அரசியற்களம் 12: வரலாறு மன்னிக்காது!

அரசியற்களம் 12: வரலாறு மன்னிக்காது!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
ண்மைக்கு உலகில் எப்போதும் மதிப்புண்டு.
அறம் வளர்ந்திருந்த அன்றைய காலத்தில் என்றில்லை,
மறம் தளைத்திருக்கும் இன்றைய காலத்திலும் இஃதே உண்மையாம்.
யாரும் பாதுகாக்காமலே உண்மை என்றும் நிலைக்கும்.
எத்துணை கெட்டிக்காரர்களால் பாதுகாக்கப்பட்டாலும்,
பொய்மை சிலநாட்களுக்கு மேல் நிலைக்காது.
அதற்கான காரணம்,
உண்மை இயற்கை. பொய் செயற்கை.
இயற்கை நிலைப்பதும் செயற்கை அழிவதும் இயல்பன்றோ?
அதனால் எவரென்றாலும் உண்மையைப் போற்றி ஒழுகுவதே நல்லது.
 


***

என்ன? இம்முறை அரசியல் கட்டுரை,
இலக்கியக் கட்டுரையாய் விரிகிறதே என்று ஆச்சரியப்படாதீர்கள்.
நிச்சயம் இது அரசியல் கட்டுரைதான்.
நேற்று முன்தினம் வெளியான,
ஐ.நா.சபை மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையைப் படித்தபின்பு,
ஏற்கனவே என் மனதிலிருந்த மேற் கருத்து மீண்டும் ஆழமாய் உறுதிப்பட்டது.
மனித உரிமைகளுக்கு எதிராக,
இன்னும் சொல்லப்போனால் மானுடப்பண்புக்கே எதிராக,
நம் நாட்டில் நடந்த அட்டூழியங்களை,
பழைய இலங்கை அரசின் எதிர்ப்பையும், ஒத்துழைப்பின்மையையும், மிரட்டல்களையும் மீறி,
எங்கோ இருந்தபடி உலகின் நீதிசார் அறிஞர்கள் மிகத்துல்லியமாய்க் கணித்திருக்கிறார்கள்.
சத்தியத்தினது பலமும் அவ் அறிஞர்களின் நேர்மையினது பலமும்,
வெளிவந்த அறிக்கையால் நிரூபணமாகியிருக்கின்றன.
சத்தியம் சாகாது எனும் நம்பிக்கையில் நம் நெஞ்சு நிமிர்கிறது.
***

நம் தமிழினம் துறவிகளையே தம் தலைவர்களாய்க் கொண்டது.
அதனாற்றான் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தம் நூலின் முகப்பில்,
கடவுளைச் சொல்லி பின்னர்,
அக்கடவுளின் கருணையாய் வெளிப்படும் மழையைச் சொல்லி,
அதன் பின்னர் துறவிகளின் பெருமையைச் சொல்லுகிறார்.
அவற்றின் பின்னரே அறத்தின் வலிமையை அவர் உரைக்கத் தலைப்படுகிறார்.
இறை அமைத்த இயற்கையின் ஒழுங்கான அறத்தை,
முழுமையாய் உணரவும் கடைப்பிடிக்கவும் வல்லவர்கள் துறவிகளே.
அவர்களாற்றான் அறம் நிலைக்கும் என வள்ளுவர் நம்பியது,
அவர் அமைத்த அதிகார ஒழுங்கில் நமக்குத் தெரிகிறது.
***

மீண்டும் அரசியல் கட்டுரையில் இலக்கியச்சாயல் என்கிறீர்களா?
காரணத்தோடுதான் மேற்சொன்னவற்றை எழுதினேன்.
விருப்பு வெறுப்பற்று எவன் உண்மையைத் தரிசிக்கிறானோ?
அவனே உண்மைத் துறவி.
ஐ.நா.சபை மனித உரிமை ஆய்வாளர்களை,
துறவிகளாய்த்தான் எண்ணத்தோன்றுகிறது.
அவர்கள் பக்கச்சார்பற்று நீதியுரைத்திருக்கின்றனர்.
அவர்கள் அடித்த அடி,
சிங்களவர்கள் மேல் மட்டுமன்றி,
தமிழர்கள் மேலும் தெளிவாய் விழுந்திருக்கிறது.
***

எங்களில் பலர் சிங்களவர் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை,
ஆர்ப்பரித்து ஆமோதிப்பர்.
ஆனால் அவர்களுக்கு,
தமிழர்கள்மேலும் சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் உவப்பு இருக்காது.
பெரும்பான்மை சிங்களவர்களது மனநிலையும் இங்ஙனமாய்த்தான் இருக்கும்.
தம்மைச் சார்ந்தவர்களின் பிழைகளைச் சரி என்று நினைப்பதுவும்,
சாராதவர்களின் சரியையும் பிழை என்று நினைப்பதுவும் சாதாரணர்களின் பொது இயல்பு.
அதனாற்றான் நடுநிலை தவறாத துறவிகளை,
தமிழினம் தலைமையாய்க் கொள்ள நினைத்தது.
நம் நாட்டில் துறவிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் பக்கச்சார்பாய் நடந்ததால் தான்,
நம் இலங்கைத் திருநாடு இன்று உலக அரங்கில் குற்றவாளியாய்த் தலைகுனிந்து நிற்கிறது.
***

கடந்த காலங்களில்,
சிங்களவர்கள் தமிழர்கள் என்ற இருசாராரும்,
நீதியின் சார்பின்றி இனத்தின் சார்பு பற்றியே இயங்கினர்.
இதில் பேரினத்திற்கே பெரிய இடம்.
அவர்களால் பாதிப்புற்ற சிற்றினங்களும்,
பிற்காலத்தில் அவர்கள் வழியிலேயே நடக்க முயன்றன.
முடிவு,
போர், அழிவு, உயிரிழப்பு, அவமானம் என்பவற்றால்,
இரு இனமும் சிதைந்து தொலைந்ததோடல்லாமல்,
இன்று நம் சுயாதிபத்தியத்துக்குள்,
மூன்றாம் நாடுகள் மூக்கை நுழைக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.
***

தம் பதவிப் பசிக்காக பேரினத்தின் பெருங்கட்சிகள் இரண்டும்,
தமிழினத்தின் உரிமைகளை நசுக்கி அவர்களை அடக்கியாள்வதையே,
தம் கொள்கையென உரைத்து தம் இனத்தாரைக் குதூகலிக்கச் செய்தன.
தப்பித்தவறி ஒரு கட்சி நீதியின்பாற்பட்டு நடக்கத்தலைப்படின்,
மற்றையது அதைச் சொல்லியே அவர்களை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது.
இப்படியே பொய்யின்பாற்பட்டு தொடர்ந்து இயங்கியதாலேயே,
இன்று உண்மை அவர்களைச் சுட்டிருக்கிறது.
உலகம் அவர்களைத் தொட்டிருக்கிறது.
***

பேரினத்தாரின் பிழைகள் நம்மையும் பிழைப்படுத்தின.
தமிழரை வீழ்த்த சிங்களவர்கள் நினைத்ததால்,
சிங்களவரை வீழ்த்த தமிழர்கள் நினைத்தனர்.
இரண்டும் தவறானவை!
நாம் உண்டாக்கிய இடைவெளிக்குள் தேவை நோக்கி எதிரிகள் நுழைய,
ஒன்றான பிரச்சினை நூறாக விரிந்தது.
பயன் இரு இனமும் சிதைவுற்றதொன்றே!
எங்களை மோதவிட்டு வந்தவர் பயன்பெற்றனர்.
மோதலுக்கான குற்றவாளிகளாய்,
இன்று உலகின் முன்னால் சிங்களவர்களும், தமிழர்களும்
நயம் பெற்றவர்கள் நடுநிலை வகிக்கப்போகிறார்கள்.
***

சூழ்நிலை உணர்ந்து,
பேரினத்தாரின் பெருங்கட்சிகள் இரண்டிடமும் ஏற்பட்டிருக்கும்,
பெரிய மாற்றத்தை உலகம் வரவேற்று நிற்கிறது.
இருகட்சிகளும் இணைந்து அமைத்திருக்கும் புதிய அரசு,
அரைநூற்றாண்டுக்கு மேல் தொடரும் இந்நாட்டின் அவலத்தை,
தீர்க்கக்கூடும் என அது நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
குற்றம் செய்யாதிருப்பவனை விட,
செய்த குற்றத்தை உணர்ந்து திருந்துகிறவன் பெரியவன்.
அவசியம் ஏற்பட்ட பின் திருந்த முனைகிறது இலங்கை அரசு.
இன்று பழைய மஹிந்த அரசு இருந்திருந்தால்,
நிலைமை வேறுவிதமாய் முடிந்திருக்கும்.
கடவுள் கருணை செய்திருக்கிறார்.
நல்லெண்ணத்தோடு கூடிய ஒரு ஜனாதிபதியும்,
அவரை வழிமொழிந்து நிற்கும் பிரதமரும்,
எதிர் எதிரணியில் இருந்தாலும் ஒன்றாய்க் கைகோர்த்து,
இலங்கையை எழுச்சிகொள்ள வைப்போம் என்று உறுதிபூண்டு நிற்பது,
உலகை உவகை கொள்ளச் செய்திருக்கிறது.
நம்மையும் தான்!
காலமும் கடவுளும் அவர்களைப் பலம் செய்யட்டும்!
இந்நாட்டுக்கு நலம் செய்யட்டும்!
***

சிங்களவர் நிலை அது.
நம்தமிழர்கள் நிலை என்ன? ஆராயவேண்டியிருக்கிறது.
போரின் பின்னான மாற்றத்தில்,
கூட்டமைப்பு பலம் பெற்றதும்,
அதனாலே அது நலம் பெற்றதும் அனைவரும் அறிந்த விடயம்.
முப்பதாண்டு போரின் விளைவாய் இனம் சிதைந்து போன நிலையிலும்,
அப்பாவிகளின் இரத்தவாடை மாறும் முன்னரே பதவிச்சுகம் தேடும் தலைவர்கள்,
நம் இனத்தை உய்விப்பார்களா? எனும் ஐயம் எழுகிறது.
***

நிலைமை உணர்ந்து எதிரிகள் ஒன்று சேர்ந்த நிலை சிங்களத்தாரிடம்.
இன்னும் நிலைமை உணராது எதிரிகளை உருவாக்கும் நிலை நம் தமிழர்களிடம்.
அதுவும் தங்களுக்குள்ளேயே!
யதார்த்தம் உணர்ந்து தாம் இறங்கி வரவேண்டியதன் அவசியத்தை,
சிங்களத்தலைவர்கள் தம் இனத்தாரிடம் துணிந்து பேசுவது போல,
நம் தமிழ்த் தலைவர்களுக்கு தம் மக்களிடம்,
உண்மை உரைக்கும் துணிவு இன்னும் வரவில்லை.
பிரச்சினையின் தன்மை உரைக்கும் துணிவு இன்னும் வரவில்லை.
***

ஒருவரைத் தாழ்த்தியே மற்றவர் உயர முடியும் என்னும் கொள்கையே,
இன்றும் நம் தலைவர்தம் கொள்கையாய் இருக்கிறது.
எதிரிகள் ஒன்றுபட்டு விட்டார்கள்.
இனி நாமும் ஒன்றுபட்டாலன்றி உருப்படியாய் ஒன்றும் செய்யமுடியாது,
இதனைச் சொல்லும் துணிவு நம் தலைவர்களுக்கு வரவேண்டும்.
பிரச்சினையை வெல்லும் துணிவும் நம் தலைவர்களுக்கு வரவேண்டும்.
எவையும் வந்ததாய்த் தெரியவில்லை!
***

தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்தால் சலிப்புற்று,
கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் உடையத் தயாராய் இருக்கின்றன.
தமிழரசுக்கட்சிக்குள்ளேயே தேர்தல் முடிவுகளில் மோதல்.
தேர்தலின் போது மாற்றறிக்கை விட்ட,
வடமாகாணசபை முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டுமென,
தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொடைதட்டி நிற்கின்றனர்.
தன் கட்சிக்கு விசுவாசம் தொலைத்து மாற்றுக்கட்சியில் மனம் வைத்த,
முதலமைச்சரின் உண்மை வேடம் பெரும்பாலும் வெளிப்பட்டு விட்டது.
ஆனாலும் அவர் கூச்சமின்றி எங்களுக்குள் பகையே இல்லையென பொய்யுரைத்து நிற்கிறார்.
இனத்தின் எதிரிகளாய்ச் சொல்லப்பட்ட பேரினக்கட்சிகளின் தமிழ்ப்பிரதிநிதிகளும்,
இம்முறை தனித்துத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் டக்ளஸ{ம்,
தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திப் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியைவிட,
அதிக வாக்கைப் பெற்றிருக்கின்றனர்.
முன்பு தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்ட,
முன்னாள் புலிகளின் புதிய போராளிகள் கட்சி
அவற்றோடு ஒப்பிடுகையில் படுதோல்வியடைந்திருக்கிறது.
இவையெல்லாம் இனஒற்றுமை சிதைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.
***

வெளியே சேர்ந்திருந்தாலும் மனதளவில் பிரிந்து நிற்கும் கூட்டமைப்பின் கட்சிகள் நான்கு;
தமிழ்ப்பிரதிநிதிகளோடு களத்தில் நிற்கும் பேரினக்கட்சிகள் இரண்டு;
தனித்து நின்றாலும் பாராளுமன்றத்தில் இடம்பிடித்திருக்கும் ஈ.பி.டி.பி. கட்சி ஒன்று;
வீரியமாய்ப் பேசப்பட்டுத் தேர்தலில் விழுந்துபோன,
கஜேந்திரகுமார், வித்தியாதரன் ஆகியோரது கட்சிகள் இரண்டு;
கடிதங்களின் மூலமே இன்று தன்னைக் காத்து நிற்கும்,
ஆனந்த சங்கரியின் கூட்டணிக் கட்சி ஒன்று;
மொத்தமாக தமிழர் மத்தியில் இன்று பத்துக்கட்சிகள்.
இன நன்மை நோக்கின், அவ்வளவும் வெத்துக்கட்சிகள்.
அடுத்த தேர்தலுக்கிடையில் இன்னும் பத்துக்கட்சிகள் வரலாம்.
பிரியப் பிரிய பேதங்கள் கூடும்!
விரிய விரிய வீரியம் குன்றும்!
இதை உணராதவரை உருப்படமாட்டோம்.
***

முன்பு கூட்டணிக்காலத்தில் தமிழருக்குக் கிடைத்த வாய்ப்பைப் போல,
பின்பு புலிகள் காலத்தில் தமிழருக்குக் கிடைத்த வாய்ப்பைப் போல,
இன்று ஈழத்தமிழருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
உலகத்தின் மேற்பார்வையில் உரிமைபெறும் ஒப்பற்ற வாய்ப்பு அது.
இனி எப்போதும் இத்தகைய வாய்ப்பு எமக்குக் கிட்டப்போவதில்லை.
சூழ்நிலை உணர்ந்து சிங்களத் தலைவர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.
நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் கேள்வி?
முன்னைய வாய்ப்புக்களைப் போல இந்த வாய்ப்பையும்,
தலைமைத் தவறுகளால் இழந்து நிற்கப்போகிறோமா?
அல்லது ஒன்றுபட்டு உரிமையைப் பெறப்போகிறோமா?
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்பது பழமொழி.
தமிழ்த்தலைமைகள் இதனை உணரவேண்டும்.
எதிராளிகள் கைகோர்த்து பலம் காட்டி நிற்பது போல,
நாமும் கைகோர்த்து பலம் காட்டவேண்டும்.
அப்போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.
கைகோர்க்கும் தேவை அவர்களை விட எங்களுக்குத்தான் அதிகம்.
கைகோர்ப்பதால் வரும் பலம்,
பலமானவர்களைவிட பலயீனர்களுக்குத்தான் அவசியம் தேவை!
***

கட்சி, கட்சிக்காரர், பதவி, முடிந்த விடயங்கள் என்பவற்றையெல்லாம் மறந்து,
வருங்கால இனஎழுச்சி நோக்கி பகை மறந்து,
தமிழ்த்தலைவர்கள் ஒன்றுபடவேண்டும்.
எதிரிகளை வென்றுவிடவேண்டும்.
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"
இவை நம் மூதாதையர் தந்த பொன்மொழிகள்.
எதிர்ப்புக்களை துச்சமென மதித்து உதறி எதிர்க்கட்சித்தலைவர் பதவியேற்று,
பாராளுமன்றத்தில் தமிழர்தம் பலம் காட்டி நிற்கும் சம்பந்தன் ஐயா அவர்கள்,
அதே துணிவுடன் தமிழ்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி,
உலக அரங்கிலும் தமிழர்தம் பலத்தை நிரூபிக்கவேண்டும்.
'ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு"
தமிழர்கள் நெருப்பில் நிற்கிறார்கள்.
அடிமைத்தளை நீங்கும் விருப்பில் நிற்கிறார்கள்.
தலைவர்கள் பொறுப்பில் நிற்பார்களா?
பதவிகளுக்காய் உரிமைகள் விற்கப்படுமானால்,
வரலாறு மன்னிக்காது !
*****
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.