'உலகெலாம்......':பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'உலகெலாம்......':பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
பஞ்ச பூதங்களுக்கும் காரணமாய் இருப்பவை, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் தன்மாத்திரைகளாம். இத்தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில், பொருந்தி நிற்கும்போது, ஐம்புலன்கள் என்றும் சொல்லப்படுகின்றன.  ஆன்மா, பஞ்சபூதங்களின் முதலாய தன்மாத்திரைகளையும், அவற்றில் தோன்றுவனவாய பஞ்சபூதங்களையும், அவற்றின் கூறுகளாகிய மற்றைய தத்துவங்களையும், விளங்கி, அதன் மூலம் மெய்யுணர்ந்து வீடெய்துமாம். அதுநோக்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவரும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின்  வகைதெரிவான் கட்டே உலகு என்றனர்.

💛💛💛💜
யர்ந்ததான மேற்குறளுக்கு,
பரிமேலழகர், தரும் விரிவுரையில்,
மேற்சொன்ன விடயங்களைத் தெளிவுற விளக்குகிறார்.
தன்மாத்திரைகள் ஐந்தினதும் வகை தெரிந்தாலே,
ஆன்மா இறையை உணருமாம்.
இவ்வுண்மையை நமக்கு உணர்த்த, தெய்வச் சேக்கிழார்,
தன்மாத்திரைகள் ஐந்தினையும்,
இப்பாடலுட் பொதித்து வைத்திருக்கிறார்.
இப்பாடலுள் பயிலப்படும்,
நீர் எனும் சொல் சுவை யினையும்,
சோதி எனும் சொல் ஒளி யினையும்,
உணர்ந்து எனும் சொல் ஊறி னையும்,
வாழ்த்தி எனும் சொல் ஓசை யினையும்,
மலர் எனும் சொல் நாற்ற த்தினையும் குறித்து,
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும்,
தன்மாத்திரைகள் ஐந்தினையும்,
ஒட்டுமொத்தமாய் உணர்த்தி,
உலகினூடு இறையை எய்தும் வழியினைக்காட்டி நிற்கின்றன.

💛💛💛💙


உலகத்தின் மற்றொரு 
பொருத்தப்பாடு
தெய்வச் சேக்கிழார்,
சைவத் திருத்தொண்டர்களை மட்டும் பாடினார் அல்லர்.
உலகில் இறை எனும் பொருளை,
அன்பினால் உணர்ந்துகொண்ட அனைவரையும்,
தன் காவியத்துள் அவர் அடக்குகிறார்.
அவர், தன் காவியத்தின் முதன் நூலாய்க்கொண்ட,
திருத்தொண்டர் தொகையும்,
இக்கருத்தோடு உடன்பட்டு நிற்கிறது.
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் எனும்,
சுந்தரர் வாக்கு,
இக்கருத்தை உறுதி செய்கிறது.
உண்மை விளக்கம் உறாத சிலர்,
சுந்தரர் செப்பியது காலத்தாலும் இடத்தாலும் அப்பால் நின்ற,
சைவ அடியார்களையே என உரைத்து,
தாமும் மயங்கி மற்றவரையும் மயங்கச் செய்கின்றனர்.
அவர்தம் கருத்து, தவறாம்.

💛💛💛💚

சுந்தரரின் இவ் அடியை விளக்கம் செய்யும் சேக்கிழார்,
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நா வேய்ந்த திருத்தொண்டர் தொகையில் கூறும்
நற்தொண்டர் காலத்து முன்னும், பின்னும்
பூ வேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சே ஏந்து வெல்கொடியார் அடிச்சார்ந்தாரும்
செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே.

என்று உரைக்கின்றார்.
தமிழ்நாட்டு எல்லைக்கப்பால்,
முதற்பொருளை உணர்ந்து வாழ்ந்த அடியார்களும்,
திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட சிவனடியார்க்கு,
முன்னும் பின்னும் வாழ்ந்த சிவனடியார்களுமே,
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார் என,
சுந்தரரால் குறிப்பிடப்பட்டனர் என்கிறார் சேக்கிழார்.
முதலில் இறைவடிவை முதல்வனார் என்று,
வடிவ அடையாளங்கள் ஏதுமின்றிக் கூறிய சேக்கிழார்,
பின்னர்,
பூ வேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சே ஏந்து வெல்கொடியார் என்று,
சிவனாரின் உருவநிலையை வருவித்து உரைக்கிறார்.
இங்ஙனம் இரு நிலையாய்ச் சேக்கிழார் உரைப்பதால்,
இறைவனின் சொரூப, தடத்தநிலைகளை,
அவர் பிரித்துரைத்தார் எனும் உண்மையை நாம் அறிகிறோம்.

💛💛💛💗

இறைவனின் சொரூபநிலை சிந்தையினாலும் வாக்கினாலும்
எட்டமுடியாதது.
ஆதலால், அந்நிலை எம்மதத்தார்க்கும் பொதுவானதாம்.
இதனால்,
முதலில் மூவேந்தர்களின் நாடுகளைக் கடந்து வாழ்ந்த,
எம்மதத்தில் நின்றும் இறையடி சார்ந்த அடியார்களையும்,
பின்னர் பெரியபுராணத்துட் கூறப்பட்ட சிவனடியார்களின்,
முன்னும் பின்னும் இருந்த, இருக்கப்போகிற சிவனடியார்களையும்,
ஒன்றாய் இணைத்தே,
அப்பாலும் அடிசார்ந்த அடியாராய்,
சேக்கிழார் உரைத்தார் எனும் உண்மை தெரிகிறது.

💛💛💛💜

இதனால்,
எந்நாட்டு, எவ்வினத்து, எம்மதத்து அடியார்களும்,
பெரியபுராணத்துள் உட்படுத்தப்படுகிறார்கள் எனும் உண்மையை,
நாம் உணர்ந்து பெருமை கொள்கிறோம்.
இஃது சைவத்தின் தனிப் பெருமையாம்.
ஆதலால்,
பெரியபுராணம் எனும் இக்காவியம்,
சைவர்க்கு மட்டுமன்றி,
உலகம் முழுவதற்கும் உரியதாம்.
உலகம் முழுவதற்கும் உரியது இக்காவியம் என உணர்த்தவும்,
'உலகம்' எனும் சொல்லைக் காவியத்தின் முதற்சொல்லாய்,
தெய்வப்புலவர் சேக்கிழார் தேர்ந்தனர் போலும்.

💛💛💛💙

காவியம் நிலைக்கக் 
காரணமான உகரம்
ஓங்காரமே இவ்வுலகின் தொடக்கம்.
பிரணவ வடிவமே அவ் ஓங்காரம்.
அவ்வோங்காரம்,
அ, உ, ம் எனும் மூன்று எழுத்தோசைகளின் தொகுப்பாம்.
வாய்திறக்க தோன்றும் அகரஓசை,
பின் உகரஓசையாய் நிலைத்து,
மகர மெய்யோசையில் நிறைவுறுகிறது.
இம்;மூன்று எழுத்தோசைகளும் முத்தொழில்களையும் குறிப்பன.
அகரம் - தோற்றம்.
உகரம் - நிலைத்தல்.
மகரமெய் - அழித்தலாம்.
உலகம் நிலைக்கவும்,
தொண்டர்தம் பெருமை நிலைக்கவும்,
சைவம் நிலைக்கவும்,
காவியம் செய்யப் புகுந்த சேக்கிழார்,
நிலைத்தலைக் குறிக்கும் உகர ஓசையை,
முதலாய்க்கொண்ட,
உலகமென்னும் சொல்லை,
காவியத்தின் முதற்பாடலின்,
முதற்சொல்லாய் இட்டதன் பொருத்தப்பாடு,
எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

💛💛💛💚

முதல் எழுத்து பிரணவம்
உகரத்தை முதலெழுத்தாய்க் கொண்ட,
உலகெலாம் எனும் தொடரை இட்டதால்,
விநாயக வணக்கத்தோடு,
காவியத்தை, சேக்கிழார் தொடங்கினார் என அறிந்தோம்.
அதுமட்டுமன்றி,
நாதம் விந்து என்பவற்றின் சேர்க்கையாய் விளங்கும்,
உகரம் ஓங்காரமான பிரணவ வடிவம் என்றும் அறிந்தோம்.
உலகத் தொடக்கமான பிரணவத்தினையே,
தன் காவிய முதலெழுத்தாய் சேக்கிழார் அமைத்தமை,
தொண்டர் புராணத்தின் மற்றொரு சிறப்பு.

💛💛💛💗

முதல் தொடர் பிரணவம்
அகர ஓசையே எழுத்தெல்லாவற்றினதும் முதல் ஓசையாம்.
விகாரமின்றி இயல்பாய் வாயைத் திறப்பித்துப் பிறக்கும் அகரஓசை,
பல், நா, அண்ணம், உதடு முதலிய உறுப்புக்களின் தொழிற்பாடுகளால்,
வேறு வேறு எழுத்தோசைகளாய் மாற்றப்படுகின்றது.
இவ்வுண்மையை உணர்ந்து கொண்டால்,
எழுத்துக்கள் எல்லாவற்றுள்ளும்,
அகரஓசை கலந்திருப்பதை அறியலாம்.
அதுநோக்கியே,
அகர முதல எழுத்தெல்லாம் என்றார் வள்ளுவரும்.

💛💛💛💜

உலகெலாம் எனும் தொடரில்,
'உ' முதல் எழுத்தாகவும்,
'ம்' நிறைவெழுத்தாகவும் அமைந்துள்ளது.
அகர ஓசை எல்லா எழுத்துள்ளும் கலந்திருப்பதை அறிந்தோம்.
எனவே, அ, உ, ம் எனும் மூன்று எழுத்தோசைகளின்,
கலப்பாய் ஒலிக்கும் ஓங்காரமான பிரணவத்தை,
'உலகெலாம்' எனும் தொடர்,
தன்னுள் அடக்கியிருப்பதை உணரலாம்.
இவ்வுண்மையால்,
ஓங்காரத்தில் இருந்து உலகம் பிறந்ததையும்,
உலகம் முழுவதுள்ளும் ஓங்காரம் கலந்திருப்பதையும்,
உணர்ந்துகொள்கிறோம்.
எனவே,
வானோசையாய் சேக்கிழார் கேட்ட உலகெலாம் எனும் தொடர்,
பிரணவமே எனும் உண்மை தெரியவருகிறது.
முதற் பாடலின் முதலெழுத்தை,
பிரணவ வடிவாய் அமைத்த சேக்கிழார்,
முதற் பாடலின் முதற்தொடரையும்,
பிரணவ வடிவமாகவே அமைத்ததை அறிந்து,
நம் அகம் மகிழ்கிறது.

💛💛💛💙

                                                                                                     (சேக்கிழார் தொடர்ந்து வருவார்)
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.