கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைச்சாண்டி - சுடுசரம்
உ
டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கட்கு,
வணக்கம்!
இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம்.
உங்களது நலம் நோக்கித் தமிழ் மக்கள் அனைவரும் பிரார்த்தித்து நிற்கிறார்கள். அது உங்கள் மேல் வைத்த அபிமானத்தாலன்று. உங்களின் மனக்குழப்பத்தால் நம் இனம் அவமரியாதைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதாலேயாம்.
தமிழ் மக்கள், கடந்தகாலப் போரில் எத்தனையோ வகையான குண்டு வெடிப்புக்களைக் கண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் பயப்படாத அவர்கள், அண்மைக்காலமாக உங்களின் வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகளுக்கு, அவற்றைவிட அதிகமாகப் பயப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
நீங்கள் தெரிந்துதான் இந்த வார்த்தைகளைப் பேசுகிறீர்களா? அல்லது உங்களை அறியாமல் இந்த வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வருகின்றனவா? பின்னது தான் உண்மை என்றால் நிச்சயம் நீங்கள் “ட்றீற்மென்ற்” றுக்குச் செல்லவேண்டித்தான் இருக்கப் போகின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்ததாகச் சொல்லப்பட்ட தவறுகளை எவருக்கும் பயப்படாமல் நீங்கள் வெளிக்கொணர்ந்த போது, ஆரம்பத்தில் ஓர் புரட்சிப் போராளியாகத்தான் சமூகம் உங்களை இனங்கண்டது. உண்மையில் நான்கூட உங்களின் துணிவு கண்டு அப்போது வியந்திருக்கிறேன். அப்படி உங்கள் மேல் ஏற்பட்ட மதிப்புத்தான், மக்களை உங்கள் பின்னால் அணிதிரளச் செய்தது.
பொங்குகிற பாலில் தண்ணீர் தெளித்ததும் அது அடங்கிப் போய் விடுவது போல, உங்கள் செயல் கண்டு மதிப்புற்றுப் பொங்கி எழுந்த மக்களை, உங்களது வார்த்தைகள் தண்ணீர் தெளித்த பாலாய் அடங்கச் செய்து விட்டன.
ஆரம்பத்தில் உங்களுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு, ஓர் தர்மப் போரட்டத்திற்கானது என்பதை அறியாமல், அது உங்களுக்குக் கிடைத்த தனி ஆதரவென்று கருதி, நீங்கள் நிலை தடுமாறிப் போனீர்கள். உங்களின் “துடுக்குத்தனம்” கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவந்து விரியத் தொடங்கியது.
உங்களின் துறைசார்ந்த வைத்தியர்களோடு நீங்கள் தொடுத்த போரை, முதலில் மக்கள் தமக்கான போரென்றுதான் நினைத்தார்கள். போகப் போகத்தான், அது தற்புகழுக்கான போரென்பது தெரியவந்தது. மற்றவர்களை அலட்சியம் செய்வதும், தூற்றுவதும், குற்றஞ்சாட்டுவதும் உங்கள் வழக்கமாகப் போயிற்று.
உங்களின் போராட்டத்திற்காகக் கூடிய மக்களின் எழுச்சி கண்டு, அரசியல்வாதிகள் உங்களைச் சூழத் தொடங்கினார்கள். நீங்களும் அவர்களைக் கைவிரித்து வரவேற்றீர்கள். முதலில் எம்.பி.மார்களோடு உறவு பாராட்டினீர்கள். பிறகு அமைச்சர்களோடு உறவு பாராட்டினீர்கள். பிறகு ஜனாதிபதி, ஜனாதிபதி வேட்பாளர் எனப் பலரோடும் உறவு பாராட்டினீர்கள்.
ஆனால், உங்களின் அந்த உறவெதுவும் நிலைத்துத் தொடரவில்லை. அவர்களைப் பாராட்டிய வார்த்தைகளின் ஈரம் காய்வதற்கு முன்பாக, அவர்களை உங்களின் வாய் தூற்றித் தள்ளியது. “ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்” எனும் பழமொழியை மறந்து போனீர்கள்.
எவரோடும் உங்கள் உறவும், நட்பும் தொடர்ந்ததாய்த் தெரியவில்லை. உங்களின் உண்மை முகம் தெரியாமல், அப்பாவிகளான நம் மக்கள் சிலர் தந்த ஆதரவும், நம் இனத்தின் பிழைகளை வளர்த்து விடுவதற்கென்றே இருக்கின்ற, சில புலம் பெயர்ந்தோர் தந்த ஆதரவும் உங்களை ஆணவத்தின் உச்சிக் கொம்பிற்கு ஏற்றிற்று.
‘நானெனும் ஆணவம் தள்ளலும் – இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் – பர
மோனநிலையில் இருத்தலும் – ஒரு
மூவகைக் காலம் கடத்தலும் – நடு
ஆன கருமங்கள் செய்தலும் – உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் – பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதிலும் – தனது
உள்ளம் அருளில் நெகுதலும் - இவை
தாயின் வயிற்றிற் பிறந்தன்றே – தமை
சார்ந்து விளங்கப் பெறுவரேல் - இந்த
மாயிரு ஞாலம் அவர் தமைத் - தெய்வ
மாண்புடையார் என்று போற்றுங்காண்’
என்று தலைமைக்கான இலட்சணத்தை பாரதி அன்றே பாடிப் போனான்.
இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? மேற் சொன்ன பண்புகளில் எந்த ஒன்றையும் உங்களிடம் காண முடியாமல் போனதல்ல, மேற் சொன்னவற்றிற்கு நேர் எதிரான பண்புகள் உங்களிடம் ஆழப் பதிந்திருந்தது தான் துரதிர்ஷ்டம்!
தற்செயலாய் அடித்த பந்தொன்று “சிக்ஸர்” எல்லையைக் கடக்க, இனி, தான் அடிக்கும் பந்தெல்லாம் “சிக்ஸர்” எடுக்கும் என நினைந்து, தாறுமாறாய்த் துடுப்பை வீசி வேகமாய் “அவுட்” ஆன ஒரு கிரிக்கெட் வீரனைப் போல உங்களின் கதை ஆகிவிட்டது.
உங்கள் மதிப்பை உயர்த்துவதற்காக, மற்றவர்களின் பிழைகளைத் தேடித் திரிந்தீர்கள். நான் ஒருவனே யுகந்தொறும், யுகந்தொறும் தமிழினத்தைக் காக்க வந்த அபாய ரட்சகன் என்பதாய்க் கற்பனை வளர்த்தீர்கள். அந்தப் பிழையான எண்ணம் “ஜெயில்” வரை உங்களைக் கூட்டிச் சென்ற பிறகும் நீங்கள் திருந்தியபாடாய் இல்லை.
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. வெளிநாடுகளில் சுகவாழ்வு வாழ்ந்து கொண்டு, நம் இனத்திற்காய்ப் போலிக் கண்ணீர் வடித்து வரும் சில சுயநல ஓநாய்களுக்கு, உங்கள் பொய்மை நன்றாய்ப் பிடித்துப் போயிற்று. அவர்கள் உங்களைப் பிரபாகரனின் அடுத்த அவதாரம் என்று நினைக்கத் தொடங்கினார்கள். அதனால் தம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதமான பணத்தை அள்ளி, உங்களை நோக்கி அவர்கள் வீச, உங்கள் உற்சாகம் கொப்பளித்துக் கிளம்பத் தொடங்கியது.
பொழுதுபோக்குக் “கிளப்புகளில்”, பார்வையாளர்கள் பணத்தை அள்ளி வீச, உற்சாகம் பெற்று, மேலும் மேலும் உடை உரித்து ஆடும் “காபரே டான்ஸர்கள்” போல, அவர்கள் பணத்தால் உங்கள் ஆட்டமும் மிதமிஞ்சத் தொடங்கியது.
பல நாடுகளிலும் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, வருமானத்திற்கு வழி செய்து கொண்டீர்கள். ஒரு அம்மணி உங்களுக்குக் கார் வாங்கித் தந்ததாகக் கூடப் பேசிக் கொண்டார்கள். இப்படியாய் சுகமாக வருமானங் கொட்டத் தொடங்க, வேலை போனது பற்றிக் கூட நீங்கள் சிறிதும் கவலைப்படவில்லை. உங்களின் அச் செயலையே தியாகத்தின் எல்லை என்றார்கள் சில மூடர்கள்.
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல, தேர்தலில் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு உற்சாகமாகக் குதித்தீர்கள். நல்லவர்கள் ஏமாளிகளாக இருப்பதுதான், இங்கு நடக்கும் கொடுமைகளில் மிகப்பெரிய கொடுமை. அண்மையில் ஒரு “யூடியூப்” விவாதத்தில், முன்னாள் முதலமைச்சர் அணியில் வேட்பாளராய் பங்கேற்கும் ஒருவர் வாதிட வந்தார். பார்க்கக் கண்ணியமாகத் தெரிந்த அந்த மனிதர் பேசும்போது “முன்னாள் முதலமைச்சரின் நேர்மைபற்றி உங்களுக்குத் தெரியும் தானே” என்கிறார். அவரின் அப்பாவித் தனத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டேன்.
அப்படித்தான் அப்பாவியான நல்லவர்கள் சிலர், உங்களோடு சேர்ந்து தேர்தலில் குதித்து விட்டு, உங்கள் கூத்துக்களால் மனம் உடைந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியெல்லாம் உங்களுக்குச் சிறிதும் கவலையில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், நீங்கள் அடிக்கும் கூத்துக்களை ஒரு பைத்தியகாரன் கூடச் செய்யமாட்டான் என்பது மட்டும் சத்தியமான உண்மை.
ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்! நம்மினம், தலைவர்களிடம் தனிவாழ்வுத் தூய்மையை எதிர்பார்க்கும் இனம். அது கூட உங்களுக்குத் தெரியவில்லை. அண்மையில் வெளிவந்த முகநூல் காணொளி ஒன்றில், நீங்கள் இப்போது உங்களோடு (தேர்தலில்) இணைத்துக் கொண்டிருக்கும், “கௌசி” என்கின்ற பெண்ணின் காதலன் என்று சொல்லப்படும் ஒருவன், உங்களோடு உரையாடிய பேச்சு வெளியாகியிருந்தது. அதைக்கேட்டு அதிர்ந்து போனேன்.
அவ் உரையாடலில் “கௌசி என்கின்ற தங்கம், இப்ப என்னோடு தான் இருக்குது. நீ அவளைக் கல்யாணம் முடிக்காட்டி, நான் அவளைக் கல்யாணம் முடிப்பேன்” என்று நீங்கள் சொல்ல, அதைத் தாங்கமாட்டாத அந்த இளைஞன், “ஐயோ.ஓ.ஓ.ஓ! டொக்டர் அப்படிச் சொல்லாதையுங்கோ! கௌசி இல்லாட்டி நான் செத்துப்போவன்” என்று நாபிக் கமலத்திலிருந்து சத்தமிட்டுக் கதற, நீங்கள் வெகு “கூலாக”, ‘செத்துப் போடா’ என்று பதிலுரைப்பதைக் கேட்டுப் பதறிப் போனேன். அதற்கு அடுத்ததாக வந்த காணொளியில் நீங்கள் அவனோடு பேசிய தூய(?) வார்த்தைகளை நான் இவ்விடத்தில் எழுதுதல் தகாது.
எனக்கு ஒன்று புரியவில்லை. பொதுவாகக் குற்றம் செய்தவர்கள் கூட, தேர்தலில் போட்டியிடும் போது அக் குற்றங்களை மறைக்கத்தான் பார்ப்பார்கள். நீங்களோ, தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கையில், கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் உங்கள் பிழைகளைப் பொது வெளியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அசிங்கத்தைக் கண்டு உங்களை நம்பிய மக்கள் வேதனையால் தலைகவிழ்ந்து நிற்கிறார்கள். உங்களை நம்பித் தேர்தலில் போட்டியிடவென வந்த நல்லவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்லலாம். இம்முறை தேர்தலில் நீங்கள் தப்பித் தவறியேனும் வெற்றிபெறுவீர்களேயானால், ஈழத்தமிழ் இனம் அழியப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறும் வெற்றியாகத்தான் அவ் வெற்றி அமையும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஒரு வெற்றி, தவறியேனும் உங்களுக்கு வந்தால், தமிழ்மக்கள் தம் தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள் என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டியிருக்கும். யார் கண்டது? எத்தனையோ பிழைகளைக் கண்ட பிறகும் நீதியரசருக்கும், “உதயன்” அதிபருக்கும் வெற்றிகளைத் தந்த மக்கள், உங்களுக்கு வெற்றியைத் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.