எறிகணை 24

எறிகணை 24
எறிகணை 28 Feb 2026

கேள்வி :

என்ன? வழக்கமாகச் சுமந்திரனை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நீங்கள் கடந்த சில வாரங்களில் அவரைக் கண்டிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். அவரோடு ஏதேனும் பகையேற்பட்டு விட்டதா? அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் இவருக்கு வால் பிடித்து இனிப்பயனில்லை என்று முடிவு செய்துவிட்டீர்களா?

பதில் :

இத்தகைய முட்டாள்த்தனமான கேள்விகளைப் பார்க்கிறபொழுது கடுங்கோபம் உண்டாகிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்குமட்டும் நம் இனத்தில் நடுநிலைமையை இனி எதிர்பார்க்கமுடியாது. உங்களின் கேள்வி மூலம் உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

ஆனாலும் உங்களைப் போன்றவர்களுக்காக இக் கேள்விக்கான பதிலைச் சொல்லவிரும்புகிறேன். இந்த நிமிடம் வரை சுமந்திரனின் அறிவுபூர்வமான தலைமை தமிழ்மக்களுக்கு அவசியம் என்ற கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் இல்லை.

சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் அரசை எதிர்த்துப் போராடி, அதனால் தமிழினத்தின் மீதான தங்களது பற்றினை வெளிப்படுத்தும் மற்றைய தலைவர்கள் போல, தானும் மாறினால்த்தான் தமிழ் மக்களின் மனதைக் கவரலாம் என சுமந்திரனும் நினைத்துவிட்டாற்போல் தெரிகிறது. அவர்மீதான எனது கோபத்திற்குக் காரணம் அதுதான்.

அவர் தனக்கு ஆயுதப் போராட்டத்தில் உடன்பாடில்லை என்று சொன்னதுதான் சுமந்திரனை மற்றவர்கள் வெறுப்பதற்கு முதற் காரணமாயிற்று. அவர் தன் மனதிலிருந்த எண்ணத்தை உண்மையாய் வெளிப்படுத்தினார்.

மற்றவர்கள் போல் பொய்யாகப்பேசி, நடந்து முடிந்த போராட்டத்தையும் மறைந்த போராளிகளையும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரையும் சொல்லி, இனத்தை அவர்  இதுவரை ஏமாற்ற முனையவில்லை. அதுதான் அவர் செய்ததவறு.

நம் இனத்தார்க்கும் பொய்தான் அதிகம் பிடிக்கிறது. பொய்யானவர்களுக்குப் பொய்தானே பிடிக்கும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமா? அல்லது குடும்பத்தோடு வெளிநாடு போக விசா வேண்டுமா? என்று கேட்டால், நம்மில் பெரும்பான்மையினோர் விசாவை வாங்கிக்கொண்டு இனத்தைக் கைவிட்டுவிட்டு ஓடத்தான் பார்ப்பார்கள். இதுதான் உண்மை நிலை.

நம் இனத்தின் இந்தப் பொய்மையால்த்தான் நம்மவர்க்கு உண்மையைப் பேசுகிறவர்களை அதிகம் பிடிப்பதில்லை. அதனால்த்தான் அத்தகையவர்களை நம் மக்கள் துரோகிகளாய்ப் பார்க்கிறார்கள்.

இந்நிலை என்று மாறுகிறதோ, அன்றுதான் நாம் இனப்பிரச்சினையை யதார்த்தமாக அணுகத் தொடங்குவோம்.

நம் தலைவர்களுள் சுமந்திரன் ஒருவராவது உண்மையை உரைத்து இயங்குகிறாரே என நினைத்து மகிழ்ந்திருந்தேன். அவரும் இப்போது மற்றவர்களின் பொய்க்குக் கிடைக்கும் மரியாதையைப் பார்த்து, தானும் பொய்யாக இயங்கலாம் என நினைக்கத் தொடங்கிவிட்டார் போல.

இப்போதுள்ள அரசுடனும், ஜனாதிபதியுடனும் நெருக்கமான தொடர்புள்ள அவர் அத்தொடர்பை வைத்து இனப்பிரச்சினைத் தீர்வை நட்புமுறையில் முன்னெடுப்பதுதான் நல்லது. அதைவிடுத்து அவரும் வீணாக அரசையும் ஜனாதிபதியையும் பகைப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. நஷ்டங்கள்தான் விளையும்.  

சுமந்திரன் போடத் தலைப்பட்டிருக்கும் இந்தப் புதிய பொய்வேஷம், பொய்யை விரும்பும் நம்மவர்களுக்கு நிரம்பப் பிடித்தாலும் பிடிக்கலாம். அதனால் சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட ‘சுத்துமாத்துப்’ பட்டத்தை அவர்கள் நீக்கினாலும் நீக்கலாம். நிறைவில் சுமந்திரனைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்தாலும் செய்யலாம்.

இவற்றினால் ஒருவேளை சுமந்திரன் வெற்றி பெறுவாரேயன்றி. நம் இனம் வெற்றி பெறப் போவதில்லை. பொய்யர்களுக்குப் பொய்யின் மேல் இருக்கும் நம்பிக்கை, உண்மையானவர்களுக்கு உண்மையின் மேல் இல்லாததுதான் வருத்தமாய் இருக்கிறது.

 

கேள்வி :

உங்களுக்குப் புதிய பாடல்களைக் கேட்கும் வழக்கம் இருக்கிறதா?

பதில் :

எனது குடுமியையும், விபூதியையும் பார்த்துவிட்டு என்னைப் “பழசு” என்று நினைத்துவிட்டீர்கள் போல. “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பரம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என சிவபெருமானைப் பற்றித் திருவாசகத்தில் மணிவாசகனார் குறிப்பிடுகிறார். நானும் அந்தக் கட்சியாக்கும்.

சரி, புதிய பாடல்களைப் பற்றியா கேட்டீர்கள்? நிறையக் கேட்பேன். facebook , youtube  வந்த பிறகு இன்னும் அதிகம் கேட்கிறேன்.

கடைசியாக வாகீசனின் “வண்ணமயில் ஏறும்” பாட்டை நடனக்காரர்கள் எல்லாம் அடித்து துவைத்து விட்டபிறகு, இப்போது சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் “சுகன் நல்ல புள்ள ஐயா சொல்ல வேல இல்ல” என்ற பாடல் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையர்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டவர்களும் அப்பாடலுக்கு நடனமாடிப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்பாடல் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. தமிழர்களுக்குச் சிங்களத்தையும் சிங்களவர்களுக்குத் தமிழையும் அறிமுகப்படுத்த இத்தகைய பாடல்கள் உதவினாலும் உதவலாம்.

இத்தகைய பாடல்களின் சுவை அப்பாடல்களின் இசையில் மட்டுமல்லாமல், லயத்திலும் தங்கியிருக்கிறது. அப்பாடல்களின் லயத்தை அடிப்படையாகக் கொண்டுதான்  இளைஞர்கள் வேறுவேறு விதமாய் நடனபாவனைகள் செய்து அசத்துகிறார்கள்.

ஒரே மாதிரியான ‘நர்சறி’ பாவனைகளுடன் தொடர்ந்து நடைபெறும் நமது நடன அரங்கேற்றங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்த நமக்கு, இந்த இளைஞர்கள் காட்டும் ஒரே பாடலுக்கான புதிய புதிய “நிருத்த” பாவனைகள் உற்சாகத்தைத் தருகின்றன. மேற்சொன்ன பாடலுக்குக், கறுப்புடை அணிந்த மூன்று இளைஞர்கள் ஆடும் நடனம் உள்ளத்தை ஈர்த்தது.

அடுத்து அண்மைக்காலமாக என்னை ஈர்த்து வருவது “யூத்” என்கின்ற ஒரு தமிழ் சினிமாவில் வரும் “ஏ மஞ்ச பலூனே நீ சுப்ப சலூனே..” பாடல். அசுரன் படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்த, கென் கருணாஸ் என்கின்ற,  நகைச்சுவை நடிகர் கருணாஸின் மகனான இளம் கதாநாயகன் அப்பாடலுக்கு முகத்தில் காட்டும் நுட்பமான பாவனைகளும், அவன் சின்னச்சின்ன புதிய அசைவுகளுடன் ஆடும் நடனமும் அப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கவும், பார்க்கவும் வைக்கின்றன. கமராவுக்கு முன்னால் நின்று இத்தனை முகபாவங்களைக் காட்ட முடியுமா? என்று ஆச்சரியப்படவைக்கிறான் அந்த இளைஞன்.

இந்தப் பாடலும் facebook லும் youtube லும் பலராலும் ஆடப்பட்டுக் கொண்டிருக்கிறது. முடிந்தால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்.  

கேள்வி :

தமிழ்நாட்டில் சென்று திருக்குறள், சைவசித்தாந்தம் எல்லாம் கற்பிக்கிறீர்களே. நம் நாட்டை மறந்துவிட்டீர்களா?

பதில் :

கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.

 

கேள்வி :

சிலபேர் அந்த ஆலயம் ஆகமத்திற்குப் பிழையானது, இந்த ஆலயம் ஆகமத்திற்குப் பிழையானது என்றெல்லாம் சொல்லி வருகிறார்களே. அதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில் :

முதலில் அவர்களை ஆகமங்கள் எத்தனை என்றும், அவற்றில் கைவசம் இருக்கும் ஆகமங்கள் எத்தனை என்றும், அவர்கள் சொல்லும் ஆலயம் எந்த ஆகமத்தின்படி பிழையானது என்றும் ஆதாரத்துடன் சொல்லச் சொல்லுங்கள். பிறகு அதுபற்றி அபிப்பிராயம் சொல்லலாம்.

 

கேள்வி :

நூல்களை வாங்கிச் சேர்த்து வைக்கும் பழக்கம் உண்டா?

பதில் :

ஒரு காலத்தில் இருந்தது. பின்னர் அந்த நாட்டம் இல்லாது போய்விட்டது.

எனது ஆசிரியர் இலக்கணவித்தகர் நமசிவாய தேசிகர் தமிழ் நூல்கள் எதனையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. “ஏன் அப்படி?” என்று நான் அவரைக் கேட்டபோது, “படிக்கவேண்டும் என்று ஆர்வப்பட்டால் நூல் தானாகக் கைக்கு வந்து சேரும்” என்றார்.

நான் அதை அவர் விளையாட்டாய்ச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் பின் நடந்த ஒரு சம்பவம், அவர் சொன்னது உண்மை என்று நிரூபித்தது. சிவஞானசித்தியார் படிக்கவேண்டும் என அவரிடம் நான் கேட்டபோது, “திருவிளங்கம் ஐயா எழுதிய உரைநூலைக் கொண்டுவா! படிக்கலாம்” என்றார்.

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய யாழ் இந்து ஆசிரியர் செட்டியார் சோமசுந்தரம் அவர்கள் (செட்டியார் என்று சொன்னால் பட்டிமண்டப ராஜாவோடு சண்டைக்கு வந்தாற்போல் என்னுடனும் வருவார்களோ தெரியவில்லை.) தன்னுடைய பழைய நூல்கள் சிலவற்றைக் கொண்டுவந்து எனக்குத் தந்திருந்தார். அவை பழமையாக இருந்தபடியால் அக்கறையில்லாமல் அவற்றைக் கம்பன் கோட்ட  மாடியிலிருந்த ஓர் அறைக்குள் கொட்டிவிட்டேன்.

ஐயா சொன்னதும் அதற்குள் அந்த நூல் இருக்கலாமோ என்று சென்று தேடிப் பார்த்தேன். முதல்நாள் பெய்த மழைநீரில் பல புத்தகங்கள் நனைந்து கிடந்தன. அவற்றிற்கு நடுவே கட்டிட வேலைக்காக கொண்டுவந்து போடப்பட்டிருந்த ஒரு கருங்கல்லின் மேல் ஒரேயொரு புத்தகம் மட்டும் நனையாமல் உயர்ந்து கிடந்தது. அவசரமாக அதை எடுத்துப் பார்த்தால் நான் தேடிய புத்தகம் தான் அது. திகைத்துப் போனேன்.

அப்போதுதான் ஐயா சொன்னதன் உண்மை புரிந்தது. பலபேர் நூல்களை வாங்கி, புத்தக அலுமாரிகளில் அழகுக்காக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. அந்நூல்கள் அவர்களிடம் “கன்னி கழியாமல்” காய்ந்து கிடக்கும்.

இப்படி அடுக்கி வைத்திருப்பதை விட ஒரு நூலைப் படிக்கவேண்டுமென உண்மையாய் உறுதி பூண்டு விட்டீர்களேயானால், அந்த நூல் தானாகவே உங்கள் கைக்கு வந்துசேரும்.

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.