சிவராமலிங்கம் என்றொரு மானுடன்: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

சிவராமலிங்கம் என்றொரு மானுடன்: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 

லகம் விசித்திரமானது.
அந்த விசித்திர உலகின் விதிகளை,
இறைவனை அன்றி வேறு எவராலும் முழுமையாய் அறிய முடியாது.
அவ் உண்மையை என் வாழ்வில் பலதரம் உணர்ந்திருக்கிறேன்.
எப்படி வந்தனர்? ஏன் வந்தனர்? எதனால் என்மேல் அன்பு செய்தனர்?
என்பவற்றையெல்லாம் அறிய முடியாது சம்பந்தமே இல்லாமல்,
தேவ தூதர்கள் போல எங்கெங்கோ இருந்து வந்து,
எனது வாழ்வை பலர் உயர்த்தினர்.
இது யாருடைய திட்டமிடல்? எவரின் வழிநடத்தல்? என்பவை பற்றியெல்லாம்,
அறிய முடியாது இன்றுவரை தவித்து நிற்கிறேன்.
அங்ஙனம் எங்கிருந்தோ வந்து என்னைக் காத்து நெறிசெய்த,
ஒருவர் தான் சிவராமலிங்கம் மாஸ்ரர்.
📍📍📍📍
 

யாழ் இந்துக்கல்லூரியின் அடையாளங்களில் ஒன்றாய்,
சிங்கமென உலா வந்தவர் எங்கள் சிவராமலிங்கம் மாஸ்ரர்.
ஒரு தந்தையாய் என்னை நேசித்து வளர்த்தவர்.
என் நெஞ்சத்து நிமிர்விற்கு வித்திட்டவர்.
நினைவுப் பறவை சிறகடிக்கத் தொடங்கினால்,
மாஸ்ரர் பற்றிய பல எண்ணங்கள் விண்ணளவாய் விரியும்.
அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையுள் பதிவு செய்ய விரும்புகிறேன்.
📍📍📍📍
யாழ் இந்துவில் நான் சேர்ந்தபொழுது,
பலவிதமான தனித்தன்மைகளோடு ஆசிரியர் பலர் அங்கிருந்தனர்.
அவர்களில் ஒருவர், 'கோட்' போட்டுக்கொண்டுதான் தினமும் கல்லூரிக்கு வருவார்.
மற்றொருவர், காக்கித் தொப்பியணிந்து வருவார்.
இன்னொருவர், கால்வரை தொங்குமாற்போல்,
கழுத்தைச் சுற்றி சால்வை அணிந்து கைவீசி நடந்து வருவார்.
இப்படிப் புறவடிவில் மட்டுமன்றி,
அக இயல்பிலும் தனித்தன்மையுடன் வேறுபட்டிருந்த பல ஆசிரியர்களைக் கண்டு,
ஆச்சரியப்பட்டிருந்த வேளையிற்தான்,
முதன்முதலாய் அங்கு, சிவராமலிங்கம் மாஸ்ரரைச் சந்தித்தேன்.
பருமனான தோற்றமும் முகம் நிறைந்த சிரிப்புமாய்,
ஒரு கையில் தடி ஊன்றி, மறு கையால் ஒரு மாணவனின் கையைப் பிடித்தபடி,
ஊனமுற்ற தனது காலை வீசி வீசி அவர் நடந்து வந்த தோற்றம் கண்டு,
எனக்குள் பெரிய இரக்கம் ஏற்பட்டது.
📍📍📍📍
இவ்வளவு பெரிய கல்லூரியில்,
ஊனமுற்ற இவரை எப்படி உள்வாங்கினர்? கேள்வி பிறந்தது.
அவரின் ஊனம் நினைந்து இரங்கி,
அவரைச் சேர்த்திருப்பார்கள் எனக் கருதினேன்.
நடக்கவே மாணவர்களின் துணை வேண்டி நிற்கும் இவரால்,
மாணவர்களை வழிநடத்த முடியுமா? என எண்ணினேன்.
ஆனால், என் எண்ணங்கள் எல்லாம் பிழையானவை என்பதை,
காலம் உணர்த்திற்று.
📍📍📍📍
நான் எட்டாம் வகுப்பில் இருந்தபோது,
ஒரு நாள் ஆசிரியர் வராததால்,
எங்கள் வகுப்பு மாணவர்களை நூலகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
அது எங்கள் கல்லூரியின் வழக்கம்.
அந்தப் பாடத்திற்கான நேரம் முடிந்து மணியடித்ததும்,
மாணவர்களைப் பிரார்த்தனை மண்டபத்தின் பின்பக்க வழியாக,
வரிசையாக வகுப்புக்கு அனுப்பி வைத்தனர்.
நான் பிரார்த்தனை மண்டபத்தைக் கடக்கும்போது,
அங்கு, உயர்தரமாணவ ஒன்றியத்தின் கூட்டமொன்று நடந்துகொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில், சிவராமலிங்கம் மாஸ்ரர் பேசிக்கொண்டிருந்தார்.
அன்றுதான் அவரது விஸ்வரூபத்தினை முதன்முதலாகக் கண்டேன்.
📍📍📍📍
கம்பீரமான, தெளிவான, உறுதியான பேச்சு.
கட்டளைத் தொனி மிக்க இனிய தமிழ்.
ஒரு கையை மேசையில் ஊன்றியபடி, ஊனம் தெரியாமல் நிமிர்ந்து நின்று,
அற்புதமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசிய விடயம்கூட இன்றும் நினைவிலிருக்கிறது.
மகாபாரதம் சம்பந்தமான விடயம் அது.
📍📍📍📍
அர்ச்சுனன், தனது மகனான அபிமன்யுவை கௌரவர்கள் கொன்ற பழியைத்  தீர்ப்பதற்காக,
சிவனிடம் ஆயுதம் பெற்று வரச் செல்கிறான்.
அங்ஙனம் அவன் சென்ற செய்தியை,
துரியோதனனுக்கு முன்னமே உரைப்பதுதான் அறம் என்று கருதிய தர்மன்,
அதற்காகக் கடோற்கஜனை துரியோதனனிடம் அனுப்பி வைக்கிறான்.
இடும்பி எனும் அரக்கிக்கும் வீமனுக்கும் பிறந்த புதல்வன் கடோற்கஜன்.
தூது வந்த அக்கடோற்கஜன் சொன்ன அற உரைகள் பிடிக்காது போக,
துரியோதனன் சினந்து அவனை அரக்கி மகன் என்று இழிவு செய்கிறான்.
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும்.
📍📍📍📍
அரக்கன் என்று ஜாதி சொல்லி,
தன்னை சபையில் வைத்துத் துரியோதனன் அவமதிக்க,
அதனால் சிறிதும் பதற்றமடையாத கடோற்கஜன்,
மிக நிதானமாக அவனை நோக்கிப் பேசத் தொடங்குகிறான்.
துரியோதனர்கள் பஞ்ச பாண்டவர்க்கு இயற்றிய,
இழிசெயல்களையெல்லாம் வரிசைப்படுத்தும் அவன்,
இச்செயல்களெல்லாம் உங்களைப் போன்ற உயர்ந்தோர்க்கே ஆகும்,
எங்களைப் போன்ற அரக்கர்கள் இவற்றை ஒருக்காலும் இயற்றோம் என்று,
துரியோதனனின் உச்சியில் அடித்தாற்போல் உரைத்து நிற்கிறான்.

அந்தவுரை மீண்டு இவன் கேட்டாங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும்
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா
வெந்திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரைக் கழுவில் வீழச் செய்யார்
உந்து புனலிடைப் புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார்

செழுந் தழல் வாழ் மனைக் கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார்
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய்ச் சூது ஆடார்
கொழுந்தியரைத் துகில் உரியார் கொடுங் கானம் அடைவித்துக் கொல்ல எண்ணார்
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான்.

துரியோதனனைத் தூக்கியெறிந்து,
நிமிர்வோடு கடோற்கஜன் பேசிய பேச்சினை,
அன்று எங்கள் உயர்தர மாணவர் ஒன்றியச் சபையில்,
அவ்வளவு அழகாகச் சிவராமலிங்கம் மாஸ்ரர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
📍📍📍📍
இயல்பாகத் தமிழ்கேட்டு மயங்கும் என் உள்ளம்,
ஆசிரியரின் அன்றைய பேச்சைக் கேட்டு,
உண்மையில் விதிர்விதிர்த்துப் போனது.
பின்னால் வந்த மாணவர்கள் எல்லோரும் என்னைக் கடந்துசெல்ல,
நான்மட்டும் என்னை மறந்து அதே இடத்தில் ஸ்தம்பித்து நின்றேன்.
ஊனமுற்று இரக்கத்திற்குரியவராய் என் மனதில் பதிந்திருந்த மாஸ்ரர்,
நேர்மாறாய் மற்றவர்களைவிடக் கம்பீரமானவராய்,
அன்று என் மனச் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.
அன்றே அவரது தமிழின் அடிமையானேன் நான்.
📍📍📍📍
அந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர்தான்,
சிவராமலிங்க மாஸ்ரரை நான் அணுக முடிந்தது.
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாததால் கல்லூரியை விட்டு வெளியேறி,
பின்னர் மிகுந்த சிரமப்பட்டு அப்பரீட்சையில் சித்தியடைந்து,
உயர்தர வகுப்பில் சேர்ந்தேன்.
எனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தி,
கல்லூரியில் எனக்கு ஒரு முகத்தினை உருவாக்கிய பின்னர்தான்,
மாஸ்ரரோடு நான் நெருங்கினேன்.
உயர்தர வகுப்பில் இணைந்த பிறகு,
முதன்முதலாக, எங்கள் உயர்தர வகுப்பு மாணவர் ஒன்றியத்தில்,
பேசுகிற வாய்ப்பொன்று வந்தது.
இந்துக் கல்லூரியில் முதன்முதலாகப் பேசப்போகிறேன் என்ற பதற்றம் எனக்கு.
அங்கு முதன்முதலாக யார் என்னைப் பேச்சினால் ஈர்த்தாரோ,
அவரிடமே சென்று ஆசிபெற்றுப் பேச வேண்டுமென நினைந்தேன்.
📍📍📍📍
மாஸ்ரரை அணுகப் பயமாக இருந்தது.
அவர் இந்துக்கல்லூரி நிர்வாக ரதத்தின் செலுத்துனர்களில் ஒருவராக இயங்கி வந்தார்.
கல்லூரியைச் சமூகத்தோடு சமநிலைப்படுத்தும் பொறுப்பை,
அப்போது ஒருசில ஆசிரியர்கள் ஏற்றிருந்தனர்.
அவர்களில் சிவராமலிங்க மாஸ்ரரும் ஒருவர்.
அவரைச் சூழ எப்பொழுதும் யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள்.
நெடுநேரம் காத்திருந்து, அவர் தனித்தபோது,
அவரது காலில் போய் விழுந்தேன்.
மாணவர்கள் ஆசிரியர்களைக் காலில் விழுந்து வணங்கும் வழக்கம்,
அப்போது அதிகம் இருக்கவில்லை.-இப்போதும்தான்.
அவருக்கு ஆச்சரியம்!
'என்னடாப்பா? என்னடாப்பா?' என்று வியந்து கேட்டார்.
'இன்று முதன்முதலாக இந்துக் கல்லூரியில் பேசப்போகிறேன்.
பயமாக இருக்கிறது.
எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்லி வாழ்த்துங்கள்!' எனக் கேட்டு நின்றேன்.
முகம் மலரச் சிரித்தார்.
பின், என் முதுகில் தட்டி,
'முன்னுக்கு இருக்கிறவங்கள் எல்லாம் முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு பேசு!
பேச்சுத் தானாக வரும்' என்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு,
என் தலை தடவி வாழ்த்தினார்.
📍📍📍📍
மாலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.
காலையில் மாஸ்ரர் எனக்குச் சொன்ன,
'முன்னுக்கு இருக்கிறவர்களையெல்லாம் முட்டாளாய் நினைத்துக்கொண்டு பேசு'
என்ற ஆலோசனையை மனத்துள் உருப்போட்டுக்கொண்டு,
கண்மூடிக் கடவுளைப் பிரார்த்தித்து கண்களைத் திறக்கிறேன்.
முன்வரிசையில் சிவராமலிங்கம் மாஸ்ரரே உட்கார்ந்திருக்கிறார்.
என் அறிவு கலங்கிப்போயிற்று.
📍📍📍📍

                                                                              (சிவராமலிங்கம் மாஸ்ரர் அடுத்தவாரமும் வருவார்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.