நேர்காணல் 14

நேர்காணல் 14
மற்றவை 25 Sep 2026

 

சென்ற வாரம்….

நாங்கள் நின்ற கோயிலடிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்த இடத்திற்கும் இடையில் சில நூறு யார்கள் இடைவெளிதான் இருந்தது. எங்களைக் காப்பாற்றிய தெய்வம் அங்கு விழுந்து கிடந்தவர்களைக் கைவிட்டிருந்தது. இந்தச் சம்பவம் எனது மனதைப் பெரிய அளவில் பாதித்தது. அப் பாதிப்பால் சில நாட்களின் பின்னர் நான் மன அழுத்த நோய்க்கு (Depression) ஆளானேன். அதுபற்றிப் பின்னர் சொல்கிறேன். (தொடரும்)

 

இந்த வாரம்….

அக்காலத்தில் யாழில் “ரெலோ” அமைப்பினரும், விடுதலைப்புலிகள் அமைப்பினரும் சமமான பலத்துடன் இருந்து வந்தார்கள். அவர்களுக்குள் நீறுபூத்த நெருப்பாக பகை இருந்து கொண்டிருந்தது. அவர்களது பகை ஒருநாள் திடீரென  மோதலாய் வெடித்தது. அந்த மோதலையும் என்னால் மறக்கமுடியாது.

நான் முன்னர் உங்களுக்குச் சொன்ன எனது பழைய நண்பரும், புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவருமான “காக்கா” என்று அழைக்கப்பட்ட மனோகரை, “ரெலோ” இயக்கத்தினர் ஒருநாள் கடத்திச் சென்றனர். அதிலிருந்துதான் புலிகளுக்கும் “ரெலோவுக்குமான” சண்டை தொடங்கியது.

அப்போது புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாய் இருந்த கிட்டு அவர்கள், “காக்கா அண்ணை எங்களுடைய பழைய ஆள். அவரைத் தொட்டால் நாங்கள் சும்மா விடுவமோ?” என்று சொல்லித்தான் “ரெலோ” இயக்கதின்மேல் தாக்குதலைத் தொடங்கினார் என்று பின்னாளில் சிலர் சொன்னார்கள்.

“புலிகளுக்கும்”, “ரெலோ” இயக்கத்தினருக்கும் இடையிலான சண்டையில், யாழ்ப்பாணம் வருந்தத்தக்க பல அழிவுகளைக் கண்டது. சண்டையில் புலிகளின் கை ஓங்க, “ரெலோ” இயக்கத்தினர் சிதறி ஓடத் தொடங்கினர். அவர்களில் பலர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போராளிகளைப் போல, ஓடி ஒழிந்து கொள்ளக் குடும்பமோ, உறவோ அவர்களுக்கு யாழில் இல்லாதிருந்ததால், அவர்களில் பலர் புலிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அங்ஙனம் அகப்பட்டவர்கள் புலிகளால் கொடுமையாகக் கொல்லப்பட்டனர். அந்த மரணங்களைக் கண்டும், கேட்டும் நான் மிகவும் வருந்தினேன். எல்லா இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்களும், நமது ஈழத்துக்காகப் போராடத்தான் இயக்கங்களில் சேர்ந்தார்கள். பின்னாளில் இயங்கங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டுச் சண்டையில், மண்ணின் விடுதலைக்காகப் போராடத் தலைப்பட்ட, அந்த அப்பாவி இளைஞர்கள் அநியாயமாகப் பலியாக்கப்பட்டார்கள். இதற்கு மேல் அந்த விடயம்பற்றி இங்கு நான் அதிகம் விபரித்துச் சொல்ல விரும்பவில்லை.

 “ரெலோ” உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட அதே காலத்தில், அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களாய் இருந்த சிலரையும் புலிகள் சிறைப்பிடித்துக் கொண்டு போனார்கள். அப்படிக் கொண்டு போனவர்களில், பின்னாளில் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சார்பில்  போட்டியிட்டு  வென்று, தமிழரசுக்கட்சியினர் அமைத்த மாகாணசபையில் அமைச்சராகப் பதவி வகித்தவரும், அதன் பின்னர் தமிழரசுக்கட்சியுடன் முரண்பட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அணுக்கத் தொண்டராக மாறி இருந்தவருமான ஐங்கரநேசன் அவர்களும் ஒருவராய் இருந்தார்.

“ரெலோ இயக்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக விளங்கிய அவர், அப்போது யாழ்ப்பாணத்தில் “யூனிவேர்சல்” என்கின்ற பிரபலமான ரியூட்டரியை நடத்தி வந்தார். அங்கு ஒரு சிறந்த தாவரவியல் (Botany) ஆசிரியராக இருந்து கற்பித்து, பல மாணவர்களின் உயர்விற்கு வழி சமைத்து வந்தார்.

அப்போது புலிகள் மட்டும் என்றில்லாமல், மற்றைய இயக்கங்களும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்ததால், பொது மக்கள் தத்தமக்கு விருப்பமான இயக்கங்களின் ஆதரவாளராக இருந்து வந்தார்கள். அந்த வகையில் ஐங்கரநேசன் “ரெலோ” இயக்க ஆதரவாளராகச் செயற்பட்டு வந்தார். அக்கட்சியின் தலைவரான சிறீ.சபாரட்ணம் அவர்களுடன் ஐங்கரநேசன் நெருங்கிய தோழமை  கொண்டிருந்தார்.

அதன் காரணமாகவே ஐங்கரநேசனையும் விடுதலைப்புலிகள் கடத்திச் சென்றிருந்தனர். ஐங்கரநேசன் எங்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். புலிகளுக்கும் “ரெலோ” இயக்கத்திற்கும் இடையில் மோதல் தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பாக  ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நாங்கள் நடத்த இருந்த ஒரு இரவு விருந்தினை, நடத்தக்கூடாதென  ஒரு அனாமதேய தொலைபேசிக் குரல் எங்களை மிரட்டியது. என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் நாம் குழம்பிப் போயிருந்த வேளையில், தற்செயலாக எங்களைச் சந்திக்க வந்த ஐங்கரநேசன் அவர்கள், நடந்த விடயத்தை அறிந்து “நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ, நான் “ரெலோ” ஆட்களைக் கொண்டு உங்களுக்குப் பாதுகாப்புத் தருகிறன்” என்று  கூறினார்.

அந்த அளவுக்கு அவர் எம்மோடும் நெருக்கமாக இருந்தார். அவர் சொன்ன ஆலோசனையை நல்லகாலம் நான்  ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லாவிட்டால் நாங்களும் உள்ளே போயிருப்போம். இறைவன்தான் அப்போது எங்களுக்கு வழிகாட்டி இருப்பான் போல.

புலிகளுக்கும் ரெலோ இயக்கத்தினருக்குமான சண்டை ஓரிரு நாட்களில் ஓய்ந்து போனதாய் ஞாபகம். ரெலோ இயக்கத்தினரைப் புலிகள் முற்றாக நீக்கி, யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்பும் ஐங்கரநேசனுக்கு என்னாயிற்று என்று ஒருவருக்கும் தெரியவில்லை.

அப்போது ஐங்கரநேசனுக்குத் திருமணமாகி இருக்கவில்லை. அவர் தனது தமக்கையாருடன்தான் இருந்து வந்தார். தம்பியைப் புலிகள் சிறைப்பிடித்துச் சென்றபிறகு, அவருக்கு என்னாயிற்றோ என்று தெரியாமல் அவருடைய தமக்கையார் பெரிதும் கவலைப்பட்டார். சிலர் ஐங்கரநேசனும் சுடப்பட்டுவிட்டார் என்று சொல்லி அவரை மேலும் கலங்கவிட்டார்கள்.

அப்போது இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (C.T.B.) உயர்பதவி ஒன்றில் இருந்த தியாகராஜா என்பவர், கந்தர்மடச் சந்திக்கருகில் வசித்து வந்தார். அவர் சமூக உணர்வுமிக்க ஒருவர். எங்களுடனும், ஐங்கரநேசனுடனும் அவர் நல்ல தொடர்பில் இருந்தார்.

ஒருநாள் அவரது வீட்டில் அவரும், ஐங்கரநேசனின் தமக்கையும், நாங்களும் சந்தித்தோம். ஐங்கரநேசனின் தமக்கையார் பட்ட துன்பத்தைக் கண்டு பெரும் இரக்கமாக இருந்தது. தம்பியார் இருக்கிறானா. இல்லையா? என்பதுகூடத் தெரியாததால், அவர் வருந்தி அழுது புலம்பினார்.

அப்போது நான், தியாகராஜா அவர்களிடம், “புலி உறுப்பினரான ‘காக்காவை’ எனக்குத் தெரியும். அவரை ரெலோ இயக்கம் பிடித்து வைத்ததால்த்தான் புலிகளுக்கும் ரெலோவுக்கும் சண்டை தொடங்கியது என்று சொல்கிறார்கள். இப்போது ரெலோ இயக்கம் அடிபட்டபிறகு அவர் வெளிவந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். எதற்கும் நான் சென்று அவரைச் சந்தித்து ஐங்கரநேசனைப் பற்றி அறிந்து வரப்பார்க்கிறேன்” என்று சொன்னேன். தியாகராஜா அவர்களும் ஐங்கரநேசனின் தமக்கையும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்தநாள் நான் எனது சைக்கிளில் தனியே நாயன்மார்கட்டுக்குச் சென்று “காக்காவைச்” சந்தித்தேன். “காக்கா” என்னைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார். நடந்தவை பற்றிக் கேட்டறிந்த பிறகு, நான் அவரிடம் “நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்.” என்றேன். “என்ன செய்யவேண்டும் சொல்லுங்கோ” என்று அவர் உற்சாகமாகப் பதிலுரைத்தார்.

நான் அவரிடம் “ஐங்கரநேசன் எங்களுடைய நண்பர். மிக நல்ல ஓர் ஆசிரியர். பல மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார். வருங்காலத்திலும் நம் இனம் உயர அவரது கல்விச்சேவை நமக்குக் கட்டாயம் தேவை. அவரை உங்களது இயக்கம் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். வேறுசிலர் அவரையும் நீங்கள் கொன்றுவிட்டதாயும் பேசிக்கொள்கிறார்கள். அவருடன் வாழ்ந்துவந்த அவருடைய ஒரே தமக்கையார் தம்பியார் பற்றி ஒரு முடிவும் தெரியாமல் கதறி அழுது கொண்டிருக்கிறார். ஐங்கரநேசனுக்கு என்ன நடந்தது? என்று தயவு செய்து நீங்கள் எனக்கு சொல்லவேண்டும்” என்று நான் கேட்டுக்கொண்டேன்.  

அதற்கு காக்கா சிரித்தபடி, “நீங்கள் ஒன்றுக்கும் பயப்பிடாதீர்கள். அவரை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோமே தவிர, அவரின் உயிருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதை நீங்கள் நம்பலாம்”  என்றார்.

அதற்கு நான் அவரிடம், “நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன். ஆனால் தம்பியைக் காணவில்லை என்ற அந்தத் தமக்கையின் மனம் வெறும் வார்த்தைகளை நம்பி எப்படி சமாதானப்படும்? அதனால் ஐங்கரநேசன் உயிரோடு இருப்பது உண்மையானால் அவரிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிக் கொண்டுவந்து எனக்கு தரமுடியுமா?” என்று கேட்டேன்.

அவரும் அதற்குச் சம்மதித்து மறுநாள் நான் கேட்டதுபோல, ஐங்கரநேசனிடமிருந்து ஒரு கடிதத்தை வாங்கிக் கொண்டுவந்து என்னிடம் தந்தார். அந்தக் கடிதத்தை நான் தியாகராஜா வீட்டில் வைத்து அவரது தமக்கையின் கையில் சேர்ப்பித்தேன். அன்று அந்த தமக்கையார் பட்ட ஆனந்தம் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது.

சிலநாட்களின் பின்னர் ஐங்கரநேசனை விடுதலைப்புலிகள் விடுவித்தனர். ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணம் அவர்கள், புலிகளிடம் அகப்படாமல் சிலநாட்கள் தலைமறைவாய் இருந்து வந்தார். பிறகு ஒருநாள் கோண்டாவிலில் இருந்த ஒரு மிளகாய்த்தோட்டத்திற்குள் வைத்துப் புலிகள் அவரைத் தேடிப்பிடித்துச் சுட்டுக் கொன்றதாய் செய்தி வந்தது.

அச்சம்பவம் நடந்த அடுத்துநாட்காலை நான் ஏதோ வேலையாய் ஐங்கரநேசனைச் சந்திக்கவென அவரது “ரியூட்டறிக்குச்” செல்லவேண்டி இருந்தது. நான் அங்கு போனபோது “ரியூட்டறியில்” ஒருவரும் இருக்கவில்லை. ஐங்கரநேசன் மட்டும் தனியே அங்கிருந்தார். அப்போது அங்கே இருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து, முன்னால் இருந்த மேசையில் தலையைக் கவிழ்த்துப் படுத்தபடி அவர் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்ததைக் கண்டேன்.

அவரை ஆறுதல்படுத்தி, அழுவதற்கான காரணத்தை நான் கேட்டபோது, “சபாரட்ணம் அண்ணைய நேற்றுச் சுட்டுப் போட்டாங்கள்” என்று சொல்லி மேலும் அழுதார். சிறீ சபாரட்ணத்துடனான அவருடைய உண்மை நட்பின் பாதிப்பை அவரது கண்ணீர் எனக்கு உணர்த்திற்று.

பின்னாளில் ஐங்கரநேசன், புலிகள் இயக்கத்தில் இணைந்து செயலாற்றத் தொடங்கியதும், புலிகள் இயக்கம் அழிந்த பின்னர், தமிழரசுக்கட்சியில் சேர்ந்து தேர்தலில் குதித்ததும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கவிஞர் புதுவையும் அவரும் பின்னாளில் மிக நெருக்கமாய் இருந்தார்கள்.

இந்திய இராணுவம் வந்த பிறகு ஐங்கரநேசன் இந்தியா சென்றுவிட்டார். இந்திய இராணுவத்துடனான சண்டையின் பிறகு புலிகள் வன்னியில் தலைமறைவாய் இருந்த காலத்தில் ஒருநாள் இந்தியாவிலிருந்து அவர் என்னோடு தொடர்பு கொண்டார்.

1995 ஆம் ஆண்டோடு நாம் கொழும்பு வந்து, கொழும்பிலும் கம்பன்விழாக்களை நடத்தி ஓரளவு எம்மைப் புதுப்பதித்துக் கொண்டிருந்த காலமது. கொழும்பில் நடந்த எங்களது கம்பன்விழாவில், எங்கள் கொழும்புக் கம்பன் கழகத் தலைவராய் இருந்த “ஈஸ்வரன் பிறதர்ஸ்” உரிமையாளரான ஈஸ்வரன் அவர்களின் தொடர்பால், இந்தியத் தூதுவர்கள் சிலர் எங்கள் கம்பன்விழாக்களில் கலந்து கொண்டார்கள்.

தொலைபேசியில் என்னோடு தொடர்புகொண்ட ஐங்கரநேசன், கவிஞர் புதுவையின் மகனுக்கு “ஹைக்கொமிஷனில்” யாரையாவது பிடித்து, இந்தியா செல்ல “விசா” வாங்கித் தரும்படி கேட்டார். நான் பயந்து போனேன். “ஹைக்கொமிஷனர்”கள் எங்களது விழாவுக்கு வந்து போனதால் ஏற்கனவே சிலர், எங்களை “றோ” வின் ஆட்கள் என்று வேறு சொல்லி வந்தார்கள்.

ஒருவேளை நான் கேட்டிருந்தால், ஈஸ்வரன் ஐயா எனக்காக விசா வாங்கித்தந்திருக்கக் கூடும். ஆனால் அப்படி வாங்கிக் கொடுத்திருந்தால், “ஹைக்கொமிஷனுக்கும்” எனக்கும் தொடர்பு இருக்கிறது என்று மற்றவர்கள் சொல்லி வந்த வதந்தி உண்மையாகிப் போயிருக்கும். அதுமட்டுமில்லை. ஒருவேளை புலிகள் எனக்கு “ஹைக்கொமிஷனோடு” தொடர்பு இருக்கிறதோ என அறியத்தான் ஐங்கரநேசனைக் கொண்டு இப்படிக் கேட்பிக்கிறார்களோ? என்றும் நினைக்கவேண்டி இருந்தது.

ஈஸ்வரனால்த்தான், “சிவசங்கர் மேனன்” போன்ற புகழ்பெற்ற இந்தியத் தூதரெல்லாம் எங்கள் கம்பன்விழாவில் வந்து பேசினார்கள். அந்த அளவோடு “ஹைக்கொமிஷன்” தொடர்பை நாங்கள் நிறுத்திக் கொண்டோம். அதனால் ஐங்கரநேசனின் கோரிக்கையை, “அது எம்மால் முடியாத காரியம்” என்று சொல்லி நான் நிராகரித்துவிட்டேன்.

(தொடரும்)

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.