நேர்காணல் -8

நேர்காணல் -8

கேள்வி :

மருத்துவத்திற்காகத் தமிழ்நாடு சென்றதோடு மலரவனின் தொடர்பு முடிந்துபோனதா?

பதில் :

இல்லை. காயப்பட்ட கை ஓரளவு சுகமானதும் மலரவன் மீண்டும் எங்கள் மண்ணுக்குத் திரும்பி  வந்துவிட்டான். அதன் பின்னும் அவனது தொடர்பு நீண்டது. பின்னாளில் அவன் தனது சொந்த வாழ்க்கை விடயங்களை எல்லாம்கூட  என்னோடு சொல்லி  ஆலோசனை பெறுவான்.

இந்திய இராணுவம் நம்மண்ணுக்கு வந்து புலிகள் ஆயுத ஒப்படைப்புச் செய்த பின்பு, புலிகள் இயக்கத்திலிருந்த பல போராளிகளது மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டதை என்னால் அறியமுடிந்தது. இனி போராட்டம் தொடருமா? என்ற ஐயநிலை ஏற்பட்ட பிறகு, நம் மண்ணின் விடுதலைக்காய் உண்மைத் தியாக உணர்வோடு போராடத் தலைப்பட்ட பேராளிகள் சிலர், அதுவரை தாம் நினையாதிருந்த தமது தனிவாழ்வு பற்றியும் சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

மீண்டும் புலிகளுக்கும், இந்திய சமாதானப்படைக்கும் மோதல் ஏற்பட்டு இந்திய இராணுவம் யாழ் நிர்வாகத்தைத் தம் கீழ் கொண்டுவந்துவிட்ட நிலையில், தம் தனிவாழ்வு பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்த சில போராளிகள், என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறத் தொடங்கினார்கள்.

 இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கிவிட, தம் தனிவாழ்வைத் தொடர்வதா? அல்லது மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று அவர்களில் சிலர் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். அத்தகைய குழப்பத்திற்கு மலரவனும் ஆளானான்.

தனிப்பட்ட தொடர்பால் எங்களோடு நட்பாய் இருந்த மற்றொரு போராளிக்கும் அங்ஙனம் குழப்பம் ஏற்பட்டது. அவனைப்பற்றி பிறகு சொல்கிறேன்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்ட நிலையில், ஒருநாள் மாலைப்பொழுதில் ‘மைம்மல்’  நேரத்தில் மலரவன் தனது தமையனோடு வைமன் றோட்டில்,  நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தான். அவர்கள் இரண்டு பேரும் நிறையக் குழம்பியிருந்தார்கள்.

மலரவனது தமையன், மலரவனின் மனக்குழப்பத்தை எனக்கு எடுத்துச் சொன்னான். “மலரவன் திரும்பவும் இயக்கத்தில் போய்ச்சேர விரும்புவதாகவும், ஆனால் தங்களுக்கு அதில் விருப்பமில்லை என்றும் கூறி, என்ன செய்வதென்பது பற்றி நீங்கள் தான் அவனுக்குப் புத்தி சொல்லவேண்டும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டான்.

அப்போதிருந்த சூழ்நிலையில் போராட்டக்களம் முற்றாக மாறியிருந்தது. மிகப்பெரிய இந்தியப்படையை எம்மவரால் வெல்லமுடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டாகியிருந்தது. அந்நிலையில், மலரவன் மீளவும் போராடப்போவது பொருத்தமாய் இராது என்றே நானும் நினைத்தேன்.

அதுமட்டுமல்லாமல், மலரவனது தந்தை, மகன் மீண்டும் வீடு வந்த மகிழ்ச்சியில் இருந்தார். திரும்பவும் மலரவன் போராடப்போனால், அவரது மனம் வருந்தும் என்பதாலும், அப்போது மலரவன் தனது தனிவாழ்வு பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்ததாலும் இனி அவன் போராடப்போவது பொருத்தமாய் இராது எனக்கருதிய நான், அவனிடம் “நீ உன் தனிவாழ்க்கையை இனிப்பார்ப்பதுதான் நல்லது” எனக்கூறி, அதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன்.

நீண்ட நேரம் நான் பேசிய பிறகு, மலரவன் முழுமையாக மனமாற்றம் கொண்டான். தனது தனிவாழ்க்கையைத் தொடர்வதென்று முடிவு செய்தான். அங்ஙனம் முடிவு செய்தபிறகு, அவன் இயக்கத்தைவிட்டு வெளியேறுவதற்குத் தான் நினைந்த காரணங்களையும் மனந்திறந்து என்னோடு பேசினான். அவனுக்கும் மட்டும் தெரிந்திருந்த சில இயக்க இரகசியங்களை எனக்குச் சொல்லத் தொடங்கினான். அவன் அன்று சொன்ன முக்கியமான விடயம் ஒன்று, இன்றும் எனது மனதைவிட்டுப் போகாது அதிர்ச்சி அளித்தபடி இருக்கிறது.

என்னை நம்பி அன்று அவன் சொன்ன அந்த விடயத்தை, எப்போதும் நான் பகிரங்கப்படுத்த முடியாது. அந்த விடயங்களை மலரவன் சொன்னபோது எனக்கு அச்சம் ஏற்பட்டது. நான் அவனிடம், “அப்பு! தயவுசெய்து இந்த விடயங்களையெல்லாம் எனக்குச் சொல்லாதே! இதையெல்லாம் மனதில் வைத்துப் பாதுகாக்க நான் படாதபாடுபடவேண்டும். எனவே உனக்குத் தெரிந்த விடயங்களெல்லாம் உன்னோடு முடிந்து போகட்டும். நீ ஒருவாறு இந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிப்போய் உனது தனி வாழ்வைப் பாதுகாத்துக் கொள்” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

பின்னர் மலரவன் கொழும்பு சென்று, அங்கிருந்து வெளிநாடு ஒன்றிற்குப் போனான். அதன் பிறகு அவன், எங்களோடு ஒருதரம்கூடத் தொடர்பு கொள்ளவில்லை. அங்கு நல்லபடி திருமணம் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாய் வாழ்வதாய் அறிந்தேன்.

அன்று மாலை அவன் என்னைச் சந்தித்திராவிட்டால், அவனது வாழ்வு வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பது மட்டும் சத்தியமான உண்மை.

 

கேள்வி :

மலரவனைப் போலவே இன்னொரு போராளியும் உங்களால் மனம்மாற்றப்பட்டதாய்ச் சொன்னீர்கள். அதுபற்றியும் சொல்லுங்களேன்.

பதில் :

நாங்கள் யாழ். இந்துக் கல்லூரியில் ஏ.எல் படித்தபோது ஈஸ்வரநாதன் என்கின்ற ஒருவனும் எங்களது “பட்ஜில்” படித்தான். படிக்கும்போது எனக்கும் அவனுக்கும் அதிக நெருக்கம் இருக்கவில்லை. ஆனால் அவன் கல்லூரிக்காலத்தில் எங்களது டாக்டர் இரத்தினகுமாரோடு நெருக்கமாய் இருந்தான். ஒருவகையில் அவ்விருவரும் உறவினர்கள்கூட.

நல்லவன். உண்மையானவன். மென்மையானவனும்கூட. எல்லோரையும் நேசிப்பவன். தேசப்பற்று மிகுந்தவன். 1983 இல் யாழ் திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் நடந்த குண்டுவெடிப்பின்போது, 13 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து, இராணுவத்தினர் அருகிலிருந்த வீடுகளுள் எல்லாம் புகுந்து, வெறியாட்டம் நடத்தினர்.

ஈஸ்வரநாதனது வீடும் அதன் அருகில்தான் இருந்தது. இராணுவத்தினரின் அவ்வெறியாட்டத்தில்,  வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காய் வந்திருந்த அவனது அக்காவின் கணவனும் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் ஏற்பட்ட பாதிப்பில், தனது ‘எக்கவுண்டன்’ படிப்பையும், தொழிலையும் விட்டுவிட்டு, அவன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தான்.

அவனது நேர்மையால், அங்கும் மதிக்கப்பட்ட அவன், இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளனாய் ஆகி வன்னியில் மாத்தையாவின் தலைமையில் செயற்பட்டு வந்தான். அக்காலத்தில் மாத்தையாவின் சில கொடூரமான செயல்களில் அவனுக்கு உடன்பாடு இல்லாமற்போயிற்று.

அந்நிலையில், இந்திய சமாதானப்படை வருகைதந்து, ஈழத்தில் தற்காலிகமாய் ஒரு சுமுகநிலை ஏற்பட்டுவிட, இவனும் பழையபடி தனது தனிவாழ்வைத் தொடர முடிவு செய்தான். ஆனாலும் உறுதியான முடிவெடுக்க முடியாமல் அங்கொருகாலும், இங்கொருகாலுமாகக் குழம்பிப்போய் தனது குழப்பத்தை இரத்தினகுமாருக்குச் சொல்ல, இரத்தினகுமார் அச்செய்தியை என்னிடம்  சொல்லி அவனைத்  தெளிவுபடுத்தும்படி   என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இயக்கத்திலிருந்து விலகுவதெனச் செய்த முடிவில் குழப்பத்தோடு யாழ் வந்திருந்த அவனை, மீண்டும் இயக்கத்திற்குப் போகாமல் தடுக்கும்படி  அவனது தாயாரும், தமக்கையும் இரத்தினகுமாரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ஆண் துணையில்லாது அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த வேளை அது.

ஈஸ்வரநாதன் இயக்கதிற்குச் சென்றிருந்த அந்த இடைக்காலத்தில், இரத்தினகுமார்தான் அவர்களின் குடும்பத்திற்குத் துணையாக இருந்து, ஈஸ்வரநாதனது இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். துணையற்று இருந்த அவர்கள், ஈஸ்வரநாதன் திரும்பி வந்திருந்ததால் பெரிய நிம்மதியடைந்திருந்தனர். ஈஸ்வரநாதனை நாங்கள் “ஈசு” என்றுதான் அழைப்போம்.

இயக்கத்தை விட்டு வெளிவந்தது தவறோ? எனும் எண்ணத்தால், ஈசு பெரிதும் குழப்பமுற்றிருந்தான். அவனது நேர்மைத் தன்மையினால், அவன் மனம் பெரிதும் சஞ்சலப்பட்டது. அதனால், திரும்பி அவன் இயக்கத்திற்குப் போய் விடுவானோ? எனும்  தமது அச்சத்தை, அவனது குடும்பத்தார் இரத்தினகுமாருடன் பகிர்ந்துகொள்ள, இரத்தினகுமார் என்னிடம் கேட்டு ஈசுவை அழைத்துவந்து எங்களது கழக அலுவலகத்தில் அவனைத் தங்க வைத்தார்.

அதிலிருந்துதான், ஈசுக்கும் எனக்குமான தொடர்பு நெருக்கமானது. நட்பு விரிந்தது. அப்போது இரத்தினகுமார் “மெடிக்கல் கொலிஜில்” படித்துக் கொண்டிருந்ததால் காலையில் அவர் அங்கு சென்றுவிடுவார். குமாரதாசனும் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து கொண்டிருந்ததால், அவரும் காலையில் எழுந்து வேலைக்குப் போய்விடுவார். பகல் முழுதும் நானும் ஈசுவும் மட்டும்தான் வீட்டில் இருப்போம்.

அதனால் அவனோடு தனித்து அதிக நேரம் செலவழிக்க வாய்ப்புக் கிடைத்ததால் குழப்பமுற்றிருந்த அவனை நான் அன்றாடம் பேசிப்பேசி மனதளவில் தெளிவித்து வந்தேன். ஒருவாறு என்னுடைய கருத்துக்களை ஏற்ற அவன், இயக்கத்திலிருந்து வெளிவருவது என முடிவு செய்தான்.

அப்போது இயக்கம் கொடுத்த கைத்துப்பாக்கி அவனிடமே இருந்தது. இயக்கத்தை விட்டு விலகுவதாக முடிவு செய்ததும், அவன் தன்னிடம் இருந்த அந்த துப்பாக்கியை இயக்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க நினைத்தான்.  அதைத் திருப்பிக்கொடுக்க அவன் இயக்க அலுவலகத்திற்குச் சென்றால், அவனை அவர்கள் மீண்டும் தம்வயப்படுத்தி விடுவார்கள் என அவனது வீட்டார் அஞ்சினர்.

அச்சூழ்நிலையில் இருந்து அவனைப் பாதுகாக்க, நான் நாயன்மார்கட்டில் இருந்த எனது பழைய நண்பனான காக்கா எனும் இயக்கப்பெயர் கொண்ட மனோகரைச் சந்திக்கச் சென்றேன். மனோகர் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவன். அவனைப் பற்றியும் பின்னாள் சில விடயங்கள் சொல்கிறேன்.

 மனோகரைச் சந்தித்த நான் ஈசுவின் குடும்பச் சூழ்நிலையை விளங்கப்படுத்தி, ஈசுவுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டேன். என் வேண்டுகோளை ஏற்ற மனோகர் ஒருநாள் மாலைப்பொழுதில் எங்களது கழக அலுவலகத்திற்கு வந்து, ஈசுவிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கிச்சென்றான்.

அதன் பிறகு ஒருநாள், ஈசு தங்களது வீட்டில் இருந்தபோது, கல்லூரித் தொடர்பால் அவனோடு நெருக்கமாக இருந்த,  புலிகள் இயக்க உறுப்பினரான குகன் (பொன்னம்மான்) என்பவர் வந்து, (இவர் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராய் இருந்த  யோகியின் தம்பியாவார்)  ஈசுவை மீண்டும் இயக்கத்தில் இணையும்படி வலியுறுத்த, ஈசு மீண்டும் குழம்பிப் போனான்.

மறுநாள் வந்து ஈசுவை இயக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக பொன்னம்மான் சொல்ல ஈசுவும் அதற்குச் சம்மதித்திருக்கிறான். தற்செயலாக அடுத்தநாள் மதியம் ஈசுவைச் சந்திக்க நான் அவனது வீட்டிற்குச் சென்றேன். அவனது முகக்குறிப்பைக் கொண்டு அவன் குழம்பியிருப்பதை அறிந்து, அவனை வலியுறுத்திக் கேட்டபொழுது, நடந்ததையெல்லாம் அவன் எனக்குச் சொன்னான்.

அதிர்ந்துபோன நான், நெடுநேரமாக அவனோடு பேசி, அவனை மீண்டும் தெளிவடையச் செய்து, வீட்டிலிருந்தால் அவர்கள் அவனை  அழைத்துச் சென்று விடுவார்கள் என்பதால், உடனேயே எங்கள் அலுவலகத்திற்கு அவனைக் கூட்டிவந்து விட்டேன்.

அதனால், அவனை அழைக்கவென்று வந்தவர்கள் வீட்டில் அவன் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். அந்தக் குகன் என்பவர், பின்னாளில் கைதடியில் நடந்த தண்ணீர்த் தாங்கிக் குண்டுவெடிப்பில், தன் குழுவினருடன் இறந்துபோனார். அன்று ஈசு அவர்களுடன் சென்றிருந்தால், நிச்சயம் அவனும் அவர்களோடு இறந்திருப்பான். இறையருள்தான் அவனை என் மூலமாகக் காப்பாற்றியது.

(தொடரும்…)

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.