"வாழ்வு மிகுத்து வரும்!" - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

"வாழ்வு மிகுத்து வரும்!" - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 

லகின் வினையகற்றி ஆள்பவர் நம் விநாயகர்.
நம் சைவத்தில் கணபதி வணக்கமே முதல் வணக்கமாம்.
எக்காரியம் செய்யப்புகுவாரும்,
விநாயகரை வணங்கியே,
தம் வினைகளை ஆரம்பிக்கவேண்டுமென்பது சைவமரபு.
முப்புரம் எரிக்க இரதமேறிய சிவனார்,
கணபதியைக் கைதொழாமற் புறப்பபட்டதால்,
அவர் இரதத்தின் அச்சு முறிந்ததாய்ப் புராணம் உரைக்கும்.
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
பின்னர் கணபதியை வழிபட்ட பின்பே,
சிவனார் முப்புரம் எரித்தனராம்.
சைவத்தின் மூல தெய்வமாகிய,
சிவனாலும் வழிபடப்படும் தகுதி,
நம் கணபதிக்குரியது.

✷ ✷
 


முப்பத்தாறு தத்துவங்களில்,
முதல் ஐந்தாய் அமைந்த,
நாதம், விந்து, ஈஸ்வரம், சதாசிவம், சுத்தவித்தை எனும்,
ஐந்து தத்துவங்களும் சிவ தத்துவங்களாம்.
இவற்றுள் நாதம் சிவத்தையும்,
விந்து சக்தியையும் குறிப்பன.
இந் நாதவிந்துவினுடைய சேர்க்கையே பிரணவமாம்.
இப் பிரணவத்தின் வடிவமே நம் கணபதி வடிவமாம்.

✷ ✷

மூல தத்துவங்கள் இரண்டினதும்,
இணைப்பால் அமைந்ததாற்தான்,
முதல் வணக்கம் கணபதிக்குரியதாயிற்று.
நாத தத்துவத்திற்குக் குறியீடு __
விந்து தத்துவத்தின் குறியீடு  0 
இவ்விரு குறியீடுகளும் சேர வருவதே,
(உ) உகரமாம்.
அதனாலேயே,
அப் பிரணவ வடிவான கணபதியைக் குறிக்க,
பிள்ளையார்சுழி எனும் பெயரில் உகரம் இடப்படுகிறது.
நம் கணபதியின் துதிக்கை இவ் உகரவடிவானது.

✷ ✷

இங்ஙனம் தத்துவ நிலையில் உயர்ந்து நின்று,
முதல் வணக்கம் பெற்றுப் போற்றப்படும் கணபதி,
எளியார்க்கு எளியராயும் நிற்கிறார்.
கணபதியை எவரும் எங்கும் எப்படியும் தொழலாம்.
கிரியைகளை வகைசெய்யும் நம் ஆகமங்களும்,
கணபதி வழிபாட்டிற்கான கட்டுப்பாடுகளை விதித்தில.
சாதாரண மரத்தின் கீழும்,
கணபதியை ஸ்தாபிக்க முடியுமாம்.
ஆச்சாரம் முதலானவை அனுஷ்டிக்கப்படாமலும்,
கணபதி வணக்கத்தை இயற்ற அனுமதியுண்டு.

✷ ✷

இவ் உலகப்பொருட்களை,
உயிரில் பொருள், உயிருள் பொருள் என,
இரு வகையாய்ப் பிரிக்கலாம்.
இவையே சடம், சித்து எனப்படுகின்றன.
உயிர்ப்பொருட்கள் ஆறு வகையாய்ப் பிரிக்கப்படுகின்றன.
அப்பிரிப்புக்கு அவற்றின் அறிவே அளவுகோலாம்.
ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை பிரிவுபட்டதால்,
உயிர்ப்பொருட்களின் வகை ஆறாயிற்று.
இவ் அறுவகை உயிர்களுள்,
ஆறறிவு பெற்ற மனிதன் முதல்நிலையையும்,
ஓரறிவு பெற்ற தாவரங்கள் கடைநிலையையும் பெறுகின்றன.
அவ் ஓரறிவு பெற்ற தாவரங்களுள்,
மிகத் தாழ்ந்தது புல்லாம்.
உயிர் இல் பொருட்களாகிய சடப்பொருட்களுள்,
மிக இழிவாய்க் கருதப்படுவது மலமேயாம்.

✷ ✷

உயிர், சடப்பொருள்களில்,
இழிநிலையுற்றவைகளான புல்லையும், மலத்தையும் சேர்த்தே,
கணபதியை ஆவாகனம் செய்யமுடியும்.
பசுவின் மலத்தையும், அறுகம்புல்லையும் ஒன்று சேர்த்து,
கணபதி என வழிபடுவது நம் வழக்கம்.
நம் கணபதியின் எளிமை நிலைக்கு,
இவ்வழிபாடு தக்க சான்றாகிறது.
இதனால்,
சமூகத்தின் மிகக் கீழ் நிலையுற்ற ஒருவரும் கூட,
நம் கணபதியை,
எளிமை பட வழிபடலாம் எனும் உண்மை அறிகிறோம்.

✷ ✷

உயர்வினும் உயர்ந்து நின்றும்,
தாழ்வினும் தாழ்ந்து நின்றும்,
அருள் செய்யும் ஐங்கரன் தன் கருணை மிகப்பெரிதாம்.
வேழ முகத்து விநாயகனை,
மனம், மொழி, மெய்களால் வணங்க,
வாழ்வு மிகுத்து வருமாம்.

✷ ✷
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.