அதிர்வுகள் 13 | 'மரமனிதர்கள்'

 
லகில் இன்று மனிதர்கள் கூடி வாழும் வாழ்க்கை,
இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
காரணம் அறிவு வளர்ச்சி!
நாளுக்குநாள் அந்த அறிவுவளர்ச்சியின் விரிவு அகலித்துக்கொண்டே போகிறது.
அது அகலிக்கும் விகிதாசாரத்திற்கேற்ப மனித உணர்வுகள் சுருங்கிக்கொண்டே போகின்றன.
உணர்வைச் சுருக்கும் அறிவின் விரிவை, மனிதசமுதாயத்தின் வளர்ச்சி என்று,
மடத்தனமாய் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
***

இன்னும் சிலகாலம் இதேபோக்கில் போனால்,
விலங்கு நிலையைத் தாண்டி தாவரநிலையை நாம் அடையப்போவது நிச்சயம்.
அசையாத தாவரங்களிலிருந்து மாறுபட்டு அசையும் தாவரமாய் மனிதர்கள் இருக்கப்போகிறார்கள்.
இது ஒன்றே தாவரத்திற்கும் மனிதருக்குமான  வித்தியாசமாக இருக்கப்போகிறது.
ஏன் இந்தப்பயம் என்கிறீர்களா? சொல்கிறேன்!
 

***

இறைவன் இயற்கை அமைப்பில்,
மனிதர்களின் நலம் நோக்கிச் சில அற்புதங்களைச் செய்திருக்கிறான்.
உணர்வு அதிகரிக்க அறிவு குன்றுவதும், அறிவு அதிகரிக்க உணர்வு குன்றுவதும்,
இறைவன் செய்த அவ் அற்புதங்களில் ஒன்றாம்.
உணர்வு அதிகரிக்கையில் அறிவு செயற்பட்டால்,
அந்த உணர்வுநிலையை முழுமையாய் அனுபவிக்க முடியாது.
அதுபோலவே அறிவு அதிகரிக்கையில் உணர்வு செயற்பட்டால்,
அவ் அறிவு நிலையில் தெளிவுற முடியாது.
இதற்காகவே இறைவன் இம்மாறுபாட்டினைப் படைத்திருக்கிறான்.
***

அறிவு, உணர்வு எனும் இவ்விரண்டும் மனிதர்களுக்குத் தேவையானவையே.
இவ்விரண்டும் இருந்தால்த்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.
மானுடம் சுவைக்கும்.
இவ் அடிப்படை கொண்டே,
ஆண், பெண் என உலகை இருவகைப்படுத்திப் படைத்த இறைவன்,
ஆணை அறிவு சார்ந்தவனாகவும், பெண்ணை உணர்வு சார்ந்தவளாகவும் படைத்து,
அவ்விருவரின் கூட்டில் இன்பத்தை விளைவிக்க ஒழுங்கு செய்தான்.
***

இதை நான் சொன்னதும்,
பெண்ணியல்வாதிகள், அப்படியானால் எங்களுக்கு அறிவில்லையா? என்று,
உடனே என்னோடு சண்டைக்கு வரப்போகிறார்கள்.
அவர்கள் ஒன்றை உணரவேண்டும்,
மேற்சொன்ன எனது கூற்றுக்கு அவர்கள் சொல்வது தான் பொருள் எனின்,
ஆண்களுக்கு உணர்வேயில்லை என்றல்லவா ஆகிவிடும்.
அறிவில்லாவிட்டாற்கூட பரவாயில்லை, உணர்வில்லாவிட்டால் உலகம் எங்ஙனம் இயங்கும்?
இதுவரை எந்த ஆணும் மேற்சொன்ன  எனது கருத்தைக் கேட்டுவிட்டு,
அப்படியானால் எங்களுக்கு உணர்வில்லையா? என்று கேட்டதே இல்லை.
பெண்கள்தான் கேட்கிறார்கள்.
அஃது ஒன்றே அவர்தம் அறிவுக்குறைவினதும், உணர்வுமிகுதியினதும் அடையாளமாம்.
நான் சொல்வதை நேர்மையாய்ப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.
ஆண் அறிவுசாhந்தவன், பெண் உணர்வுசார்ந்தவள் என்ற எனது கூற்று,
பெரும்பான்மை பற்றியதே.
***

விடயத்தை விட்டு அதிகதூரம் வெளியே வந்துவிட்டோம்.
நான் சொல்லவந்த விடயம் இதைப்பற்றியதல்ல.
உணர்வு, அறிவு என்ற இரண்டையும் போலவே,
இன்பம், துன்பம் என்ற இரண்டிற்கும் இடையிலும்,
இயற்கையான ஒரு மாறுபாடு உண்டு.
இன்ப உணர்வு மற்றவருடன் பகிரப்படுகையில் அதிகரிக்கும்.
துன்ப உணர்வு மற்றவருடன் பகிரப்படுகையில் குன்றும்.
இதுவும் இறைவனின் விளையாட்டேயாம்.
மொத்தத்தில் இன்பமோ, துன்பமோ,
மானுடரைப் பொறுத்தவரை பகிர்தல் அவசியமாகிறது.
அங்ஙனம் உணர்வுப் பகிர்தல் இன்றேல்,
மனிதமனங்களுள் உணர்ச்சிகள் கொந்தளித்து,
மனிதன் நிலைகுலைந்து போவான்.
***

சொல்லவந்த விடயத்தை விளங்கச் செய்வதற்காக,
இந்த நீண்ட முன்னுரையை எழுதவேண்டியதாகிவிட்டது.
அதற்காகப் பொறுத்தருளுங்கள்!
மனிதவாழ்வுக்கு உணர்வுப்பகிர்வு அவசியம் என்பதை,
உங்கள் உங்கள் வாழ்வனுபவத்திலேயே உணர்ந்திருப்பீர்கள்.
மனிதவாழ்வு என்ன மனிதவாழ்வு!
விலங்குகளுக்குக் கூட அது அவசியமாய்த்தான் இருக்கிறது.
அதிர்வுத் தொடரில் நான் எழுதிய 'கிருஷ்ணியின் காதல்" படித்திருப்பீர்கள்.
ஆழ்ந்து சிந்தித்தால் ஓரறிவுள்ள தாவரங்களுக்குத்தான்,
உணர்வுப்பகிர்வின் அவசியம் அதிகம் இல்லை என்று தோன்றுகிறது.
அவற்றுக்கும் அதிகம் இல்லை என்று சொல்லலாமே தவிர,
முழுமையாய் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
***

இன்று அறிவுவளர்ச்சி என்ற பெயரில்,
உணர்வை நாளாந்தம் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.
அளவுக்கதிகமான உணர்வு வெளிப்பாடு,
நாகரீகக் குறைவு எனும்கருத்து இன்று பரவி வருகிறது.
உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதுதான் நாகரீக வளர்ச்சியாம்!
இக்கருத்துப் பரவலாற்தான் இன்று செத்தவீடுகளிலும் மனிதர்கள்,
வாய்விட்டு அழ வெட்கப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் மாரடித்து அழுத அழுகையெல்லாம் இன்று போயேவிட்டது.
இன்பமோ துன்பமோ நாகரீகம் என்ற பெயரில் உணர்வை அடக்கி அடக்கி,
மனநோய் வைத்தியர் வீட்டுவாசலில் எல்லோரும் வரிசையாய் நிற்கிறார்கள்.
***

அதைப்பற்றித்தான் இக்கட்டுரையில் எழுத நினைத்தேன்.
எனது தந்தையின் வேலை மாற்றங்களால்,
இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்துவிட்டு,
எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க் கிராமத்திறகு வந்த கதையை,
முன்பும் பலதரம் சொல்லியிருக்கிறேன்.
இதுவும் அங்கு ஏற்பட்ட மற்றொரு அனுபவம்தான்.
***

அங்கு நாங்கள் போன போது புதிதாய் ஒரு அறிமுகம்.
பொன்னாலையிலிருந்து மாரிமுத்து எனும் கிழவி மீன் விற்கவருவாள்.
பெரும்பாலும் அவள் வருகை மாலைவேளையில்தான் நிகழும்.
வரும்போது சின்னப் பனையோலைக் 'குஞ்சுப்பெட்டி" நிறைய,
இறால் கொண்டு வருவாள்.
வெளியூர்களில் சுற்றியதால் ஊர்ப் பலயீனங்கள் அதிகம் இல்லாத,
எங்கள் குடும்பத்தின் மேல் அவளுக்கு ஒரு மதிப்பு.
எங்கள் வீடு அதிகம் பேரம் பேசாமல் அவளிடம் பொருள் வாங்கும்.
வந்து வெளிப்படியில் கால்நீட்டி உட்கார்ந்து அவள் மயக்கிப் பேச,
அவளது பேச்சாற்றலில் கிறங்கிப்போய் அவள் சொன்ன விலைக்கு,
எங்கள் வீட்டில் இறாலை வாங்குவார்கள்.
அவளே உட்கார்ந்து அத்தனை இறால்களையும்,
கோதுடைத்து சுத்தப்படுத்தித் தந்துவிட்டு,
சிரட்டையில் தேனீர் வாங்கிக் குடித்து,
எங்கள் அம்மா தரும் உணவுகளை,
அதே குஞ்சுப்பெட்டிக்குள் வைத்துக் கொண்டு செல்வாள்.
தேனீர் குடிப்பதற்கான சிரட்டையைக் கூட தானே கொண்டுவருவாள்.
கலைநயத்தோடு செதுக்கப்பட்ட அந்தச் சிரட்டை,
இன்றைய 'கப் அன் சோசரை" விட அழகாக இருக்கும்.
***

மாரிமுத்துவின் வாய்க்கு எங்கள் ஊரே பயப்படும்.
அவள் தனி ஒருத்தியாய் நின்று,
ஊர்க்காரர் அத்தனை பேரோடும் வாய்ச்சிலம்பம் ஆடுவாள்.
கிழவிதானே என்று நினைந்து அவளை யாரும் ஏமாற்ற நினைத்தார்களோ,
கதை அவ்வளவுதான்!
அவர்களை வார்த்தைகளால் சிதைத்துப் போட்டுவிடுவாள்.
மாரிமுத்துவும் இலேசுப்பட்டவள் இல்லை.
ஊர்க்காரர்கள் பேரம் பேசுவார்கள் எனத் தெரிந்து பத்தை நூறாக்குவாள்.
எங்கள் உறவுப்பெண்கள் நூறை ஐந்தாக்குவார்கள்.
இந்தப் பேரத்தில் நடக்கும் சண்டை மிக சுவாரஸ்யமாய் இருக்கும்.
***

கிராமத்திற்குப் போன புதிதில் எங்கள் உறவுப்பெண்களும், ஆண்களும்,
அவளிடம் வாங்கும் திட்டுக்களை மிகவும் ரசித்திருக்கிறேன்.
யாராவது அதிகம் விலை குறைத்துக் கேட்டுவிட்டால்,
'வீட்டில சட்டிகழுவி கவிட்டிட்டோ வந்தனீ?" என்றும்,
'பெண்டில் எப்பயாவது உனக்கு மீனைக் காட்டியிருக்கிறாளே?" என்றும்,
'உது மீன்வாங்கிற மூஞ்சியில்ல போய் வேற வேலையைப்பார்" என்றும்,
'இந்த மீன் கழுவின தண்ணியும் உன்ட விலைக்கு வராது" என்றும்,
தன்னைச் சீண்ட நினைக்கும் ஊர்க்காரரை,
வார்த்தைக் கத்திகளால் வெட்டி வீழ்த்துவாள்.
***

அவள் பேசும் பாணியே தனியானது.
வாய், மூக்கு, கண் என்று அனைத்து உறுப்புக்களையும் சுழித்து,
அங்க அசைவுகளோடு மாரிமுத்து பேசுவதை ரசித்திருக்கிறேன்.
அவளுடைய உதடுகள் சொற்களை வெளிக்கொணரும் தேவைக்கு மிக அதிகமாய்,
சுழித்தும் நெளித்தும் வார்த்தைகளை உதறும்.
கண்களை உருட்டியும், விழித்தும், சுருக்கியும்,
தன் வார்த்தைகளுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்குவாள்.
திடீரெனக் காகமாய்க் கூர்ந்து நோக்குவாள்.
பின்னர் பருந்தாய்க் குத்திட்டுப் பார்ப்பாள்.
சிலவேளை புலியாய் முறைப்பாள்.
அந்தக் கண்களில் தோன்றும் பாவனைகளின் முன்,
இன்றைய பரதநாட்டியக்காரரெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.
கண் மட்டும் என்றில்லை மூக்கைக் கூட விடைப்பிப்பாள்.
கன்னச்சதைகளை தேவைக்கேற்ப அசைப்பிப்பாள்.
மொத்தத்தில் அவள் வாய் மட்டுமன்றி,
அவளது உடல் முழுவதுமே அவள் உணர்வுகளைப் பேசும்.
***

பழைய எங்கள் கிராமத்துப் பெண்மணிகளிடமும் இந்த இயல்பைக் கண்டிருக்கிறேன்.
எங்களுக்குப் பாட்டி முறையான உறவுக்காரப் பெண்மணி ஒருவர் இருந்தார்.
படிப்பறிவேயில்லாத அவரை நாங்கள் கனகுமாமி என்றுதான் அழைப்போம்.
அம்மா அழைப்பதால் நாங்களும் அப்படியே அழைத்துப் பழகிவிட்டோம்.
விவசாயம் செய்து, வறுமையின் விளிம்பில் வாழ்ந்த குடும்பம்.
அவர் பேசும் போதும் மாரிமுத்துவின் சாயல் தெரியும்.
ஒருமுறை அவர் கணவருக்கு உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்.
ஒழுங்கையில் எதிரில் வந்த மாமியிடம், 'மாமா எப்படி இருக்கிறார்?" என்றேன்.
அவர் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.
'அவருக்கென்ன ஆசுப்பத்திரியில ஒவ்வொரு நாளும், வட்டரும் பாணுமெல்லே குடுக்கிறாங்கள்"
கண்ணை விழித்து வாயைச் சுழித்து மாமி சொன்னார்.
அவரது வார்த்தைகளை விட முகபாவங்கள் அதிகம் பேசின.
வீட்டிலிருந்த வறுமையில், தினமும் கணவர் பட்டர் தின்பது,
அவருக்கு அத்தனை பெருமையாகத் தெரிந்திருக்கும்போல.
வார்த்தைகளைத் தாண்டி அவரிடம் ஏற்பட்ட முக பாவங்கள்,
இன்றைக்கும் என் ஞாபகத்தில் இருக்கின்றன.
மாரிமுத்துவுக்கும், மாமிக்குமான ஒரே ஒற்றுமை அறிவின்மையே!
அறிவு குன்ற உணர்வு அதிகரித்து,
அது பாவங்களாய் வெளிப்படும் அதிசயத்தைக் கண்டுகொண்டேன்.
***

இன்றைக்கு அப்படி யாரும் பேசினால்,
அவர்களை நாகரிகம் தெரியாதவர்கள் என்று ஒதுக்கி வைத்துவிடுவோம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத அவர்கள் அநாகரிகமானவர்களாம்;!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நாங்கள் நாகரீகமானவர்களாம்!
இதை யாரிடம் சொல்லி அழுவது?
***

முடிவுக்கு வந்துவிடுகிறேன்.
உணர்ச்சிகளை வெளிக்காட்டிப் பேசுகின்ற பழக்கம்,
அறிவு வளர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாகக் குன்றி,
தொலைபேசியின் வருகையுடன் அது மிகவும் குன்றியது.
நாம் தொலைபேசியில் ஒருவருடன் ஒருவர் பேசும்போது,
அங்கு முகம் காட்டும் பாவத்திற்கு கிஞ்சித்தும் இடமில்லை.
குரல்காட்டும் பாவம் மட்டுமே அதில் மிஞ்சியது.
அப்போதே உணர்வின்றிப் பேசப் பழகத்தொடங்கிவிட்டோம்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பன்.
ரெலிபோனில் யாராவது இடம் கேட்டால் கூட,
'நேராய்ப் போய் இந்தப்பக்கம் திரும்பவேணும்" என்று
கைகளால் திசைகளைக் காட்டிக் காட்டித்தான் பதில் சொல்வான்.
வேடிக்கையாய் இருக்கும்!
***

இன்று கணினியின் வருகையுடன் புதிய தலைமுறை,
'சற்றிங்" என்ற பெயரில் வார்த்தைகளின் உணர்ச்சிகளையும் தொலைத்து,
உணர்ச்சியே இல்லாத சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு,
வாயை விடுத்துக் கைகளால் உரையாடத் தலைப்பட்டிருக்கிறது.
அன்றைய ஊமைகள் கூட கையால் பேசினாலும் முகத்தால் பாவம் காட்டினார்கள்.
இன்றைய புதிய அறிவுலக ஊமைகள், முகபாவமோ, குரல்பாவமோ இல்லாமல்,
விரல்களால் மட்டும் பேசுவதை வெற்றியாய்க் கருதுகிறார்கள்.
பாவிக்கப்படாத உறுப்புக்கள் நாளடைவில் பயனற்றுப் போய்விடும் என்ற,
கூர்ப்புவிதி நிஜமானால், இன்னும் மூன்று நான்கு தலைமுறைகளின் பின்னர்,
முகத்திலோ, வாக்கிலோ உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத,
பேச்சுத்திறனை இழந்த நடமாடும் தாவரங்களாய் நம் இனம் மாறப்போகிறது.
***

நேற்று ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
அவரது வளர்ந்த மகன், ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள கணினியில் வீற்றிருந்தான்.
அவனது தாய் அருகில் வந்து மகனின் தலைதடவி,
'அப்பு மூண்டு மணியாகப் போகுது, உங்களுக்குப் பிடிச்ச கோழிக்கறி காச்சியிருக்கிறன்,
வந்து சாப்பிட்டுப்போட்டு பிறகு இதைச் செய்யுங்கோவன்" என்றாள்.
மகனின் காதில் அவளின் எந்த வார்த்தையும் விழுந்ததாய்த் தெரியவில்லை.
அவனது முகமும் 'கம்பியூட்டர் ஸ்கிறீன்" போலவே உணர்ச்சியற்று இருந்தது.
அதில் கூட சின்னச் சின்ன மாற்றங்கள், இவன் முகத்திலோ அதுவும் இல்லை.
மீண்டும் தாய் அவன் தலை தடவி, 'மகன் சொல்றதைக் கேளுங்கோவன்" என்றாள்.
'ஸ்கிறீனி"லிருந்து முகத்தை எடுக்காமலே தாயின் கைகளை அலட்சியமாய்த் தட்டிவிட்டான்.
கலங்கிய கண்களோடு தாய் அப்புறமாய் நகர,
மெல்ல நான் அருகில் சென்று அவன் என்னதான் செய்கிறான் என எட்டிப்பார்த்தேன்.
'ஸ்கிறீனில்" வார்த்தைகள் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தன.
எதிர்புறத்திலிருந்தது காதலியோ நண்பனோ தெரியவில்லை.
அவர்களது கைப்பேச்சை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள்.
***

'ஹலோ, சாப்பிட்டாச்சோ?"
'ஓ இப்பதான் சாப்பிட்டனான்"
'என்ன சாப்பிட்டனீர்?"
'சோறுதான்!"
'அப்ப நாங்களெல்லாம் புண்ணாக்கோ சாப்பிடறனாங்கள்"
'ஹ...ஹ...ஹ... உது பகிடியோ?"
'ஹ...ஹ...ஹ... ஏன் இது பகிடி இல்லையோ?"
திரையில் எழுத்துக்கள் மட்டும் சிரித்தன.
அவன் முகத்தைப் பார்த்தேன்.
எந்த உணர்;ச்சியும் இல்லை.
கைமட்டும் பேசிக்கொண்டே இருந்தது.
கையால் பேசும் முதல் தலைமுறையின் நிலை இதுவென்றால்,
மூன்றாம் தலைமுறையின் நிலை?
வருங்காலத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள் பெருகப் போவது மட்டும்,
நிச்சயம்!
*****
 

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்