புனிதன் யேசு கோயில் தன்னை புதைத்த வீணர் எவரடா ? -கம்பநேசன் அ.வாசுதேவா
கவிதை முற்றம் 26 Apr 2019
மனித வேட்டையாடி நின்ற
மாக்கள் கூட்டம் யாரடா ?
புனிதன் யேசு கோயில் தன்னை
புதைத்த வீணர் எவரடா ?
இனிய வாழ்வை இறைஞ்ச வந்த
எளியர் மாண்டு போகவும்
தணிந்த தேசம் அமைதி மீறி
தளர்வு கண்டு நோகவும்
உறுத்தல் இன்றி உருக்குலைத்து
உறவைக் கொன்ற கொடியர்கள்
பொறுத்த துன்பச் சுமைகளோடு
புனிதன் கொண்ட கருணையை
நிறுத்தி நெஞ்சில் துதித்திடாமல்
நெடிய துன்பம் தந்தனர்
ஒறுத்தல் அன்றி உயிரைப் போற்றும்
உயர்ந்த நீதி கண்டிலார்
அவலம் இன்று அவனி எங்கும்
அடர்ந்து நின்று கொன்றிட
கவலை இன்றிக் கருவறுத்துக்
கண்ணை மூடி நின்றவர்
அவலை எண்ணி உரலிடித்து
அழிவு செய்த செயலினை
குவலையத்துக் குடிகள் என்றும்
குருட ராகி ஏற்கிலார்
நாடு யாவும் நடுக்க முற்று
நலிந்து போகக் கூடியே
பீடு செய்து பீதியூட்டிப்
பிறரை வாட வைத்தவர்
கூடும் அன்புக் கொள்கை நாடிக்
குறைகள் நீங்க வேண்டுவோம்
வாடும் மக்கள் மனதைத் தேற்ற
வழிகள் காண முயலுவோம்
மதங்கள் மீது மதங்கள் கொண்டு
மாண்பு நீங்க போரிடும்
இதங்கள் அற்ற செயலை எண்ணி
இனிமை காண்ப தன்றியே
விதங்கள் நூறு வழியிற் தேடி
வீழ்த்தும் செய்கை நீக்குவோம்
பதங்கள் நாடிப் பற்று நீக்கி
பழியில் நின்று மீளுவோம்
***