்ளமில்லா இப்பெரியோர் கம்பன் தன்னால்
கடல் கடந்து எம்மையுமே உறவாய் ஆக்கி
தெள்ளுதமிழ் தந்தெங்கள் விழவையெல்லாம்
தேற்றியதை என்றென்றும் மறக்கமாட்டோம்.
நல்லரெனச் சிலம்பொலியார் தம்மை ஏற்றி
நாம் தந்தோம் கம்பர் புகழ் விருதுதன்னை
எல்லையில்லா மகிழ்வோடு ஏற்ற ஐயன்
எமைவிட்டுப் போனதனால் ஏக்கம் கொண்டோம்.

நெற்றியிலே நாமமது நிமிர்ந்து நிற்கும்
நெஞ்சமதில் கம்பனருள் சுரந்து நிற்கும்
வெற்றிதனைத் தன் வாக்குத் திறத்தினாலே
வேறெவர்க்கும் ஈயாது விளங்கும் வேந்தன்
நற்றமிழால் எம் கழக விழவில் வந்து
நாம் மகிழத் தமிழமுதம் ஈந்து நின்றோன்.
கற்றவர்கள் மனம் ஈர்க்கும் சுப்ரமணியக்
காந்தத்தை இனி எங்கே காண்போம் நாமும்.

வெற்றிதரும் மைந்தர் இவர் விண்ணைச் சேர
வீறான தமிழ்த்தாயும் விம்மலுற்றாள்.
நற்றமிழர் அரங்கெல்லாம் இனி யார்? என்று
நாற்றிசையும் விழி துரத்தித் தேடிநிற்க!
குற்றமிலா பெருமனத்தோர் இருவர்தாமும்
குன்றெனவே புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தார்.
பற்றுடனே எம் கம்பன்கழகத் தாரும்
பாதமலர் தலைசூட்டி வணங்கி நின்றோம்.
 
 
 
                                                  ***



 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.