எறிகணை 22
உ
கேள்வி:
வெளிநாட்டிற்குத் தப்பி ஓடி, அங்கு வசதியாய் வாழ்ந்து கொண்டு, ஏதோ இனப்பற்றாளர் போல ‘கூத்தாடி வெட்டை’ என்ற ‘யூரியூப்பின்’ ஊடாக அலட்டுகின்ற மிதுசன் என்கின்ற ஒருவர், உங்களைத் தாக்க எங்கே இடம் கிடைக்கும் எனப் பார்த்திருந்து வாய்ப்பு வருகின்ற போதெல்லாம் உங்களை ‘அட்டாக்’ பண்ணி வருகிறார். அவரைப் பார்க்கவும் சகிக்கவில்லை. அவர் பேச்சைக் கேட்கவும் சகிக்கவில்லை. சுயபுத்தியே இல்லாமல் ‘அலட்டுகிற’ அம் மனிதருக்கு உங்களோடு அப்படி என்னதான் பகையாக்கும்?
பதில் :
அன்பரே! தனிமனிதர்களுடைய தோற்றத்தையோ, குரலையோ கிண்டல் செய்வது அநாகரீகம். அந்த மனிதர்தான் அப்படியிருக்கிறார் என்றால், நீங்களும் அப்படி இருக்க முயல்வது சரியில்லை.
பிரசித்தமானவர்களைப் பற்றி ஏதாவது பேசினால்த்தான் அவருக்கு ‘யூரியூப்’ வருமானம் வரும். அதனால்த்தான் அவர் அப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன். என்னையும் அவர் திட்டப்படுகிறவர்களின் வரிசையில் சேர்த்துக் கொண்டிருப்பதால், நானும் பிரசித்தமாகி இருக்கிறேன் என்று எண்ணத் தோன்றுகிறது. பாவம் தன் தகுதிக்கு மிஞ்சிய வேலையைச் செய்ய முனையும் அவரை மன்னிப்போமாக!
கேள்வி:
சிறீதரன் ஒருபக்கமும், சுமந்திரன் ஒருபக்கமுமாக மாறி மாறித் தங்கள் தங்கள் நியாயத்திற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்களே. இது எங்கு போய் முடியப் போகிறது?
பதில் :
‘நியாயத்திற்கான அறிக்கைகள்’ என்ற உங்கள் வசனத்தில் ஒரு சிறு திருத்தம் செய்யவேண்டும். அவர்கள் வெளியிடும் அறிக்கைகளில் நியாயங்கள் எங்கே இருக்கின்றன? அவ் அறிக்கைகளில் பொது நியாயம் என்பது இருப்பதில்லை. தத்தமக்கு உரிய சுயநல நியாயங்களைத்தான் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அவை ஒன்றிலும் உண்மை இருப்பதாய்த் தெரியவில்லை.
சுமந்திரனுக்கும், சிறீதரனுக்குமான கயிறிழுப்பில் அகப்பட்டு, கட்சி உயிர்விடத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இவ்விரண்டு பேரும்தான் என்றில்லை. கட்சியின் தலைவரும்கூட குழப்பத்தில்த்தான் இருக்கிறார் போல. அவரது முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள் இதனைக் காட்டுகின்றன.
இவ்விருவரும் இனநன்மையை விரும்புகிறவர்களாக இருந்தால், சிலகாலத்திற்கு, கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தால் என்ன என்று தோன்றுகிறது? அப்போதாவது கட்சி உருப்படுமா என்று பார்க்கலாம்.
இவ்விருவரது சண்டையில் சுயநலத்தைத் தவிர வேறெதுவும் இருப்பதாய்த் தோன்றவில்லை. இனத்தின் வளர்ச்சி பற்றி இவ்விருவருக்கும் எவ்வித கவலையுமில்லை என்பதைத் தவிர, வேறெதனைச் சொல்ல?
கேள்வி:
ஜனாதிபதி நினைத்தால் நாட்டின் நலன் கருதி தமிழர்க்கு எதிரான செயற்பாடுகளை உடன் நிறுத்த முடியாதா?
பதில் :
சிறீதரனும், சுமந்திரனும் நினைத்தால் இனத்தின் நலன் கருதி தமது பகையை உடன் நிறுத்திக் கொள்ள முடியாதா? உங்களது கேள்விக்கு இந்தக் கேள்விதான் பதிலாகிறது.
கேள்வி:
‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ பற்றி ஏதேனும் தெரியுமா?
பதில் :
கடந்த வாரங்களில் உலகைப் பதறச் செய்திருக்கும் வார்த்தைகள் இவை. ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்கின்ற ஒரு கணிதப்பேராசிரியர் பின்னாளில் அமெரிக்காவின் நிதி ஆலோசகராக மாறுகிறார்.
அதனால் அவருக்கு புகழ்பெற்ற பலரதும் தொடர்புகள் ஏற்படுகின்றன. அத்தொடர்புகளை தனது கீழ்மையான எண்ணங்களிற்குப் பயன்படுத்த நினைத்த அவர் தனியான தீவு ஒன்றமைத்து, அங்கு உலகளாவிய உயர்மட்டப் பிரமுகர்களை அழைத்து அவர்களுக்குக் ‘காமவிருந்து’ அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர் மீது 2000-களின் தொடக்கத்தில் இருந்தே, சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, மற்றும் மனிதக்கடத்தல் செய்தது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளின் பிரதான மையப்புள்ளியாக இருந்த எப்ஸ்டீன், 2019ல் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டாலும், இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதாக இல்லை. இந்த மரணமே தற்கொலையா? கொலையா? என்ற வாதப்பிரதிவாதங்களும் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.
எப்ஸ்டீன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களே "எப்ஸ்டீன் கோப்புகள்" என அழைக்கப்படுகின்றன.
இதில் மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எப்ஸ்டீனின் தனித் தீவுக்குச் சென்றவர்களின் விமானப் பயணப் பதிவுகள் அடங்கிய விபரங்கள் உள்ளனவாம்.
இந்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர்களான டொனால்ட் ட்ரம்ப், பில் கிளிண்டன், பிரிட்டிஸ் இளவரசர் ஆண்ட்ரூ, பில் கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவாம்.
எப்ஸ்டீன் வெளியிட்ட ஆவணங்களில் பல முன்னணி விஞ்ஞானிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
உலகப்புகழ்பெற்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எனும் இயற்பியல் விஞ்ஞானியும், வேறு பல விஞ்ஞானிகளும் எப்ஸ்டீனின் தீவில் நடைபெற்ற ஒரு அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டதாய்ச் சொல்லப்படுகிறது.
அந்த மாநாட்டின்போது எடுக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸின் புகைப்படம் தற்போது ‘வைரலாகி’ வருகிறது. இருப்பினும், அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும், ஒருவரின் பெயர் இந்தப் பட்டியலில் இருப்பதால் மட்டுமே அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்று அர்த்தமல்ல என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது இந்த ஆவணங்கள் பொதுவெளியில் வருவது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவும், இதில் தொடர்புடைய அதிகார மையங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படித்தான் பெரிய மனிதர்கள் பற்றிய பரபரப்பான செய்திகள் இடையிடையே பரவும். முடிவில் ஒன்றும் இல்லாமல் அப்பரபரப்பு முடிந்து போய்விடும். இதுவும் அப்படித்தான் ஆகுமோ யாரறிவார்?
கேள்வி:
புதிய ஜனாதிபதிக்கு நீங்கள் ‘வால்’ பிடிக்கத் தொடங்கியிருப்பதாய், சிலர் விமர்சிக்கின்றார்களே.
பதில் :
தாராளமாக விமர்சித்துவிட்டுப் போகட்டும். அது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. எங்களது தமிழ்த் தலைவர்களுள் சிலரும், அவர்களுக்கு ‘வால்’ பிடித்து வருவோர் சிலருமே இங்ஙனம் என்னை விமர்சித்து வருகிறார்கள். அத்தகையவர்களுக்கு இனம் பற்றி எந்தக் கவலையும் இருப்பதாய்த் தெரியவில்லை.
ஜனாதிபதியால் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. என்னால் ஜனாதிபதிக்கு ஆகப்போவதும் ஒன்றுமில்லை. அதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நாட்டில் பகை நெருப்பு எரிந்து கொண்டேயிருந்தால்த்தான், தாங்கள் குளிர்காய முடியும் எனக் கருதும் இவர்கள், அணைய முயலும் நெருப்பை நெய்யூற்றி வளர்க்கப் பார்க்கிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னான காலங்களில் ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்களக் கட்சிகளும், தமிழர்க்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்துக் காட்டியே, சிங்கள மக்களினதும், பௌத்த குருமாரினதும் ஆதரவைத் திரட்டின.
முதல் முறையாக இந்தப் போக்கை மாற்றி, இந்த நாடு அனைத்து இனத்தார்க்கும் சொந்தமானது எனத் துணிந்து சொன்னதோடல்லாமல், இளையோரின் ஆதரவைத் தனது சொல்வன்மையாலும், சத்தியத்தாலும் திரட்டி, பெரும்பான்மை வெற்றியும் பெற்று, ஆட்சி அமைத்திருக்கிறார் அநுரகுமார திஸாநாயக்க அவர்கள்.
இதனைப் பெரும் சாதனையாகவே நான் கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல் போர் அழிவுகளால் பாதிப்புற்றிருந்த தமிழ்மக்களும் கூட, இவரின் எளிமையையும் உறுதியையும் கண்டு வியந்தும், நமது தமிழ்த் தலைவர்களின் பொய்மையைக் கண்டு விரக்தியுற்றும் மனந்துணிந்து கடந்த தேர்தலில் இவரது கட்சிக்கு மூன்று இடங்களை வழங்கினார்கள். இவற்றையெல்லாம் சாதனை என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வதாம்?
இப்போது ஏற்பட்டிருக்கும் சில பிரச்சினைகளை வைத்து, நம் தமிழ்த்தலைவர்கள் சிலரும், இளையோர் சிலரும், பழையபடி நம் நாட்டில் போர் மேகங்களைக் கொணர முற்படுகிறார்கள்.
அநுர பொறுப்பேற்ற பின்பும் சில பிரச்சினைகள் நடக்கத்தான் செய்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண்பது சற்றுக் கடினமான காரியம் என்பதை நாமும் உணர்ந்து கொள்வதுதான் நல்லது.
இந்த விடயங்களைப் பயன்படுத்தி, போராட்டங்கள் நடத்தி, மக்களுக்குத் தம்மைக் காட்ட முயன்று, “மூளாத்தீபோல்” அணைந்து கிடக்கும் இனப்பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க இவர்கள் முயல்கிறார்கள். இது புத்திசாலித்தனமான காரியம் இல்லை.
கீழுள்ளவர்களால் ஜனாதிபதிக்கு தரப்படும் பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ள, நாம் தான் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும் எனக் கருதுகிறேன்.
அதைவிடுத்துப் பிரச்சினைகளைக் கிளறுவதால், நம் தலைவர்களின் பதவிகள் பாதுகாக்கப்படுமேயன்றி நம் இனத்திற்கு நன்மை ஏதும் விளையாது என்பது உறுதி.
இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்ட பின்பும், எம்மால் இதுவரை ஏதும் செய்ய முடியவில்லை. வெளிநாடுகள் தலையிடும் என்ற எண்ணமும் கனவாயிற்று. அயல்நாடும் நமக்கு ஆதரவு தந்ததேயன்றி, நம் விடுதலைக்காக ஏதும் பேச முன்வரவில்லை. இந்த யதார்த்தத்தைக் கண்கூடாக நாம் கண்டுவிட்டோம்.
நிலமை இப்படியிருக்க, யதார்த்தம் உணராமல் ஏதோ தம்மைத் தியாகிகளாய்க் காட்டிப் பகைவளர்க்க நினைப்போர்க்கு, நான் சொல்லும் யதார்த்த உண்மைகள் ‘வால்’ பிடித்தலாய்த்தான் தெரியும். அதற்கு நான் என்ன செய்ய?