கொளுத்தும் வெயிலிலும் 'குளு குளு'வென நடந்த இலக்கிய பெருவிழா | நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

 
கொளுத்தும் வெயிலிலும் குளு குளுவென நடந்த இலக்கிய விழா கொழும்பு கம்பன் விழா தான் என்றால் அது மிகையாகாது. 
ஆம் சுட்டெரிக்கும் வெயிலிலும் தலைநகரிலே அதிலும் கொழும்பு வெள்ளவத்தையிலே இதமான இளந்தென்றல் வீசியது என்றால்
உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்! நான்கு தினங்களாக இங்கே   இலக்கியத் தென்றல்  இதமாக வீசியது என்பேன்.
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்திய மாபெரும் கம்பன் விழா பற்றி தான் நான் இங்கு குறிப்பிட 
விழைகிறேன். இந்த கம்பன் விழா பற்றிய அழைப்பிதழ் கிடைத்ததுமே என்னுள் ஒரு பேரவா.
 
இந்த நான்கு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அது. அழைப்பிதழின்  வடிவமைப்பு அதனுள் அடங்கியுள்ள நிகழ்ச்சிகளின் கவர்ச்சி. தமிழ்சான்றோர் மட்டுமன்றி முஸ்லிம் சிங்களம் என அனைத்து சமூகத்தவர்களையும் உள்வாங்கிய விதம் பெருமகிழ்ச்சியை தந்தது.
 
கடந்த மார்ச் 24ஆம் 25ஆம் 26ஆம் 27ஆம் திகதிகளில் தினசரி இரு அமர்வுகளாக இந்த நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றன.
முதல் நாள் நிகழ்ச்சிகள் மட்டும் ஒரேயொரு அமர்வாக நடந்தேறியது. மார்ச் 24 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இராமகிருஷ்ண தோட்டத்தில் அமைந்துள்ள ஐஸ்வர்ய லக்ஷமி திருக்கோயிலிருந்து கம்பன் பட ஊர்வலம்  கொழும்பு வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்தடைந்தது.
அதனையடுத்து திருகேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையைச்சேர்ந்த வி.கைலாசபிள்ளை தம்பதியினர் மங்கள விளக்கேற்றி விழா நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர். 
அதனையடுத்து அ. அரூரன் கடவுள் வாழ்த்திசைக்க கம்பன் கழகத்தலைவர் தெ. ஈஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். 
கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதன் தலைமையுரையாற்றினார். மலேசிய விளையாட்டுத்துறை 
துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
 
கம்பவாரிதி ஜெயராஜ் எழுதிய 'காவியத்துள் காவியம் ' உன்னைச் சரணடைந்தேன்' ஆகிய இரு நூல்களும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாண கம்பன் விழாக்களின் இறுவட்டுகள் இரண்டும் இந்த ஆரம்ப நிகழ்வின் போது வெளியிட்டு வைக்கப்பட்டன. 
 இலக்கியப்புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் மற்றும் அறங்காவலர்களான எஸ்.சுப்ரமணியம் செட்டியார், பீ.சுந்தரலிங்கம் ஆகியோர் இந்த நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். 
 
கலாநிதி பண்டிதர்செ.திருநாவுக்கரசு 'நாவலர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவ்வாறே நாதஸ்வர வித்துவான் எம்.பீ.பாலகிருஸ்ணன் 'விபுலானந்தர் விருதும்' கலாநிதி சா.தில்லைநாதன் 'நுழைவுபுலம் ஆய்வு விருதும்' கவிஞர் மு.சடாட்சரன் 'மகரந்த விருதும்'இ; வசந்தம் தொலைக்காட்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான எஸ்.எம்.எம்.முஷர்ரப் 'ஏற்றமிகு இளைஞர் விருதும்' வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
கம்பன் விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட பேச்சு கவிதை திருக்குறள் ஆகிய போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றியீட்டியோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. பல சமூக நிறுவனங்களுக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டதுடன் முதல் நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வு லண்டன் சைவ முன்னேற்றக்கழகத்தைச்சேர்ந்த எஸ்.பாலசிங்கம் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. திருமதி நீதிமதி யோகராஜா, திருமதி ஹேமா கபிலரதாஸ் ஆகியோர் கடவுள் வாழ்த்தைப் பாடினர். பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமையுரை நிகழ்த்த  கலைஞர் கலைச்செல்வன்   செந்தமிழ் சொற்களால் சிந்தை குளிப்பாட்டி சிறந்ததோர்  தொடக்கவுரையை ஆற்றி சபையோரின் வரவேற்பைப் பெற்றார். அடுத்து 'பங்கமில் பரதன்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச்சேர்ந்த இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 'எட்டாத கம்பனின் வற்றாத நதி' என்ற தலைப்பில் பரா.ரமீஸ் 'வாடாத மலர்' எனவும், அ.வாசுதேவா  'முற்றாத இளமை' எனவும், ச.லலீசன் 'முடியாத காமம்' எனவும்  சி.கேசவன் 'பதறாத தெளிவு' எனவும்  சோ.முரளி 'கற்றாத மனம்' எனவும்,  கு. பாலசண்முகம் மிகவும் அற்புதமாக தமது கருத்துக்களை முன் வைத்தனர் - கம்பராமாயணத்தை கரைத்து குடித்தவர்கள் போலவே அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.
 
மாலை அமர்வு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தலைமையில் ஆரம்பமானது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தனது தலைமையில் உரையின் போது கம்பன் கழக சேவைகளை பாராட்டிப் பேசினார். இந்த நிகழ்வுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்கா பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு 
தொடக்கவுரையாற்றினார். இலங்கையில் பிறந்து மடியும் ஒவ்வொரு பிரஜையும் இந்நாட்டு பிரஜைகளே என்றும் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளாவே பிறப்பதாகவும் அந்த பிள்ளைகளின் மனங்களின்வேற்றுமைகளை வளர்ப்பவர்கள் அரசியல் வாதிகளே என்றும் இந்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கும் உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மிகவும் அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார். அன்னாரின் சிங்கள மொழியிலான பேச்சை நவமணியின் பிரதம ஆசிரியரான என்.எம்.அமீன் அவர்கள் தமிழில்  அழகுற மொழிபெயர்த்தார். அன்னாரின் பேச்சுக்கு சபையோரிடமிருந்து பலத்த கரகோஷம் கிடைத்தது.
 
அடுத்து தமிழ்  நாட்டைச் சேர்ந்த புலவர்.கோ.சாரங்கபாணி தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது. 'கற்றோர் மனதை கவர்வதில் முன்னிற்கும் அறம் சார்ந்த கோபம் யாருடையது?' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இரா.செல்வவடிவேல் ஸ்ரீ பிரசாந்தன் த.சிவகுமாரன் ந.விஜயசுந்தரம் ஆறு.திருமுருகன் க.கதிர்காமசேகரம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
தி.வேல்தம்பி ஜீ.இராஜகுலேந்திரா ச.மார்கண்டு, திலகவதி மகாநந்தன், பத்மா சோமகாந்தன் தி.ஞானசேகரம், தம்புசிவா ஆகியோர் இந்த பட்டி மன்றத்தின் நோக்கக்குழுவினராக செயல்பட்டனர். பட்டிமன்றில் வாதிட்டவர்கள் தமக்குரிய ஆளுமைகளை சரியாக வெளிப்படுத்தி சபையோரை மகிழ்வித்தனர்.
 
மூன்றாம் நாள் நிகழ்வுகள்  ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி சு.திருஞான சம்பந்தர் தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலுடனும் திருமதி ஹம்சானந்தி தர்மபாலனின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமானது.  கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் சிந்தனை அரங்கு இடம்பெற்றது. 'கம்ப மொழித் திறன்' என்ற பொருளில் இந்தச் சிந்தனை அரங்கினிலே 'கம்பனின் சொல்' பற்றி ரி.ரெங்கராஜாவும்  'கம்பனின் பொருள்' பற்றி ஆறு.திருமுருகனும்  'கம்பனின் அணி' பற்றி ஸ்ரீ பிரசாந்தனும்  'கம்பனின்  சந்தம்' பற்றி த.இராமலிங்கமும் மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பேசி சபையோரை வியக்க வைத்தனர்.
 
மாலை அமர்வுகள் கல்வி ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதில் 'படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள்' என்ற  நாட்டிய  நிகழ்வில் கம்பனாக புலவர்.கோ.சாரங்கபாணியும் சீடர்களாக ஏ.எச்.ஜலால் மற்றும் எஸ்.ரவி ஆகியோரும் கூனியாக எம். ஸ்ரீதயாளனும் குகனாக ஐ.கதிர்காமசேகரமும், இந்திரசித்தனாக த.சிவகுமாரனும்; இராவணனாக லோ.பிரசன்னவருனும் கும்பகர்னணாக கு.அசோக்பரனும் இராமனாக செ.சொபிசனும் பரதனாக செ.மதுரகனும் கலந்துக் கொண்டு  அந்தந்த பாத்திரங்களாகவே வேடம் தரித்து நடித்து விழாவை சிறப்பித்தனர்.
 
இறுதி நாள் நிகழ்வுகளின் காலை அமர்வு தங்கராசா தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலுடன் மங்களகரமாக ஆரம்பமானது. வைஷாலி யோகராஜாவின் கடவுள் வாழ்த்தையடுத்து வெள்ளவத்தை நகைக்கடை அதிபர் ஏ.பி.ஜெயராசா தலைமையுரையாற்றினார். அதனையடுத்து தொடக்கவுரையாற்ற வந்தார் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் "பார்வையாளராக வந்த தன்னை பேசசாளராக அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துடன் கம்பன் விழாவையும் கம்பவாரிதி ஜெயராஜையும் புகழ்ந்துரைத்தார். அதனோடு நிறுத்திக்கொள்ளாது கம்பன் விழாவில் பெண்களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து உரை நிகழ்த்திய  கம்பவாரிதி ஜெயராஜ் 'கம்பனைப்பற்றியும் கம்பராமாயணத்தைப்பற்றியும் சிறந்த முறையில் உரையாற்றுதற்குரிய பேச்சாற்றல் மிக்க பெண்கள் ஐவரின் பெயர்களை உடனடியாக தரமுடியுமா என்றும் அப்படி தந்தால் தாம் கண்டிப்பாக அடுத்தடுத்த கம்பன் விழாக்களில் 
அந்த பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.  அந்த சமயத்தில் கம்பவாரிதி ஐயா 'ஏன் அம்மா அப்படி குறைபடுகிறீர்கள் இம்முறை சான்றோர் கௌரவம் பெறும் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே பெண்கள் தானே அம்மா! நாம் 
மகளிரை புறக்கணிக்கவில்லை' என்றும் குறிப்பிட்டிருக்கலாமே என எனக்குத் தோன்றியது.
 
அடுத்து அனைவருமே ஆவலுடன் காத்திருந்த கவியரங்கம் ஆரம்பமானது. 'குறிகளால் காட்டிட முயலும் முயற்சி' என்ற தலைப்பிலான கவியரங்கிற்கு கவிஞர் சிதம்பரம்பிள்ளை சிவக்குமார் தலைமை வகித்தார். அவரது தலைமை கவிதையே தலைகளுக்கெல்லாம்  மகுடம் சூட்டியது எனலாம். குறியீடுகளுக்கும் கவிதையா? என சபையோர்கள் ஆச்சரியத்துடனும் ஆவலுடனும் காத்திருந்த வேளை தலைப்புகளைத்  தொட்டு கவிபாட முதலில் வந்தது முற்றுப்புள்ளி. சாதாரணமாக முற்றுப்புள்ளி என்றால் கடைசியில் தானே வைக்க வேண்டும். ஆனால் இந்த கவியரங்கில் அதிலும் ஒரு புதுமையை புகுத்தியுள்ளார் கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா. ஆமாம்! முற்றுப்புள்ளியை வைத்து என்னதான் கவி பாடுவரோ? என சபையோர்கள் முணுமுணுக்க அனைவரினதும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பது போல கவிமழை பொழிந்து அந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தமிழ்தென்றல் அலி அக்பர். இவரது கவித்தென்றல் சபையோரின் இதயங்களையும் இதமாக ஆரத்தழுவியது எனலாம். அடுத்து காற்புள்ளி என கவிதை படிக்க வந்த ந.விஜயசுந்தரமும் தாம் கவிதையில் பெரும்புலி என நிரூபித்து விட்டார். தொடரிசைக்குறியை பாட வந்த ந. ஜெசீலன் அனைவரையும் அவர் கவியை அசைபோட வைத்தார். அடுத்து வியப்புக்குறி குறித்து வியப்பாக பார்த்திருந்த சபையோரை தனது சந்தக்கவி மூலம் வியப்பில் ஆழ்த்தினார் சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி. அவரது அடுக்குமொழி கவிதை கேட்டு சபையே வியந்தது. அவ்வாறே மேற்கோள்குறி பற்றி பாடிய ச.முகுந்தன் தன்னை மேற்கொள் குறியிட்டு பேசும்படி செய்துவிட்டார். த.சிவசங்கர் அடைப்புக்குக்குறி பற்றி பாடி அனைவரிடத்திலும் அடைக்கலமானார். எல்லா கவிஞரும் எல்லாவற்றையும் பாடி முடித்து விட்டார்கள் இனி இறுதியாக ஸ்ரீபிரசாந்தனோ கேள்விக்குறிதான் என்றிருந்த சபையோருக்கு தன் கவிதையால் தக்க பதில் கொடுத்தார்.  உடல் உறுப்புக்களை எல்லாம் குறியீடுகளுக்கு உவமானமாகக் காட்டி அவர் கவிதை பாடிய விதம் அலாதிதான். அற்புதம் தான். பல்துறை ஆளுமைமிக்க ஸ்ரீபிரசாந்தனின் கவித்துவமும் அபாரம் தான். அவர் இன்னும் கவி பாடுவார் என  எதிர்பார்த்திருக்கையில் திடீரென கேள்விக்குறியாகவே போய் அமர்ந்து விட்டார். ஆக மொத்தத்தில் கம்பன் விழா கவியரங்கம்  எல்லா கவிஞர்களும் கம்பனை மட்டுமல்ல கம்ப ராமாயணத்தை மட்டுமன்றி நாட்டு நடப்பையும் கூடவே சேர்த்தே கவி பாடினர்.அதனால் தான் கவியரங்கு   கவி ரசம் கனி ரசம் 
மட்டுமல்ல இன்பரசமும்   இலக்கிய ரசமும்  தந்தது என்றால் அது மிகையாகாது. கற்கண்டு சொற்கொண்டு கவிஞர்கள் வடித்த கவிதைகள் அனைத்தும் அபாரம்!கவியரங்கு சபையோரின் நித்திரை போக்கி முத்திரை பதித்தது.
 
அடுத்து வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தலைமையில் நூற்றாண்டு நிறைவு அரங்கு இடம்பெற்றது. இவ்வரங்கில் தமிழ் அறிஞர்களான காஞ்சென்ற பேராசிரியர் ஆ.ச. ஞானசம்பந்தர் மற்றும் இலக்கண வித்தகர் இ.நவசிவாய தேசிகா ஆகியோர் நினைவு கூரப்பட்டனர். பேராசிரியர் த. இராமலிங்கம் மற்றும் வித்தக வேந்தர் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோர் இந்த பேரறிஞர்களைப்பற்றி நினைவுப்பேருரைகளை நிகழ்த்;தினர.; அச்சமயம் இருவர் கண்களும் குளமாகின. அதை பாத்திருந்த சபையோரின் கண்களும் பணித்தன காத்திரமான பேருரைகள். பேருரைகளை தந்த இருவரும் பாராட்டுக்குரியவர்களே.

இறுதிநாள் மாலைநேர அரங்கிற்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து சிறப்பித்தார். அத்தோடு இந்திய இசைக்குயில் பீ.சுசீலாவும் இவ்விழாவில் கலந்துக் கொண்டு கம்பன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சங்களாகும். நகைக்கடை உரிமையாளரான என் வாசு தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலுடனும் திருமதி தாரணி ராஜ்குமாரின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமான இந்த மாலை அமர்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையுரையாற்றினார். மேல் மாகாண ஆளுநர் கே.சீ.லோகேஸ்வரனின் தொடக்க உரையை அடுத்து பிரதம அதிதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்களுக்கான கௌரவம் இடம்பெற்றது. கம்பன் கழக தவைரான த.
 ஈஸ்வரன் மற்றும் பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதன் ஆகியோர் பிரதமருக்கு பொன்னாடை போர்த்து பூமாலையும் தலைப்பாகையும் சூடி 
இந்த கௌரவத்தை வழங்கினர்.
 
அதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கம்பன் கழகத்தையும் கம்ப ராமாயணத்தையும் புகழ்ந்து பேசினார். அதனையடுத்து சான்றோருக்கான கௌரவம் இடம்பெற்றது. இந்தக் கௌரவம் பல்துறை ஆளுமைமிக்க பெண்கள் அறுவருக்கு வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும். கொழும்பு திறந்த பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை உமா குமாரசாமி கட்புல அறங்காட்டுகை பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இமத்திய மாகாண முன்னாள் கல்வி அமமைச்சரான அனூஷா சிவராஜா சித்திரசேன வஜிர நாட்டிய கல்லூரியின் நிர்வாக இயக்குனர் தேசபந்து வஜிரா சித்திரசேன ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை  பொதுச் செயலாளர் தேசமான்ய ராதிகா குமாரசுவாமி கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபரான கலாநிதி  ஹஜர்ஜான் மன்சூர் ஆகியோரே இந்த விழாவில் கௌரவிக்கப்பட்ட சான்றோராவர். ஒவ்வொருவரது பெருமைகளும் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டன.  
இத்தகைய தகுதி பெற்றவர்களா இவர்கள் என்று சபையோர் மெச்சும் அளவுக்கு கௌரவிக்கப்பட்டோர் புகழ்பெற்றிருந்தனர். இவர்கள் பொன்னாடை போர்த்தி பூமாலை சூட்டிய பின்னரே  இந்த உயர் சான்றோர் விருதுகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து இந்த கம்பன் விழாவுக்கே மகுடம் சூட்டியது போலவே இன்னசைக்குயில் பீ.சுசீலாவுக்கான கம்பன் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்னிசைக்குயில் பீ.சுசீலாவுக்கான கம்பன் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முதலில் பாடகி பீ.சுசீலா கலாசார முறைப்படி பரிவாரங்களுடன் ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதையடுத்து சட்டத்தரணி மாலா சபாரத்தினம் பீ.சுசீலா அம்மையாருக்கு பன்னீர் தெளித்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார். பின்னர் அவருக்கென  தயாரித்திருந்த விசேட ஆசனத்தில் அமரச் செய்தனர். கம்பன் கழக தலைவர்களான த. ஈஸ்வரன் மற்றும் ஜெ. விஸ்வநாதன் ஆகியோர் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தியதுடன் அன்னரின் உயரத்துக்கு சமமான பூமாலையையும் அணிவித்தனர்.   கம்பன் புகழ் விருதினையும் வழங்கியதுடன் அவருக்குரிய பொற்கிழியையும் வழங்கி கௌரவித்தனர்.

எங்கே சுசீலா அம்மையார் பாட்டொன்று பாடுவாரா? என்று ஏங்கி கிடங்க ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை.  'தமிழுக்கும் அமுதென்றுப் பேர்';...என்று தன் பாடலை அவர் தனது அமுதக் குரலால் பாட ஆரம்பிக்கும் போதே சபையோரின் கரகோஷம் மண்டபத்தை மட்டுமல்ல வானைப்பிளந்தது எனலாம். அடுத்து 'ராமன் எத்தனை ராமனடி'இ  'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன'; .. இப்படியாக மனது மறக்காத பழைய பாடல்கள் பலவற்றின் ஓரிரு அடிகளை பாடிக்கொண்டே போனார்." அம்மா இன்னும் பாடுங்கம்மா! "என்று சபையிலிருந்து ரசிகப் பெருமக்களின் குரல்களை ஒலித்தன. அம்மாவுக்கு 80 வயது என்று சபையில் அறிவிக்கப்பட்ட போதிலும் அன்னாரின் குரல் இன்னும் இளமையாக ஒலித்தது கண்டு அனைவருமே பிரமித்து போயினர்.
 
'தனது பாடலுக்கு இலங்கை ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை மெச்சிய இன்னிசைக்குயில் சுசீலா அம்மையார் இலங்கை வானொலி அன்று முதல் இன்று வரை தனது பாடலை ஒலிபரப்பி வருவதையிட்டு நன்றி பாராட்டினார். அத்தோடு தன்னை அழைத்து இலங்கையில் இத்தகைய மாபெரும் கௌரவத்தை தந்த இலங்கை கம்பன் கழகத்தையும் பாராட்டி நன்றி தெரித்த அம்மையார் இந்த உயர் விருதினை தனது பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.தள்ளாத வயதிலும் தழும்பாத அவர் குரலை மெச்சாதோர் எவருமில்லை. சபைக்கு அவர் விடைகொடுத்த போது சபையோர் அன்னாருக்கு பெரும் கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சி ஆரவாரத்தை தெரிவித்தனர்.
 
அவர் விடைபெற்ற போது பெரிய மழை பெய்து  ஓய்ந்தது போல  சபை அமைதியானது. கம்பன் விழாவின் கடைசி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் இடம்பெற்றது. கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில்  'காலத்துக்கு ஒவ்வாத கம்பனின் கருத்துக்களை காவியத்திலிருந்து நீக்குக 'என்ற தலைபப்பில் நடைபெற்ற இந்த வழக்காடு மன்றில்  இரா செல்வ வடிவேல் ரெங்கராஜா த. இராமலிங்கம் நி.திருநந்தகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டு வாதிட்டனர். கம்பராமாயாணத்தில் உள்ளடக்கியுள்ள கருத்துக்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை என்றும் எனவே அந்த காவியத்திலிருந்து எந்தவொரு கருத்தையும் நீக்க வேணடிய அவசியமில்லை என்றும் வழக்காடு மன்ற நீதியரசர் கம்பவாரிதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்போடு நான்கு நாள் கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
 
இந்த விழாவைப்பற்றி எனது மனதைத் தொட்ட சில பதிவுகளையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். உஷ்ணமான காலநிலையினால் திரும்பும் திசையெல்லாம் வியர்வை எம்மை வாட்டிய போதிலும் அதனையும் பொருட்படுத்தாது இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்ச்சிகள் முடியும் வரை சபையை அலங்கரித்தமை ஒரு விசேட அம்சமாகும்.
 
 அத்தோடு விழா ஏற்பாட்டாளர்களும் தமக்கு எவ்வளவோ வேலைகள் இருந்த போதிலும் விழாவில் கலந்துக்கொண்டவர்களின் நலன் கருதி இயன்றவரை முயன்று  மண்டபத்தில் பல குளிரூட்டிகளையும் கற்றாடிகளையும் பொருத்தி சூட்டை தணிப்பதற்கு எடுத்த முயற்சிகளையும் இங்கு பாராட்டமல் இருக்க முடியாது. மாதக்கணக்கில் வடிவாக திட்டமிட்டுஇ வளவாளர்களையும்  தகுதி கண்டு தேர்தெடுத்து ஒழுங்கான நெறியாள்கையுடன் நடத்தப்படும் இந்த மாபெரும் இலக்கிய விழா ஒரு மகத்தான விழா என்றால் அது மிகையாகாது. இந்திய பேரறிஞர்கள் கூட  மனந்திறந்து பாராட்டும் அளவுக்கு விழா அமைப்புகளும் மண்டப அலங்கரிப்புகளும் ரொம்ப பிரமாதமாக இருந்தது.
 
 அத்தோடு இலக்கிய பசிக்கு தீனி போட்ட இந்த கம்பன் விழா வயிற்றுப்பசிக்கும் விருந்து படைத்ததையும் இங்கு கண்டிப்பாக  குறிப்பிடவேண்டும். விழா நிகழ்வுகளில் கலந்து கொண்ட அத்தனை இலக்கிய ஆர்வலர்களையும் எவ்வித பாராபட்சமுமின்றி அன்னதானம் வழங்கி உபசரித்தது  மெச்சத்தக்கது.
 
கம்பவாரிதி என்ற தனிமனிதனின்  தளராத முயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமல்ல கம்பவாரிதியுடன் இணைந்த இலக்கிய மணம் கமழும்  இளைஞர் குலாமும் தான் இதற்கு காரணம் என்பேன். கம்பவாரிதி ஐயாவுடன் கைகோர்த்துள்ள கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன்இ செந்தில்நாதன் சொபிசன்இ அருணாச்சலம் வாசுதேவாஇ சோதிலிங்கம் சுதன் இசெல்வராசா மதுரகன் 
போன்றோரை உள்ளடக்கிய இந்த சுறுசுறுப்பான இளைஞர்களையும் இங்கு  பாராட்டியே ஆக வேண்டும். மேலும் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடைபெற கம்பவாரிதியின் கரங்களை பலப்படுத்திய தனவந்தர்களையும் 
இலக்கிய நலன்விரும்பிகள் என்றுமே மறந்து விட முடியாது. இறுதியாக  எவ்வித ஆர்பாட்டமுமின்றி மாபெரும்  வெற்றி விழாவாக இந்த கம்பன் விழாவை நடத்திய கம்பவாரிதி ஜெயராஜ் ஐயாவுக்கும் இவரோடு நிழலாக செயல்படும்  ஏற்பாட்டுக்கு குழுவுக்கும்  சபாஷ் போட வேண்டும்!
 
-   கலாபூசணம்.  நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்  
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்