நேர்காணல் 12
#கேள்வி :
உங்களுக்குத் தெரிந்து எங்காவது மக்கள் அமர்ந்திருந்த “பங்கருக்குள்” குண்டேதும் வீழ்ந்ததுண்டா?
#பதில் :
அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்? ஒருமுறை சாவகச்சேரிக்கு அருகில் இருந்த மரக்காலை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்த பலர், குண்டு வீச்சு விமானங்கள் வந்ததும் பயந்துபோய் அந்த மில்லிலிருந்த, மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய கிடங்குக்குள் ஓடிப்போய் இறங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து அண்டை அயலில் நின்றவர்களும் அக்குழிக்குள் சென்று ஒழிந்திருக்கிறார்கள். அப்போது அந்தக் குழிக்கு மிக அருகில் ஒரு குண்டு விழுந்து வெடிக்க, அக்குழி மண்ணால் மூடப்பட்டிருக்கிறது.
விமானங்கள் சென்றதும் நடந்ததை அறிந்து, பலர் உள்ளிருந்தவர்களை மீட்க, படாதபாடு பட்டிருக்கிறார்கள். கண், காது, மூக்கு, வாய் என்று எல்லா உறுப்புக்களினுள்ளும் மண் அடைந்த நிலையில் உள்ளிருந்தவர்களை இழுத்தெடுத்த போது, பலர் அங்கேயே இறந்து போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த சிலரை, அங்கு நின்றவர்கள் “டக்டரில்” அள்ளிப் போட்டுக் கொண்டு யாழ் வைத்தியசாலைக்கு ஓடியிருக்கிறார்கள்.
அக்காலத்தில் எங்களது டாக்டர் இரத்தினகுமார், யாழ் வைத்தியசாலையில் ஓ.பி.டி. யில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கணேசரட்ணம் உள்ளிட்ட பல சத்திரசிகிச்சை நிபுணர்கள், அங்ஙனம் கொண்டு வரப்பட்டவர்களைக் காப்பாற்ற முடிந்த அளவு முயற்சி செய்திருக்கின்றனர். அவர்களது முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
அச்சம்பவம் நடந்த அன்று, வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு வந்த எங்களது டாக்டர் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். நாம் காரணம் கேட்டதற்கு, மண்ணால் உடல் துவாரங்கள் அடைக்கப்பட்டுக் கிடந்த அந்த சடலங்களைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்று அவர் சொன்னபோது நாம் நடுங்கிப் போனோம்.
அக்காலத்தில் யாழ் வைத்தியசாலையில் பணியாற்றிய பெரிய வைத்தியர்கள் அத்தனை பேருக்கும், யாழ்மக்கள் உண்மையிலேயே கோயில் கட்டித்தான் கும்பிடவேண்டும். போர்ச்சுசூழ்நிலையில் அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு “நோபல்” பரிசேகூட வழங்கலாம்.
அவர்கள் நினைத்திருந்தால், வெளிநாடுகளில் சென்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். அத்தகைய வாய்ப்பிருந்தும், நம்மக்களுக்காக அவற்றைத் துறந்து, ஆகக்குறைந்த வசதியோடு இருந்த வைத்தியசாலையில், நோயாளிகளுக்கு ஆகச்சிறந்த வைத்தியம் செய்வதற்காக, நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றிய அந்த வைத்தியர்கள் உண்மையில் மனிதப்பிறவிகள் அல்லர். அவர்களைத் தெய்வப்பிறவிகள் என்றே சொல்லவேண்டும்.
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தபோது, யாழ் வைத்தியசாலைக்குள் தங்கியிருந்த வைத்தியர்கள் ஓரிருவரும், அவர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது யாழ் மக்கள் அவர்களுக்காக இரத்தக் கண்ணீர் வடித்தார்கள்.
இன்று நம் தலைவர்களில் சிலர், தாம் இனத்திற்காக “அதைச் செய்தோம், இதைச் செய்தோம்” என்றெல்லாம் பொய்யுரைத்து, தம்மைத் தியாகிகள் போலக்காட்டி, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த வைத்தியர்களின் தியாகத்தோடு ஒப்பிட்டால், இவர்கள் எல்லாம் நம் இனத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
#கேள்வி :
நீங்கள் சொல்வதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. எங்களது தலைமுறையினருக்கு இந்த விடயங்கள் எல்லாம் தெரியவில்லை. இத்தனையையும் கடந்தா எம் இனம் வந்திருக்கிறது? என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.
இந்திய இராணுவ வருகை பற்றித்தான் நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்கள். பேச்சுவாக்கில்த்தான் இந்தச் சம்பவங்களை சொல்லத் தொடங்கினீர்கள். தயவுசெய்து இந்திய இராணுவ வருகைக்குப் பின்னான செய்திகளைச் சொல்வதைச் சற்றுத்தள்ளி வைத்துவிட்டு, அதற்குமுன் இலங்கை இராணுவத்தாக்குதல்கள் நடந்த காலத்திலான உங்கள் அனுபவங்களையும் விடாமல் சொல்லிவிட்டு, அதன் பின்னர் விட்ட இடத்திலிருந்து நாம் பேசுவது நல்லதென்று தோன்றுகிறது.
ஏனென்றால், உங்களது இந்த நேர்காணல் நிச்சயம் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கப்போகிறது. போர்காலச் சம்பவங்களை உங்களைப் போல இப்படி அனுபவபூர்வமாக மற்றவர்களால் சொல்லமுடியாதென்றே தோன்றுகிறது. ஆகவே விரிவஞ்சி விட்டுவிடாமல் முழுமையாக உங்களது போர்க்கால அனுபவங்களைச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
#பதில் :
என்னை ஊக்கப்படுத்தி, ஊக்கப்படுத்தி எனது பழைய அனுபவங்களைப் பதிவு செய்ய வைக்கிறீர்கள். உங்களது ஆர்வம் என்னையும் தூண்டுகிறது. நீங்கள் சொல்லுமாற்போல வருங்காலத் தலைமுறைக்கு இப்பதிவுகள் உதவுமானால் அவற்றைச் சொல்வதில் எனக்கு ஆட்சேபனை எதுவுமில்லை.
ஆனால் ஒன்று, முதுமையின் பாதிப்பால் சம்பவங்கள் சிலவேளைகளில் வரிசைமாறி வரப்பார்க்கின்றன. அதனை நீங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும். சொல்லிக் கொண்டிருக்கும் போது வரும் நினைவுகளை விட்டு விட்டால் அவை பிறகு போய்விடும். அதனால் அவ்வப்போது வரும் நினைவுகளைச் சொல்லிவிடுகிறேன். இதைப் படிப்பவர்கள், கால ஒழுங்கில்லை என்று குறை சொல்லாமல் இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
#கேள்வி :
ஐயா! அதுபற்றி நீங்கள் கவலையே படவேண்டாம். உங்கள்பாட்டுக்கு வரும் நினைவுகளைப் பதிவு செய்யுங்கள்! எங்களுக்கு அதுபோதும்.
#பதில் :
உங்களுடைய இந்த ஆமோதிப்புக்கு எனது நன்றிகள். இதுவரை நான் சொன்ன சம்பவங்களை ஒருதரம் தொகுத்துச் சொல்கிறேன்.
எம்மண்ணில் இருந்த உரிமைப் போராட்ட ஆயுதக் குழுக்களுடனான தொடர்புகளை சொல்லத் தொடங்கி, யாழ் மண்ணில் விடுதலைப்புலிகள் இயக்கம், தனியே இயங்கத் தொடங்கிய பிறகு ஏற்பட்ட, அவர்களின் உறுப்பினர்கள் சிலருடனான தொடர்புகள் பற்றிச் சொல்லி வந்தேன்.
அதில் “காக்கா” என்று சொல்லப்படுகின்ற மனோகர், “பொட்டம்மான்” என்று சொல்லப்படுகின்ற சங்கர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவர் மாத்தையா, தளபதி கிட்டு, மலரவன் போன்றவர்களுடனான தொடர்புகள் பற்றி எழுதி வந்தேன். இடையில் எங்களுடன் நட்புப் பூண்டிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை, பரதன் போன்றோர் பற்றியும் சொல்லியிருந்தேன்.
பின்னர் மாகாணசபையில் அமைச்சராக இருந்த, திரு.பொ. ஐங்கரநேசன் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும், அவரைக் காப்பாற்ற நாம் செய்த முயற்சி பற்றியும் சொல்லிவிட்டு, இயக்கத்தில் இருந்து பின்னர் அதனைவிட்டுவிட்டு எங்களுடன் வந்திருந்த நண்பன் ஈசு, இந்திய இராணுவத்தின் வருகையின் போது எங்களுடன் இருந்த செய்தியைச் சொல்லத் தொடங்கி, அதிலிருந்து இந்திய இராணுவ வருகைபற்றிய செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தேன்.
அதன் போதுதான், இலங்கை இராணுவக் கதை இடையில் புகுந்தது. இப்போது இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் சண்டை நடந்துகொண்டிருந்தபோதான சம்பவங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த வரிசையில் அக்காலத்தில் நடந்த வேறுசில சம்பவங்களும் எனது நினைவுக்கு வருகின்றன. அவற்றையும் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
கேள்வி :
#நல்லதையா! அவற்றை நீங்கள் சொல்லத் தொடங்குங்கள்.
பதில் :
அப்போது, இலங்கை இராணுவம் யாழ் கோட்டை, பலாலி, காரைநகர், ஆனையிறவு, நாவற்குழி போன்ற இடங்களில் இராணுவமுகாம் அமைத்து இருந்துகொண்டு, “செல்” அடித்தும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியும், “சினைப்பர்” தாக்குதல் நிகழ்த்தியும் கொண்டிருந்தார்கள். அவர்களால், தமது இராணுவ முகாம்களைவிட்டு வெளியில் வரமுடியவில்லை. புலிகள் அவர்கள் வெளியில் வரமுடியாதபடி முற்றுகையிட்டு வைத்திருந்தனர்.
அக்காலத்திலும் நாங்கள் கம்பன் விழாக்களை நடத்திக் கொண்டுதான் இருந்தோம். அப்போது நாம் நடத்திய கம்பன்விழாக்கள்தான், எமது கம்பன் கழக வரலாற்றில் மிக முக்கியமானவை.
#கேள்வி :
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ஐயா?
#பதில் :
அதற்குக் காரணம் இருக்கிறது. அந்த விழாக்களை நாங்கள் நடத்தியபோது யாழ்ப்பாணத்திற்கான வெளியுலகத் தொடர்புகளெல்லாம் பெரும்பாலும் நின்று போயிருந்தன. அப்போது யாழ்ப்பாணத்திற்கான மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. எரிபொருட்களின் விலைகள் வானளாவி உயர்ந்து போயிருந்தன. சமையல் “காஸின்” வருகை நின்று போயிருந்தது.
மின்சாரம் பல நாட்கள் இல்லாததால் வீடுகளில் இருந்த “பிரிட்ஜ்” முதலியன பழுதாகியிருந்தன. மின்சாரம் இல்லாத காரணத்தினால் இரவில் வீதிகளெல்லாம் இருண்டு போயிருக்கும். ஆனாலும் அப்போது கள்ளர் பயம் இருக்கவில்லை. புலிகளின் நிர்வாகத்தின்மேல் இருந்த பயத்தின் காரணமாக, திருடர்களினதும் ரௌடிகளினதும் நடமாட்டம் இல்லையெனும்படியாய் ஆகியிருந்தது. அதனால், தேவை ஏற்பட்டால் இரவில் பெண்கள்கூட அச்சமின்றி நடமாட முடிந்தது.
“என்று நடுச்சாம நேரத்தில் ஒரு பெண் நகைகள் அணிந்துகொண்டு நடமாட முடிகிறதோ அன்று தான் உண்மைச் சுதந்திரம் வந்ததாக நாம் கருதமுடியும்” என்ற காந்தியின் வாசகம் அக்கால யாழ்ப்பாணத்தில் சாத்தியமாகி இருந்தது.
ஆனால் ஒன்று அந்தச் சூழ்நிலை, மக்களின் பண்பாட்டு முதிர்ச்சியால் நிகழவில்லை. ஆயுதத்தோடு நின்ற புலிகள்மீதான பயத்தின் காரணமாகவே அது நிகழ்ந்தது. பிற்காலத்தில் புலிகள் அழிக்கப்பட்ட பின்பு, முதல் சொன்ன யாழில் இல்லாதிருந்த விடயங்களெல்லாம் பழையபடி கிடைத்தபோதும் முன்பிருந்த அந்த அமைதிச் சூழ்நிலை மட்டும் இல்லாமல் போயிற்று.
பெரும்பாலும் அக்காலத்தில் மக்கள் எல்லோரும் மண்ணெண்ணெய்யை மிச்சம் பிடிப்பதற்காக, இரவு ஆறுமணியளவிலேயே தங்களது நாளாந்த வேலைகளை முடித்துக்கொண்டு, இரவு உணவை உண்டுவிட்டு தூங்கத் தயாராகி விடுவார்கள்.
அப்போது விளக்குகளை எரிப்பதற்குக்கூட மண்ணெண்ணெய் கிடைப்பது அரிதாக இருந்தது. படிக்கிற மாணவர்களுக்கு வெளிச்சம் கிடைப்பதற்காக யாரோ ஒரு பெயர் தெரியாத புண்ணியவான் புதுமையான ஒரு கைவிளக்கைக் கண்டுபிடித்திருந்தார். மின்சாரத்தைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசனை விட அக்கால யாழ்ப்பாண மக்கள் இந்தப் பெயர் தெரியாத நபருக்குத்தான் நன்றி செலுத்த வேண்டியவர்களாக இருந்தார்கள்.
#கேள்வி
அந்த விளக்குப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
#பதில்
கட்டாயம் சொல்கிறேன். பழைய வாயகன்ற “ஜாம்” போத்தல் ஒன்றை எடுத்து, அதன் அடியில் கொஞ்சம் பஞ்சினை தடிப்பமாக வைப்பார்கள். பின்னர் ஒரு சைக்கிளின் “வால் டீயூப்” கட்டையை எடுத்து, அதைக் கம்பியால் இணைத்து அக்கம்பியை இருபக்கமும் உயர்த்தி, கண்ணாடிப்போத்தலின் விளிம்பில் கொழுவும்படி அமைத்துக் கொள்வார்கள். பிறகு அந்த வால்க்கட்டையில் பஞ்சுத்திரியைப் போட்டு, அந்தப் பஞ்சுத்திரி கீழுள்ள பஞ்சில் முட்டும் படி வைப்பார்கள்.
பின்னர் அடியிலிருக்கும் அந்தப் பஞ்சில் இரண்டு மேசைக்கரண்டி அளவான மண்ணெண்நெய் விடப்படும். அந்தப் பஞ்சு மண்ணெண்ணையை உறிஞ்சி வைத்து அதைத் தொட்டுக் கொண்டிருக்கும் அந்த விளக்குத்திரிக்கு, விடப்பட்ட எண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்தும்.
அந்தத்திரியை ஏற்றினால் அந்தக் கொஞ்ச மண்ணெண்ணெயில் விளக்கு சில மணித்தியாலங்கள் வரை எரியும். போத்தலின் கண்ணாடிச்சுவர், காற்று விளக்கை அணைக்காத வண்ணம் பாதுகாப்பதோடு வெளிச்சம் வெளியே வரத் துணை செய்யும். இந்த விளக்கு அப்பொழுது யாழ்ப்பாணத்தில் பிரபலமாகியிருந்தது.
அந்தக் கடுமையான போர்ச்சூழலிலும் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் நன்றாகப் படித்துப் பரீட்சைகளில் சித்திபெற்றனர். மற்றவர்களின் மனதிலிருந்த, யாழ்ப்பாணத்தவர்கள் கல்வியில்ச் சிறந்தவர்கள் என்ற அபிப்பிராயத்தை இத்தகைய விளக்குகளின் துணை கொண்டுதான் அப்போதைய இளைஞர்கள் காத்து வந்தார்கள். அப்போதைய பிள்ளைகள் இந்த விளக்கினைக் கூட ஆழுக்கொன்றாக வைத்துக் கொள்ளாமல் ஒரு விளக்கில் பலர் கூடி, படித்து வந்தார்கள்.
#கேள்வி
இப்படியெல்லாம் கூட நடந்ததா? பெற்றோல், மண்ணெண்ணெய்க்கு இவ்வளவு தட்டுப்பாடு இருந்தால் அவசியத் தேவைகளுக்கும் வாகனங்கள் ஓடுவது கடினமாய் இருந்திருக்குமே?
#பதில்
நான் முன் சொன்னவாறு மண்ணெண்ணெய்க்கே அவ்வளவு தட்டுப்பாடு இருந்ததென்றால் பெற்றோலின் நிலைமை பற்றி நான் சொல்லியா உங்களுக்குத் தெரியவேண்டும்? எவ்வளவு காசு கொடுத்தாலும் பெற்றோல் வாங்க முடியாத நிலைமை இருந்தது. வீடுகளில் இருந்த கார் போன்ற வாகனங்களெல்லாம் ஓடாமல் கிடந்து பழுது படத்தொடங்கின. அப்போதும் யாழ் மக்கள் சோர்ந்து விடவில்லை. அவர்கள் வாகனங்களைப் பாவிக்க ஒரு புது வழியைக் கண்டுபிடித்தனர்.
கேள்வி
நீங்கள் சொல்வதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோல் இல்லாமல் எப்படி வாகனங்களை அவர்களால் ஓட்ட முடிந்தது?
பதில்
ஓடாமல் நின்று, வாகனங்களெல்லாம் வீணாவதை விட, கொஞ்சமாவது அவற்றை ஓட வைத்தால் என்ன என நினைந்த மக்கள், அதிக விலையானாலும் ஓரளவு கிடைக்கக் கூடியதாக இருந்த மண்ணெண்ணையை வாங்கி, கார், மோட்டார்சைக்கிள் போன்றவற்றின் “டாங்” குகளில் விடுவார்கள்.
பின்னர் சின்ன சிங்கர்மெஷின் “ஆயில்கான்” ஒன்றினுள் கொஞ்சம் பெற்றோல் வாங்கி வைத்துக் கொள்வார்கள். வாகனங்களை “ஸ்டார்ட்” செய்யும் பொழுது அதன் “ சோக்” கினுள் அந்தக் குப்பி மூலம் ஓரிரு துளிகள் பெற்றோலை விட்டால் வாகனம் “ஸ்டார்ட்” ஆகிவிடும். பிறகு மண்ணெண்ணெய் எரிபொருளில் அது ஓட ஆரம்பிக்கும். இப்படித்தான் யாழ்மக்கள் அக்காலத்தில் வாகனங்களை ஓட்டி வந்தார்கள். இப்படி வாகனங்களுக்கு பெற்றோலை விடுவதற்கு “மணக்கக் கொடுப்பது” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் அப்போது கம்பன் விழாக்களை நடத்த வேண்டியிருந்தது.
(தொடரும்)