“கன்னியாசுல்க்கம்” - -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

“கன்னியாசுல்க்கம்” - -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
லகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும்,
தன் ஒரே நூலால் அறிமுகம் செய்தவன் கம்பன்.
வான்மீகி முனிவரின் இராமாயணத்தைத் தன் முதன்நூலாய்க் கொண்டு,
அவன் தமிழிற் சமைத்த நூலே இராமகாதை. 
தேவபாடையில் இக்கதை செய்தவர் 
மூவரானவர் தம்முளும் முந்திய 
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பரோ என, 
கவிச்சக்கரவர்த்தி கம்பனே இக்கருத்தை, தன் காவியத்தில் ஏற்றுரைக்கின்றான்.
வான்மீகத்தை முதன் நூலாய்க்கொண்டு கம்பன் செய்த தமிழ்க்காவியம்,
வெறும் மொழி பெயர்ப்பன்றாம்.
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கொத்து
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழி நூலாகும் எனும் 
தமிழர்தம் இலக்கணமரபைப் பின்பற்றி,
மூலநூலின்  முடிவோடு மாறுபடாமல்,
அறமுணர்ந்து, தன் சுயம் புகுத்தி,
விரிந்த கற்பனாசாகரத்துள் மூழ்கித் திளைத்து,
கம்பன் ஆக்கிய நூலே கம்பகாவியமாம்.
 
 
அதனால்தான், கம்பன் செய்த வழிநூல்,
முதன்நூலினும் முதன்மை பெற்றது.
தமிழர்தம் அறக்கொள்கை, பண்பாடு, வாழ்வியல்விழுமியங்களுக்கு ஏற்ப,
முதன்நூற் கதைப்போக்கில் கம்பன் செய்த மாற்றங்கள் பலப்பல. 
முதன்நூலறிவோடு கம்பனைக் கற்க,
விடுபடாக் கம்பசூத்திரங்கள் பல விரிந்து விடுபடுதல் உண்மை. 
 
   ❤
 
அதேவேளை,
முதன்நூலறிவு,
கம்பகாவியத்தின் நோக்கத்தையும்,
புலவன்தன் உள்ளக் கிடக்கையையும்,
சிலவேளைகளில் திரிபுபடுத்தவும் செய்தே விடுகிறது.
 
   ❤
 
அங்ஙனம் முதன்நூலறிவு கொண்டு நோக்கியதால்,
கம்பகாவியத்தில் மயக்கம் ஏற்படுத்திய விடயங்களில் ஒன்றாய் அமைவதுவே,
'கன்னியாசுல்க்கக்' கருத்துமாம்.
 
   ❤
 
கம்பகாவியத்தில் மூழ்கித்திளைத்த பேரறிஞர் சிலர்கூட,
மூலநூற் கருத்தேற்றுச் சிந்தித்ததால்,
கவிச்சக்கரவர்த்தியின் கருத்துக்கு மாறாய்,
கம்பன்தன் கவிகள் சிலவற்றை,
அம்மூலநூற் கருத்தோடு பொருத்தி,
கம்பன் சொல்ல நினைக்காத 'கன்னியாசுல்க்கம்' பற்றிய செய்தியை,
கம்பனுள்ளேயே எடுத்துக்காட்டி,
தாமும் மயங்கி மற்றாரையும் மயங்கச் செய்தனர்.
 
   ❤
 
தாமுற்ற அம் மயக்கத்தால்,
உயர்ந்த பாத்திரங்களைத் தாழ்த்தியும்,
தாழ்ந்த பாத்திரங்களை உயர்த்தியும் அவர்கள் செய்த ஆக்க முயற்சிகள்,
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணா முயற்சிகளாய் ஆனதோடு,
புதிதாய்க் காவியத்துள் நுழையும் இளையார்க்கு,
பாத்திரங்களின் உண்மைநிலை பற்றி மயக்கம் விளைவித்தன்
கம்பன்தன் நோக்கமும் சிதைவித்தன. 
வணங்கத்தக்க அப்பெரியார்தம் 'கன்னியாசுல்க்கக்' கருத்தை மட்டும்,
மறுத்துரைப்பதுவே இக்கட்டுரையின் நோக்கமாம்.
 
   ❤
 
காவியப் பரிச்சயம் இல்லாதவர்க்காய்,
முதற்கண் 'கன்னியாசுல்க்கம்' என்பது பற்றி,
சில செய்திகள் காண்பாம்.
கன்னியொருத்தியை விரும்பி மணக்க நினைக்கும் ஒருவன்,
அவளை வயப்படுத்த, விரும்பித்தரும் பொருளே 'கன்னியாசுல்க்க'மாம்.
அங்ஙனம் விரும்பித் தரப்படும் தானம்,
பொன், பொருள், புவி எனப் பலவுமாகலாம்.
அவை எவையாயினும்,
தரப்படும் பெண்டிர்க்கும், 
அவள்தன் வழிவந்தார்க்கும் அவை உரித்தாதல் மரபு.
இஃது வடநாட்டார்தம் வழக்காம்.
 
   ❤
 
இனி, இராமகாதையுள் இக் கன்னியாசுல்க்கம் பற்றிய செய்தி,
பொருந்துமாற்றைக் காண்பாம்.
தசரதச் சக்கரவர்த்தி, கைகேயியைத் திருமணம் செய்யும்போது,
கோசல அரசை அவள் சந்ததிக்கு, 
'கன்னியாசுல்க்க'மாய் வழங்கினான் என்பது,
வான்மீகம் தரும் செய்தி.
('தசரதன் கைகேயியை மணந்த காலத்து,
இராச்சியத்தைச் சுல்க்கமாகச் சபதஞ் செய்தான்' என்று,
ஸ்ரீவான்மீகி இராமாயணத்தில் 107ஆம் ஸர்க்கத்திற் கூறியிருக்கிறது.)
இச்செய்தியை வான்மீகம் வெளிப்படையாய் உரைக்கும்.
கம்பனில் இச்செய்தி பற்றிய வெளிப்பட்ட பதிவு ஏதுமில்லை.
ஆயினும், மூலநூற் பயிற்சியால் இச்செய்தியைக் கம்பனில் பொருத்த விழைந்த அறிஞர் சிலர்,
கம்பனிலும் இச்செய்தி பதிவாகியிருப்பதாய் உரைத்ததோடு,
அக்கருத்துக்கொண்டு கைகேயிப் பாத்திரத்தை மேன்மை செய்யவும்,
தசரதப் பாத்திரத்தை, கீழ்மை செய்யவும் விழைந்தனர்.
அவர்தம் கருத்தைச் சற்று விரிவாய் ஆராய்வாம்.
 
   ❤
 
மூலநூற் கருத்தை உட்கொண்ட அந்த அறிஞர்கள்
தசரதன், தன் திருமணத்தின்போது 'கன்னியாசுல்க்க' மாய்;,
கோசல நாட்டின் உரிமையைக் கைகேயிக்குக் கொடுத்தான் என்றும்,
பின்னர் முத்தேவியர்க்கும் குழந்தைகள் பிறந்ததும்,
தன் நான்குமைந்தரில் மூத்தவனான இராமன்மேலே கொண்டபேரன்பால்,
தனக்குப் பின்னால் இராமனே முடிசூடவேண்டும் என 
நினைந்தான் என்றும்,
அக்கருத்தினாலேயே பரதனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பியபின்,
அயோத்தியில் அவன் இல்லாத் தருணத்தில்,
இராமனுக்கு முடிசூட்டும் முடிவை ஒரேநாளில் எடுத்தானென்றும்,
அம்முடிவைக் கூட அவசர அவசரமாய்,
அடுத்த நாளிலேயே நிறைவேற்ற நினைந்தானென்றும்,
தசரதனைக் குற்றஞ்சாட்டித் தம் கருத்தை எடுத்துரைப்பர்.
 
   ❤
 
அப்பெரியோர், தம் கருத்துக்குச் சான்றாய்,
கம்பகாவியத்திற் சில பாடல்களையும் முன்வைப்பர்.
அப்பெரியோர்கள் முன்வைக்கும் பாடல்களையும்,
அப்பாடல்களூடு அவர்கள் சொல்லும் கருத்தையும் அறிதல் அவசியம்.
அஃதறிவாம்.
 
   ❤
 
கைகேயி சூழ்வினைப்படலத்தில்,
கைகேயியின் மனதை மாற்ற விழையும் கூனி,
பரதற்கே அரசு சேரவேண்டும் என வாதிடும்போது,
முன் வைக்கும் கருத்தாய் அமையும் ஒரு பாடலை,
அப்பெரியோர், தம் கருத்தின் முதற்சான்றாய்க் கொள்வர்.
அப்பாடல் இது:
கெடுத்தொழிந்தனை உனக்(கு) அரும்புதல்வனைக் கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கெனவே 
கொடுத்த பேரரசு அவன் குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ?
இப்பாடலிற்கு,
'நினது பெறுதற்கரிய புத்திரனைக் கெடுத்து அழித்தாய்.
விளங்குகின்ற கடலை ஆடையாக உடுத்திய பூமியை,
உடைமையாய் உடைய தசரதச்சக்கரவர்த்தி,
ஒப்பற்ற தன் மகனான இராமனுக்கெனக் கொடுத்த பெரிய இராச்சியம்,
அவன் குலத்திற் பிறக்கும் அரச மைந்தர் தமக்கும்,
அவனைச் சார்ந்த தம்பிக்குமேயாகும் (இலக்குவன்) அல்லது அயலவருக்குரியதாகுமோ?' என,
மந்தரை கைகேயிக்கு உரைத்ததாய் பொருள் கூறுதல் மரபு.
இங்கு ஒரு மகற்கு எனக் கூனி உரைப்பது,
இராமனைக் கருதியே என்பது,
இராமாயணம் முழுவதற்கும் உரைகண்ட 
வை.மு.கோ. போன்றோர்தம் கருத்தாம்.
 
   ❤
 
'கன்னியாசுல்க்கக்' கருத்தையேற்று வாதிடுவோர்,
இப்பாடற்கு வேறு வகையாய்ப் பொருளுரைப்பர்.
இப்பாடலில் வரும் ஒரு மகன் எனும் தொடர் குறிப்பது,
பரதனையே என்பது அவர்தம் கருத்தாம்.
அவர் கருத்தேற்றுப் பொருள் நோக்க,
'நினது பெறுதற்கரிய புத்திரனைக் கெடுத்து அழித்தாய்.
விளங்குகின்ற கடலை ஆடையாக உடுத்திய பூமியை உடைய தசரதச் சக்கரவர்த்தி,
ஒப்பற்ற மகனான பரதனுக்கெனக் கொடுத்த பெரிய இராச்சியம்,
அவன் குலத்திற் பிறந்த அரச மைந்தர் தமக்கும்,
அவனைச் சார்ந்த தம்பிக்குமேயாகும் (சத்துருக்கன்) அல்லது அயலவருக்குரியதாகுமோ?' என,
மந்தரை கைகேயிக்கு உரைப்பதாய்ப் பொருள் அமையும்.
இவ்விரு கருத்துகளில் எது சரியானது? 
ஆராய்தல் அவசியமாகிறது. 
 
   ❤
 
மாற்றுக் கருத்தாளர், தம்வாதத்தைக் கீழ்க்கண்டவாறு அமைப்பர்.
இராமன் தசரதனது மூத்த மைந்தன் ஆதலால்,
அவனுக்குக் கோசல இராச்சியம் குலமரபால் உரித்தாவது.
உரித்தான அவ் இராச்சியத்தை,
தசரதன் இராமனுக்குக் கொடுக்கவேண்டும் என்பது இல்லை.
இப்பாடலில் கொடுத்த பேரரசு எனக் கம்பன் தொடர் அமைத்ததால்,
இது தானமாய்க் கொடுக்கப்பட்ட அரசு என்றும்,
குலமரபால், இளையனான பரதற்கு ஆட்சியுரிமை இல்லையேனும், 
'கன்னியாசுல்க்கத்தால்' இவ்வரசு அவனுக்குக் கொடுக்கப்பட்டதால்தான்,
கொடுத்த பேரரசு எனக் கூனி உரைத்தாள் என்றும் இவர்கள் வாதிடுவர். 
இப்பாடலில் வரும் கொடுத்த எனும் சொல்,
தானமாய்க் கொடுத்தல் எனும் பொருளையே தரும் என்பது இவர்தம் முடிபு.
இக்கருத்தை ஆராய்வாம்.
 
   ❤
 
இப்பாடலில்,
ஒரு மகற்கெனக் கூனி உரைப்பது யாரை?
இராமனையா? பரதனையா?
கேள்விக்கு விடை காணல் அவசியமாகிறது. 
   ❤
                                                                                            (கன்னியாசுல்க்கம் தொடரும்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.