வேலன் என்றொரு வேழம்!: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-
 

(சென்ற வாரம்)
நான் யாழ். இந்துவில் ஏஃஎல் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்திலும், அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.

    ❢  

உளம் நிறைந்த என் ஆசிரியர் வேலன்,
அப்போது, யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகிலிருந்த,
ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்தார்.
அவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கற்பித்த காலமது.
எங்கள் யாழ். இந்துக் கல்லூரி அதிபரிடம் அனுமதி பெற்று,
விடுதி மாணவர்களுக்கான உணவுச் சாலையில்,
மத்தியான நேரத்தில் தானும் வந்து உணவு உண்பார்.
அப்போது, மாணவர் விடுதியின்; பொறுப்பாசிரியராக,
எங்களது சிவராமலிங்கம் மாஸ்ரர்தான் இருந்தார்.
வித்துவான் ஆறுமுகம் அவர்களும்,
யாழ். இந்துக் கல்லூரிக்கு அப்போதுதான் மாற்றலாகி வந்திருந்தார்.
பழைய நண்பர்களான இம்மூவரும் மதிய உணவு முடிந்ததும்,
சிவராமலிங்கம் மாஸ்ரரது அலுவலக வாசலில் போடப்பட்டிருக்கும்,
நீண்ட இருக்கையில் உட்கார்ந்து, சுவாரஸ்சியமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
சூழ இருந்து நாம் கேட்டுக்கொண்டிருப்போம்.

    ❢  
 


மதிய உணவுக்கு வேலன் வரும் தோற்றமே அலாதியாயிருக்கும்.
'டவுசருடன்' நீளக்கை சேட் போட்டு, 'டிப்டொப்பாக' வரும் அவர்
அந்த உடைக்குப் பொருத்தமில்லாமல்,
சால்வையால் தலையில் தலைப்பாகை கட்டி இருப்பார்.
'என்ன சேர் இது கோலமென்றால்?
வெயிலடிக்குது அதுதான் தலைப்பாகை கட்டினான்' என்று சாதாரணமாய்ச் சொல்வார்.
அதுதான் வேலனின் இயல்பு.
முரண்பட்ட அவரின் உடை அமைப்பு பலரையும் முகம் சுழிக்கவைக்கும்.
அதுமட்டுமல்லாமல்,
இரண்டு கால்களிலும் இரண்டு நிறங்களில் வௌ;வேறு செருப்புகள் போட்டிருப்பார்.
மற்றவர்கள் அவரை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.
என்ன இது கோலம்? என யாரும் கேட்டால்,
'கலியாணவீடொன்றில் ஒரு செருப்புத் துளைஞ்சு போச்சு,
அதுதான் வீட்டில் கிடந்த வேறொரு செருப்பைச் சேர்த்துப் போட்டனான்.' என்பார்
இப்படியான கோலங்கள் பற்றி அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை.
சித்தன் சிவன் போக்கு சிவன் போக்கு எனத் திரிவார்.

    ❢  

அந்த நாட்களில், அவர் படிப்பித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியில்,
அவருக்கும் வேறொரு ஆசிரியருக்கும் இடையில் ஒரு பிரச்சினை நடந்தது.
அங்கு, சமயத்திற்குப் பொறுப்பாக இருந்த, பிற்போக்குத் தனமான அந்த ஆசிரியர்,
மாணவர்களோடு ஏதோ வகையில் முரண்பட,
மாணவர்கள் அவரைப் பழிவாங்கும் நோக்கில்,
சரஸ்வதி பூசைக்குக் 'கொத்துரொட்டி' வாங்கிப் படைத்து விட்டார்கள்.
அந்த ஆசிரியருக்குக் கடுங்கோபம்.
அப்போது, எங்கள் யாழ். இந்துக் கல்லூரியில்,
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியரை வைத்து,
கல்வித் திணைக்களம் ஒரு சமயக் கருத்தரங்கை நிகழ்த்தியது.
அந்தக் கருத்தரங்கிற்கு, மானிப்பாய் இந்துக் கல்லூரியின் சார்பில் வருகை தந்திருந்த,
பிரச்சினைக்குரிய அந்த ஆசிரியர்,
சபையோர் குறிப்புரை சொல்லும் நேரத்தில் எழுந்து,
தங்கள் கல்லூரியில் மாணவர்கள் 'கொத்துரொட்டி' படைத்த கதையை,
பலருமறிய எடுத்துச் சொல்லி,
மாணவர்களை இழிவுபடுத்தி தம் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்.

    ❢  

அந்தக் கருத்தரங்கிற்கு வேலனை வேண்டுமென்றே கல்லூரி அனுப்பவில்லை.
அதனால் தனது சொந்த லீவில் கருத்தரங்கில் கலந்துகொண்டார் வேலன்.
அந்த ஆசிரியர் கல்லூரியையும் மாணவர்களையும் பொதுச்சபையில் இழிவுபடுத்திப் பேசியது,
வேலனுக்குப் பிடிக்கவில்லை.
அடுத்தநாள் காலை, கல்லூரிக்குச் சென்றவேலன்,
'ஸ்டாப் ரூமில்', அந்த ஆசிரியரைக் கண்டதும்,
'குமாரசாமி! நேற்று நல்லாப் பேசினாய்' என்று கைகொடுத்திருக்கிறார்.
அந்த ஆசிரியரும் அது உண்மை என்று நம்பிக் கையைக் கொடுக்க,
அவர் கையைப் பிடித்து நசி நசியென்று நசித்திருக்கிறார் வேலன்.
அந்த ஆசிரியர் போட்ட கூச்சலைக் கேட்டு,
மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்து அவரை விடுவித்திருக்கிறார்கள்.

    ❢  

இந்தப் பிரச்சினை 'டிப்பாட்மென்ற்' வரை சென்று விசாரணை நடந்தது.
அது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள்,
மதிய உணவில் எங்கள் ஆசிரியர்கள் சந்திக்கும் இடத்தில் வைத்து,
வேலனிடம் வித்துவான் ஆறுமுகம்,
'என்ன வேலன்? நீ குமாரசாமியை அடிச்சுப் போட்டியாம்' என்று,
கவலையோடு கேட்டார்.
அதற்கு வேலன்,
'அண்ண, நான் மூட்டைப் பூச்சியை அடிக்கிறதில்ல, நசிக்கிறனான்.
அதுதான், குமாரசாமின்ர கையைப்பிடிச்சு நசிச்சனான்.
அவங்கள் அதைத்தான் அடிச்சுப்போட்டதாக் கதைகட்டியிருக்கிறாங்கள்'
என்று வெகு 'கூலாகச்' சொன்னார்.
அது கேட்டு, சிவராமலிங்கம் மாஸ்ரர்,
குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சிரிப்பு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

    ❢  

வேலன் பற்றிய மற்றொரு சம்பவத்தையும்,
வித்துவான் ஆறுமுகம் அவர்கள் உருக்கமாய்ச் சொல்வார்.
ஒருமுறை, கிளிநொச்சியில் நடந்த திருக்குறள் மாநாட்டுக்கு,
இவ்விருவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் அங்கு போனபோது மாலை நேரமாகிவிட்டிருக்கிறது.
அங்கு, இவர்களுக்குப் பழக்கமான ஒருவர்,
அநாதை இல்லமொன்றினை நடாத்தி வந்திருக்கிறார்.
விழாவிற்கு வந்த இவர்களை வலிந்து அழைத்து,
தனது இல்லத்தைப் பார்க்கக் கூட்டிச் சென்றிருக்கிறார் அந்த நபர்.
இவர்கள் போனபொழுது, அங்கு, பல பிள்ளைகள் ஒரு சட்டிக்குள் கைவைத்து,
சண்டை பிடித்து உணவு உண்ட காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.
அதைக் கண்டதும் வேலனுக்கு என்னவோ போலாகிவிட்டிருக்கிறது.

    ❢  

இரவு, திருக்குறள் மாநாட்டில் வேலனுக்குச் சொற்பொழிவு.
தனது சொற்பொழிவில், மாலை நிகழ்ச்சி பற்றிச் சொல்லத் தொடங்கிய வேலன்,
மேடையிலேயே விம்மி விம்மி அழுதிருக்கிறார்.
பின்னர், 'துறவிக்குத்தான், கொள்ளாமையை வள்ளுவர் வகுத்தார்.
இல்லறத்தாருக்கு அது தேவையில்லை.
சைவத்தின் பெயரால் இல்லம் நடத்துவதாய்ச் சொல்லி,
இந்தப் பிள்ளைகளைப் பட்டினி போடாமல்,
நல்ல மாமிசம் வாங்கிக் கொடுத்து,
அந்தப் பிள்ளைகளுக்கு வயிறார உணவிடுங்கள்' என்று,
கடுமையாய்ப் பேச,
அன்று அங்கு பெரும் குழப்பம் நிகழ்ந்ததாம்.

    ❢  

வேலனது பேச்சுத் திறமை அலாதியானது.
படித்ததைத் துப்பாமல், சிந்தனைகளைப் பேச்சாக்குவார்.
சமூக உணர்வு கலந்த அவரது இலக்கியப் பேச்சுக்கள் அற்புதமானவை.
அந்தக் காலத்து அரசியல் மேடைகளிலும் அவர் கலக்கியதாய்ச் சொல்வார்கள்.
'அரசியல் பேச்சில், இலக்கியத் தரத்தோடு பேசக்கூடியவர் வேலன் ஒருவர்தான்' என்று,
அவரைப் பிடிக்காதவர்களும் மனந்திறந்து பாராட்டுவார்கள்.
தமிழரசுக் கட்சியில் இருந்த அவர் பின்னாளில், அவர்களை வெறுத்து,
முன்னாள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவோடு நட்பாகியிருந்தார்.
துரையப்பாவின் மேடைகளில் இவர் பேசிய பேச்சுக்கள்,
தனித்து நின்ற துரையப்பாவைப் பலப்படுத்தின என்பார்கள்.
இவரிடமிருந்த ஒரே குறை, போகுமிடமெல்லாம் பகை தேடிக்கொள்வதே.
யதார்த்த முரணான இவரது சிந்தனைகளை,
மற்றவர்கள் ஏற்க மறுக்க, போகுமிடமெல்லாம் பகை வந்துவிடும்.

    ❢  

இளமையில் வறுமையில் வாழ்ந்ததால், அவரது செயற்பாடுகளில்,
சிலவேளைகளில் சுயநலம் பதிவாகியிருக்கும்.
இந்தக் குறைகள் இல்லாமலிருந்திருந்தால்,
ஈழத் தமிழுலகில் வேலன் பெரிய புரட்சியே செய்திருப்பார் என்பது திண்ணம்!

    ❢  

ஒருமுறை, தமிழகத்திலிருந்து எனது குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் வந்திருந்தபோது,
நோய்வாய்ப்பட்டிருந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களைப் பார்க்கவென,
குருநாதரை அழைத்துக்கொண்டு,
வித்துவான் ஆறுமுகமும் வித்துவான் வேலனும் குமாரதாசனும் நானும் சென்றிருந்தோம்.
அந்தச் சந்திப்புப் பற்றி, வித்துவான் ஆறுமுகம் அவர்கள்பற்றிய கட்டுரையில்,
விரிவாய் எழுதியிருக்கிறேன்.
இந்தியாவில் படித்த எங்கள் ஆசிரியர்களைப் பண்டிதமணி அங்கீகரிக்க மாட்டாராம்.
அதுபோலவே, பண்டிதமணியையும்,
எங்கள் ஆசிரியர்கள் முழுமையாய் அங்கீகரிக்க மாட்டார்கள்.
எங்கள் ஆசிரியர்கள் ஒன்றுசேருகிற பொழுது,
சில வேளைகளில், தங்களுக்குள் பண்டிதமணியின் குறைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
நாங்கள் அருகிலிருந்து கேட்போம்.
அப்போதெல்லாம், வேலன் மறக்காமல் எங்களிடம்,
'நாங்கள் பேசுவதை வைத்துப் பண்டிதமணியை அளந்து விடாதீர்கள்.
அவர் பெரிய அறிவாளி, பேராற்றலாளர்.
நாங்கள் பேசுவது அவரது ஒரு பக்கத்தைத்தான்.
அவரை நீங்கள் சென்று தரிசிக்க வேண்டும்' என்பார்.

    ❢  

அன்று நாங்கள் போனபோது பண்டிதமணி நோயால் சுருண்டு கிடந்தார்.
அவர் கால் நகங்களெல்லாம் விழுந்து, அதில் எறும்புகள் மொய்த்திருந்தன.
வேலன் அதுகண்டு பதறிப்போனார்.
பண்டிதமணியின் சீடர்களாகச் சொல்லிக் கொண்டவர்கள்கூட,
அப்படிப் பதறியிருப்பார்களா? என்று சொல்ல முடியாது.
அப்போது, வேலன் பருத்தித்துறையில் இருந்தார்.
மறுநாள் வேலனிடமிருந்து எனக்கும் குமாரதாசனுக்கும் ஒரு 'போஸ்ற்காட்' வந்தது.
அந்தப் 'போஸ்ற்காட்டில்',
'கடவுளுக்குச் செய்வது மட்டும்தான் சரியைத்தொண்டு என்று நினையாதீர்கள்.
பண்டிதமணி போன்ற அறிஞர்களுக்குச் செய்வதும் சரியைத் தொண்டுதான்.
நான் தூரத்தில் இருக்கிறேன்.
நீங்கள் அருகில் இருக்கிறீர்கள்.
எனவே, அடிக்கடி சென்று பண்டிதமணிக்கு சரியைத் தொண்டு செய்யுங்கள்.
அதுவும் கடவுளுக்குச் செய்வது போலத்தான்' என்று,
உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதுதான், வேலனின் அன்புள்ளத்தின் அடையாளம்.
'ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு' எனும்
வள்ளுவரை வழிமொழிந்த அவர் செயல் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

    ❢  

எங்கள் ஆசிரியர்களோடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த,
வித்துவான் சிவபாலசுந்தரனார் என்பவர் தொல்புரத்தில் வசித்து வந்தார்.
எங்கள் ஆசிரியர்களின் நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.
அவரும் ஒரு தமிழ்ப்பித்தர். நல்ல படிப்பாளி. மென்மையானவர். ஆனால், ஆளுமையற்றவர்.
அந்தக் காலத்தில், தங்களூரில் வருடந்தோறும் ஒரு தமிழ் விழாவை அவர் எடுப்பாராம்.
ஒரு முறை எங்கள் ஆசிரியர்களையெல்லாம் அந்தத் தமிழ் விழாவிற்கு அழைத்துப் போயிருக்கிறார்.
விழா முடிய பத்தரை மணியாகி விட்டிருக்கிறது.
கடைசி பஸ்ஸும் போய் விட்ட படியால்,
எல்லோரையும் தங்கள் வீட்டில் தங்குவதற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த வித்துவான்.
இவர்களை இல்லத்தில் தங்கவைக்க வேண்டி வரும் என்று எதிர்பார்க்காதபடியால்,
அவர் இவர்களுக்கான உணவு ஒழுங்கு எதனையும் செய்திருக்கவில்லை.
வேலன் பசி பொறுக்க மாட்டார்.
எல்லோரையும் நடத்தித் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த வித்துவான்.
இரவானதால் சாப்பாட்டுக் கடைகளெல்லாம் மூடப்பட்டிருந்திருக்கிறது.
ஒரேயொரு கடை மட்டும் திறந்திருக்க அதிலிருந்த கொஞ்ச இடியப்பத்தை வாங்கி,
எல்லாருக்குமாய்ப் பகிர்ந்திருக்கிறார் அந்த வித்துவான்.
ஒருவருக்கும் பசி அடங்கிய பாடாயில்லை.
ஆனால், அந்த வித்துவானின் இக்கட்டான நிலையை உணர்;ந்து,
மற்றவர்கள் சமாளித்திருக்கிறார்கள்.
வேலனுக்கு மட்டும் கடுங்கோபம்.
எல்லாரும் சூழ்ந்திருக்க, உரிமையாய் அந்த வித்துவானைக் கூப்பிட்டிருக்கிறார்.
'சிவபாதம், தமிழையெல்லாம் பிறகு வளர்க்கலாம்.
முதலில, வீட்டில கொஞ்சம் கோழி வள!
அப்பதான், தமிழ் தப்புதோ இல்லையோ நாங்கள் தப்பலாம்' என்று வேலன் சொல்ல,
அந்த மென்மையான வித்துவான் அழுதே விட்டாராம்.
சிவராமலிங்கம் மாஸ்ரரும் வித்துவான் ஆறுமுகமும் இதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

    ❢  ❢     ❢  
                                                                                                     (வேலன் அடுத்தவாரமும் வருவார்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.