கவிதையா இது? -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

 


ஈழத்துக் கவிஞர் சோ. பத்மநாதன் (சோ. ப) அவர்களின் 'கவிதைகள்' : விருந்தயர்தல் 1 & 2

ன்பின் கவிஞர் சோ.ப. அவர்கட்கு,
தங்களின் ஆசியும் நலனும் வேண்டி நிற்கின்றேன்.
திடீரென நான் எழுதும் இக்கடிதம் தங்களுக்கு ஆச்சரியம் தரலாம்.
இக்கடிதம் எழுதும் மூலநோக்கத்தைச் சொல்வதன் முன்,
சில விடயங்கள் பற்றி உங்களோடு மனம் கலக்க வேண்டியுள்ளது.

✠✠✠✠✠✠
 


உங்களோடு பல விடயங்களில் பகிரங்கமாய் நான் முரண்பட்டிருக்கிறேன்.
அம் முரண்பாடுகள் பற்றி, 'உன்னைச் சரணடைந்தேன்' என்னும் எனது நூலில்,
விரிவாய் எழுதியும் இருக்கிறேன்.
ஆனால், அவையெல்லாம் நம் இருவர்க்குமிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள்.
அவ்வளவே!
தங்களின் அறிவுத் தகைமையில் எனக்கு என்றும் எள்ளளவும் ஐயம் ஏற்பட்டதில்லை.
மேற்சொன்ன முரண்பாடுகளுக்குப் பின்னரும்,
அத் தகைமையை மனங்கொண்டுதான்,
எமது கம்பன்விழாவில் தங்களைக் கௌரவித்து நாம் மகிழ்ந்தோம்.
தாங்களும் அதை ஏற்று எங்களைக் கௌரவித்தீர்கள்.

✠✠✠✠✠✠

இவற்றை இப்போது நான் உரைப்பது ஏன்? என நினைப்பீர்கள்.
அதைச் சொல்வதற்கு முன் வேறு சிலவும் சொல்லவேண்டியிருக்கிறது.

✠✠✠✠✠✠

இன்றைய யாழ்ப்பாணத்தில்.
தமிழ் அறிவின் நிலை மிகமிகக் கவலை தரும்படியாய்,
இறங்குவரிசையில் வேகமாய் முன்னேறிக்கொண்டிருக்கிறது.
நீங்களும் நானும் சில தசாப்தங்களுக்கு முன்பு,
தரிசித்த தமிழ் அறிஞர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

✠✠✠✠✠✠

தமிழ் உலகத்தில் யாழ்ப்பாணத்தைத் தலைநிமிர்ந்து நிற்கும்படி செய்த,
பண்டிதர்களான, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர்,  க.சச்சிதானந்தன், ஏழாலை மு.கந்தையா, துன்னாலை க.கிருஷ்ணபிள்ளை,  அளவெட்டி க.நாகலிங்கம், மட்டுவில் ச.பொன்னுத்துரை, கரவெட்டி க.வீரகத்தி என, புலமைத் திறத்தில் ஆழமும் ஆளுமையும் காட்டி நின்ற பண்டிதர்கள் கூட்டம்; ஒருபுறம்.

அக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று, தமிழ் கற்று மீண்டு வந்து நம் ஈழத் தமிழுலகில் தம் பெயர் பதித்த,  வித்துவான் க.ந.வேலன், க.சிவராமலிங்கம், வித்துவான் சி. ஆறுமுகம், தொல்புரம் நா.சிவபாதசுந்தரனார், உங்கள் குருநாதர் வித்துவான் கார்த்திகேசு என, தமிழையே தம் இறுதிமூச்சுவரை போற்றி நின்ற, அறிஞர் கூட்டம் ஒருபுறம்.

நல்லை ஆதீன முதல்வர், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மாஅப்பாக்குட்டி, ஆத்மஜோதி நா.முத்தையா, அளவெட்டி அருட்கவி விநாசித்தம்பி போன்ற, வாழ்வும் வாக்கும் சமயமேயான சமயச்சொற்பொழிவாளர்கள் ஒருபுறம்,
மஹாகவி, வி.கந்தவனம், அரியாலை வே.ஐயாத்துரை, காரை செ.சுந்தரம்பிள்ளை, ச.வே பஞ்சாட்சரம், இ.முருகையன், கல்வயல் வே.குமாரசாமி, புதுவை இரத்தினதுரை, பா.சத்தியசீலன் போன்ற, வீரியம் மிக்க கவிஞர்கள் வரிசை ஒருபுறம்.
முத்தமிழ்த் துறையிலும் வீரியம் பெற்று தன் பெயரால் யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தி விதிவிலக்காய் நின்ற இணுவில் வீரமணி ஐயர் போன்ற ஒருசிலர் ஒருபுறம்.
அ.முத்துலிங்கம், எஸ்.பொ, டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கம், தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சட்டநாதன், நந்தி, ஐ.சாந்தன் போன்ற ஈழத்தை அடையாளப்படுத்திய நவீன எழுத்தாளர்கள் ஒருபுறம்.
பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வுத்துறையில் தமது தனித்துவத்தை உலக அளவில் நிலைநாட்டிய பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், வி.செல்வநாயகம்,  க.கைலாசபதி, கா..சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ் போன்ற வியத்தகு ஆய்வாளர்கள் கூட்டம் ஒருபுறமுமாக,

தமிழறிவில் யாழ்ப்பாணம் தலைநிமிர்ந்து நின்ற காலமது.

✠✠✠✠✠✠

அன்றைய அந்நிலையோடு,
இன்றைய யாழ்ப்பாணத் தமிழறிவின் கதியை ஒப்பிட்டு நினைத்துப் பார்க்க நெஞ்சு பதறுகிறது.
'சேடம்'இழுத்து தன் இறுதி மூச்சை விடத்தயாராக இருக்கும், 'பண்டிதத்தை' பாதுகாப்பதாய்ச் சொல்லி பாசாங்குபண்ணும் பலமற்ற ஒருசிலரும்,
வாழ்வும் வாக்கும் வேறான, ஆழமற்ற, பௌராணிகம் கூட சரியாகக் கைவராத, வீரியமற்ற, வால்பிடித்துத் தம்மை வழிமொழியச் செய்யும் சமயச் சொற்பொழிவாளர்கள் ஒருசிலரும்,
ஓசை உடைவைக்கூட அறியாது ஆசையால் கவி செய்யும் அசடர்களாய் நின்று அது கைவரும், இது கைவரும் எனத் தம்மைத்தாம் பாராட்டும் எதுகையும் வராத இழி கவிஞர் கூட்டம் ஒருபுறமும்,
வசனங்களை மடக்கிப்போட்டும், ஆ..., ஓ....., இ... என வார்த்தைகளுக்கு 'இனிஷல்' இட்டும், உவமை உயர்ந்திருக்கவேண்டும் எனும் உண்மை கூடத் தெரியாது வடிகட்டி எடுத்த அழுக்குகளை உவமையாக்கி உவப்படைந்து யதார்த்தம் பேசியதாய் மகிழும், புதுகவிஞர் என தம்மைத்தாம் வியக்கும் கூட்டம் ஒருபுறமும்,
போட்டிக்காகவும் பரிசுக்காகவும் விருதுகளுக்காகவும் அவசர ஆக்கங்கள் செய்து, 'இச்சகம்' பேசி எழுச்சி கொள்ள நினையும், இன்றுவரை தமிழுலகில் தம்பெயர் பதித்து நிமிரத் தெரியாத பேதைமை எழுத்தாளர்கள் ஒருபுறமும்,
பெரும் பேராசிரியர்களின் மறைவின் பின், தம்மைத் தாமே பேராசிரியர்களாய் வியந்து, அகப்பட்ட மாணவர்களை ஆட்டுக்கூட்டமாய் மேய்த்து, அடிமைப்படுத்தி, பட்டங்களாலும் பதவிகளாலும் மட்டும், வெற்றுப்பெருமை பேசி, ஆய்வுத்துறையின் அகலம் சுருக்கி, தம் வகுப்பறையைக் கூடத் தாண்டாத  உயர் (?) பிரசித்தம் பெற்ற பேதமையுற்ற பேர்-ஆ-சிரியர்கள் ஒருபுறமுமாகச் சேர்ந்து,
இன்று நடக்கும் கூத்தை என்சொல்ல?

✠✠✠✠✠✠

அன்றைய உயர் அறிஞர்களின் ஆற்றல்களைக் காணவும்,
அவர்களோடு பழகவும் கிடைக்கப்பெற்ற வரத்தால்,
இன்று தமிழ்த்தாயின் தொண்டைக்குழியை நெரித்து,
உயிர்போக்க முயலும் அயோக்கியர்களைக் காண நெஞ்சு கொதித்தெழுகிறது.
என் செய்ய!
கைபிடித்தும் கால் தடவியும் உயர் பதவிகளைக் கைப்பற்றி,
தம்மைத்தாம் அறிஞர்களாய் அறிவித்து நிற்கும்,
இவர்தம்மின் தகுதியீனத்தை நான் உரைத்தால்,
இன்றைய எமது அறிவுலகம் ஏற்கவா போகிறது?
தாழ்வுச்சிக்கல், பொறாமை, எரிச்சல் என்று,
என்னென்னவோ சொல்லி தம் அடிமைகளைக் கொண்டு,
என்னை இழிவு செய்வார்கள்.
அது தெரிந்தும் தான் இவற்றையெல்லாம் எழுதுகிறேன்.

✠✠✠✠✠✠

என்னை இழிவுபடுத்தி இனி என்னாகப்போகிறது?
புகழ், இழிவு எனும் இரண்டையும் கடக்கும் மனநிலைக்கு,
பெரும்பாலும் இறைவன் என்னை ஆளாக்கிவிட்டான்.
ஆகவே அவர்தம் தூற்றுதல்கள் பற்றி எனக்கு எவ்வித அச்சமுமில்லை.
அக்கறையும் இல்லை.
பாஞ்சாலி துகிலுரியப்பட, மௌனித்திருந்த கற்றவர் சபையில்,
வீறிட்டெழுந்த விகர்ணன் போல்தான் நானும் கொதித்தெழுகிறேன்.
வெற்றி யாருக்கோ? அதை விதி முடிவு செய்யட்டும்.
உண்மையை உரைக்க ஒருவனாவது இருந்தானே? என்று,
நாளைய உலகம் சொல்ல இக்கடிதம் சான்றாகட்டும்.
அவ்வளவே என் விருப்பு!
இஃது கானகப்பொந்தில் நான் வைக்கும் சிறு நெருப்பு!

✠✠✠✠✠✠

மேற் சொன்ன துறைகளில்  ஆற்றலுடன் இன்று ஓரிருவர் கூடவா இல்லை?
நீங்கள் கேட்பீர்கள்.
இருக்கிறார்கள்.- இல்லையென்று சொல்லவில்லை.
ஆனால் விதிவிலக்குகளை நான் விதியாக்க முடியாது.
நான் பேசுவது விதிகளைப் பற்றித்தான்.
விதிவிலக்குகள் பொறுத்தருளட்டும்.

✠✠✠✠✠✠

இந்த நீண்ட வசைபாடுதல்கள் எதற்காக?
கேட்க நினைப்பீர்கள்.-சொல்கிறேன்.
அதற்கு முன்,
இன்றைய யாழ்ப்பாண நிலையில்,
வலிமைபெற்ற ஆற்றல் உள்ள நிதாமனமான ஓர் அறிஞனைக் காட்டுக! என்றால்,
என் விரலின் முன் நிற்கும் முதல் வீரனாக நிச்சயமாக நீங்கள்தான் இருப்பீர்கள்.
அண்மையில் எங்கள் கழகத்தைச் சார்ந்த,
வாசுதேவா பேராதனையில் தன்னோடு கற்கும் எம்.ஏ வகுப்பு மாணவர்களை,
யாழுக்கு அழைத்து வந்து திரும்பினான்.
தெற்கு மாணவர்களை எங்கெல்லாம் அழைத்துச் சென்றாய்? -நான்கேட்டேன்.
அவன் கோயில்கள், வரலாற்று இடங்கள் முதலியவற்றை வரிசைப்படுத்தினான்.
அப்போது அவனிடம் மாணவர்களை அழைத்துச் சென்று,
வடக்கை அடையாளப்படுத்தும் அறிஞர்கள் யாரையும் காட்டவில்லையா?
எனக் கேட்டேன்.
யாரைக் காட்டுவது? என அவனிடமிருந்து கேள்வி மீண்டு வந்தது.
உண்மையில் நான் சற்றுச் சோர்ந்துதான் போனேன்.
ஆனாலும் அப்போது என் புத்தியில் தோன்றிய,
ஒரே பெயரான உங்கள் பெயரைச் சொல்லி தப்பிக் கொண்டேன்.

✠✠✠✠✠✠

மீண்டும் இம் முகப்புகழ்ச்சி எதற்காக?-கேட்க நினைப்பீர்கள்.
நான் சொன்னது புகழ்ச்சி அல்ல.-உண்மை.
ஆழமான இருமொழிப்புலமை,
தெளிவான இலக்கண, இலக்கியப் பயிற்சி,
மதிக்கத்தக்க கவியாற்றல்,
பழுதற்ற மொழிபெயர்ப்பு வல்லமை,
ஓரளவான இசை, நாட்டியப்புலமை என,
பல்துறைகளில் ஆற்றல் பெற்றும்,
அடக்கத்தோடு, யாழ் மண்ணின் பெருமை சொல்லும்,
அறிஞராக இன்று நீங்கள் ஒருவர்தான் திகழ்கிறீர்கள் என்பதில்,
எனக்கு எந்த ஐயமும் இல்லை.
சிறு நரிகளெல்லாம் சிங்கமாய்த் தம்மைக் காட்டிக்கொள்ளும் நம் மண்ணில்,
சிங்கமாய் இருந்தும் சிறந்த பணிவோடு வாழும் நீங்கள்,
நம் மண்ணை அடையாளப்படுத்த அறிவுலகில் தனி ஒருவராய் எஞ்சி இருக்கிறீர்கள்.

✠✠✠✠✠✠

மீண்டும் மீண்டும் இத்தனை பாராட்டுக்களும் எதற்காக? என,
உங்கள் மனதில் கேள்வி பிறக்கும்.
உங்கள் கேள்வி நியாயமானதுதான்.
உங்களைப் பாராட்ட நினைந்தோ, மற்றவர்களைத் திட்ட நினைந்தோ,
இக்கடிதத்தை நான் எழுதத் தொடங்கவில்லை.
எழுதத் தொடங்கிய நோக்கம் வேறு.
அதைச் சொல்லிக் கடிதத்தை முடிக்கிறேன்.

✠✠✠✠✠✠

அண்மையில் ஜூலை மாத 'ஞானம்' சஞ்சிகை என் கைக்குக் கிடைத்தது.
அதில் கவிதைகள் எனும் தலைப்பில்,
உங்கள் கவிதையும்  இருப்பதாய் முகப்புப் பக்கம் சொல்லிற்று.
அண்மைக்காலமாக, தேவையற்றவற்றை நான் படிப்பதில்லை.
உங்கள் பெயர் கண்டதால்,
அக்கவிதையைப் பார்ப்போம் எனப் பக்கங்களைப் புரட்டினேன்.
கடும் கோபம் கொண்டேன்.

✠✠✠✠✠✠

விருந்தயர்தல் 1,2 எனும் தலைப்புக்களில்,
நீங்கள் எழுதிய கவிதைகளைப் பார்த்தேன்.
மனம் சலித்துப்போனது.
முதலில் மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
நீங்கள் பத்தி எழுத்தாக எண்ணி எழுதிய ஆக்கத்தை,
கவிதை என்ற தலைப்பில் சஞ்சிகையாளர் வெளியிட்டு விட்டனரோ? என, ஐயுற்றேன்.
ஆனால் முகப்புப் பக்கமோ,
இல்லை அது கவிதை என்று உறுதி செய்தது.
பத்தி எழுத்தாக இருப்பதற்குக் கூடத் தானும்,
அவ் ஆக்கத்திற்குத் தகுதியில்லை என்பதே என் கருத்து.
நீங்களா இப்படி எழுதியிருக்கிறீர்கள்? என்று வியந்தேன்.

✠✠✠✠✠✠

அண்மைக் காலமாய் பொய் அறிஞர்கள் பலர்,
உங்களைச் சூழ்ந்து புகழ்வதைக் கண்டிருக்கிறேன்.
அவர்களது வீணான வெறிபிடித்த வடப் பிடிப்புத்தான்,
சுவாமி ஏற்றி வீதிவலம் வரவேண்டிய சோ.ப. என்கின்ற அற்புதத் தேரை,
வேதாளத்தை ஏற்றி வேறெங்கோ  காட்டுக்குள் இழுத்துச் செல்ல வைத்திருப்பதாய்,
எண்ண வேண்டியிருக்கிறது.

✠✠✠✠✠✠

உங்களது மொழிபெயர்ப்புக் கவிதைகளை,
தேவையில்லாமல் புழுகிப்புழுகி,
அவர்கள் உங்களை முருங்கையில் ஏற்றுவதைக் கண்டிருக்கிறேன்.
தமிழ்க்கவிதையையே சரியாக விளங்க முடியாத அவர்களுக்கு,
ஆபிரிக்கக் கவிதைகளும் ஐரோப்பியக் கவிதைகளும் விளங்குகிறதாம்.
வேடிக்கைதான்!
உங்களுக்கும் அவர்கள் புகழ்ச்சியில் ஒரு மகிழ்ச்சி.

✠✠✠✠✠✠

அதனால்த்தான் உங்களை நிலைதடுமாற வைத்து,
அப்புகழ்ச்சிகள் நமது பாமர பத்திரிகைக் கவிஞர்களைப் போல,
ஏதோ ஒன்றை எழுதி,
அதனைக் கவிதை என்ற பெயரில் வெளியிட வைத்திருக்கிறது.
என்னுடைய அபிப்பிராயப்படி,
இயல்பாற்றல் பெற்ற, எல்லாக் கவிதை வடிவும் கைவரும்,
ஓர் சிறந்த தமிழ்க்கவிஞர் நீங்கள்.
வேற்று மொழிக்காரர்கள் மொழிபெயர்த்துக் கொள்ளவேண்டிய,
உயர்ந்த கவிதைகள் உங்களது.
அவ் ஆக்கங்களை வீரியமாய்ச் செய்வதை விட்டுவிட்டு,
வேற்றுமொழிக் கவிதைகளை மொழி மாற்றுகின்றேன் என்று தொடங்கி,
அந்தப் பழக்கத்தால் மெல்ல மெல்ல நம் மரபுக்கவிதைகளின் சாயல் இழந்து,
பொய்யர்தம் சங்கமத்தால் அவர்தம் புகழ்ச்சி கண்ணை மறைக்க,
ஏதோ ஒன்றைக் கிறுக்கி அதைக் கவிதை என்று வெளியிட்டிருக்கிறீர்கள்.

✠✠✠✠✠✠
கம்பன், பாரதி போன்ற உயர் கவிஞர்களோடு,
சிறுதளவேனும் பழகியவன் என்ற உரிமையில் சொல்லுகின்றேன்.
அச்சஞ்சிகையில் நீங்கள் எழுதியிருக்கும் ஆக்கத்தில்,
கிஞ்சித்தும் கவிதையின் சாயல் கூட இல்லை என்பது உறுதி.
சொற்களில் கவித்துவம் இல்லை,
பொருளில் கவித்துவம் இல்லை
உணர்விலும் கவித்துவம் இல்லை.
இதை எழுத நீங்கள் முயன்றிருக்கிறீர்களே என,
நினைய வேதனையாய் இருக்கிறது.
சுருங்கச் சொன்னால் சந்தனக்கட்டையால் சாக்கடை கிளறிய வேலைதான் இது.

✠✠✠✠✠✠

அவ்வாக்கம் கவிதையா? இல்லையா? என்பதல்ல என் கவலை.
அதுபற்றிக் கவலைப்படவேண்டியவர் நீங்கள்.
என் கவலை வேறு.
இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஓரிரு அறிஞர்களில்.........,
ஓரிரு என்று சொல்வது கூடத் தவறு.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரே அறிஞரான நீங்களே,
கவியுலகுக்கு இத்தகைய பிழையான வழிகாட்டுதல்களைச் செய்தால்,
ஏற்கனவே, கண்டதையும் எழுதி, கவிதை எனச் சொல்லி,
பெருமை காட்டும் பேதைமையாளர்கள்,
இனி தம் பிழைகளுக்கு உங்கள் ஆக்கத்தை மேற்கோள் காட்டி,
மேலும் தவறிழைப்பார்கள்.
மொழி, பொருள், உணர்வு என மூன்றாலும் உயர்வை உரைக்கும் ,
நம் தமிழ்க்கவிதை மரபை நன்கு அறிந்த நீங்கள்,
இத்தகு வீண்முயறிசியில் ஈடுபட்டது ஏன் என்று புரியவில்லை.
விதியின் வன்மையேயாம்!

✠✠✠✠✠✠

இவ் ஆக்கம் பற்றிய என் மன உணர்வை,
இங்ஙனம் பகிரங்கமாய் உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல்,
தனித்து, இழித்து, புறம் பேசித் திரிந்திருக்க முடியும்.
தகுதியற்றவர்களுக்கானால் ஒருவேளை நான் அதைச் செய்திருப்பேன்.
எழுதியிருப்பதோ என் மனப் பதிவில் அங்கீகரிக்கப்பட்ட நீங்கள்.
அதனால்த்தான் இவ்வெளிப்பட்ட கடிதம்.
சஞ்சிகைக்கே எழுதியிருக்கலாமே? ஒருசிலர் கேட்கலாம்.
இக்கடிதத்தைப் பிரசுரிக்கும் அளவிற்கு,
'ஞானத்திற்கு' ஞானம் இருக்கும் என்று நான் கருதவில்லை.
அஃது என் முன் அனுபவப்பதிவு.
சமூக அந்தஸ்து உள்ளவர்களோடு,
அவர்கள் என்றும் முரண்பட விரும்புவதில்லை.
அதனால்த்தான் இதனை எங்களது 'உகரம்' இணைய சஞ்சிகையில் எழுதுகிறேன்.
ஒன்றை உறுதிபடச் சொல்கிறேன்.
இதற்கான எத்தகைய ஒரு பதிலை நீங்கள் தந்தாலும்,
அப் பதில் என்னை எவ்வளவு இழிவு செய்வதாய் இருந்தாலும்,
அக்கடிதம் 'உகர' இணைய சஞ்சிகையில்,
ஓர் எழுத்துத்தானும் மாற்றம் பெறாமல் வெளிவரும்.
இஃது உறுதி.
துரியோதனன் துகிலுரிந்தால் பார்த்திருக்கலாம்.
தர்மனே துகிலுரிந்தால் பார்த்திருப்பது எங்ஙனம்?
அதனால்த்தான் இவ்வாக்கம் கண்டு விதுரனாய்ப் பதறித் துடிக்கிறேன்.
இஃது என் ஆற்றலின் அடிப்படையால் விளைந்த கொதிப்பல்ல,
உங்கள் ஆற்றலின் அடிப்படை அறிந்ததால் விளைந்த கொதிப்பு.
அவ்வளவே!

✠✠✠✠✠✠

கவிதை எழுதாமல் விட்டும்,
கவிதைக்குத் தொண்டு செய்யலாம் என,
தமிழ்நாட்டில் யாரோ சொன்னதாய் ஞாபகம்.
அந்த நிலைக்கு நீங்கள் ஆளாகிவிடக்கூடாது என்பதே என் விருப்பு.

✠✠✠✠✠✠

நீங்களும் உங்களால் தமிழும் நலமுறப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி, வணக்கம்.
அன்பன்,
............................
இ. ஜெயராஜ்.
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்