கந்தன் கவியமுதம் 09
கார்த்திகைத் திருவிழவில் கந்தன் வந்தால்
காணக்கண் ஆயிரமும் போதாதென்றே
ஊர் எல்லாம் இருந்து பல அடியர் வந்து
உவப்போடு நல்லூரில் வணங்கி நிற்பர்
தீர்ந்தவரின் வினையெல்லாம் திரிந்து நல்ல
தேற்றமுடன் நல்வினையாய் மாறிப் போகும்
பார் அதனில் நல்லூரான் பாதந் தொட்டால்
பணிந்தவரின் வாழ்வதுவும் உயர்ந்து நிற்கும்.
பூவேய்ந்த சப்பறத்தில் புனிதன் ஏறிப்
பொன்னாக ஒளிவீசிப் புறத்தே வந்தால்
நாவார அவன் பெயரைச் சொல்லிச் சொல்லி
நல்ல பெரும் அடியரெலாம் நயந்து நிற்பர்
மாவாகத் தினை மசித்து தேனும் வார்த்து
மங்கையர்கள் மாவிளக்கை ஏற்றி நின்று
காவாய்! என்றழைத் தந்தக் கந்தன் தன்னை
கைகூப்பித் தொழுதேதான் வணங்கி நிற்பர்.