ஆபத்தில் ஆசிரியம் ?

ஆபத்தில் ஆசிரியம் ?
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

ண்மைக்கும், பொய்யிற்குமான வேற்றுமையை,
கண்டுபிடிப்பது மிகவும் கடுமையான காரியம்.
நம் பெரியவர்கள் அறத்தை,
ஒழுக்கம், வழக்கு, தண்டம் என,
முக்கூறுகளாய்ப் பிரித்தனர்.
அவற்றுள் ஒழுக்கம் என்பது,
பெரியோர்கள் வரையறுத்தபடி வாழ்வது.
வழக்கு என்பது,
அவ்வரையறையை ஒருவர் மீறும்போது,
அவர் அதனை உண்மையில் மீறினாரா என்பதை,
கண்டுபிடிப்பதற்கான முறைமை.
தண்டம் என்பது,
ஒருவர் ஒழுக்க வரையறையை மீறியிருந்தால்,
அவரை பழையபடி ஒழுக்க வரையறைக்குள் கொண்டு வருவதற்காக,
அவர் செய்த குற்றத்தின் அளவிலான தண்டனையை,
உயர்ந்தோர் விதித்ததன்படி வழங்குதல்.
இதனை திருக்குறளுக்கு உரை செய்த,
பரிமேலழகர் தெளிவுபட உரைத்திருக்கிறார்.
 

☛  ☛ 

அறத்தின் மூன்று கூறுகளுள் ஒன்றான,
வழக்கு என்பது,
நுண் அறிவாளர்களால் ஆராயப்படவேண்டிய ஒன்று.
குற்றம் செய்த எவரும் நாம் குற்றம் செய்தோம் என,
ஒத்துக்கொள்ள முன்வருவதில்லை.
இது இயல்பு.
நான் குற்றம் செய்யவில்லை என,
ஒரு குற்றவாளியும் சொல்லலாம்.
ஒரு சுத்தவாளியும் சொல்லலாம்.
எனவே ஒருவர் சொல்வதில் இருக்கும் உண்மையை,
ஆராய்ந்து அறிந்தாலன்றி அவர் சொல்வது,
உண்மையா? பொய்யா? என்பதை,
எவராலும் உடன் தீர்மானித்தல் கடினமாம்.
அது நோக்கியே,
நீதிமன்றங்களில் வழக்குகளை,
நீண்ட காலமெடுத்து விசாரிக்கிறார்கள்.
☛  ☛

இன்றைய நீதித்துறை முறைமையிலும்,
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும்,
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது,
எனும் கொள்கை அழுத்தி உரைக்கப்படுகிறது.
பொதுவான வழக்கு விசாரணைகளில்,
ஒருவரை, அவர் குற்றவாளிதான் என நிரூபிக்கும் பொறுப்பு,
குற்றம் சாட்டுபவருக்கு உரியதாகும்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை,
குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்படுகிறார்.
அவசரகாலச் சட்டங்களில் மட்டுமே,
குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிரபராதி என,
நிரூபித்தல் வேண்டும்.
இங்கு அவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வரையும்,
குற்றவாளியாகவே கருதப்படுகிறார்.
அவ் அவசர காலச் சட்டங்களை,
உலகம் முழுவதும் எதிர்க்கவே செய்கின்றது.
☛  ☛

இந்த நீண்ட முன்னுரை எதற்கு என்று யோசிப்பீர்கள்.
காரணம் சொல்கிறேன்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணக் கல்வி உலகத்திலிருந்து,
வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன.
ஒரு மாணவனை அடித்துக் காயப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில்,
தென்மராட்சியில் ஓர் ஆசிரியர் கைது செய்யப்பட்டு,
நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அப் பிரச்சினையை சமாதான முறையில் தீர்க்கவேண்டுமென முயற்சித்த,
மற்றும் இரு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது நான் கேள்விப்பட்ட முதற் சம்பவம்.
☛  ☛

தன்னிடம் கற்கும் ஆறாம் வகுப்பு மாணவி ஒருத்தியோடு,
முறைகேடாக நடக்க முயன்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு ஆசிரியரும்,
அச் செய்தியை மறைக்க முற்பட்டார்கள் எனும் பெயரில்,
அக்கல்லூரியின் அதிபரும் மற்றும் இரு ஆசிரியைகளும்,
அக் கல்லூரியின் பழையமாணவ சங்கத்தைச் சேர்ந்த இருவருமாக,
மொத்தம் ஆறுபேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுவும் தென்மராட்சியிலேயே நடந்திருக்கிறது.
இதே போன்ற ஒரு சம்பவம்,
பெரியபுலம் பாடசாலையிலும் நடந்து,
அங்கும் அதிபர் உட்பட ஐந்து பேர்,
கைது செய்யப்ட்டிருப்பதாகக் கேள்வி.
☛  ☛

தென்மராட்சியில், அக்கைதுச் சம்பவங்களுக்கு ஆதரவாக,
வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றனர்.
அதே ஊரில் சம்பவம் நடந்த கல்லூரியின் மாணவர்கள்,
கைதுச் சம்பவத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருக்கின்றனர்.
இப்படியாக அடுத்தடுத்து நடந்துவரும் இப்பிரச்சினை சார்ந்த நிகழ்வுகள்,
கல்லூரியைத் தாண்டி சமூகத்திற்குள்ளும்,
அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
☛  ☛

வழமைபோலவே இச்சம்பவங்கள் பற்றி,
பொறுப்பின்றிக் கருத்து வெளியிடுவோர் தொகை அதிகமாகியிருக்கிறது.
சிலர் ‘அவங்கள் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?’ என்று,
தங்கள் வழமையான பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
வேறு சிலர் பிரச்சினை விசாரணையில் இருப்பது பற்றிக் கவலைப்படாமல்,
‘இந்த ஆசிரியர்களைத் தூக்கில் போடவேண்டும்’ என்று,
உண்மையை அறியாமல் தாங்களே தீர்ப்புரைத்து நிற்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையோடு எந்தத் தொடர்புமில்லாத இன்னும் சிலர்,
‘அவர் அப்படிச் செய்துதான் இருப்பார்’ என்று,
ஊகம் உரைத்து மகிழ்கிறார்கள்.
மற்றொரு பக்கம் இவர்களைப் போலவே,
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றி,
வாதிட முயல்வோர்தம் வாதங்களும் இருக்கின்றன.
மொத்தத்தில், சும்மாவே வாய் மெல்லுகிறவனுக்கு,
ஒரு பிடி அவல் கிடைத்தாற்போல் ஆகியிருக்கிறது நிலைமை.
☛  ☛

நீதிமன்ற விசாரணையில் இருக்கும்,
இத்தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி,
நாம் வெளிப்பட ஆராய முடியாது.
அதேநேரம் இத்தகைய பிரச்சினைகளால்,
சமூகத்தில் ஏற்படப்போகும் அதிர்வுகள் பற்றியும்,
கல்வி உலகு சந்திக்கப்போகும் தலைவலிகள் பற்றியும்,
மாற்றம் அடையப்போகும் மாணவர்களின் நடவடிக்கைகள் பற்றியும்,
நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது.
☛  ☛

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று,
ஆசிரியர்களையும் உறவுப்பட்டியலில் சேர்த்தவர்கள் தமிழர்கள்.
ஆசிரியன் பற்றி வரைவு செய்த நம் பழைய உரையாசிரியர்கள்,
அச்சொல்லுக்கு மாணவர்களுக்குக் கற்பிப்பவன் என்று பொருளுரைக்காமல்,
‘மாணவர்களால் கற்கப்படுகிறவன்’ என்று உரை எழுதி,
நம்மை வியக்க வைக்கின்றார்கள்.
அவர்கள் அங்கனம் எழுதியதற்குக் காரணம் இருக்கிறது.
மாணவர்கள் ஆசிரியனிடம் பாடத்தை மட்டும் கற்பதில்லை.
அவனது பண்பு, ஒழுக்கம், நல்லாற்றல் என்பவற்றோடு
ஆசிரியனின் நடை,உடை, பாவனையைக்கூட தம்முள் பதித்துக்கொள்கிறார்கள்.
அதனாற்றான் அவ்வுரையாசிரியர்கள் அங்ஙனம் எழுதிப்போயினர்.
கல்வி மரபிலும் சந்ததி சொல்லும் முறைமை,
நம் தமிழர்களின் தனித்த பெருமை.
☛  ☛

தமிழர் பாரம்பரியம்
ஆசிரியத்துவத்தின் முக்கியத்துவத்தை எங்ஙனம் கொண்டிருந்தது? என்பதை
மேற் செய்திகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இவ் உண்மைகளை உணராது,
ஓர் ஆசிரியன், தன் மாணவியை இச்சித்தான் எனும் செய்தி உண்மையெனின்,
நீதிமன்றத் தண்டனைகளுக்கு அப்பால்,
அவன் கல்வி உலகை விட்டு வெளியேற்றப்படவேண்டியவன் என்பதில்,
எவர்க்கும் கருத்து முரண்பாடு இருக்க நியாயமில்லை.
☛  ☛

நான் சொல்ல வந்த விடயம் வேறு.
இன்று நம் கல்வி உலகில்,
நான் மேற் சொன்ன தமிழர் தம் ஆசிரிய முறைமை என்பது,
மெல்ல மெல்ல தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
ஆங்கிலேயர்தம் கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதால்,
அவர்தம் கொள்கையே கல்வியின் எல்லை என நினையும்
அடிமைக் குணம் கொண்ட நம்மவரால்,
நம் ஆசிரிய, மாணவர் உறவு இன்று சிதைந்து கிடக்கிறது.
சில இலாபங்கள் நோக்கி நாம் உலகோடு செய்த சமரசங்கள்,
நம் அடிப்படைப் பண்பாட்டைச் சிதைக்க,
அதன் விளைவுகளால் அதிர்ந்து நிற்கிறோம் நாம்.
☛  ☛

புதிய கல்விமுறைமையாளர்கள்,
மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கக்கூடாது என்கிறார்கள்.
அங்ஙனம் சொல்பவர்கள்,
அதன் சாத்தியப்பாடு பற்றிச் சிந்திப்பதேயில்லை.
நாற்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பை நடத்த விடாமல்,
ஒரு தீய மாணவன் குழப்பம் செய்து கொண்டிருந்தால்,
அந்த வகுப்பின் ஆசிரியர் என்னதான் செய்வது?
ஒருவனால் மற்றைய மாணவர்கள் பாதிக்கப்படும்போது,
அவனைத் தண்டிக்கும் உரிமைதானும் ஆசிரியருக்கு இல்லையெனின்,
அவர் எங்ஙனம் வகுப்பினை நடாத்தமுடியும்?
அறிவுரைகளும் ஆலோசனைகளும் நன்மாணாக்கரைத் திருத்துமேயன்றி
இயல்பிற் தீய பண்புடையோரைத் திருத்தாது.
எல்லோரையும் அறிவுரைகளால் திருத்தமுடியும் என்றால்
சமூகத்தில் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள்,
சிறைச்சாலைகள் என்பவற்றின் தேவையே இல்லாது போயிருக்கும்.
இந்த யதார்த்தம் உணர்ந்த பின்பும்
ஆசிரியர் மாணவரைத் தண்டிக்கக்கூடாதென
கருத்துரைத்து வருகின்றனர் சிலர்.
இதுதான் இன்றைய உலகின் பொய்மை நாகரீகமாம்.
☛  ☛

நடைமுறைச் சாத்தியமில்லாத,
அதி உன்னத நாகரீக நீதிகள்,
கேட்கச் சுகம் தருமேயன்றி,
நடைமுறைப் பயன் தராது என்பது நிச்சயம்.
உதாரணத்திற்கு அதிகதூரம் செல்லத் தேவையில்லை.
மாணவனைத் தண்டிக்காதே என்கிற சட்டம்,
அதை மீறி தண்டித்த ஆசிரியரை,
சிறையில் இட்டு, தான் தண்டிக்கிறது.
தண்டனை வேண்டாம் என்றால்,
அத்தண்டனையை ஆசிரியர் மேல் மட்டும் சுமத்துவது,
எங்ஙனம் நியாயமாகும்?
நீதியின் முரண்பாடு குழப்பம் தருகிறது.
☛  ☛

ஒழுக்கம் மீறியவர்களை,
பழையபடி அவ் ஒழுக்கத்திற்குக் கொண்டுவர,
தண்டம் ஒன்றே வழி என்பது,
நம் பண்டைத் தமிழர்தம் கொள்கை மட்டுமன்றி,
அதுவே இற்றை நீதியின் கொள்கையுமாம்.
☛  ☛

நீதிநிர்வாகம் என்பது,
நீதிமன்றத்தால் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றன்று.
நிர்வாகம் நடைபெறும் அனைத்து இடங்களிலும்,
அஃது உண்டு.
அதனை நாம் மறக்கக் கூடாது.
ஒரு வீடானாலும், ஓர் அலுவலகமானாலும்,
ஒரு பாடசாலையானாலும்,
அங்கெல்லாம் அவ்வவற்றிற்குரிய நீதிநிர்வாகம் உள்ளது.
அந் நீதி நிர்வாகத்தை செயல்படுத்தவே,
அந்தந்த நிர்வாகத்திற்கென,
ஒரு தலைமைப்பீடமும் அமைக்கப்படுகிறது.
வீட்டில் தந்தை,
அலுவலகத்தில் தலைவர்,
பாடசாலையில் அதிபர் என்போரே அந்த நிர்வாகத் தலைவர்களாம்.
அத்தலைவர்கள் தத்தம் நிர்வாகத் தலைமை எல்லைக்குள் வரும்,
ஒழுக்கப் பிரச்சினைகளை தீர்பதற்காகவே அமைக்கப்படுகின்றனர்.
அம்முறைமையன்றி,
எல்லாப் பிரச்சினைகளையும் நீதிமன்றமே தீர்க்க வேண்டுமென வந்துவிட்டால்,
நீதிமன்றத்தின் வேலைச்சுமையை நாம் நினைத்தும் பார்க்கமுடியாமல் போய்விடும்.
☛  ☛

இவ் அடிப்படையைக் கொண்டுதான்,
நடந்த பிரச்சினைகளை வைத்து நாம் பாடம் கற்கவேண்டியுள்ளது.
ஒரு கல்லூரியில் ஓர் ஆசிரியர் தவறிழைத்தார் என்றால்,
அப்பிரச்சினையை ஆராய்ந்து தண்டிக்கும் பொறுப்பு அதிபர்க்கு உரியது.
எந்தப் பிரச்சினையானாலும் ஆராய்வதற்கு அவகாசம் தேவை என்பது நிச்சயம்.
நீதிமன்றங்கள் கூட அதனையேதான் செய்கின்றன.
அங்ஙனம் இருக்க,
குற்றம் பற்றிய ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது
குற்றம் செய்த ஆசிரியர்களை மட்டுமன்றி,
குற்றத்தை ஆராயத்தலைப்படும் அதிபர்களையும்,
அக்குற்றத்தோடு நேரடித் தொடர்புறாத ஆசிரியர்களையும்,
அக்கல்லூரியின் அக்கறையாளர்களையும்,
குற்றவாளியாய்க் கருதுதல் கூடுமா?
கேள்வி குழப்புகிறது.
☛  ☛

ஓர் கல்லூரி அதிபருக்கோ, பழைய மாணவர் சங்கத்தினருக்கோ,
கல்லூரியில் நடந்த குற்றங்கள் பற்றி ஆராய அவகாசம் வேண்டாமா?
அவ் அவகாசத்தை அவர்கள் எடுத்துக் கொள்வது,
குற்றத்திற்குத் துணை போதல் ஆகுமா?
குற்றம் செய்தவரை குற்றம் நிரூபணம் ஆகும் வரையும்,
தடுத்து வைத்திருப்பதில் தவறில்லை.
விசாரித்தவர்களுக்கும் அதுவே கதியென்பது சரியாகுமா?
இன்றைய அறிவுலகத்தின் ஆதங்கம் இதுவாய்த்தான் இருக்கிறது.
☛  ☛


அதேபோல,
ஒரு மாணவனை காயப்படும் அளவிற்கு ஒரு ஆசிரியர் தண்டித்தார் என்றால்
அவரை ஆய்வின்றி உடன் குற்றவாளியாய்க் கருதுதல் கூடுமா?

அவ் ஆசிரியரின் முரட்டுத்தனம் கண்டிக்கப்படவேண்டும் என்பதில்,
எவ்வித மாறுபட்ட கருத்திற்கும் இடமில்லை.
இத்தகு சம்பவங்கள் நடக்கும்போது
சில பத்திரிகைகள் தம் வியாபாரம் நோக்கி,
அழகு தமிழில் அடுக்கு வசனத்தில் இச்செய்தியை வெளியிட்டு மகிழ்கின்றன.
இங்கன் செய்யலாமா எனக்கேட்டால்,
உண்மைகளை வெளிக்கொணர்வது தம் கடமை என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
அங்குதான் கேள்வி பிறக்கிறது.
அவ் ஆசிரியர் அந்த அளவிற்கு கோபப்படும்படி,
அந்த மாணவன் செய்த தவறென்ன? என்பது பற்றி,
இக்கடமைமிகு கண்ணியவான்கள்,
ஏனோ ஆராய்ந்து எழுதத் துணிவதில்லை?
மாணவன் எதுவுமே செய்யாமல்
ஒரு ஆசிரியன் அந்த அளவிற்குக் கோபப்படுவானா?
இதுபற்றி யாரும் சிந்திப்பதில்லை.
ஒருவேளை அந்த மாணவன் எதுவுமே செய்யாமல்,
அங்ஙனம் அவ் ஆசிரியர் அடித்திருந்தால்,
அவ் ஆசிரியரை சிறைக்கு அனுப்பக்கூடாது
மனநோய் வைத்தியசாலைக்குத்தான் அனுப்பவேண்டும் என்பதில்
எவ்வித கருத்துவேறுபாட்டிற்கும் இடமில்லை
☛  ☛

இன்றைய நமது நீதியில் பாரபட்சம் இருக்குமாற்போல் தோன்றுகிறது.
மாணவர்கள், பெண்கள் என்போரின் முறைப்பாட்டில்
எதிராளிகள் ஆய்வின்றி குற்றவாளிகளாய்க் கருதப்படும்
அபாயத்திற்கு நீதி அனுதியளிக்கிறது.
இக்குறைபாடுபற்றி நீதித்துறை ஆராயவேண்டும்.
குற்றங்களின் உண்மை பொய் தெரியாமல்,
எவரையேனும் தண்டிப்பது என்பது,
நிச்சயம் பொருத்தமான செயலாய்ப்படவில்லை.
☛  ☛

முடிவுரையாக,
நடந்து முடிந்த சம்பவங்கள்
சில கேள்விகளை எழுப்புகின்றன.
அவற்றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.
ஒரு கல்லூரி அதிபரது அதிகார எல்லை என்ன? இதற்கான வரையறையை கல்வித்துறை செய்திருக்கிறதா?
குற்றங்கள் அனைத்தையும் உடன் நீதியின் பார்வைக்குக் கொண்டு வருதல் தான் நிர்வாக முறைமையெனின் ஒரு மாணவனின் பென்சிலை மற்ற மாணவன் முறித்துவிட்டதான சிறுகுற்றத்தைக்கூட சட்டத்தின் முன் கொண்டுவரவேண்டுமா?
தினமும் ஆயிரம் பிரச்சினைகள் கல்லூரிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. வகுப்பறையில் நடப்பதை ஆசிரியர் திருத்தக்கூடாதெனின் அப்பிரச்சினை அதிபரிடம் செல்லவேண்டும். அதிபரும் திருத்தக் கூடாதெனின் அப்பிரச்சினை காவற்துறைக்குச் செல்லவேண்டும். அவர்கள் அதனை நீதிமன்றத்திடம் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் முறைமையெனின், விரியும் அவ்வேலைச் சுமையை நீதிமன்றங்களால் தாங்க முடியுமா?
குற்றங்கள் சுமத்தப்பட்டு அது நிரூபணம் ஆகும் வரை ஒருவரை நிரபராதியாகத்தான் கருத வேண்டும் எனும் கருத்து தவறா? தவறெனின் உலகத்தில் பகையுள்ள எவரும் எவரையும் குற்றவாளியாக்கிவிடலாம் அல்லவா?
அறிவுலகத்தைச் சார்ந்தவர்கள் மாணவர்க்கு முன்னோடியாய் இருப்பவர்கள். அத்தகையவர்களை  அவசரப்பட்டு தண்டித்தால்  பின்னர் அவர்கள் ஒருவேளை நிரபராதி என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மாணவர்களுக்கு முகம் கொடுப்பது எங்ஙனம்?
அதிபர்களும், ஆசிரியர்களும்  மாணவர்களைத் தண்டிக்கவே கூடாதெனின் கல்லூரிகளில் ஒழுக்காற்றுக் குழுக்கள் என்பவற்றை அமைக்க அரசின் கல்வி நிர்வாகம் ஏன் இடம்கொடுக்கிறது?
வேண்டுமென்றே தவறிழைக்கும் மாணவர்களை எங்ஙனம் திருத்துவது? அவர்களின் பிழைகளை விசாரித்து, தண்டித்து, திருத்தும் உரிமை கல்லூரி நிர்வாகத்தைச்சேர்ந்த எவர்க்கேனும் உண்டா? உண்டெனின் அதற்கான வழிமுறையை யார் தீர்மானிப்பது?
வகுப்பில் தவறிழைக்கும் மாணவனை திருத்துவதற்கான வழிகளைச் சொல்லும் ஒழுக்கக்கோவை ஏதேனும் ஆசிரியர்களுக்கு கல்வி யமைச்சால் வழங்கப்பட்டுள்ளதா?
ஆசிரியர் மீதான ஒரு மாணவனின் குற்றச்சாட்டில் ஆசிரியரின் கருத்து முற்றாய் நிராகரிக்கப்பட்டு மாணவனின் கருத்து முழுமையாய் ஏற்கப்படுவது சரியாகுமா?
ஒரு மாணவனோ மாணவியோ தமது தனிப்பகை காரணமாக ஆசிரியரில் வேண்டுமென்றே குற்றம் சாட்டினால் மேற்சொன்ன நடைமுறையின்படி அவ் ஆசிரியரின் கதி என்னாகும்?
நடந்து முடிந்த சம்பவங்களைக் கருத்திற் கொண்டு, மாணவர்கள் இனி எதைச் செய்தாலும் நாம் கவலைப்படாமல் இருப்போமென ஆசிரியர்கள் முடிவெடுத்தால் நம் சமுதாயத்தின் நிலை என்னாகும். ஏற்கனவே போதைவஸ்து, வன்முறை என மாணவர்கள் திசை திருப்பப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், ஆசிரியர்களின் அம்முடிவு நம் சமுதாயத்தைச் சீரழித்து விடாதா?
பொருளாதார வளக்குறைவால் நீதி நிர்வாக உட்கட்டமைப்புக்களின் போதாமை உயர்ந்திருக்கும் ஏழை நாடுகளுக்கு, பொருளாதார வளம் நிறைந்த மேற்கு நாடுகளின் நீதி முறைமை முற்றாய்ப் பொருந்துமா?
ஓர் ஆசிரியரைச் சிறையில் அடைக்க தனக்கு ஒரு பொய் காணும் என மாணவன் நினைத்துவிட்டால் கல்லூரியின் ஒழுக்கநிலையை யார் காப்பது?
 
கேள்விகள் பலவாய் எழுகின்றன.
சம்பளப்பிரச்சினை, இடமாற்றம் என்பவற்றைத் தாண்டி,
இப்பிரச்சினைகளிலும் தெளிவுகாண ஆசிரியர்களுக்குக் கைகொடுக்கவேண்டிய கடமை,
ஆசிரிய சங்கங்களுக்கு இருக்கிறது என்றே கருதுகிறேன்.
நிர்வாகம் சார்ந்தோர் இருவகைப்படுவர்.
அவர்களுள் ஒருசாரார் கோப்புக்களோடு மட்டும் பழகுபவர்கள்.
மறு சாரார் மக்களோடு பழகுபவர்கள்.
இவ் இருவர்க்கும் வேறுபாடு உண்டு.
மக்களோடு பழகுபவர்கள்,
அவர்தம் மரியாதையைப்பெற்று இயங்குவது அவசியம்.
ஆசிரியர்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் மாணவர்களின் மதிப்பைப் பெற்றாலன்றி,
மாணவர்களை நல்வழிப்படுத்த முடியாது.
அத்தகு அவசியத்தில் தொழிலாற்றும் ஆசிரியர்கள் மேல்
குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது,
குற்றம் தெளிவாக நிரூபனமாகும் வரை,
நீதித்துறை அவர்களை கண்ணியத்தோடு நடத்துதல் அவசியம்.
ஆசிரியர்கள் சார்ந்த விடயத்தில்,
நீதித்துறை நிதானம் காட்டவேண்டும் என்பது,
அறிவுலகத்தின் கோரிக்கையாய் இருக்கிறது.
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.