"இன்று உனக்கும் சம்பளமா?" -கவிஞர் நீலாவாணன்-
கவிதை முற்றம் 18 Aug 2019
ஏன் கடலே இரைகின்றாய்
இன்றுனக்கும் சம்பளமா?
ஏழை வீட்டில்
தான்நீயும் பிறந்தனையா?
தமிழா நீ கற்றதுவும்
தகாத வார்த்தை!
தேன்கடலாய் ஓடுமெங்கள்
திருநாட்டில் பிறந்தபயன்
தெரிகின்றாயோ?
வான்தந்த வளமிலையோ
வயல்தந்த நிதியிலையோ
வாடாதே நீ....
காற்செருப்புக் கழன்றதுவா?
கட்டுதற்கும் இடமிலையா
கால் நூற்றாண்டாய்
தோற்பொருத்தித் தோற்பொருத்தி
துணையாக உழைத்த அவை
தொழிலில் ஓய்ந்தால்
போற்றுதற்கோர் பொதுக்கூட்டம்
போட்டதிலே பொன்னாடை
போர்த்து மேலும்
பாற்சோறும் பட்சணமும்
படைப்பதற்கு நின்னிடத்தே
பணமா இல்லை?
'இபோசா' பஸ்களிலே
ஏறுகையில், வியர்வையினால்
ஏழை தோழன்,
யப்பானார் இறக்குகின்ற
புறாமார்க்கு மல்வேட்டி
அடடா 'டப்டப்'
'சப்'பென்று மூச்சுவிட்டு
சல்லடையாய் மாறிற்றோ
சனத்துக் குள்ளே
இப்படியும் அவமானம்
ஏதேனும் வந்ததுவா?
இரைகின்றாய் நீ!
சட்டம்பி ஆனவன்றே
சந்தையிலே வாங்கிவந்து
சலியாதின்று
பொட்டூதிப் போனாலும்
புழுதிமிகப் படிந்தாலும்
போன மாதம்
கட்டறுந்த குடையினை எம்
கந்தோருக் கெடுத்துப்போய்
கவனமின்றி
பட்டணத்துக் கடையெதிலும்
பறிகொடுத்து விட்டனையோ
பதறுகின்றாய்?
கல்லூரி மாணவியுன்
மகள் கமலா ஏதேனும்
காசா கேட்டாள்?
அல்லாஹ்போல் அனுதினமும்
சில்லறைக்குக் கடன் தந்த
அலியார் நானா
பொல்லாத வார்த்தையெதும்
புகன்றாரோ? பொருமுகிறாய்
போன ஆண்டு
நிலுவைக்கு வரிசையிலே
நின் படலை மட்டுமங்கார்
நிற்கின்றாரோ?
அந்திபட்டும் இருசாமம்
ஆச்சுதினிக் கடன்காரர்
ஆரும் அங்கே
இந்தவரை நில்லார்கள்
என்மனையாள் மட்டுமங்கே
இருப்பாள் ஏங்கி
நொந்தென்ன கண்டோம் யாம்
இல்லாமை யாம்கொடிய
நோயைப் போக்க
விந்தை மருந்தறியாமல்
விதியென்று பேசுகிறோம்!
வீடு செல்வோம்.