கன்னியாசுல்க்கம்: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

கன்னியாசுல்க்கம்: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
(சென்ற வாரம்)
அப்பெரியார்தம் வாதங்களுக்குத் துணையாய் அமைந்த அடுத்த இரு பாடல்களுள் நுழையலாம். காடேகிய இராமனை மீண்டும் அயோத்தி அழைத்து வரச் செல்கிறான் பரதன். நாடு வந்து அரசேற்க வேண்டும் என்ற பரதனுக்கு இராமன் சொல்லும் சமாதானமாய் அமையும் இரு பாடல்களுள் முதலாமதைக் காண்பாம்.
🌺 🌺 🌺 🌺
யர் பண்புடைய இராமன் பரதனை நோக்கி,
உரைப்பதான முதற்பாடல் இது.

வரனில் உந்தைசொல் மரபினால், உடைத்
தரணி நின்னதென்று இயைந்த தன்மையால்,
உரனில் நீ பிறந்து உரிமை யாதலால்,
அரசு நின்னதே ஆள்க, என்னவே.

இப்பாடலில்,
எந்தைசொல் மரபினால் உடைத் தரணி நின்னது என வரும் தொடரும்,
உரனில் நீ பிறந்து உரிமை யாதலால் என வரும் தொடரும்,
கம்பனில் 'கன்னியாசுல்க்கம்' காணவிழையும் பெரியார்க்கு,
கற்கண்டாய் இனித்து நிற்கின்றன.
இவர்கள்,
எந்தைசொல் மரபினால் உடைத் தரணி நின்னது எனும் தொடருக்கு,
திருமணக் காலத்தில் தசரதன் கைகேயிக்கு,
'கன்னியாசுல்க்கமாய்' வழங்கிய வாக்கினால்,
அரசு உனக்கே உரியது என,
இராமன் கூறியதாய்ப் பொருள் கொள்கின்றனர்.
அதுபோலவே,
உரனில் நீ பிறந்து உரிமை யாதலால் எனும் தொடருக்கும்,
'கன்னியாசுல்க்கம்' காரணமாய்,
பிறப்பினாலேயே இவ்வரசு நினக்குரிமையானதாகும்
என இராமன் உரைத்தான் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
இவர்களின் இவ்விரு வாதங்களும்,
இவர்தம் வான்மீக அறிவினால் வலியக்கொள்ளப்பட்டவையாம்.

🌺 🌺 🌺 🌺


எந்தைசொல் மரபினால் உடைத் தரணி நின்னது எனும் தொடருக்குக் கைகேயி,
ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் நின் சேய் உலகாள்வது என வரம் வேண்ட,
தசரதன் கொடுத்த வரத்தின் அடிப்படையில்,
கைகேயிக்கு வரம் தந்த தந்தையின் சொற்படி,
இவ் அரசு உனக்கே உரியது என்பதாய் பொருள் கொள்ளலே பொருத்தமாம்.
தாயின் வரத்தினால் தந்தை அரசு ஈந்ததால்,
தந்தை சொல் மரபினால் இவ்வரசு நின்னது என,
இராமன் சொல்வதாய்ப் பொருள்கொள்ளுதல்,
கம்பகாவிய அமைப்பிற்கு இடரிலா எளிமைப்பொருளாம்.

🌺 🌺 🌺 🌺

அதுபோலவே,
உரனில் நீ பிறந்து உரிமை யாதலால் எனும் தொடருக்கும்,
சக்கரவர்த்தி மைந்தர் நால்வருள் நீயும் ஒருவன்,
சூரியவம்சத்துதித்த உரிமைபற்றி இவ்வரசாளும் தகுதி உனக்கும் உண்டு.
ஆதலால் அதனை நீயே ஆள்க!
என இராமன் சொல்வதாய்க் கொள்வதே,
எளியதும், வலியதுமான பொருளாம்.
காவிய நோக்கிற்கு மாறுபடாத,
பாத்திரங்கள் அனைத்தினதும் பெருமையை உணர்த்தும்,
இவ்வெளிதாம் பொருள் இருக்க,
தம் மூலநூல் அறிவு கொண்டு,
வலிந்து பொருள் கொள்ளும் இப்பெரியார்தம் செயல்,
கனியிருப்பக் காய் கவரும் செயலேயாம்.

🌺 🌺 🌺 🌺

வரனில் எந்தைசொல் மரபினால் அரசு நின்னதே ஆள்க! என,
தன் கோரிக்கையை நிராகரித்த இராமனிடம்,
'தந்தை சொற்படி ஆட்சி எனதாயின்,
அவ் ஆட்சியை யான் தருகிறேன் நீ கொள்க' என,
பரதன் தொடர்ந்து வேண்டுகிறான்.

முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு எனா

அவன் கோரிக்கையை ஏற்ற இராமன்,
தந்தை சொற்படி பதினான்கு ஆண்டுகள் காட்டில் வைகி,
பின் நீ தந்த அரசுப்பொறுப்பை ஏற்பேன்.
அதுவரை அவ்வாட்சியை எனதாணையால் நீயே ஆள்க! என்கிறான்.

எந்தை ஏவ, ஆண்டு ஏழொ(டு) ஏழெனா
வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ
தந்த பாரகந் தன்னை மெய்ம்மையால்
அந்த நாளெலாம் ஆள்! என் ஆணையால்.

🌺 🌺 🌺 🌺

இப்பாடல் கொண்டு, மேற் பெரியார்கள்,
தொடர்ந்தும் தம் மயக்கவாதத்தை இயக்க நினைக்கின்றனர்.
முதலில் பரதன் வேண்ட,
உரிமையிலாத் தன்நிலை நினைந்து அரசேற்க மறுத்த இராமன்,
பரதன், தனதாட்சியாய்ச் சொல்லி, அதனைத்தர முன்வர,
பதினான்கு ஆண்டின் பின் அவ் அரசுப் பொறுப்பை ஏற்கச் சம்மதிக்கிறான்.
இராமனின் இக்கூற்றைக் கொண்டு அப்பெரியார்கள்,
'கன்னியாசுல்க்க' வரத்தால்,
ஆட்சி பரதனுக்கே உரியது என்று இராமன் அறிந்திருந்ததாலேயே,
ஆட்சியை ஏற்கும்படி பரதன் வேண்ட அவன் அதனை மறுத்தனன் என்றும்,
பின் ஆட்சிக்குரியவனான பரதன் விரும்பித்தர,
அவ் ஆட்சியை ஏற்றனன் என்றுங்கூறி,
இக்கருத்தால் ஆட்சி பரதற்கே உரியது என வாதிட்டு,
தம் 'கன்னியாசுல்க்கக்' கருத்தை நிரூபணம் செய்ய முயல்வர்.

🌺 🌺 🌺 🌺

அவர், தம் வாதுக்குச் சான்றாய்,
இராமனின் நீ தந்த பாரகந் தன்னை எனும் கூற்றினை அவர்கள் கொள்வர்.
நீ தந்த பாரகம்; என்றதால்,
'கன்னியாசுல்க்க' வரத்தால் ஆட்சி நினக்கே உரியதென்றும்,
அவ்வுரிமை கொண்டு நீ தரும் ஆட்சியை யான் ஏற்பேன் என்றும்,
இராமனின் கூற்றுக்குப் பொருள் கொள்ளும்,
அவர்தம் கருத்து வேண்டாததாம்.

🌺 🌺 🌺 🌺

தந்தை தசரதன்,
ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் நின்சேய் உலகாள்க! என,
தாயாம் கைகேயிக்குக் கொடுத்த வரத்தால்,
ஆட்சி உன்னதே நீ ஆள்க! என்கிறான் இராமன்.
பரதன் அவனை அரசேற்கச் சம்மதிக்க வைத்தற்காய்,
அங்ஙனமாயின் தாய் சொற்படி தந்தை தந்த,
எனதாம் ஆட்சியை உனக்குத் தருகிறேன் ஏற்க! என்கிறான்.
அவன் அன்பை உணர்ந்துகொள்ளும் இராமன், அதனையும் மறுப்பின்,
பழியஞ்சிப் பரதன் உயிர்விடுவான் என நினைந்து,
அவன் கருத்தேற்று,
அங்ஙனமாயினும் தந்தை எனக்கிட்ட கட்டளையால்,
யான் பதினான்கு ஆண்டு, காடு செல்லல் அவசியமாகிறது.
அக்காலம் முடிந்து நீ தரும் ஆட்சியை ஏற்பேன்,
அதுவரை நீயே ஆள்க! என்கிறான்.
இக்கருத்தே,
கதையோட்டப் பொருத்தமும் பாத்திரப் பெருமையும் செய்யும்,
இப்பாடற்காம் உயர்பொருளாம்.
தம் உளக் கருத்தை, பாடலிற் புகுத்தி,
நினைந்த தம்வாதம் வலியுறுத்த முனையும் பெரியோர்கள்,
வலிந்து தாம் கொள்ளும் பொருளால்,
கவியுளங் காண்கிலா குற்றத்திற்கு ஆளாகும் குறை உணர்ந்திலர்.

🌺 🌺 🌺 🌺

தசரதனிடம் வரங்கேட்கவென,
கைகேயி தன்னை அலங்கோலஞ் செய்துகொண்டு வீழ்ந்து கிடக்கிறாள்.
அவள் கிடக்கும் நிலையைக் கம்பன் உரைக்கும் பாடல் இது:

நவ்வி வீழ்ந்தென, நாடகமயில் துயின்றென்ன
கவ்வை கூர்தர சனகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம்மடந்தை 
தவ்வையாம் என கிடந்தனள் கேகயன் தனையை. 

மேற்பெரியோர்கள் இப்பாடலில் வரும்
நாடகமயில் எனும் தொடர்; கொண்டு,
தொடர்ந்தும் கைகேயியைத் தூய்மை செய்ய முயல்வர்.
தான் தந்த 'கன்னியாசுல்க்க' வரத்தை மீறிச் செயற்பட்டு,
பழிகொள்ள முயலும் தசரதனை,
பழியின் நீக்கும் நல்நோக்கத்தை உளங்கொண்டு, வரம் வேண்டி,
புறத்தே தீய வடிவு காட்டி,
உள்ளொன்றும், புறமொன்றுமாய் அவள் கொண்ட நிலையைக் குறிக்கவே,
கைகேயியைக் கம்பன் வெறுமனே மயிலெனாமல்,
நாடக மயில் எனக் குறித்தனன் என்பது அவர்தம் கருத்தாம்.

🌺 🌺 🌺 🌺

இக்கருத்தும் உறுதிப்பொருள் தரும் கருத்தன்றாம்.
உளத்தே வஞ்சனையும், வன்மமுங் கொண்டு,
புறத்தே சோகமும், துன்பமும் உற்றாற்போல்
கிடக்கும் அவள்தன்னின் நிலைமையையும்,
நாடக மயில் எனும் தொடர் குறிக்குமன்றோ?
இங்கும் பின்னுரைத்த பொருளே பெரிதும் பொருத்தம் கொள்கிறது.
கைகேயியை உயர்நோக்கங் கொண்டவளாய்க் கருதி,
மேற்பெரியோர்கள் முன்னுரைத்த பொருள் நிஜமாயின்,
அதே பாடலில், அவ்வுயர் நோக்கங்கொண்ட கைகேயியை,
கம்பன் இலட்சுமியின் தமக்கையான மூதேவியாய்க் குறிப்பனோ?
(தவ்வை-தமக்கை-மூதேவி)
இக்கேள்விக்கு விடை காணின், உண்மை தானே புலனாகும்.

🌺 🌺 🌺 🌺

                                                                                                    (கன்னியாசுல்க்கம் தொடரும்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.