'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
சிந்தனைக்களம் 18 Jan 2020
மற்றவர்கள் அவனுக்குக் கிடைத்த பெருமை கண்டு வியந்துநிற்க, அவன் மனமோ அப்பெருங் கூட்டத்தில் தன்குருவைத் தேடியது. அறிஞர்களால் மதுரை நிரம்பிக்கிடந்த நேரமது. ஆனாலும் அங்கு அவன் குரு வரவில்லை. நண்பர்களோடு குருவைக் காணலாம் எனும்விருப்பில் திருச்சி சென்றான். அவரது முகவரியும் அவனிடமில்லை. எங்கு கேட்பது? யாரிடம் கேட்பது? ஒன்றும் புரியாத நிலை. அன்றுகாலை திருவானைக்கா ஆலயதரிசனம் அவனுக்குக் கிடைத்தது. குருவின் காட்சிக்காய் மனமுருகி வேண்டினான் அவன். கோயிலால் திரும்பும்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.
உள்ளத்தால் ஒரு பொருளை ஒருவன் உறுதியோடு வேண்டின்,
அப்பொருள் அவன் கைக்குக் கிட்டுதல் நிச்சயம் என்கிறார் வள்ளுவர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப்பெறின் என்பது வள்ளுவனார் வாக்கு.
பொய்யாமொழிப் புலவரின் குறளது உண்மையை,
அன்று அவ் இளைஞன் நிதர்சனமாய்க் கண்டுகொண்டான்.
⬥ ⬥ ⬥
நண்பர்களோடு கோயில் சென்றுவிட்டு,
திரும்பும்போது வழியில் ஒரு சிறு பள்ளிக்கூடம்.
வாசலில் ஒரு கரும்பலகையில் தனது குருவின் பெயர்கண்டு சிலிர்த்தான் அவன்.
மாலையில் அங்கு அவர் உரையாற்றப்போவதாய் அப்பலகை சொல்லிற்று.
அன்று பகல் முழுவதும் அவன் அடைந்த பரபரப்புக் கண்டு,
விடலைப் பருவத்தின் விளிம்பில் நின்ற,
அவனின் நண்பர்கள் வியந்தனர்.
நடிகைகளின் மார்பும், தொடையும் தேடி மயங்கிய அவர்கட்கு,
ஒரு குடுமி மனிதனைத் தேடும் இவன் செய்கை,
அவனைப் பைத்தியமாய் உணர்த்த,
அப்படி அவரில் எதைத்தான் கண்டு மயங்குகிறான் இவன் என்று,
அவர்களுக்கு ஆச்சரியம்.
அவ் ஆச்சரியம் தீர, அன்று சினிமா பார்க்கும் திட்டத்தைக் கைவிட்டு,
அவனோடு வந்தார்கள் அவர்கள்.
⬥ ⬥ ⬥
அவர்கள் போகும்போது கூட்டம் தொடங்கிவிட்டது.
தன்குருவின் குடுமி அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு,
அவரை அவன் கண்கள் தேடின.
அங்கும் சோதனை தொடர்ந்தது.
அந்த மேடையில் இருவர் குடுமியுடன் இருந்தனர்.
ஒருவர் அலங்காரபூஷிதராய் அமர்ந்திருந்தார்.
அவர்தான் தன்குருவென்று நினைந்து,
வைத்தகண் வாங்காமல் அவரைப் பார்த்திருந்த அவனுக்கு,
பெயர் அழைக்கப்பட்டு அவர் எழுந்தபோதுதான்,
அவர் தன் குருவில்லை எனும் உண்மை தெரிந்தது.
இப்பொழுது உண்மை தெரிந்துவிட்ட நிலை.
பத்தாண்டுப் பசியோடு அருகிருந்த மற்றைக்குடுமித் தேவரை,
அவன் பார்க்கிறான்.
கண்ணப்பனின் காதல் அவன் கண்களில்.
நாலுமுழவேட்டி.
கால்வாசிக் கை மடிக்கப்பட்டநிலையில் மண்ணிறத்தில் 'நஷனல்'.
தோழில் சாதாரண துண்டு.
கண்களில் அறிவொளி.
முதல் முதலாய் குருதரிசனம் நிகழ,
அவன் தன்னை மறந்தான், தன்நாமங்கெட்டான்,
தலைப்பட்டான் அக்குருவின் தாளே.
⬥ ⬥ ⬥
கூட்டத்தில், கடைசியாய் அவன் குரு பேசினார்.
இலக்கியக் கூட்டங்களின் இறுதிப் பேச்சாளராய் அவரே இருப்பது,
அவர்காலத்தில் தமிழகத்தில் வழக்கமாம்.
அவர் பேசியபின்பு மற்றவர் பேச்சுச் செல்லுமா?
உண்மை உணர்ந்திருந்தனர் கூட்ட ஒழுங்காளர்.
அன்று திருவாசகத் தலைப்பு.
வெள்ளமாய்க் கொட்டிய அத்தமிழ் மழையில்,
அவன் நனைந்ததல்ல ஆச்சரியம்.
சினிமாவையும், நடிகைகளையும் மனம் நிரப்பி வந்த நண்பர்கள் கூட,
தம்மை மறந்தார்கள்.
அவர்பேசி முடிய அவனும் நண்பர்களும் அவரை அணுகி பாதம் பணிந்தனர்.
'ஓட்டோகிராஃபில்' கையெழுத்துக்கேட்க,
கூடிநின்ற கூட்டத்தின் மத்தியில்,
அவனை அவர் கண்கள் சந்திக்கின்றன.
பத்தாண்டுத் தவத்தின் பயன்பெற்ற பரவசத்தில் அவன்.
என்னென்னவோ பேச நினைத்தவன் பேச்சற்று நிற்கிறான்.
அந்த மௌனமே அவனுக்கு மகிழ்ச்சி தந்தது.
அவனது ஏக்கமிகு எண்ண அலைகள் அவரையும் தொட்டனபோலும்.
'ஓட்டோகிராஃபில்' வாழ்த்து எழுதாமல்,
முகவரி எழுதி, 'நாளை வீடு வாருங்கள்' என்று விடை பெறுகிறார்.
⬥ ⬥ ⬥
அப்போது இந்தியாவுக்குக் கப்பலில் போகலாம்.
டிக்கட் செலவு 180 ரூபாய் தான்.
தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் பயணமாகி,
அங்கிருந்து ரயிலில் திருச்சி செல்லவேண்டும்.
ரயிலில் மட்டுந்தான் திருச்சி செல்லலாம்.
அப்போதைய 'பாம்பன்பாலத்'தில் ரயில் மட்டுமே சென்று வந்தது.
அதுபோலவே திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் வந்து கப்பலேற வேண்டும்.
குருவைச் சந்தித்த அன்று இரவே அவர்கள் ரயில் ஏறியாக வேண்டும்.
குருவின் முகவரியும், அழைப்பும் கிடைத்தும்,
அவரை நேரில்சென்று காணமுடியாத அபாக்கியம் அவனுக்கு.
வருந்தியபடி இலங்கை வந்தான்.
⬥ ⬥ ⬥
அப்போதுதான் அவனும் நண்பர்களும் சேர்ந்து,
அகிலஇலங்கைக் கம்பன்கழகத்தை ஆரம்பித்திருந்தனர்.
சிறுசிறு விழாக்கள் அக்கழகத்தின் சார்பால் நடத்தப்பட்டது.
குருநாதரை விழாவுக்கு அழைத்தாலென்ன?
ஓர் இந்தியப் பேராசிரியரை அழைத்து,
விழா நடத்தும் எந்தத்தகுதியும் அவர்களுக்கு இல்லாதிருந்த நேரம் அது.
அதுபற்றி அவன் கவலைப்படவில்லை.
'எங்கள் விழாவில் கலந்துகொள்வீர்களா?',
ஆசைபற்றி, குருவிற்கு கடிதத்தால் அழைப்பு விடுத்தான்.
உண்மை அன்பும், ஆர்வமும் அனைத்தும் சாதிக்கவல்லது.
ஒரு வாரத்தில் பேராசிரியரிடமிருந்து பதில்கடிதம் வந்தது.
தன் வருகைத் தினங்களையும், பேசும் தலைப்புக்களையும் அறிவித்திருந்தார்.
திக்குமுக்காடிப் போனான் அவன். - காரணங்கள் இரண்டு.
ஒன்று பேராசிரியரின் பதில் கண்ட மகிழ்ச்சி.
மற்றது, அவரை வருவித்து விழாநடத்த என்னவழி? எனும் திகைப்பு.
ஆனாலும் மகிழ்ச்சியே மேலோங்கியது.
குரு வருகைக்காய்க் காத்துக்கிடந்தான் அவன்.
ஆனால் அதன் முன்னரே குருவைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.
⬥ ⬥ ⬥
தமிழாராய்ச்சி மாநாட்டில் தன்மனம் பதிந்திருந்த,
மற்றைய பெரியவரான 'கம்பனடிப்பொடியை' அவன் சந்தித்திருந்தான்.
அச்சந்திப்பின் சுவாரசியமும் விரித்துச்சொல்லப்பட வேண்டியது.
ஆனால் இக்கட்டுரையில் மற்றொன்று விரித்ததாய் ஆகும் என,
விரிவஞ்சி அதனை விடுகிறான்.
மிக இளைஞர்களான இவர்கள் கம்பன்பணியாற்றுவதறிந்து,
கம்பனடிப்பொடிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
இவர்களின் முகவரி வாங்கிக்கொண்டார்.
பேராசிரியரின் வருகைநோக்கி இவன் காத்திருந்தவேளையில்,
காரைக்குடி கம்பன்விழாவுக்கான அழைப்பு வந்தது.
கம்பனடிப்பொடி அன்போடு அனுப்பிய அழைப்பு அது.
இந்தியா செல்லும் வசதி எதுவுமில்லாத நிலையில் அவனும் நண்பர்களும்,
தமிழாராய்ச்சி மாநாட்டுக்காய் சென்று வந்த கடனையே,
அடைக்கமுடியாத நிலையில் இருந்தான் அவன்.
ஆனாலும் ஆசை விடவில்லை.
என்னென்னவோ கணக்குகள் போட்டு,
வெல்லலாம் எனத் தன்னைத்தான் ஏமாற்றி,
தன் நண்பன் குமாரதாஸனுடன் மீண்டும் இந்தியா பயணமானான்.
காரைக்குடியில் உரையாற்ற வந்திருந்த,
குருவைக் காணும் வாய்ப்புப்பெற்றான்.
அடைகாத்த அன்பு முட்டை அன்று உறவுக்குஞ்சைப் பொரித்தது.
ஒரே நாளில் குருவோடு ஒட்டிக்கொண்டான்.
⬥ ⬥ ⬥
அதிர்ஷ்டவசமாய் காரைக்குடி மேடையில் உரையாற்றும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியது.
பேச வேண்டியவர் வராமற்போக 'நீ பேசு' என்ற,
கம்பனடிப்பொடியின் உத்தரவால்,
அவன் பெற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியுமா?
அந்த மேடையில் அவன் பேச,
சபையில் அவன் குருவும், கம்பனடிப்பொடியும் உட்கார்ந்து கேட்டனர்.
அன்றே இறந்திருந்தாலும் அவன் மகிழ்ந்திருப்பான்.
கனவிலும் நினையாத பேறு அது
⬥ ⬥ ⬥
மேடையேறிய அவன், சபையைச் சாட்சியாய் வைத்து,
தன்மனம் நிறைந்திருந்த அவ்விருவர் தம் திருவடிகளையும் வேண்டிக் கேட்டான்.
மிகக்கஷ்டப்பட்டுக் கம்பனடிப்பொடியிடம் திருவடிகளை வாங்கியபின்,
தன் குருவின் திருவடிகளை அவன் வேண்ட,
'போடா அதெல்லாம் வேணாம் என்னோட திருச்சிக்கு வா
எங்க ஆத்தில இரண்டு செருப்பிருக்கு, அதை வந்து நீயும் கும்பிடு',
என்று கூறி தன்னோடு அவனையும் நண்பனையும் அழைத்துப்போனார்.
ஒரேநாளில் அவர்கள் வீடும் அவனைப் பிள்ளையாய் அணைத்துக்கொண்டது.
அவர்கள் பிராமணர்கள்.
ஆனாலும் அவனை அந்தவீடு பிள்ளையாய் ஏற்றது.
அவர் வீட்டிலிருந்த காஞ்சிப்பெரியவரின் திருவடியைக் குரு வணங்கச்செய்தார்.
ஆனாலும் 'உங்கள் திருவடிகள் வேண்டும்' என,
உறுதியாய் நின்று அவற்றை அவன் பெற்றுக்கொண்டான்.
⬥ ⬥ ⬥
அதன்பின் குருவினுடனான அவன் தொடர்பு நீண்டது.
நெருங்க நெருங்க அவரின் பெருமை தெரிந்தது.
பாரதிக்கு நிகரான ஒரு பிராமணர் அவர்.
அன்பும் அறிவுமே அவரிடம் நிறைந்து கிடந்தன.
எத்தனை அனுபவங்கள்,
ஓரிரண்டைச் சொல்ல நினைக்கிறான் அவன்.
⬥ ⬥ ⬥
(அடுத்த வாரமும் அவன் குருநாதர் வருவார்)