'ஆறுமுகம் ஆன பொருள்': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'ஆறுமுகம் ஆன பொருள்': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 

(சென்றவாரம்)
பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே! என்ற பாரதியின் கூற்று, மேலே சொன்ன மெய்ஞ்ஞானம் பெற்றார்க்கே கைவரும். அந்த மெய்ஞ்ஞானத்தை வித்துவானிடம் கண்டு சிலிர்த்திருக்கிறேன். தமிழும் ஒரு உறவு தான் என்பார்கள், அவ்வுண்மையை நான் விளங்கிச் சிலிர்த்த சம்பவம் அது.  அச் சம்பவம் பற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.



ங்களுக்குத் தெரியாத ஒரு செய்தி சொல்லப் போகிறேன்.
யாழ்ப்பாணத்தில் அப்போது மரபுத்தமிழ் படித்தோரில் இரண்டு குழுவினர் இருந்தனர்.
ஒரு குழுவினர் தமிழகம் சென்று தமிழ் கற்றவர்கள்.
மற்றைய குழுவினர் நம்மண்ணிலேயே தமிழ் கற்றவர்கள்.
இவ்விருசாராருக்கும் இடையில் ஓர் மெல்லிய பகைப்பதிவு இருந்தது.
வெளிப்படையாய்க் காட்டாவிட்டாலும்,
உள்ளூர இவர்களிடையே குழுமனப்பான்மை இருந்தது உண்மை.


 


ஈழத்தாரின் குழுவிற்கு தலைமை தாங்கியவர்,
இலக்கியகலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள்.
இந்திய அறிஞர்களுடன் மோதும் மனப்பான்மை அவரிடம் இருந்தது.
அந்த மனப்பான்மையால் இந்தியா சென்று கற்றுவந்த அறிஞர்களை,
அவர் பெரிதாய் அங்கீகரிப்பதில்லை.
அங்கு பேரறிஞர்களிடம் கற்றுவந்தவர்களும்,
இவரது போக்கிற்கு உடன்படுவதில்லை.
'மூளாத்தீ போல் உள்ளே கிடந்த' இப்பகையை,
எங்கள் இரண்டு வித்துவான்களும் உரையாடும்போது அறிந்திருக்கிறேன்.



நாங்கள் ஒன்றாயிருக்கும்போது,
பண்டிதமணியின் சில குறைபாடுகளை அவர்கள் கிண்டலாய்ப் பேசுவார்கள்.
அக்கிண்டல் இரசிக்கத்தக்கதாய் இருக்கும்.
எங்கள் முகத்தில் இரசனை தெரிந்ததும்,
வித்துவான் வேலன் ஒரு செய்தியை எங்களுக்கு அழுத்திச் சொல்லுவார்.
'நாங்கள் கதைக்கிறதுதான் பண்டிதமணி என்று நினைச்சிடாதீங்கோ,
இது அவரது ஒரு பக்கந்தான். அவற்ர மற்றப்பக்கம் ஆச்சரியமானது.
அதை நீங்கள் தெரிஞ்சுகொள்ளவேணும்;' என்பார்.
தமக்குப் பிடிக்காதவராய் இருந்தபோதும்,
ஒருவரின் நன்மை, தீமை இரண்டையும் காட்டும்,
அவர்களின் அப்பண்பாடு எனக்கு நிரம்பப்பிடிக்கும்.



இன்றைய கல்வி உலகத்தார் படிக்கவேண்டிய பாடம் அது.
மரபுக்காரரிடம் அழுக்குச் சேர்ந்துவிட்டதாய்ச் சொல்லி,
புதுமை செய்ய வந்த நவீன அறிஞர் பலர் தம் குழுவிற் சேராதாரை,
நசுக்கி ஒதுக்கிய செய்தி வரலாறு.
பெரும் ஆற்றல் இருந்தும் அணி சேராததால் ஒதுக்கப்பட்ட மஹாகவி,
அவ் வரலாற்றின் சான்றாவார்.
இன்றுவரை பல்கலைக்கழகங்களில் அப்பண்பாடு தொடர்கிறது.
இலக்கிய உலகிலுந்தான்.
இவர்கள் தம் இளையாரிடமும் இந்த இழிவை ஏற்றுகிறார்கள்.
மாறுபட்டாரிடம் உள்ள ஆற்றலை மதிக்கும் திறன்,
அறிவுலகின் வளர்ச்சிக்கு அவசியமானது.
மதித்ததோடு அல்லாமல், அன்பு செய்யவும் கற்றுத்தந்தார்,
எங்கள் வித்துவான் ஆறுமுகனார்.
அது பற்றிச் சொல்கிறேன்.



என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன், இங்கு வரும்போதெல்லாம்,
'எடே தம்பீ!, அவரை ஒருக்கா பண்டிதமணியிடம் அழைத்துப்போகவேணும்,' எனக் கூறி,
கழகக்கணக்கில் கார் கொண்டுவரச்சொல்லி, அரியண்டம் செய்வார்.
கேளாதது போல பலதரம் சமாளித்தேன்.
இவர்கள் பண்டிதமணியைப் பற்றிப்பேசியதை, பலதரம் கேட்டதால்,
என்னையறியாமல் எனக்குள், பண்டிதமணியில்  ஒரு பகை விளைந்திருந்தது.
அதனால் வித்துவானின் கோரிக்கையில் எனக்கு ஆர்வமிருக்கவில்லை.
ஒருநாள் என்னைச் சிக்கெனப்பிடித்தார்.



'இண்டைக்கு எப்படியும் போகத்தான் வேணும்.'
வித்துவான் பிடிவாதம் பிடிக்க, வேறு வழியில்லாமற் காரில் புறப்பட்டோம்.
முன் சீற்றில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த,
எனது குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷணன்.
பின் சீற்றில் வித்துவானும் வித்துவான் வேலனும் நானும் குமாரதாசனும்,
கார் போய்க்கொண்டிருக்கும்போதும்,
பண்டிதமணி பற்றிய பழைய கதைகளை கிண்டலாய்ப் பேசிவந்தார்கள்.
எனக்கோ எரிச்சல்.
இவ்வளவு ''ராங்கி'' பிடித்த பண்டிதமணியிடம்,
பேராசிரியரை அழைத்துப்போகத்தான் வேணுமா?
கார் பண்டிதமணி வீட்டு வாசலில் நின்றது.


முதலில் வித்துவான் தான் இறங்கினார்.
அவருக்குப் பின்னால் என் குருநாதர்,
தொடர்ந்து வேலன், கடைசியில் நானும் குமாரதாசனும்,
பத்தடி எங்களுக்கு முன்னாற்சென்ற வித்துவான், திடீரென நின்றார்.
பண்டிதமணி கடும்சுகயீனமுற்றிருந்த வேளையது.
தாடியும், குடுமியும் பண்டிதமணியின் அடையாளங்கள்.
தலையில் வந்த புண்களால் அன்றுதான்,
தாடி, குடுமி ஆகியவை மழிக்கப்பட்டிருந்தன.
மொட்டையாய் கூனியபடி குந்தியிருந்தார் பண்டிதமணி.
அந்தக்காட்சிதான் வித்துவானை நிற்கச்செய்தது.



ஒருநிமிடம் பண்டிதமணியை உன்னிப்பாய்ப் பார்த்தார்.
மழித்தமுகம் அடையாளம் தெரிந்ததும் அதிர்ந்தார்.
வழக்கம்போல் தலையிற் கைகுவித்தார்.
'என்ர தமிழே! இது என்னகோலம்' என்று,
அவர் கதறிய கதறலில் அந்த முற்றம் அதிர்ந்தது.
ஓடிப்போய் பண்டிதமணியின் கால்பிடித்து வித்துவான் அழ,
வேலன் விம்ம, என் குருநாதர் பிரமித்துப்போனார்.
நான் அதிர்ந்தேன்.



வழக்கமாய்ப் பண்டிதமணியைப் பகைத்துப்பேசும்,
அந்த இரண்டு உள்ளங்களும், அவர் தளர்ச்சி கண்டு வாடி உருகி நின்றன.
பண்டிதமணியின் சீடர்களாய், தம்மைப் பிரகடனப்படுத்தித் திரிந்தோர்களிடம் கூட,
இந்த உருக்கத்தை நான் என்றும் கண்டதில்லை.
தமிழால் விளையும் உறவு, பகையில்லாத கோபம்.
பகைவனுக்கு அருளும் நெஞ்சு.
என்றெல்லாம் நான் இலக்கியங்களில் மட்டும் படித்த விஷயங்கள்,
அன்று எனக்கு தரிசனமாயின.



கட்டுரை விரிவது தெரிகிறது.
ஓர் இலக்கியமாய் என்னுள் பதிந்த வித்துவானைப்பற்றி,
இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
எதை விடுவதென்று தெரியவில்லை.
என்னைப் பிள்ளையாய் நேசித்தார்.
என்னை ஓர்உயர்ந்த மனிதனாக்க வேண்டும் என்பதில்,
என்னைவிட அக்கறையாய் இருந்தார்.



திருகோணமலைக் கம்பன்விழா.
எல்லோரும் ஒன்றாய்ச் சென்றிருந்தோம்.
ஓர் மதிய உணவின் பின் எல்லோரும் ஒன்றாயிருந்த நேரம்,
நான் அசைவம் சாப்பிட்ட காலம் அது.
ஜீவகாருண்யரான வித்துவான்,
நான் புலால் மறுக்கவேண்டும் என என்னோடு போராடுவார்.
அன்றும் அப்படித்தான்.
'தம்பீ! நீ எதுவும் செய். ஆனால் மச்சத்தை மட்டும் விட்டுவிடு',
என்னிடம் கெஞ்சினார் வித்துவான்.



அருகிலிருந்த வித்துவான் வேலன் புரட்சிக்காரர்.
அவர் போக்கே வேறு.  வித்துவானோடு உறவாய் மோதுவார்.
அவரும் என்னைப் பிள்ளையாய் நேசித்தவர்,
வித்துவான் சொன்னதும், எனக்காகப் பரிந்து பேசத்தொடங்கினார் வேலன்.
'அண்ணை! சும்மா இருங்கோ, அவனைக் கரைச்சல் பண்ணாதைங்கோ.
அவனுக்கு மீனுக்குள்ள கடவுள் தெரியிறார், அவன் சாப்பிடட்டும் உங்களுக்கென்ன,'
அவர் சொன்னது வித்துவானுக்குப் பிடிக்கவில்லை.



வேலன் என்னைப் பழுதாக்கிவிடுவாரோ என்ற பயம் அவருக்கு.
வித்துவான் வேலன் தசரதன் போல் 'தோய்ந்தே கடந்தவர்'.
அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும்போது,
ஒரு பிராமணப்பெண்ணை அவர் 'சைற்' அடித்ததாய்,
வித்துவான் அடிக்கடி கிண்டல் பண்ணுவதைக் கேட்டிருக்கிறோம்.
எனக்குப்பரிந்து வேலன் பேசியதும்,
படுத்திருந்த வித்துவான் துள்ளி எழும்பினார்.
முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு,
வித்துவான் வேலனை வளைந்து கும்பிட்டார்.
'தம்பீ! நீ பிராமணத்தியிட்டையும் கடவுளைக் காணுவாய்,
பாவம், அவனை விட்டிடு' என்று கெஞ்சினாற்போல் சொல்ல,
அத்தனைபேரும் சாப்பிட்டது செமிக்கச் சிரித்தோம்.



இன்று அவர் விருப்பப்படி புலால் மறுத்து வாழ்கிறேன்.
பார்க்க அவர்தான் இல்லை.



மற்றொருநாள் நான் தங்கியிருந்த வாடகை அறைக்கு,
அழுதபடி ஓடி வருகிறார் வித்துவான்.
'பாவீ! பாவீ! இப்படி அநியாயம் செய்யிறானே'
விம்மி அழுதபடி வந்த அவரைக்கண்டு, நான் பதறிவிட்டேன்.
யாரோ அவருக்கு ஏதேனும் செய்துவிட்டார்களோ என, எனக்குள் ஆத்திரம்.
'என்னசேர்? என்ன நடந்தது? ஆர் என்ன செய்தவங்கள்?' நான் பதறி ஓடிவர,
'இங்க வா அப்பு, இந்த அநியாயத்தைப்பார்,
இப்படியொரு உயிரை வதைக்கலாமே?' என்று,
கூறியபடி அவர் கைகாட்டிய திசையைப் பார்க்கிறேன்.
ஆடு வெட்டி விற்கும் ஒருவன் ஓர் ஆட்டை வாங்கி,
அதை ஒரு சின்னப்பெட்டிக்குள் திணித்துக்கட்டி,
கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான்.
பெட்டிக்குள் அடங்கமுடியாமல் ஆடு திமிறி,
'மே ஏ..ஏ...' என்று கதறிக்கொண்டிருந்தது.
வித்துவானால் அந்தக் காட்சியை ஜீரணிக்கமுடியவில்லை.
அன்றைக்கு அவர் அழுத அழுகைக்கு ஓர் அளவில்லை.
கைகட்டிப் பார்த்ததை விட, என்னாலும் ஏதும் செய்யமுடியாத நிலை.
வித்துவான் என் இதயச்சிகரத்தில் உட்கார்ந்த தினம் அது.



வித்துவான் ஆறுமுகம் என்ற அந்த அறிஞர்,
எனக்குத் தமிழைக் கற்றுத்தந்தார்;.
எனக்குத் தர்மத்தைக் கற்றுத்தந்தார்.
எனக்கு வாழ்வைக் கற்றுத்தந்தார்.
எனக்கு அன்பைக் கற்றுத்தந்தார்.
உலகியல் வயப்பட்டிருந்த நான்,
அவரை முழுமையாக விளங்கமுடியாது, திகைத்திருக்கிறேன்.
விளங்கத்தகுதி பெற்றபோது,
இயற்கை அவரை அழைத்துக்கொண்டு விட்டது.
ஒன்றுமட்டும் உண்மை.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்று,
ஒளவை ஒன்றும் சும்மா சொல்லவில்லை.


 
(வித்துவான் ஆறுமுகனார் நிறைவுறுகிறார், 
வித்துவான் வேலன் தொடர்ந்து வருவார்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.