பாவிகளை மன்னிப்பீராக! பகுதி 5: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

பாவிகளை மன்னிப்பீராக! பகுதி 5: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
தாம் உயர்வென்று நினைத்த ஒரு கருத்தை, உலகத்தார்க்கு உபகரிக்க நினைப்பதில் கூடத் தப்பில்லை. பெரிய பிழை எதுவென்றால், அன்பையும் பொறுமையையும் உலகிற்கு உபதேசித்த, ஒரு மகானின் வழிவந்தவர்களாய்ச் சொல்லிக்கொண்டு, மதப்பலத்தைப் பெருக்குவதற்காக, மனிதர்களுக்கிடையே வெறுப்பையும் பகையையும் உருவாக்கும், இவர்களது செயலேயாம்.  இதுவே சகிக்கமுடியாத விடயமாய் இருக்கிறது. அச்சம்பவங்கள் பற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.

லகைத் தம் வயப்படுத்த,
இம்மதத்தார் கையாளும் சில வழிமுறைகள் மனதுக்கு வேதனை தருவன.
ஏதாவது ஓர் பிரதேசத்தில் மக்கள் தொகையால் தாம் பலம்பெறும் வரையில்,
எல்லார் துன்பங்களிலும் பங்கேற்பதும்,
எல்லார்க்காகப் பிரார்த்திப்பதுமாக,
சாத்விகத்தின் உச்சப் பிரதிநிதிகளாய் இவர்கள் காட்சி கொடுப்பர்.
அதே பிரதேசத்தில் மக்கள் தொகையால் தாம் பலம் பெற்றதை அறிந்ததும்,
இவர்தம் இராஜச குணம் வெளிப்படத் தொடங்கிவிடும்.
வெளிப்படையாகவே மற்றைச் சமயங்களோடு முரண்படும் முயற்சியில் ஈடுபடுவர்.
ஓர் எல்லையில் இவர்கள் தம் நோக்கம் நிறைவேற்ற வன்முறையைத் தொடவும் தயங்கார்.
இங்ஙனமாய் இவர்கள் செய்துவரும் சில அற்பத்தனமான செயற்பாடுகள்,
தமிழ்ப் பிரதேசத்தில் இந்துமதத்தவர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

⚓⚓⚓⚓


சான்றின்றிப் பேசுவதாய் நினைப்பீர்கள்.
உதாரணத்திற்காய்  சில சம்பவங்களைச் சொல்கிறேன்.
மேற்சொன்ன வகையில் தமது பலத்தை இவர்கள் பெருக்கிக் கொண்ட,
தமிழ்ப் பிரதேசங்களில் மன்னார்ப்பிரதேசமும் ஒன்றாகும்.
நம்நாட்டில் இந்திய சமாதானப்படை நிலைகொண்டிருந்தபோது,
அப்படையில் இருந்த சில இந்துப்போர்வீரர்கள்,
தமது வழிபாட்டிற்காய் மன்னார் கச்சேரிக்குப் பின்னால் அமைந்திருந்த,
அரசாங்க நிலத்தில் ஓர்  வைரவர் சூலத்தை நாட்டி வழிபட்டனர்.
அது அமைக்கப்பட்டபோது அந்த இராணுவத்தினரின் பலம் கருதி,
எல்லோரும் ஏதும் பேசாது இருந்துவிட்டனர்.
பின்னாளில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்பும்,
அப்பிரதேச இந்துமக்களால்,
அவ் வழிபாட்டிடம் ஆலயமாகவே போற்றப்பட்டு வந்தது.

⚓⚓⚓⚓

அவ்வாலயம் அமைக்கப்பட்டு பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்பாக,
சிலரது தூண்டுதலால் அப்போது அரச அதிபராக இருந்த ஒரு கிறிஸ்தவர்,
அவ்வாலயத்தை அகற்றவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அக்காலத்தில் அங்கு நீதிபதியாக இருந்தவர் ஆளுமையாளர் எனப் பெயர்பெற்ற,
நீதிபதி இளஞ்செழியன் ஆவார்.
அவர் அந்த வழக்கை நன்கு ஆராய்ந்த பிறகு,
பன்னிரண்டு ஆண்டுகள் வழிபாட்டிடமாய் இருந்துவிட்டபடியால்,
அக்கோயிலை அவ்விடத்திலிருந்து அகற்றமுடியாது எனத் தீர்ப்பளித்தார்.

⚓⚓⚓⚓

அப்போது அங்குள்ள சில கிறிஸ்தவ மதத் தலைவர்கள்,
அது அரச நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்று வாதாட,
அப்படியானால் இதே மன்னாரில்,
22 இடங்களில் அரச நிலத்தில் மாதாசிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றையும் அகற்ற நீங்கள் தயாரா? என்று கேட்டு,
அவர்கள் கருத்தை நிராகரித்து இருக்கிறார் நீதிபதி.
அதைச் சகிக்காத இம்மதத்தலைவர்கள் சிலர்,
தம் மதத்தவரை ஒன்று திரட்டி இவ்வாலயத்தை அகற்றவேண்டுமென,
பெரும் மௌன ஊர்வலம் ஒன்றினையே நடத்தினராம்.
இது முன்பு நடந்தவிடயம்.

⚓⚓⚓⚓

தமது மதத்திற்கோ மதஸ்தலத்திற்கோ இடையூறு ஏற்பட்டால்கூட,
மற்றோர் மத ஆலயத்தை அகற்றும்படி கோருவதில் நியாயம் இருப்பதாய்க் கருதலாம்.
அப்படி ஏதுமே இல்லாமல், ஒரு மாற்று மதத்தின் ஆலயத்தை அகற்றவேண்டுமென,
மதத் தலைவர்களே முன்னின்று ஊர்வலம் நடத்துவதும்,
எதிர்ப்பைக் காட்டுவதும் எந்தவிதத்தில் நியாயமாகும்?
இது மக்கள் மத்தியில் மதப்பகையை ஏற்படுத்தும் விடயமாகிவிடாதா?
இக்காரியத்தை எந்த மதத்தவர் செய்தாலும் அதனைத் தவறென்றே நான் உரைப்பேன்.

⚓⚓⚓⚓

இங்ஙனமாய் மாற்று மதத்தாரின் மனதை நோகச் செய்த,
இம்மதத்தாரின் வேறொரு செயல் பற்றிச் சொல்கிறேன்.
இச்சம்பவமும் மன்னாரிலேயே நடந்தது.
இந்துமக்களின் பாடல்பெற்ற புராதன தலமாகிய,
திருக்கேதீச்சரத்தில் நடந்த இச்சம்பவம் பற்றி,
ஊடகங்கள் அனைத்தும் புகைப்படச் சான்றுகளோடு செய்திகள் வெளியிட்டன.

⚓⚓⚓⚓

திருக்கேதீச்சர ஆலயத்திற்கு அண்மையிலுள்ள நிலப்பரப்பினுள்,
ஆலயத்திற்கான ஓர் தற்காலிக வரவேற்பு வளைவு அமைந்திருந்தது.
அந்தத் தற்காலிக வரவேற்பு வளைவை, கடந்த சிவராத்திரி விரத நிகழ்வையொட்டி,
ஆலய நிர்வாக சபை  சற்று ஸ்திரப்படுத்த முடிவு செய்து,
அதன் அத்திவாரத்தைப் பலம் செய்யும் வேலைகள் தொடங்கியிருந்தன.
அந்நேரத்தில்,
திருக்கேதீச்சர ஆலயம் நோக்கிய வீதியில்,
நம்மவர் அமைக்கத் தொடங்கிய அவ் அலங்கார வளைவினை,
அருகில் தாம் இடைக்காலத்தில் அமைத்திருந்த,
தமது சிறிய ஆலயத்தைக் காரணம் காட்டி எதிர்ப்புத் தெரிவித்து,
ஒரு பாதிரியார் தலைமையில் அம்மதத்தைச் சார்ந்த சிலபேர்,
அட்டூழியமாக உள்நுழைந்து அவ்வளைவை உடைத்ததோடு,
நம் நந்திக்கொடி போன்ற சமயசின்னங்களையும்,
காலால் மிதித்து அவமரியாதைசெய்து அதிர்ச்சியூட்டினர்.

⚓⚓⚓⚓

எல்லா மதங்களிலும் தீவிரவாதத்தன்மை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அத்தகைய ஒருசிலரால் இச்சம்பவம் நடந்ததோ என்று சிலர் ஐயுறலாம்.
ஆனால் அது அங்ஙனமன்று என்பதை,
இன்றுவரை அவ்வளைவு கட்டுவதற்கு எதிர்ப்புக் காட்டி நிற்கும்,
அம்மதத் தலைமைப்பீடத்தார்தம் செயற்பாடுகள் உறுதிசெய்கின்றன.

⚓⚓⚓⚓

அதுமட்டுமன்றி,
அவ்வளைவை உடைத்த பாதிரியார் உட்பட்டவர்களை,
மேற்படி மதத்தாரின் தலைமைப்பீடம்,
இன்றுவரை கண்டித்ததாயும் தெரியவில்லை.
தனிப்பட்ட ஒரேயொரு உயர் பாதிரியார் வெளியிட்ட,
நீதியோடு கூடிய கண்டனத்தை மட்டும்,
ஒரு பத்திரிகையில் படித்ததாய் ஞாபகம்.
பிறகு அவர்தம் குரலும் அடக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்.

⚓⚓⚓⚓

திருக்கேதீச்சர ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மை எங்கே?
இடையில் வந்த இம்மதத்தாரின் தொன்மை எங்கே?
அவர்களுக்கென விரிந்த நிலப்பரப்போடு மடுமாதா கோயில் அவ்வூரிலேயே அமைந்திருக்க,
திருக்கேதீச்சர எல்லைக்குள் 'வலியக் கொழுவி'
முரண்பட்டு நிற்கும் இவர்தம் கீழ்மைச் செயல்களை,
எங்ஙனம் ஜீரணிப்பது?

⚓⚓⚓⚓

தமிழினத்தின் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்வோர்,
இப்பிரச்சினை நடந்தபோது,
துணிந்து இதில் தலையிட்;டு இப்பிரச்சினைக்கு,
நேர்மையான தீர்வு காணாமல்  இருந்தது மிகப்பெரும் வேதனை.
ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரச்சினை நோக்கி,
தமிழ்மக்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,
மதப்பிரச்சினை என்ற ஒன்றை அவர்களுக்கிடையிற் புகுத்தினால்,
நம் இனப்பிரச்சினையின் வலிமை குறையும் என்பதைக் கூட,
நம் தலைவர்கள் உணராது மௌனித்திருந்தது பெரிய கொடுமை.
இனத்தைப் பிரிக்கும் இவ்விடயத்தை,
அம்மதத் தலைவர்கள் மட்டுமல்ல,
நம் இனத்தலைவர்களும் கூடப் புரியாததுதான் ஆச்சரியம்.

⚓⚓⚓⚓

அப்பிராந்தியத்தைச் சேர்ந்த,
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர்,
இப்பிரச்சினை பற்றி அறிக்கை விட்டபோது,
தன்னை தமிழினத்தின் பிரதிநிதியாய் அன்றி,
கிறிஸ்தவ மதத்தின் பிரதிநிதியாய்க் கருதியது வெளிப்படையாய்த் தெரிந்தது.

⚓⚓⚓⚓

இவ்விடயத்தில் கூட்டமைப்பைச் சார்ந்த,
சுமந்திரன் அவர்களின் செயற்பாடு ஒன்றே மனதிற்குச் சற்று ஆறுதல் தந்தது.
திருக்கேதீச்சர கோயிலின் சார்பில் வழக்குத் தொடுத்து,
அண்மையில் அவர் நீதிமன்றத்தில் ஆற்றிய நேர்மையான உரையைப் பலரும் பாராட்டினார்கள்.
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவராய் இருந்த பொழுதும்,
நீதிக்காகக் குரல் கொடுத்த அவரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

⚓⚓⚓⚓

எமது  தமிழ்த்தலைவர்கள் அனைவர்க்கும் ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.
வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையினராய் இருக்கும் இந்துமக்கள் ஒன்றிணைந்து,
தேர்தலில் இந்துமதத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஆதரிப்போரை,
நிராகரிக்கவேண்டும் என முடிவு செய்தால்,
உங்களது கதியும் இனப்போராட்டமும் என்னாகும்?
கேள்வியின் கனதியை நம் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

⚓⚓⚓⚓

அண்மையில் மற்றொரு செய்தி படித்தேன்.
யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான,
சென். ஜோன்ஸ் கல்லூரியில் புதிய அதிபர் ஒருவர் நிர்வாகப் பொறுப்பேற்றாராம்.
இளம் வயதினரான அவ் அதிபர் கல்லூரி நிர்வாகத்தைக் கையேற்றதும்,
அதுநாள் வரை இந்து மாணவர்கள் பிரார்த்தனை செய்துவந்த மண்டபத்தை,
அப்பிரார்த்தனைக்கு வழங்காமல் தடை செய்ததான செய்தி,
முகநூல்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
நவீன உலகத்தை அறியக் கூடிய இளவயதுள்ள ஒருவரே,
இங்ஙனம் நடக்கிறாரே என நான் மனம் வருந்தினேன்.

⚓⚓⚓⚓

நான் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது,
உடுவில் மகளிர் கல்லூரியில் அப்போது அதிபராக இருந்த,
ஓர் பெண்மணியின் செயற்பாட்டை அறிந்து மிகமனம் வருந்தியிருக்கிறேன்.
கல்லூரி தொடங்குகிற நேரத்தில் கல்லூரியின் வாசலில் நின்று,
வருகிற இந்துப் பிள்ளைகளின் நெற்றியில் இருக்கும் விபூதியையும், பொட்டையும்,
மற்றைய சமய அடையாளங்களையும் அழிப்பித்த பின்புதான்,
கல்லூரிக்குள் அவர்களை நுழைய அவர் அனுமதிப்பாராம்.
என்னே அநாகரிகம்!

⚓⚓⚓⚓

கிறிஸ்தவக் கல்லூரிகளில் பெருந்தொகையான இந்து மாணவர்களை,
ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்?
பின்னர் ஏன் அவர்களது சமயத்தை இழிவு செய்யவேண்டும்?
வருவாய் நோக்கி இந்துமாணவர்களைச் சேர்த்துக் கொண்டு,
பின் அவர்கள் சார்ந்த மதத்தை இழிவு செய்வது எப்படி நியாயமாகும்?
இன்றும் இந்நாட்டின் பல்வேறு கிறிஸ்தவக் கல்லூரிகளில்,
இத்தகு கொடுமை நடப்பதாய் அறியமுடிகிறது.

⚓⚓⚓⚓

சொன்னால் விடயங்கள் இப்படியே நீண்டுகொண்டிருக்கும்.
'ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு' என்ற,
இயேசு பிரானின் வழிவந்தவர்கள் இத்தகு கீழ்மைச்செயல்களில்,
இறங்குவதைக் காண மனம் வருந்துகிறது.
நேற்றைய 'கிறிஸ்மஸ்' செய்தியில் கூடப் போப் ஆண்டவர்,
'எங்களைவிட மோசமானவர்கள் மீது கூட,
கடவுள் தொடர்ந்து அன்பு செலுத்துகிறார்' என்று பேசியிருக்கிறார்.
அவர் கூற்று உண்மையாயின் உயர்ந்தவர்களான இந்துக்களின் மீது,
அன்பு செலுத்த கிறிஸ்தவர்களுக்கு என்ன தடை இருக்;கிறது?
எல்லா மதத்தலைவர்களும் உலகுக்கு உயர்ந்தவைகளைத்தான் உபதேசிக்கிறார்கள்.
பின்பற்றுவோர்தான் தம் நடவடிக்கைகளால் அவ்வுயர்வுகளைச் சிதைக்க முற்படுகிறார்கள்.
அத்தகையோரால்த்தான் உயர்ந்தவர்களால் நிறுவப்பட்ட மதக்கொள்கைகள் மாசுபடுகின்றன.
இம்மாறுபட்ட நிலையைச் சாதாரண மக்கள் உருவாக்கலாம்.
மதத்தலைவர்களே உருவாக்கலாமா?
இதுதான் எனது கேள்வி.
நம்நாட்டிலும் தம்மதத்தின் பெருமையை விளங்காமலே,
கிறிஸ்தவர்களின் செயற்பாடு தொடர்கிறது.
'உலகில் ஒரே ஒரு உண்மைக் கிறிஸ்தவன் தான் இருந்தான்,
அவனையும் அநியாயமாய்ச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்' என்று,
பெர்னாட்ஷோ சொன்னது இதனால்த்தானோ என எண்ணத் தோன்றுகிறது.
எந்த மதத்தையும் இழிவு செய்வது என் நோக்கமன்று.
மத சமரசம் என்ற பெயரில் எனது மதம் இழிவு செய்யப்படுவதையும்,
என்னால் பார்த்திருக்க முடியாது.
அதற்காக மற்றை மதங்களை நான் இழிவு செய்யப் போவதுமில்லை.
அவரவர் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் செயல்களே அடிப்படையாம்.
இறுதியாக நான் மதிக்கும் இயேசுபிரானின் திருவடிகளில் ஒரு பிரார்த்தனை.
'இயேசுபிரானே! உம் உயர்ந்த நோக்கத்தையும்,
உலக உயிர்கள்மேல் நீர் செய்த கருணையையும் விளங்காமல்,
உமது மக்களே உம்மை இழிவு செய்ய முற்படுகிறார்கள்,
அப்பாவிகளை மன்னிப்பீராக! ஆமென்'.

⚓⚓⚓⚓
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.