"அகலிகை" - மஹாகவி.து.உருத்திரமூர்த்தி

"அகலிகை" - மஹாகவி.து.உருத்திரமூர்த்தி

 

இந்திரன் இறங்கி வந்தான்

இமயத்தின் அழிவா ரத்தே.

சந்தனம் கமழும் மார்புச்

சால்வையிற், சரிகை மீதில்

பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த

பிறையின் செந் நிலவு பட்டுச்

சிந்திற்று, மிரண்டங்கே ஓர்

சிள்வண்டு வாய் மூடிற்றாம்.

 

கற்களிற் படாத காலில்

கழல் ஒலி கிளம்ப வில்லை

நிற்கவும் இல்லைத், தோள்கள்

நிமிர்ந்தவன் நடந்து சென்று

புற்றரை அடைந்த போது

பாதத்தைப் பொறுக்க வைத்தான்.

சிற்றாற்றின் அரவம் கேட்டுச்

செல்கின்றான் அதனை நாடி.

 

பாதையில், விடியும் போது

பகல்போல விரியப் போகும்

போதினைப் பிடுங்கி, கைக்குள்

பொத்தினன், மோந்து பார்த்தான்.

ஆதலும் வாழ்ந்தோர் நாளில்

அழிதலு மான இந்த

மேதினிச் சிறப்பைக் கண்டு

வெறுத்தாலும் கவர்ச்சி கொண்டான்.

 

கையினில் நீரை அள்ளக்

குனிந்தவன் களைப்பைத் தீர்த்தான். 

ஐய, எச் சுவையும் அற்றும்

தேவரின் அமுதை வென்றி

செய்ததைச் சிந்தித்தானோ?

சிரித்தனன் சிறிது, முன்னர்

கொய்தபூக் கீழே வீசிக்

குகை ஒன்றைக் குறுக லுற்றான்.

 

முத்தினுல் நிறைந்த வான

முடி, இந்த நிலத்தில் உள்ள

அத்தனை பட்டும் ஒவ்வா

அழகிய நிறமேலாடை,

கத்தி, காற்செருப்புக் காப்புக்

கழற்றி, ஓர் ஒதுக்குத் தேடி

வைத்துப்பின் திரும்பிப் பள்ள

வழியினைத் தொடர லானான்.

 

இருட்டிலும் நுழைய வல்ல

இந்திர நோக்கிலே, அம்

முரட்டுவான் மரங்கள் சூழ்ந்து

முதிர்ந்த காட்டிடை நீர் ஓடும்

புறத்திலே, கமுகும் தெங்கும்

புலப்பட, இரண்டு கண்கள்

உருட்டினன் ஊன்றி நோக்கி

உள்ளதோர் குடிலும் கண்டான்.

 

வேலியில், முள் இல்லாத

வெண்டியை மெல்லத் தாண்டக்

கோழிகள் விழித்துக் கொண்டு

குசுகுசுத்தன மாங்கொப்பில்.

ஒலையோ டிழைத்த தட்டி

ஒட்டையில் நாட்டம் வைத்து

மாலுண்ட வானக் காரன்

மறுகினன் நோக்கி நோக்கி.

 

அகலிகை தளிர்க்கை கொஞ்சம்

அசைந்தும், அருகில் தூங்கும்

மிகுதியாய் நரைத்த நெஞ்சுக்

கோதமர் மேற்படர்ந்து

புக, இவர் விழித்துப் பார்த்துப்

பொழுதாயிற் றென்ப தெண்ணி

அகன்றதும் ஆனயாவும்

அவன் அங்கு நின்று கண்டான்.

 

ஆதரவு அயலிற் தேடி

அலைந்தகை விரல்கள் மீண்டு

பாதிமூடாமென் மார்பிற்

பதிந்தன. நெளிந்த வாயின்

மீது, புன் முறுவல் மீண்டும்

விளைத்தனள், முயன்று பின்னர்

மாது குப்புறப் புரண்டு

மணையினை அணைக்க லானள்.

 

கோதமர் நடந்து சென்று

குந்திய கல்லின் மீது

சாதலே நிகர்க்க ஏதோ

தவம்புரிந் திருந்தார், வீட்டில்

காதலின் பிடிப்பிற் சிக்கிக்

கலங்கினாளது கால் மாட்டில்

நீதிகள் நினையா னாகி

நெடும்பிழை இழைப்பான் நின்றன்.

 

காட்டுக்குள் அமைந்தும், அந்தக்

கடும்தவ முனிவர் செய்த

வீட்டுக்குள், இன்று மட்டும்

விலங்குகள் நுழைந்த தில்லை.

பாட்டுக்கோர் உருப்போல் வாளைப்

பச்சையாய்க் கண்ட போதை

ஈட்டிபோல் இதயத் தேற

இந்திரன் எதுசெய் தானே?

 

துடித்தனள், எனினும் பாதித்

தூக்கத்துள் , வலியோன் கைக்குள்

பிடித்தது பிடித்ததால், அப்

பிடிபிடி கொடுத்தாள், வந்த

அடுத்தவன் அழுத்த மாக

ஆசைகள் புதைக்கக் கண்கள்

எடுத்துநோக்காது சோர்ந்தும்

உலகையே இழக்க லானாள்,

 

பித்தம் கொண்டவனைப் போலப்

பிதுங்கிய விழியிற் , காதல்

அர்த்தங்கள் சிதறிப் பாய

அவள் உடல் தனதே ஆக்கி

முத்தங்கள் பறித்தான் அன்னாள்

முகம் முழுவதுமே, இன்பிற்

கத்துங்கால் மாது சற்றே

கண்ணிமை திறந்து போகப்.

 

பார்த்ததும், துவண்டு மேனி

படபடத்திட, மேலெல்லாம்

வேர்த்தது. வேர்த்த போதே

விறைத்தது விறைப்பு மூச்சை

நூர்த்தது, நூர்ந்து போனாள்.

நொடியிலே நொடிந்து, கண்கள்

பார்த்ததே பார்த்த பாங்கிற்

பாவை, கல்லாகி விட்டாள்.

 

அந்தரத் தவர்கள் வேந்தன்

ஆயிரம் உளைவை நெஞ்சில்

தந்தவள் நிலையைக் கண்டு

தான்மிகக் குறுகிப் போனான்.

வந்தவர் முனிவர், நேர்ந்த

வகையினை அறிந்து கொண்டு

தம் தொழில் பிறிதென் பார்போல்

தாடியை வருடி மீண்டார்.

 

நில்லாமல் நழுவியோடி

நீங்காத வாழ்விலே, தன்

பொலாமை நெடுக நோண்டப்

புண்ணுண்டான் தேவராசன்.

எல்லாம் போய்க் கல்லொன்; றாக

எஞ்சிய பாழிடத்தே

நல்லார்கள் மிதிக்கத் தக்க

நாள்வரை கிடந்தாள் நங்கை. 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.