செய்தியும்.. சிந்தனையும் .. 02 | மூவர் முதலிகள் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
சிந்தனைக்களம் 09 Aug 2017
செய்தி
தினக்குரல் 2017 ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் நகரில் தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய போது, மாகாண சபையில் புதிய நியமனங்கள் செய்யப்படுகையில் அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். மேலும் தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களும் பதவியிலிருந்து விலகுவது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழரசுக்கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுவதாலேயே இந்த முடிவுக்குத் தாங்கள் சென்றதாகவும் தமிழரசுக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா அவர்கள், வடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றி அமைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலமைச்சர் விடாப்பிடியாக நிற்கிறார். கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மேலாகவே முதலமைச்சரின் செயற்பாடு அமைந்திருந்தது. இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவது போலவே அவரது பேச்சுக்கள் இருந்தன. தமிழரசுக்கட்சியை முற்றாக ஓரங்கட்டுவதை எதிர்வுகூறுவதைப் போன்றே முதலமைச்சர் பேசினார். முதலமைச்சர் இப்போது இலங்கைத் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளினதும் யோசனைகளை ஏற்றுக் கொள்கின்றார். எங்கள் யோசனைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.
ஏனைய மூன்று கட்சிகளும் தமது கட்சிக்கான அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் முதலமைச்சருடன் சேர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அவ்வாறான தேவையில்லை. பதவிகளைக் குறிவைத்து நிலைப்பாடுகளை எடுப்பவர்கள் அல்ல நாங்கள். அமைச்சர்பதவி விடயத்தை சர்ச்சைக்குரியதாக நாங்கள் மாற்ற விரும்பவில்லை. வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எவரும், அமைச்சுப்பதவியை ஏற்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
சிந்தனை
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு. (அதிகாரம் நாடு- குறள் 735)
பொருள்:- மாறுபடும் பலவகையான குழுக்களும், உடனிருந்தே அழிவு செய்யும் உட் பகையும், தலைவனை வருத்துகின்ற கொலைத்தொழில் பொருந்திய குறும்பரும் இல்லாததே சிறந்த நாடாம்.
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
'மூவர் முதலிகள்'
உலகத் தமிழ்மாநாட்டில் நான் முன்பு பேசும் போது ஒரு கதை சொன்னேன்.
அது என் சொந்தக்கதை அல்ல. எங்கோ கேட்டதுதான்.
யமதூதர்கள் வானுலகிற்கு ஒரு தமிழனை அழைத்துச் சென்றார்களாம். அங்கு மூன்று குழிகள் இருந்தனவாம். அவற்றில் ஒன்றினது வாசலில், ‘வெளியே வராதீர்!’ எனும் அறிவிப்புப் பலகையும், மற்றையதன் வாசலில் இரும்பு அடைப்பும் இருக்க, மூன்றாவதன் வாசல் வெறுமனே திறந்து கிடந்ததாம். அதனைக் கண்ட தமிழன், ‘அவை என்ன குழிகள்? அவற்றின் வாயிலில்களில் ஏன் இந்த வேறுபாடுகள்?’ என யமதூதரிடம் கேட்டானாம். அதற்கு அவர்கள், ‘இவைதான் நரகக்குழிகள் இதில் முதல் குழியுள் பாவம் செய்த வெள்ளைக்காரர்களையும் இரண்டாவது குழியில் சீனர்களையும் திறந்தே கிடக்கும் மூன்றாவது குழியில் தமிழர்களையும் போடுவோம்’ என்றார்களாம். அழைத்துச் செல்லப்பட்ட தமிழன் மீண்டும் அவ்வேறுபாடுகளுக்கான காரணம் கேட்க, வெள்ளைக்காரர்கள் கட்டளைகளுக்கு அடிபணிவார்கள். அதனால் அவர்களின் குழி வாசலில் அறிவிப்புப்பலகை மட்டும் வைத்திருக்கிறோம். சீனர்கள் முயற்சி நிறைந்தவர்கள். கட்டளைக்கு அடிபணியவும் மாட்டார்கள் எப்படியும் தம் முயற்சியால் நரகக் குழியைக் கடந்து வெளியே வந்து விடுவார்கள். அதனால்த்தான் அவர்களைப் போடும் குழியை அடைத்து வைத்திருக்கிறோம்’ என்றார்களாம்.
சென்ற தமிழனுக்கோ பிடிபடாத பெருமை. அவன் ‘தமிழர்களைப் போடும் குழியில் அறிவிப்பும் இல்லை அடைப்பும் இல்லை அவர்கள் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?’ என்று வியப்போடு வினவினானாம். வாய்விட்டுச் சிரித்த யமதூதர்கள், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தாம் ஏற முயற்சிக்காவிட்டாலும் ஏறுகிறவர்களை இழுத்து வீழ்த்துவதில் தமிழர்கள் சமத்தர்கள். அதனால்த்தான் அந்தக் குழியை வெறுமனே விட்டிருக்கிறோம். அங்கிருந்து ஒருவன் மேலேற முயற்சித்தால், உடனிருப்பவர்களே அவனை இழுத்து வீழ்த்திவிடுவார்கள். அந்த நம்பிக்கையில்த்தான் அவர்கள் குழியை வெறுமனே விட்டிருக்கிறோம்’ என்றார்களாம்.
♻ 1980 இல் மதுரையில் நடந்த மாநாட்டில் நான் சொன்ன இந்தக்கதையை இன்று நம் வடமாகாணசபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இனத்தின் எதிர்கால வாழ்வை மறந்து, தன்மானப் பிரச்சினையில் போட்டி போட்டுக் கீழிறங்கிக் கொண்டிருக்கும் இவர்களை நினைக்க அருவருப்பாய் இருக்கிறது.
♻ தமிழரசுக்கட்சியினர், பங்காளிக்கட்சியினர், முதலமைச்சர் குழுவினர் என இப்போட்டியில் மூன்று குழுவினர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இம்முக்குழுவினர்தான் போரால் சிதைந்த தமிழினத்தின் தலைவர்களாம்! இம்மூன்று குழுவினருக்கும் இனம் பற்றிய அக்கறை சிறிதேனும் உண்டா? என ஐயுறவேண்டியிருக்கிறது. இம் முத்திறத்தாரில் எத்திறத்தாரில் பிழையாம்? என வினவின், முத்திறத்தாரிலேயுமாம் என்றே விடை வருகிறது.
♻ புலிகளின் மறைவோடு தமிழரசுக்கட்சி, இனி தாம் மட்டுமே தமிழினத் தலைவர்கள் என்றும், இணைந்த இயக்கத்தலைவர்கள் வெறும் ‘போடுதடிகள்’ தான் என்றும் நினைந்து செயற்படத் தொடங்கியது.
♻‘கூட்டமைப்பை ஓர் கட்சியாய்ப் பதிவு செய்வோம்’ என்ற பங்காளிக்கட்சியினரின் கோரிக்கையை நிராகரித்தும் முடிவுகளை எடுக்கையில் அவர்களை அலட்சியம் செய்தும் ‘எம்மை விட்டால் இவர்களால் என்ன செய்யமுடியும்?’ எனும் அலட்சியத்தில், தன்னிச்சையாய் செயற்படத் தொடங்கி பங்காளிகளின் மனக்கசப்பை தூண்டியது அக்கட்சி.
♻ வடமாகாண சபை தேர்தல் வர, பங்காளிக்க்கட்சியினரையும் தம் கட்சியின் மூத்த உறுப்பினர் சிலரையும் முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்து, வளர விட்டுவிடக்கூடாது என ‘சம்சும்குழுவினர்’ (சம்பந்தன், சுமந்திரன்)நினைத்தார்கள். அதனால் புத்திசாலித்தனமாய்த் திட்டமிட்டு, மாற்றணியினரால் மறுக்கமுடியாத ஒருவராக நீதியரசரைத் தேர்ந்த அவர்கள், அரசியல் அனுபவம் இல்லாத நீதியரசர் தம் மகுடிக்கு நன்றாக ஆடுவார் எனும் நம்பிக்கையில், தம் நிலைவிட்டு இறங்கிக் கெஞ்சிக் கூத்தாடி மற்றவர்களின் எதிர்ப்பையும் நிராகரித்து அவரைச் செங்கம்பளம் விரித்து அரசியலுக்குக் அழைத்து வந்தார்கள்.
♻ ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனும் பழமொழி இவர்களைப் பொறுத்தவரை இன்று நிஜமாகியிருக்கிறது. வேலியில் நின்ற ஓணானை மடியில் கட்டிவிட்டு ‘குத்துகிறது குடைகிறது’ என்று குளறுபவனைப் போல ஆழமறியாமல் ஆளைக் கொண்டுவந்துவிட்டு இன்று அந்தரித்து நிற்கிறார்கள் இவர்கள்.
♻ மொத்தத்தில் ஒற்றுமையைச் சிதைக்கும் பகை விதையை முதலில் விதைத்தவர்கள் இவர்களே. இவர்களது செயற்பாட்டில் இன அக்கறையைவிட எதேச்சதிகாரமும், ராஜதந்திரத்தின் பெயரிலான வஞ்சனையும், பதவி ஆசையும் விஞ்சிக் கிடப்பது நிதர்சனம்.
♻ கூட்டமைப்பில் இணைந்திருந்த ‘இயக்க’ அணியினருக்கோ ‘திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை’. இயக்கங்களாய் இருந்து புலிகளிடம் தோற்று, மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து, பின்னர் புலிகளின் ஆதரவால் ஜனநாயக அரசியலுக்குள் கூட்டமைப்பினூடு முழுமையாய் நுழைந்த இவர்களுக்கு, வாக்குக் கேட்டு மக்கள் முன் தனித்து நிற்கும் துணிவு இருக்கவில்லை. தாம் தனித்து நின்றால் மக்களால் நிராகரிக்கப்படுவோம் எனும் அச்சம் காரணமாக, தமிழரசுக்கட்சியும் குறிப்பாக ‘சம்சும்’ குழுவினரும் கூட்டாக நின்று குட்டக்குட்ட ஆரம்பத்தில் சொறணையே இல்லாமல் உட்புகைந்து சும்மா கிடந்தார்கள் இவர்கள்.
♻ இன்றோ முதலமைச்சர், வெற்றுணர்ச்சி வார்த்தைகளால், மக்கள் மனதை திசைதிருப்பி, மாற்றணிகள் சிலவற்றின் மறைமுக ஆதரவோடு புதிய தமிழினத் தலைவராய் தன்னை முன்னிறுத்த முனைந்து நிற்கையில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்குகளாய் சம்பந்தருக்கும் ‘விக்கி’யருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யுமாப்போல் பிளவுகளைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
♻ கூட்டமைப்புக்குள் குற்றவாளிகள் போல் ஒதுக்கப்பட்டிருந்த தமக்கு, இன்று தீர்ப்புரைக்கும் நீதிபதிப் பதவி வாய்த்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ஆனாலும் முடிந்த தேர்தலில் முதலமைச்சரால் மறைமுகமாய் ஆதரிக்கப்பட்ட கஜேந்திரகுமார் அணியினரின் படுதோல்வியை நினைந்தும், இன்று கஜேந்திரகுமாருக்கும் முதலமைச்சருக்கும் விவாகரத்து தொடங்கியிருக்கும் நிலையை நினைந்தும் முதலமைச்சரை முழுதாய் நம்பி அவர் பக்கம் முழுமையாய்க் கால் வைக்கவும் இவர்கள் துணிகிறார்கள் இல்லை. மொத்தத்தில் இவர்தம் அக்கறையும் தமிழ்மக்கள் மேலானதன்றி பதவிகளின் மேலானதேயாம் என்பது உறுதியாகியிருக்கிறது.
♻ மூன்றாமவர் முன்னைநாள் நீதியரசர். யானை மாலை போட்டு அரசனாய் ஆனவர் போல அதிஷ்டத்தால் தலைவராகி, இன்றுவரை அவ் அதிஷ்டத்தாலேயே நிலை நிற்கிறார் இவர். தியாகம், போராட்டப் பங்களிப்பு, அரசியல் அனுபவம், இன அக்கறைச்செயற்பாடு என, தலைமைக்கான முற்பதிவுகள் ஏதுமின்றி பதவி தேடிவர தன்னிலை மறந்து இனஒற்றுமைக்கு இன்று ஆப்பிறுக்கி நிற்கும் இவர், ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை வருடங்கள் முடியும் நிலையிலும் சண்டைகளைத் தவிர வேறு சாதனைகள் எதனையும் செய்ததாய்த் தெரியவில்லை.
♻ ஆண்டுக்கணக்கில் பல அரசியல் கைதிகள் சிறையில் இருக்க தன் குருவான கொலைச்சாமியார் பிரேமானந்தரின் சிஷ்யர்களின் விடுதலைக்காக இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதி தன் இனப்பற்றின் நிலையை எடுத்துக் காட்டிய இவர், இன்று நிர்வாகத்தில் முழுத்தோல்வி கண்டு நிற்கிறார். மூன்றாண்டுகளில் இவரது நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு. அதில் இரண்டு நிரூபணமே ஆகிவிட்டது. இனங்காணப்பட்ட இருவரில் ஒருவர் முதலமைச்சரின் வலக்கையாய் இயங்கியவர். இதை அவரே சொல்லியிருக்கிறார். தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை ஆகவேண்டும் என நினைந்து தமிழரசுக்கட்சிக்குத் தலையிடி கொடுக்க குற்றம் நிரூபணம் ஆகாத இருவரும் கூட குற்றவாளிகளே என பிடிவாதம் பிடிக்கும் இவரின் நிலைகண்டு அரசியல் அவதானிகள் நகைத்து நிற்கின்றனர். அங்கங்களின் பிழைக்கு அரசன் பொறுப்பாகானா? யார்தான் பதில் சொல்வது?
♻ மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதால் மட்டுமே தம் தூய்மையை மறுதலையாய் நிரூபித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர், செய்நன்றி மறத்தல், உட்பகை விளைத்தல், கூடா நட்பு, மடி (சோம்பல்), தெரிந்து தெளியாமை என அரசியலுக்கு முரணானதாய் வள்ளுவர் சொன்ன அனைத்தையும் தம்வயப்படுத்திச் செய்யும் நிர்வாகம், தமிழ்மக்களைப் பாதாளம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
♻ தனது மானமும் அகங்காரமும் மட்டுமே முக்கியமெனக் கருதி இயங்கும் இவரது செயலால் ஒற்றுமையாய் இருக்கவேண்டிய அவசிய நிலையில், தமிழ்த்தலைவர்களும் மக்களும் பிரிவுபட்டுச் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும் என பாரதி சொன்ன உத்தம புருஷலட்சணத்தை இவரிடம் காண முடியவில்லை. மொத்தத்தில் இவருக்கும் தன் வெற்றியின் மீதன்றி தமிழினத்தின் வெற்றி மீது அக்கறையில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
♻ இங்ஙனமாய் தமிழர்தம் தலைமைப் போட்டியில் இன்று மும்முனை ஆட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இவ் ஆட்டத்தில் சுயநலத்தோடு கலந்துகொண்டிருக்கும் மூவர் முதலிகளில் எவர்க்கும் மக்களின் நல்வாழ்வு பற்றிய கவலை கிஞ்சித்தும் இருப்பதாய்த் தெரியவில்லை. அன்றுதொட்டு இன்றுவரை ஏமாற்றுவதே தமிழ்த் தலைமைகளின் வேலையாகவும் ஏமாறுவதே தமிழ் மக்களின் வேலையாகவும் இருக்கிறது. என்னாகப் போகிறது நம் இனம்?
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃