கும்பிட்டேன் பகைமுடித்து அன்பு செய்வீர் ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
மீண்டும் ஒரு பேரதிர்ச்சி, நிமிர்ந்து நாங்கள்
மீண்டெழுந்து வருவதன் முன் நிகழ்ந்து போச்சு
நீண்டதொரு பகை முடித்துச் சற்றே நாங்கள்
நிமிர்வதன் முன் இளையோர்தம் தூய நெஞ்சில்
மூண்டெழுந்த பகையதனால் முனைந்தே சீறி
முரண்பட்டு நின்றார்கள் அதனைக்கண்டு
வீண் பகையும் விளைகிறதே என்றே அஞ்சி
விம்மினராம் கற்றோர்கள் விதிர்த்துப் போனார்.
முன் நாளில் பேரினத்தார் எமக்குச் செய்த
முறையில்லாச் செயலனைத்தும் நினைந்ததாலே
என் நாடு என் மக்கள் என்று எண்ணும்
ஏற்றமதைத் துறந்தெங்கள் இளையோரெல்லாம்
பின் நாளில் தலைமைதனை ஏற்கப்போகும்
பெருமைதனை மறந்தின்று இடர்கள் செய்தால்
என்னாகும் திருநாடு? என்று ஏங்கி
ஏற்றமுறும் பெரியரெலாம் இரங்கி நின்றார்.
பகையதனால் இதுவரையில் அங்குமிங்கும்
பார்த்ததெலாம் அழிவன்றி வேறுமுண்டோ?
தகையதனை இழந்தேதான் தலைவரெல்லாம்
தம் வெற்றிக்காய் இந்த மண்ணில் நஞ்சை
வகையின்றி பரப்பியதால் இளையோர் கூட
வஞ்சனைக்கு ஆளாகி இன்றும் தங்கள்
மிகை உணர்வால் பகை வளர்த்து தமக்குள் மோதி
மெலிவதனைக் கண்டுள்ளம் மெலிந்து போனார்.
பல்கலையும் கற்றுயரும் பான்மைமிக்க
படித்தவரின் அறிவினுளே பகையாம் நஞ்சு
எள்ளளவும் வரலாமோ? இதனால் மீண்டும்
ஏற்றங்கள் சரியாதோ? எங்கள் வாழ்வு
நல்லவர்கள் வகுத்த வழி தன்னில் ஏகி
நயம் பெறவே உயர்ந்திடலே நலமாம் கண்டீர்!
கள்ளமெலாம் துடைத்தேதான் பகைமை என்னும்
கயமைதனை அறுத்தெறிந்து அன்பு செய்வோம்.
எங்களது பெருந்தன்மை கண்டு அந்த
ஏற்றத்தில் மனம் நாணி தாங்கள் செய்த
பொங்கியதாம் பேரழிவை எண்ணி எண்ணி
பொசுங்கி மனம் வாடிடவே தம்முள் நொந்து
சிங்களவர் மனம் மாறி எங்கள் மாட்டு
சேர்ந்து வரச்செய்வதுவே பெருமை கண்டீர்!
தங்குகிற பகையறுத்தார் தமிழர் என்ற
தனிப்பெருமை சேர்த்திடுவீர் தரணி போற்ற!
ஆசையுறும் மன உணர்வை மற்றோர்க்காக்கி
அன்பதனை விளைப்பதற்கே மொழி உண்டாச்சு
பேசுகிற பாஷையதால் பிரிவுண்டாக்கி
பேரழிவைச் செய்வதுவும் நியாயமாமோ?
நாசமுறும் தேசமதைக் கண்டும் நாங்கள்
நாடாது பகை வளர்த்தல் நன்றோ சொல்வீர்?
கூசுகிறார் பெரியரெலாம் குமைந்து நெஞ்சில்
கும்பிட்டேன் பகைமுடித்து அன்பு செய்வீர்!
***