'அவர் தலைவர்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'அவர் தலைவர்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 


லகை உய்விக்கப் பிறந்தவையே சமயங்களாம்.
காணவிழையும் கடவுள் ஒன்றேயாயினும்,
காண்பார் பலராயும்,
அவர்தம் காணும் திறம் வௌ;வேறாயும் இருந்ததால்,
ஒன்றேயான கடவுளைக் காணப் புறப்பட்ட சமயங்கள், பலவாயின.
பற்று நீக்கி இறையை அடைய முயற்சித்தோர்,
தம்தம் தகுதிக்கேற்ப,
பலவாய் விரிந்து கிடந்த சமயங்களுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து,
அதன்வழி நிற்கத் தலைப்பட்டனர்.
ஆன்ம தகுதிப்பாடு முழுமையடையாத காரணத்தால்,
பற்று நீக்க, தாம் கருவியாய்க் கொண்ட சமயங்களிலேயே
பற்று வைத்துப் பின்னர் அவர்கள் மயங்கினர்.
உருவும் பெயரும் இல்லா அவ்வுயர் இறைக்கு,
உருவும் பெயரும் கொடுத்துக் கீழிறக்கி,
பின்னர் தாம் கொடுத்த உருவும் பெயரும் கொண்ட இறையே
உயர் இறை என்று, அறியாமையால் அவர்கள் வாதிடத் தலைப்பட்டனர்.
அதனால் சமயப் பூசல்கள் உண்டாயின.

 

ஆன்ம தகுதியில் வௌ;வேறு நிலைகொண்டோர்,
தத்தம் நிலை நின்று உயர் இறையைக் காண முயல,
அவரவர் நிலைக்கேற்ப இறைத் தரிசனம் கிட்டிற்று.
உண்மை நிலை நின்றோர்,
தாம் கண்ட அத்தரிசனத்தில் நிலைத்து ,
மென்மேலும் தகுதி வளர்த்து ஆன்ம உயர்வடைய,
பின்வந்தோர்,
அவர் தம் பாதையில் பற்று வைத்து,
அந்த ஞானியர் தம்மை குருவாய்க் கொண்டு,
பின்பற்ற முயன்றார்.
அவரே, தம் ஆன்ம அனுபவக் குறைபாட்டால்,
இறையைப் புறந்தள்ளி சமயத்தில் பற்று வைத்து,
சமயப் பூசல்களுக்கு வித்திட்டார்.

   

தமிழ் நாட்டில் சைவ, வைஷ்ணவ சமயப் பூசலே,
பெரிதாய் விளைந்தது.
முழுமுதற் கடவுள் சிவன் என்றும் அரி என்றும்,
தாமே முடிவு செய்து,
இறையின் 'பரநிலை' தத்தம் கடவுள்களுக்கே உரியது என
அக்குறை அறிவாளர்,
ஆதியை அறியாது மோதி மகிழ்ந்தார்.
'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே' என்றும்
'ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ' என்றும்
அவ்வச் சமய அனுபூதிமான்கள் தெளிய உரைத்ததை,
இக்குறை அறிவாளர் தம் கருத்தில் கொண்டாரல்லர்.
அதனால் இச்சைவ வைஷ்ணவ முரண்பாடு முற்றி, விரிந்தது.

   

சித்தாந்த சைவ தத்துவவியலாளர் இறைநிலையை,
சொரூப நிலை, தடத்த நிலை என இருவகையாகப் பிரித்தனர்.
இவற்றுள் உயர் நிலையாகக் கொள்ளப்படுவது சொரூபநிலையே.
இறையின் இந்நிலை ஆன்ம அறிவைக் கடந்ததாய் உரைக்கப்படுகிறது.
சித்தமும் செல்லாச் சேட்சியன்
நூலறிவு உணரா நுண்ணியன்
உலகெலாம் உணர்;ந்து ஓதற்கரியவன்
என்றெல்லாம் ஞானியர் ஓதியது இச்சொரூப நிலையையேயாம்.
இறைவனது இந்நிலை வடிவற்ற அருவநிலை அன்றாம்.
வடிவற்ற அருவமும் நம்சிந்தையால் பற்றப்படுவதால்,
அந்நிலையை தத்துவவியலாளர்கள் தடத்த நிலைக் கூறுகளில் ஒன்றாக்கினர்.
இறைவனது இச்சொரூப நிலையே,
இறையின் பரநிலை என்று உரைக்கப்படுகின்றது.
பரம் என்ற சொல்லுக்கு மேலான என்பது பொருளாம்.

   

இச்சொரூப நிலை இறைவனை,
ஆன்மாக்களால் பற்றிப் பயன் பெற, இயலாதாகையால்,
ஆன்மாக்களின் ஈடேற்றம் கருதி,
இறை தன்பெருங்கருணையால் தடத்த நிலை உறுகிறது.
இந்நிலையில் அருவம், அருவுருவம், உருவம் என,
மூன்று நிலைகளைக் கொண்டு அவ்விறைக் கருணை வெளிப்படுகின்றது.
வடிவற்ற நிலை அருவம்.
வடிவு அற்றதும் உற்றதும் ஆன நிலை அருவுருவம்.
வடிவுற்ற நிலை உருவம்.

   

மேல் வரிசைப்படுத்தலில் நான்காம் இடம் பெறும்
உருவ வழிபாட்டாளர்,
தாம் கண்ட உருவமும் நாமமுமே உயர்ந்தது எனக் கொண்டு,
அதனையே இறையின் மேலான நிலை என்று உரைக்கத் தலைப்பட்டனர்.
அவ்வடிப்படையிலேயே பரசிவன், பரந்தாமன் என்னும் நாமங்கள்
அவர்களால் தத்தம் கடவுளர்க்கு உரைக்கப்படலாயிற்று.
கீழ்நிலை நின்று இறையைத் தரிசித்து,
அவ்விறை நிலையே இறையின் மேல் நிலைஎன்று உரைத்து,
முரண்பட்ட அவர்கள்,
சிவனே பெரியன் திருமாலே பெரியன் என வாதிட்டு,
தாமும் தவறிழைத்துத் தம் வழிவந்தோரையும் தவறிழைக்கத் தூண்டினர்.

   

உண்மை உணர்ந்து உயர்ந்த கம்பன்,
இக்குறையறிவாளரால் விழைந்த சமயப் பூசலை விலக்க நினைத்து,
தன் இராமகாதையில் மேல் உண்மையை,
பல இடங்களில் வேறு வேறு விதமாய்ப் பதிவு செய்கிறான்.
அப்பதிவுகளில் சிலவற்றைச் சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாம்.

   

கம்ப காவியத்தின் தலைவன் இராமன்.
இராமன் திருமாலின் அவதாரமாய் இக்காவியத்தில் உரைக்கப்படுகிறான்.
ஒரு சமயக் கடவுளைத் தலைவனாய்க்கொண்டு பாடப்பட்ட காவியத்தை
மற்றைச் சமயத்தார் போற்ற விரும்பார்.
ஆனால், குறித்த ஒரு சமயக் கடவுளைப் பாடினான் எனத் தெரிந்தும்
மற்றைச் சமயத்தார் கம்பனைப் போற்றியதன் காரணம்
அவன் தன் காவியத்தில் மேல் உண்மையைப் பொதித்ததேயாம்.

   

கடவுள் வாழ்த்து.
திருமாலின் அவதாரங்களுள் ஒன்றான ராம காதையை,
விரிந்த காவியமாய்ச் செய்யத் தலைப்பட்ட கம்பன்,
அந்நோக்கம் கருதித் தன்மேல் சமயச் சாயல் பூசப்படும் என உணர்ந்து,
அதனைத் தவிர்ப்பதற்காய்த் தன் கடவுள் வாழ்த்தை,
குறித்தவொரு கடவுளின் பெயர் நீக்கி அமைத்துப் புதுமை செய்கிறான்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார் அவர்,
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.   (கம். பால: 01)

   

கம்பனது இக்கடவுள் வாழ்த்தில்,
இறையின் செயல் உரைக்கப்பட்டதேயன்றி,
இறையின் நாமம் உரைக்கப்படவில்லை.
அறமுரைக்கத் தான் மேற்கொண்ட
இராம காவிய முயற்சி
சமயப் பூசலில் மாட்டிக்கொள்வதை,
கம்பன் விரும்பினான் அல்லன் என்பதற்கு,
அவனது இக்கடவுள் வாழ்த்தே சாட்சியாம்.
திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும்
இராம காதையை விரித்துப் பாடினும்,
கம்பனுக்கும் அவனது காவியத்திற்கும்,
வைஷ்ணவ சமய முத்திரை முழுதாய்ப் படிந்துவிடாமைக்கு,
கம்பனது சமயங்கடந்த இறைக்கொள்கையும், ஒரு காரணமாம்.

   

இராமாயணம் இதிகாசமாய் உரைக்கப்பட்டிருந்தபோதும்,
வைஷ்ணவத்தை முழுமையாய் ஒப்பாததால் வைஷ்ணவர்களும்,
திருமால் அவதாரத்தைப் பாடியதால் சைவர்களும்,
தம் சமயத்தின் நூலாய் முழுமையாய் ஒப்ப, முன்வந்தார் அல்லர்.
அவர்தம் அம்முரண்பாடு நலன் விளைத்து,
கம்ப காவியம் உலக காவியமாய் விரிந்து புகழ்பெறக் காரணமாயிற்று.

   

உலகம் யாவையும் எனும்,
இக்கடவுள் வாழ்த்துப்பாடலின் சிறப்புக்களை,
'உலகம் யாவையும்' எனும் எனது,
முன்னைய நூல் ஒன்றின் கட்டுரையில்
விரித்து உரைத்துள்ளேன்.
இங்கு கம்பனின் சமயங்கடந்த உண்மைப் பரநிலை உணர்வின், சான்றாகவே
மேற்பாடலினை விளக்கம் செய்ய விரும்புகிறேன்.

   

சைவ சித்தாந்திகள்,
உலகின் தோற்றம் நிலைத்தல் அழித்தல் ஆகிய தொழில்களுக்கு,
முக்கடவுளரைத் தலைவர்களாக்கி உரைப்பர்.
பிரம்மனைப் படைப்புக் கடவுளாகவும்,
திருமாலைக் காத்தற் கடவுளாகவும்,
உருத்திரனை அழித்தற் கடவுளாகவும் அவர் கொள்வர்.
மேல், வடிவநிலையுற்ற திருமாலையும்,
உருத்திரானாய் உரைக்கப்படும் சிவனையும்,
தத்தமக்கு முழுமுதலாய்க் கொண்டே,
சைவர்களும் வைஷ்ணவர்களும் தம்முள் முரண்படுவர்.

   

கம்பன் இக்கடவுள் வாழ்த்தில் இறைவனது முத்தொழில்களையும்,
உளவாக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் எனக் குறிப்பிடுகிறான்.
இம்முத்தொழில்களையும் சிரமமின்றி,
முடிவில்லாது விளையாட்டாய்ச் செய்யும்,
அவ்விறைவனைத் தலைவன் என்று உரைத்து,
அத்தலைவனைச் சரணடைவோம் என,
அம்முக்கடவுளரையும் பொதுமைப்படுத்தி உரைக்கிறான் கம்பன்.

   

இப்பாடலில் கம்பன் அவர் தலைவர் என உரைத்து
இறைவனாய்க் கொண்டது யாரை?
சைவர்கள் சிவனையே என்றும்
வைஷ்ணவர்கள் திருமாலையே என்றும்,
இவ்வினாவிற்கு விடை காண்பர்.
சில பொதுமையாளர்கள் அவர் தலைவர் என,
பன்மையால் உரைத்தமையால்,
கம்பன், தலைவர் என,
மூவரையும் உள்ளடக்கி உரைத்தார் என்று உரைப்பர்.
இக்கருத்துக்களுக்கு மேலான ஓர் கருத்தும்,
பரநிலையைச் சரியாய் உணர்ந்த,
ஆன்றோரால் இப்பாடலுக்கு உரைக்கப்படுகிறது.
அதனைக் காண்பாம்.

   

மால் அயன் உருத்திரன் எனும் இறைநிலைகள்,
உயர் ஆன்ம நிலையுற்ற ஆன்மாக்களுக்கு,
பரம்பொருளால் வழங்கப்படும் அதிகாரப் பதங்களாம்.
இம் மும்மூர்த்தியரும் மூலப்பரம்பொருளால் நியமிக்கப்பட்டு,
முத்தொழில் இயற்றுபவரேயாம்.
இஃது சைவ சிந்தாந்திகள்தம் முடிந்த முடிவு.
வைஷ்ணவ மரபினை நான் அறியேன்.
ஆயினும் அவர்க்கும் இதுவே முடிவென்பது,
சுத்த வைஷ்ணவராய்த் திகழ்ந்த,
கம்பராமாயண உரையாசிரியர்களுள் தலையாயவரான,
வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் அவர்களால்,
சிற்குணத்தவர் எனும் பாடலுக்குச் செய்யப்பட்ட உரைமூலம் அறியமுடிகிறது.
அப்பாடல் உரையில்,
முத்தொழில்களைப் புரியுமாறு சத்துவம், இரசசு, தமசு என்னும் மூன்று குணங்களையும் முறையே கொண்டு திருமால், பிரமன், சிவன் என்னும் பெயர் சூடிய பரம்பொருளின் மும்மூர்த்தங்களுள் சத்துவ குண மூர்த்தமாகிய திருமாலின் நிலைமையை அறிந்து சொல்லுதல் பேரறிஞருக்கும் இயலாததலால் அற்ப அறிவினனாகிய என்னால் அறிந்து சொல்லுதல் இயலுமோ?

என அவர் மேற்கருத்தை உட்கொண்டு குறிப்பிடுகின்றார்.
அவ்வடிப்படையில்,
இம் மும்மூர்த்தியரையும் நியமித்து, முத்தொழிலில் ஈடுபடுத்தும்,
உருவும் பெயரும் உணரப்படா அம்மூலப்பரம் பொருளையே,
கம்பன் இப்பாடலில் தலைவர் என்று உரைத்தான் என,
ஆன்றோர் சிலர் இப்பாடலுக்கு உயர் பொருள் ஒன்றை உரைப்பர்.

   

இவர்கள்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும்,
நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் எனும் பாடல் அடிகளுக்கு,
முத்தொழில்களையும் முடிவில்லாத விளையாட்டாய் இயற்றிவரும்,
மால், அயன், உருத்திரன் எனும் இம் மும்மூர்த்திகளுக்கும் - எனப் பொருள் உரைத்து,
அவர் தலைவர் எனும் தொடருக்கு,
அம் மும்மூர்த்தியருக்கும் தலைவராய் விளங்குபவர் யாரோ? -
எனப் பொருள் விரித்து,
அன்னவர்க்கே சரண் நாங்களே எனும் தொடருக்கு,
அம் மூலப்பரம்பொருளையே நாம் சரணடைவோம் எனக்கூறி,
பாடலின் கருத்தை முடிப்பர்.
அவர்தம் கருத்தில்,
கம்பன் தலைவர் என்று உரைத்தது,
மும்மூர்த்திகளுக்கும் தலைவரான,
உருவும் பெயரும் அற்ற, சிந்தனை கடந்த
சொரூப நிலையுற்ற மூலப் பரம்பொருளையே ஆகுமாம்.

   

இங்ஙனமாய்த் தன் கடவுள் வாழ்த்தில்,
வடிவும் பெயரும் சமயமும் கடந்த,
மூலப் பரம்பொருளைச் சுட்டி,
தெளிவாய்த் தன்நிலையுரைத்து,
சமயப் பூசலைக் கடந்து,
ஏகநிலையுற்று, கடவுள்வாழ்த்து இயற்றி,
கம்பன் செய்த சாதனை மிகப் பெரியதும் உயர்ந்ததுமாம்!

   

இதே போன்று சமயப் பூசல் கடக்க,
கம்பன் ஆக்கிய மற்றொரு பாடல்,
தொடரும் அவனது ஆற்றுப் படலத்தில் வருகிறது.
அதனையும் காண்பாம்.

   

ஆற்றினைப் பாடத் தலைப்பட்ட கம்பன்,
முதலில் ஆறுகள் தோன்றுவதற்குக் காரணமான,
வானத்தைப் பற்றிக் கூறுகிறான்.
நீரின்மையால் வெண்மை நிறம் கொண்ட மேகங்கள்,
கடலில் படிந்து நீரை முகந்து,
கருநிறத்துடன் மீண்டது என்கிறான் அவன்.
இக்காட்சியை உவமைப் படுத்த நினைந்த கம்பன்;,
அவ்வுமையில் சைவ வைஷ்ணவ,
முழுமுதல் மோதலைத் தவிர்க்க நினைந்து,
அரியும் சிவனும் ஒன்றே என நிறுவ முயல்கிறான்.
அக்கருத்துரைக்கும் பாடல் இது.
நீறணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகிற்
சேறணிந்த முலைத் திருமங்கை தன்
வீறணிந்தவன் மேனியின் மீண்டதே.   (கம். பால:13)

   

இப்பாடலில், நீரின்மையால் வெண்மை நிறம் கொண்ட மேகத்தை,
வெண்நீறு பூசிய சிவனுக்கு உவமையாக்கியும்,
கடலில் படிந்து நீரை முகந்து கருநிறம் கொண்ட மேகத்தை,
கரிய திருமாலுக்கு உவமையாக்கியும் உரைக்கிறான் அவன்.
நீரின் இன்மை, உண்மைகளால்,
மேகம் வெண்நிறத்தையும் கருநிறத்தையும் கொள்ளினும்,
மேகம் ஒன்றேயாம்.
அதுபோல தொழில் வேற்றுமையால்,
சிவன் மால் என வேறுபாடு கொள்ளினும்,
மூலப் பரம்பொருள் எனும் அளவில்,
அவ்விருவரும் ஒருவரேயாம்.
உவமை மூலம் உண்மையை உரைத்து,
மதப் பூசலாளர்களின் மனம் திருத்த,
நினைக்கிறான் கம்பன்.

   

கம்பன் இவ்வுவமை மூலம் உண்மையைத் தெளிவுற உரைத்தபின்பும்,
மதவேற்றுமையாளர்கள் மாறினார் அல்லர்.
இவ்வுவமையைத் தமக்கு வாய்ப்பாக்கிய சைவர்கள்,
வெண்மேகமே பின் கருமேகமாயிற்று.
எனவே சிவனே திருமாலின் மூலம் என்றுரைத்து முரணினர்.
அதே உவமையைத் தமக்கு வாய்ப்பாக்கிய வைஷ்ணவர்கள்,
வெண்மேகம் பயனற்றது, கருமேகமே மற்றவர்க்குப் பயன்செய்வது.
அதுபோல் கருணைப் பயனற்ற சிவனை விட,
கருணைப் பயன் நல்கும் கரிய திருமாலே உயர்ந்தவனாம்,
என்றுரைத்து இறுமாப்புற்றனர்.
காணாதார் காண்பாராம் தாம் கண்டவாறு - குறள்
திருத்தலாம் ஆகிலன்றோ திருத்தலாம் - கம்பன்
ஆன்றோர் கருத்தின் அருமை புரிகிறது.

   

காவிய நிறைவில், மேல் சமயப்பூசல் தவிர்க்கும் கருத்தை,
மீண்டும் கம்பன் தெளிவுற வலியுறுத்துகிறான்.
பல இடங்களிலும்,
இராமனைத் திருமாலாய் உரைத்து வந்த கம்பன்,
காவிய நிறைவின் ஓர் இடத்தில்,
அவனை மூலப் பரம்பொருள் என்றே உரைத்து முடிக்கிறான்.
அவ்விடம் காண்பாம்.

   

போர்க்களத்தில் இராமனின் ஆற்றல் கண்டு,
தன்னுள் அவனை வியக்;கிறான் இராவணன்.
அவனது வியப்புரைக்கும் பாடல் தொடங்குகிறது.
முதலில் மெய் வரம் எல்லாம் அடுகின்ற இவன்,
சிவனோ அல்லன், நான்முகன் அல்லன் என்கிறான்,
இராமனின் இறைத் தன்மையை வியக்கும் அவன்,
இவன் மும்மூர்த்திகளுள் இருவரான,
சிவனோ பிரமனோ அல்லன் என்றுரைக்க,.
இக்கூற்றால் வைஷ்ணவர்கள் மகிழ்கிறார்கள்.
இவன் மும்மூர்த்திகளுள் சிவனும் பிரமனும் இல்லையென்றால்,
திருமாலையே இராமன் என இராவணனினூடு கம்பன் உரைப்பதாய்க் கருதி,
அவர்கள் மனம் மகிழ்கிறது.
அவர் தம் மகிழ்ச்சி நிறையுமுன்,
கம்பனது அடுத்த பாடல்அடி வந்து விழுகிறது.
திருமாலாம் அவனோ?அல்லன்
வைஷ்ணவர்தம் மனம் சோர்வுற,
இராமன் திருமாலும் அல்லன் என்கிறான் இராவணன்.
தொடர்ந்து இவன் தவனோ? என ஐயுற்று,
என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன் என,
இராமனின் சத்திரிய உடல்வாகு கொண்டு முடிவு செய்கிறான்.
நிறைவாக இராமனின் ஆற்றலை மிக வியந்து,
இவனோதான் அவ் வேத முதல் காரணன்? என்கிறான்.

   

இப்பாடலில் வேத முதற்காரணன் என்று இராவணனினூடு கம்பன் உரைப்பது,
மூல முழுமுதற் கடவுளையேயாம்.
மேல் நிரூபணங்கள் கொண்டு,
கம்பன் பரம்பொருள் தத்துவத்தைத் தெளிவாய் உணர்ந்திருந்தனன் என்றும்,
சமய எல்லைகளைக் கடந்தே அவன் காவியம் செய்தான் என்றும்,
அவன் பாடிய காவிய நாயகன் இராமன்,
மூலப் பரம்பொருளின் அம்சமே என்றும்,
சமயச் சர்ச்சைகள் தேவையற்றவை என்றும்,
அரியும் சிவனுமாய் இருப்பது ஒன்றேயான மூலப் பரம்பொருளே என்றும்
தெளிவுற நாம் விளங்கிக் கொள்கிறோம்.

   

கம்பனின் ஆரணிய காண்டக் கடவுள் வாழ்த்தில் அவன்,
வேதம், வேதியர், விரிஞ்சன் முதலோர் தெரிகிலார்,
ஆதிதேவர் என்றுரைப்பதுவும்,
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி,
மாயாத வானவர்க்கும், மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்,
நீ ஆதி முதல் தாதை, எனவும்
நீ ஆதி பரம் பரமும் எனவும்,
விராதன் வதைப்படலத்தில் உரைப்பதுவும்,
ஒன்றாகி மூலத்து உருவம் பலவாகி என,
சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தில் உரைப்பதுவும்,
மூலமே இல்லா முதல்வனே எனவும்,
ஆதிப்பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ,
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ எனவும்,
கவந்தன் படலத்தில் உரைப்பதுவும்,
மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு என,
கிஷ்கிந்தா காண்ட கடவுள் வாழ்த்தில் உரைப்பதுவும்,
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ என,
வாலி வதைப் படலத்தில் உரைப்பதுவும்,
மலர் மேல் அயன் தன் முதலோர்,
தம் தாதை தாதை இறைவா எனவும்,
பேராயிரங்கள் உடையாய் எனவும்,
நாகபாசப் படலத்தில் உரைப்பதுவும்,
இம் மூல முதற் கடவுளையேயாம்.

   

மேற் காரணங்களால்,
அவர் தலைவர் எனக் கம்பன் உரைத்தது,
மும்மூர்த்திகளை அல்ல என்றும்
பரம் பொருளாய்த் திகழும் மூல முதற் கடவுளையே என்றும்
தெற்றெனத் தெரிந்து கொள்கிறோம்.
அதனால் மதம் கடந்து பலரும் கம்பனைக் கற்கும் காரணம் புரிய,
நம் மனம் மகிழ்கிறது.

   
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.