எறிகணை 23

எறிகணை 23

கேள்வி :

ஓர் அன்பர் N.P.P கட்சி தமிழர்க்கு எதிராக முன்பு செய்த பலகாரியங்களைச் சுட்டிக்காட்டி இவர்கள்மீது எப்படி நம்பிக்கை வைக்கச் சொல்கிறீர்கள்? எனக்கேட்டிருக்கிறார். அவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

பதில் :

அவர் சொன்னது உண்மைதான். ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் செய்கையில் நல்லதை அடைவதற்கான சில தீய காரியங்களையும் செய்யத்தான் வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதனால்த்தான் அறத்துப்பால் அறத்தை முதல்அறம் என்றும், பொருட்பால் அறத்தைச் சார்பறம் என்றும் சொல்கிறார்கள்.

அது ஒருபக்கம் கிடக்கட்டும். இனி அந்த அன்பரின் கேள்விக்கு வருகிறேன். தமிழர்களுக்கு எதிரான காரியங்களைச் செய்து, சிங்கள மக்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டபின், கடைசித் தேர்தலில் இந்நாடு அனைவர்க்கும் உரியது எனச்சொல்லி அநுர வெற்றி பெற்று வந்திருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

முன் சொன்ன கருத்தினை விட, பின் சொல்லும் கருத்திற்குத்தான் வலிமை அதிகம் என்று தர்க்கவியலாளர்கள் சொல்கிறார்கள். சொல்லுக்கு மட்டுமன்றிச் செயலுக்கும் இது பொருந்தும் எனக் கருதுகிறேன்.

என்னவோ ஏதோ? மேற்சொன்ன கருத்தை வெளிப்பட உரைத்து நிற்கும் அநுரவை, எடுத்தாற்போல் பகைக்காமல், அவரோடு இணைந்து நம் காரியங்களை நிறைவேற்ற முயல்வதுதான் புத்திசாலித்தனம் என நான் நினைக்கிறேன்.

இனி அந்த அன்பர் சொல்வது போல இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை வைக்காமல் நாம் போராட்டங்களை நடத்தவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியாயின் எங்களுக்கான நீதியை எவர் தரப்போகிறார் என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டொலர் கேள்வி.

நடுக்கடலில் செல்லும் கப்பலில் உட்கார்ந்திருக்கும் பறவைகளை துரத்தினால் அவை எழுந்து சிறிது தூரம் பறந்துவிட்டு மீண்டும் அக் கப்பலுக்கேதான் வருமாம்.

அப்படித்தான் இன்றைய எங்கள் தமிழர் நிலையும் இருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடலாம்தான். ஆனால் எங்கள் போராட்டத்திற்கான தீர்வை அதே அரசிடம்தான் நாம் பெறவேண்டியிருக்கிறது.  இதுதான் யதார்த்தம். 

எங்களுக்காகக் குரல் கொடுக்க இன்று யார் இருக்கிறார்கள்? நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நம் தமிழ்த் தலைவர்கள், பகிரங்கமாகத் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நாட்டின் எதிர்க்கட்சிகளாய் இருக்கும் பெரிய கட்சிகள் எவையும் எமக்கு விசுவாசமாக உதவ முன்வரப் போவதில்லை. உரிமையுள்ள அயல்நாடும் நமது அரசியலில் தலையிட விரும்பாது. தலையிட வந்த அதனையும் நாம் பகைத்துக் கொண்டோம்.

வெளிநாடுகள் எமக்கு உதவும் என்ற கதை பொய்யான கதையாய்ப் போய்விட்டது. இலட்சக்கணக்கானவர்கள் துடிதுடிக்க இறந்தபோதும் அவர்கள் நமக்காக ஏதும் செய்ய முன்வரவில்லை. இதோ வருகிறார்கள், அதோ வருகிறார்கள் என்று சொல்லி நாம் ஏமாந்ததுதான் மிச்சம்.

வெளிநாடுகளில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில் நமது பிரச்சினை அவர்களுக்கு வெறும் “ஜூஜூப்பி” பிரச்சினைதான்.

இந்த நிலையில் யாரிடம் தீர்ப்பை எதிர்பார்த்து நாம் போராட்டங்களை மீண்டும் தொடங்குகிறோம் என்பதுதான் என் கேள்வி. எதிரிகளுடன் கைமுறுக்கி மேலும் அடிவாங்குவதை விடக் கைகுலுக்கி, நமது நோக்கங்களை நிறைவேற்றுவதைத் தவிர இப்போதைக்கு நமக்கு வேறு வழியிருப்பதாய்த் தெரியவில்லை. அதனால்த்தான் நான் அரசாங்கத்துடன் வீணாகப் பகைக்கவேண்டாம் என்கிறேன். சும்மா  இருந்த சங்கை ஊதிக் கெடுக்கவேண்டாம் என்பதுதான் எனது கருத்து.

அப்படியில்லை நாங்கள் போராடினால் இன்னாரிடமிருந்து இப்படி எங்களுக்குப் பதில் கிடைக்கும் என அவ் அன்பர் உறுதியாய்ச் சொல்வாரானால், நானும் அதுபற்றிச் சிந்திக்க முயல்வேன்.

“அறிவுடையார் ஆவது அறிவார்” என்றும், “அஞ்சுவது அஞ்சாமை பேதமை” என்றும் உரைத்த வள்ளுவரைத் தெரியாமல் கற்றுவிட்டேன். அதனாற்றான் இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது.

 

கேள்வி :

பட்டிமண்டப ராஜா, ஜாதி பேசினார் எனச் சொல்லி வெளிநாடுகளில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறதே. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

அவர் எனது நெருங்கிய நண்பர். அதனால் அவரிடம் ஜாதிப்பாகுபாடு பார்க்கும் இயல்பு சிறிதும் இல்லை என்று என்னால் உறுதிபடச் சொல்லமுடியும்.

நடந்த பிரச்சினை பற்றி எனக்கு முழுதாய்த் தெரியவில்லை. எங்கோ ஒரு வீட்டில் உணவு உண்ணச் சென்ற இடத்தில், நீங்கள் “செட்டிநாட்டுக்காரரா?” என அவர் கேட்டதை வைத்துத்தான் இப்பிரச்சினை எழுந்தததாய்ச் சொல்லப்படுகிறது.

உண்மையில் இதுதான் பிரச்சினை என்றால் இதில் ஒன்றுமே இல்லை என்பதுதான் எனது கருத்து. இவர்களது அண்மைக்கால எழுச்சியைத் தடைசெய்வதுதான் இப் பிரச்சினையைக் கிளப்பியவர்களின் நோக்கமாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

காரணம் செட்டிநாடு, உணவுத் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற ஒரு ஊர். அவர்களது உணவுகளுக்கென்று ஒரு தனி வகையும் தனிச்சுவையும் உண்டு. அதனால் அவர்கள் பாணியிலான உணவுகளைக் கண்டதும் நீங்கள் செட்டிநாட்டுக் காரரா? என ராஜா கேட்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

போராடுபவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டால் தாம் தமது ஜாதி அடையாளத்தை அழித்துவிட்டதாய்க் கருதுகிறார்களா? எனக்கென்னவோ அதில் நம்பிக்கை இல்லை.

அதைத்தவிர தமிழ்நாட்டில் ஜாதிப்பதிவில்லாமல் ஏதும் நடப்பதில்லை என்பது வெளிப்படை. அங்குள்ள அரசியல்கட்சிகள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புக்கள் என எல்லாமே ஜாதியின் பெயரால்த்தான் பெரும்பாலும் இயங்குவதாய்த் தெரிகிறது.

அரசியல்கட்சிகள் ஜாதிப்பலத்தை வைத்துத்தான் தேர்தலுக்கான வேட்பாளரைக் கூடத் தேர்ந்தெடுப்பதாய்ச் சொல்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, ராஜா கேட்டதால் மட்டும் ஜாதி வேறுபாடு பதிவாகிவிட்டதாய்ச் சொல்வது நகைப்புக்குரியதாய்ப்படுகிறது. 

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வெளிப்படையாக “செட்டிநாட்டு” உணவகம் என்ற பெயர்ப்பலகையைக் காணமுடிகிறது. அப்படியிருக்க நீங்கள் செட்டிநாட்டுக்காரரா? என்று ராஜா கேட்டதில், பெரிய குற்றம் ஏதும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.

 

கேள்வி :

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தி அர்ச்சுனா பேசிய பேச்சினைக் கேட்டீர்களா?

பதில் :

கேட்டேன்! மற்றவர்களை இழிவுபடுத்துவதில் அர்ச்சுனாவுக்கு ஏதோ ஒரு விருப்பம் இருக்கிறது. அவரிவர் என்று இல்லாமல் எல்லோரையும் கீழ்மைப்படுத்திச் சுகம் காண்கிறார் அவர். அது ஏன் என்றுதான் தெரியவில்லை.

அது ஒரு புறம் கிடக்க அர்ச்சுனா சொன்ன முறைதான் தவறே தவிர, அவர் சொன்ன விடயம் சரியாய்த்தான் தோன்றுகிறது.

 

கேள்வி :

ஜனாதிபதி “அநுர” அவர்களை ரொம்பத்தான் பாராட்டி உரைக்கிறீர்கள். மனந்திறந்து ஒன்றைச் சொல்லுங்கள். ஆட்சிக்கு வரும்போது அவரிடம் இருந்த கொள்கைப்பிடிப்பு இப்போது மெல்ல மெல்லத் தளர்ந்து வருவதாய் உங்களுக்குத் தோன்றவில்லையா?

பதில் :

தோன்றத்தான் செய்கிறது. நான்குபேர் சேர்ந்து எடுக்கும் ஒரு முடிவையே மற்றவரின் சேர்க்கையால் எம்மால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாதிருப்பது யதார்த்தம். அப்படியிருக்க நான்காயிரம் பேரைச் சமாளித்து தனது கொள்கையைக் கடைப்பிடிப்பதென்பது இலேசான வேலையில்லை என்றே கருதுகிறேன்.

அநுரா மட்டுமா? நம் தமிழ்த் தலைவர்கள் அனைவருமேகூட பதவிக்கு வரும்போது சொன்ன கொள்கைகளை இப்போது கடைப்பிடிக்கிறார்களா? என நீங்கள் யாரும் ஏன் கேட்பதில்லை? “ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு” என்ற குறளை இந்நேரத்தில் நாம் நினைவுகூருவது நல்லது.

ஒன்றை என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியும். அநுரவுக்குக் கிடைத்த பெரும்பான்மை வெற்றி என்பது, சத்தியம் பேசியதற்காய் இலங்கை அன்னை அவருக்குக் கொடுத்த வரம்தான் என்பதை யாரும் மறந்து போகக்கூடாது. என்றைக்கு அந்த சத்தியப்பாதையிலிருந்து அவரது பயணம் முற்றாகத் தடம் மாறுகின்றதோ அன்றைக்கே இலங்கைத்தாய், தான் கொடுத்த அந்த வரத்தை நிச்சயம் திரும்பப் பெற்றுக்கொள்வாள். இதனை அநுர மட்டுமன்றி அவரோடு சேர்ந்த மற்றவர்களும் உணர்ந்து கொள்வது நல்லது.

கேள்வி :

சுமந்திரன், சிறீதரன் பிரச்சினை நமது தனி ஈழப்பிரச்சினையைவிடப் பெரிதாகி முடிவின்றி நீண்டு கொண்டே போகிறதே பார்த்தீர்களா?

பதில் :

இந்தக் கேள்விக்குப் பதில் எழுதி, பதில் எழுதி என் கை சோர்ந்தே விட்டது. இவ்விருவரின் கயிறிழுப்பு முடியப் போவதாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் நமது சமுதாயத்தில் நடுநிலையாளர்கள் இல்லாமற் போய்க்கொண்டிருப்பதுதான். அவ்விருவர் மட்டுமல்ல, நம்மக்களும் கட்சி பிரிந்துநின்று விருப்பு வெறுப்போடுதான் கருத்துரைத்து வருகின்றனர். நம் சமுதாயத்தில் நடுநிலையாய்க் கருத்துரைக்கும் சான்றோர்கள் இல்லாது போனதால் வந்த விளைவுதான் இது.

விருப்பு வெறுப்பைத் தவிர்த்து இது பிழை!, இது சரி! என்று உண்மையைத் துணிந்து உரைக்க, சான்றோர்கள் முன்வந்தால்த்தான் இவர்களில் எவர் செய்தது பிழை, எவர் செய்தது சரி என்று சமூகம் குற்றவாளியை இனங்கண்டு அவர்களை ஒதுக்கி வைக்க முடியும்.

கோவலன் இறந்ததைக் கேள்வியுற்ற கண்ணகி, “சான்றோரும் உண்டுகொல், சான்றோரும் உண்டுகொல்” எனக் கேட்டபடிதான் ஆவேசத்தோடு மதுரைக்குள் நுழைகிறாள். அரசன் செய்த பிழைக்கு அவள் சான்றோரிடம் நியாயம் கேட்பது சரிதானா? எனக் கேள்வி பிறக்கும்.

நடுநிலையாய் இது சரி!, இது பிழை! என்று உரைக்கத்தக்க, சான்றோர்கள் இருந்திருந்தால், பாண்டியன் இத்தகு செயலைச் செய்திருக்கமாட்டான் எனக் கருதியதாலேயே கண்ணகி சான்றோரிடம் வினாத் தொடுத்து மதுரையுள் நுழைந்தாள் என்பதுவே அக்கேள்விக்காம் விடையாம்.

இன்று நம் யாழ்ப்பாணத்தின் நிலைமையும் அதுவாகித்தான் இருக்கிறது. உண்மையை விருப்பு வெறுப்பின்றிச் சொல்லத்துணிவுள்ள பெரியார்கள் இல்லாமற் போனதால்த்தான் சிறீதரன், சுமந்திரன் வழக்கு இராமாயண வாலி வழக்குப்போல நீண்டு கொண்டே போகிறது.

தமிழரசுக்கட்சியினருக்குத் துணிவிருந்தால், (?) கட்சி சாராத, நேர்மையும் துணிவுமுள்ள சில பெரியவர்களை இணைத்து இத்தகு வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்ல ஒரு சபையை உருவாக்கவேண்டும். கடவுளுடைய கருணை இருந்தால்த்தான் அது நடக்கும்.

கேள்வி :

என்னாச்சு ஈரான், அமெரிக்கப் பிரச்சினை? ட்ரம்ப் பின்வாங்கிவிட்டாரா?

பதில் :

பின்வாங்கியதாய்த் தெரியவில்லை. பிரச்சினையைத் தள்ளி வைத்திருப்பதாய்த்தான் தோன்றுகிறது. அவருக்குத் தன்னைப் பற்றி உலகம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனால்த்தான் “நோபல்” பரிசை இரந்து வேண்டிக் கொண்டிருக்கிறார். “நோபல்” பரிசு வாங்கினால்க்கூட ஒருசில நாளைக்குத்தான் அவர் பற்றி உலகம் பேசும்.  பேசாமல் மூன்றாம் உலகயுத்தத்தைத் தொடக்கி வைத்துவிட்டார் என்றால் வரலாறு எப்போதும் அவர் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கும். இந்த உண்மையை அவர் காதில் எவரும் போடாதிருப்பார்களாக!

 

கேள்வி :

அடிக்கடி தொலைக்காட்சி நாடகங்கள் பற்றிச் சொல்வீர்கள். இப்போது அதுபற்றிப் பேச்சைக் காணோம். காரணம் என்ன?

பதில் :

பொழுதுபோகத்தான் நாடகங்களைப் பார்ப்பேன். இப்போது அதற்குத் தேவையில்லாமல் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக சுமந்திரன், சிறீதரனுடைய சண்டையும் அதுபற்றி அவர்கள் வெளியிடும் அறிக்கைகளும் பேட்டிகளும் இருக்கிறதே. அதைவிடவா நாடகங்கள் சுவைக்கப் போகின்றன.

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.