கந்தன் கவியமுதம் -8
நீறுடைய நேசர்களை ஆளுமுகம் ஒன்றே
நெஞ்சமதில் நினைவார்க்கு அருளுமுகமொன்றே
வீறுடைய மயில் ஏறி விளங்குமுகம் ஒன்றே
வெற்றிதரு வேலுடனே நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனையே வருத்துமுகம் ஒன்றே
மாண்போடு நல்லூரில் நின்ற முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
அருணகிரி நாதரடி அகம் நிறைய வேண்டும்.
வளமிகுந்த வேலன் நல்ல வடிவுமிகு கோலம் கொண்டு
வைர வடிவேலும் ஏந்தி வருவானாம்
தளமதனில் வந்து நல்ல தயவுடனே உள்ளம் பொங்க
தரணிதனை ஆண்டு நின்று அடியாரின்
உளமதனில் உள்நுழைந்து உயர்வுதரு பேறு நல்கி
உம்பரென அவர்கள் தம்மை நெறி செய்வான்
நலமிகுந்த நல்லை தன்னில் நயமுடனே வந்தமர்ந்து
நலங்கள் பல ஈந்து நிற்கும் பெருமாளே.