வீறுடனே எழுந்து புது விதிகள் செய்வோம்!
கவிதை முற்றம் 13 Apr 2016
உ
ஒப்பற்ற நலம் திகழ உயர்ந்து மக்கள்
நிலமதனில் பகையறுத்து நேசத்தாலே
நிமிர்ந்துறவு பாராட்டி நெகிழ்ந்த நெஞ்சால்
பழையவைகள் மறந்திங்கு பண்பதாலே
பாசத்தால் ஒன்றுபட பகைமை சாக
திலகமென இலங்கையதை உலகுக்காக்கி
தேறிடுவோம் துர்முகியாம் வருடந்தன்னில்
சிங்களவர் தமிழரெனும் பேதமின்றி
சேர்ந்துறவு பாராட்டி சிறந்து நிற்போம்.
பங்கமிலா மனத்தாலே பகைமை நீங்க
பட்சமுடன் இனங்கடந்து பாசம் செய்வோம்.
தங்கமெனத் திகழ்ந்திடவே இலங்கைத் தீவை
தரணியிலே உயர்த்திடுவோம் தனித்த எங்கள்
மங்களமாம் தாய்ப்பூமி தன்னை இங்கு
மனத்தாலே ஒன்றாக்கி மகிமை செய்வோம்.
மேடிருந்தால் பள்ளமதும் இருக்குமன்றோ
மேதினியில் பகலிருந்தால் இருளும் உண்டாம்.
காடிருந்தால் சமதரையும் அமையுமன்றே
களிப்போடு துன்பமதும் இயற்கையாமே
கேடுதரும் பகையதனால் கெட்டோம் நேற்று
கேண்மையினை இனி வளர்த்து மேன்மை கொள்வோம்
வாடுகிற மக்களெலாம் ஒன்றாய்ச் சேர்வோம்
வளம் பெருக்கி இனி உறவாய் வாழ்வம் இங்கே.
மொழியாலும் மதத்தாலும் மோதி நிற்கும்
மூடத்தை இனி ஒழிப்போம் அறிவு என்னும்
விழிதிறந்து மற்றவர்கள் உரிமைபோற்றி
வேற்றுமைகள் ஒழித்திடுவோம் விலங்காம் தன்மை
அழிந்தொழிய அனைவருமே உறவாய்க் கூடி
அற்புதமாம் மானுடத்தை ஆக்கி நிற்போம்.
தெளிவுடனே தாய் மண்ணைப் பெருமை செய்வோம்.
சேர்ந்தே நாம் உயர்ந்திடுவோம் திகழும் ஆண்டில்.
இந்துமகா சமுத்திரத்தின் முத்தாமென்று
இருந்த பழம்பெருமைதனை இயற்றிக்காட்டி
வந்த பகை மனத்திருந்து வேரோடெற்றி
வளமான அன்பு விதை விதைத்து நிற்போம்.
சொந்தமென அனைவருமே ஒன்றாய் வாழ்ந்தால்
சொர்க்கமென இத்தேசம் மிளிர்ந்திடாதோ?
நம் தமிழர் அதற்கான பாதை செய்து
நயத்தோடு மாற்றவரை அழைத்துச் செல்வோம்.
அரசியலார் செய்த பெரும் தவறதாலே
அண்ணனோடு தம்பியென வாழ்ந்த மக்கள்
முரசியம்பிப் போர் செய்து முடிந்து போனோம்.
மூண்ட பெரும் பகையதனால் முடிவேயின்றி
சிரசு முதல் அடிவரையும் பகையைச் சேர்த்து
தேசத்தைச் சிதைத்திட்டோம் சேர்ந்தே நின்று
விரசு புகழ் அத்தனையும் மீட்டே மீண்டும்
வீறுடனே எழுந்து புது விதிகள் செய்வோம்.
*****