pakiranka kaditham-kambavarithy

pakiranka kaditham-kambavarithy
மற்றவை 19 Nov 2026

19.11.2026.

உயிரனைய எனது அன்பு உறவுகளுக்கு,

வணக்கம்!

நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

திடீரென நான் எழுதும் இம் மடல் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஒரே செய்தியைப் பலருக்கும் திரும்பத் திரும்ப உரைப்பதன் சிரமத்தை தவிர்க்கவே இக் கடிதம் வரையப்படுகிறது. என்ன எழுதப் போகிறேன் என ஊகித்திருப்பீர்கள். அண்மைக்காலமாக என்னைச் சுற்றிச் சுற்றி வரும் சர்ச்சைகள் பற்றி நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. அந்தச் சர்ச்சைகளே இக் கடிதத்தின் கருப்பொருளாம்.



உங்களில் பலபேர் அவை பற்றி என்னுடன் பேச முனைகிறீர்கள். அனைவருக்கும் தனித்தனிப் பதிலுரைத்துக் களைத்துவிட்டேன். அதனால்த்தான் அனைவரது கேள்விகளுக்கும் விடையளிக்குமுகமாக இக் கடிதத்தை வரைகிறேன்.

“நான் அனுப்புவது கடிதம் அல்ல- உள்ளம், அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல- எண்ணம்”



பொதுச்சபையொன்றில் நான் சொன்ன ஒரு உண்மையை ஜீரணிக்க முடியாமல் சில பொய்யர்கள் இடும் கூக்குரல்கள், இன்று உலகெலாம் ஒலித்தபடி இருக்கின்றன. அவை பற்றி என் மனதில் துளியளவேனும் சலனமில்லை.



ஒளிக்கு ஏது இருள் பற்றிய கவலை? உண்மைக்கு ஏது பொய் பற்றிய கவலை? உலகத்தாரையும் ஏமாற்றி, தம்மையும் ஏமாற்றி வரும் ஒரு சிலர், சத்தியவான்கள் போலச் “சந்நதம்” ஆடுகிறார்கள்.



பொய் வளர்ந்தால்த்தானே பொய்யர்கள் வளர முடியும். தாம் வயிற்றுப் பிழைப்புக்காய்  வாழ்வதை மறைக்க, பொய்க் “கற்பு”க் காட்டி அவர்கள் ஆடும் நாடகத்தை, என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.  நாடகங்கள் நம்மை ஈர்ப்பது இயல்பு தானே!



நான் பேசியது இரண்டே வசனங்கள். அவை, இரண்டாயிரம் வசனங்களைப் பேசப் பொய்யர்களைத் தூண்டி இருக்கின்றன.  அவை அனைத்தும் வசனங்களல்ல, வசவுகள்! உண்மைக்குப் பொய் முலாம் பூசி விட்டால் பொய்மையை உண்மையாக்கி விடலாம் எனக் கருதும் அந்த அறிவீனர்களின் செயல் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.



தனது முன்வினைப் பயனால், மக்கள் பிரதிநிதியாய் மகுடம் சூட்டிக் கொண்ட ஒருவர், உண்மையின் வெம்மை தாளாமல் உளறிக் கொண்டிருக்கிறார். அவர் வார்த்தைகளில் வக்கிரம் பொங்குகிறது. “இல்லது பிறவாது” என்கின்ற தத்துவவாதிகள் சொல்லும் உண்மை புரிகிறது.



நெஞ்சில் உள்ளது தானே வாய் வந்து சேரும். மனதிலும், வாக்கிலும், காயத்திலும் இத்தனை அழுக்கு நிரம்பிய ஒரு பிறவி, தம் பிரதிநிதியாய் ஆகிவிட்ட நிலை கண்டு உண்மை யாழ் மக்கள் உளம் வருந்தி நிற்கின்றனர்.



அப் பொய்யரை ரசிக்கவும் ஆளில்லாமலில்லை. நல்லாரை நல்லார் காமுறுவது போலவே,  தீயாரைத் தீயார் காமுறுவது இயற்கை தானே! மனதாலும், வார்த்தைகளாலும், செயலாலும் தரம் தாழ்ந்து, திரிகரண அசுத்தம் கொண்ட ஒருவரைப் பின்பற்ற நினைப்போர்தம் நிலை பற்றி, நாம் பேசவும் வேண்டுமோ?



இவற்றையெல்லாம் சொல்வதற்காக இம் மடலை நான் வரையத் தொடங்கவில்லை. நான் எழுத நினைத்தவை வேறு விடயங்கள். கடந்த சில நாட்களாகத் தொலைபேசியினூடாகவும், முகநூலினூடாகவும் என்னைத் தொடர்பு கொள்வோர் தொகை மிகமிக அதிகமாகி விட்டது.  பேசுபவர்களெல்லாம் இச் சர்ச்சை பற்றியே பேசுகிறார்கள்.



அங்ஙனம் பேசுவோர் பல ரகத்தினர். என் மேல் உண்மை அன்பு கொண்டவர்கள் நான் இந்த ஈனர்களின் இழி சொற்களால்ச் சோர்ந்து விடுவேனோ? என அஞ்சி, பதறிப் பரிதவித்து என்னைத் தேற்ற முனைகிறார்கள்.



என் உயர்வால் பயன்பெற்று அவற்றிற்காகவே என்னோடு ஒட்டிக் கொண்டிருந்த வேறு சிலர், விரியும் இச் சர்ச்சைகளால்  நான் வீழத் தொடங்கிவிட்டதாய் நினைந்து, உள்ளே மகிழ்ந்து வெளியே கவலை காட்டி நடத்தும் நாடகத்தைச் சகிக்க முடியவில்லை. என்னைப் பற்றிய இழிவுரைகளை எனக்கே காட்டி மகிழவரும் அவர்களை என்செய்வேன்? கூடா நட்பைக் கூட்டியது என் குற்றம்!



என்னால் வாழ்வு பெற்ற வேறுசிலர் ஏதும் அறியார் போல் இயங்கி, மானம் அறியாது வானம் பார்த்து நிற்கின்றார்.  என் வரங்களால் வளம் பெற்று வாழ்ந்தவர்கள், எதிரிகள் என்மேல் விடும் பாணங்கள் தவறியேனும் தம்மேல் பட்டுவிடக்கூடாது என நினைந்து தனித்திருந்து தவம் இயற்றுகின்றார். ‘கேட்டிலும் உண்டு ஓர் உறுதி’ என்பதை உணர்கின்றேன்.



விலத்தப்படவேண்டிய மேற்சொன்னவர்கள் பற்றி எனக்குப் பிரச்சினை இல்லை. “உங்களுக்கு ஏன் இந்த வேலை? சமுதாயத்தைக் காக்க நீங்கள் ஏன் முயல்கிறீர்கள்? பேசாமல் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு, மற்றவர்கள் போல மரியாதையாய் இருக்க வேண்டியது தானே” என்று, “அட்வைஸ்” மழை பொழிந்து என்னை அதிரச் செய்யும், இன்னும் ஒரு சிலர்தான் எரிச்சலுற வைக்கிறார்கள்.



வேறுபட்ட இத்தகையவர்களின் எதிர் வினைகளால் கூறுபட்டுப் போகாமலும், சிந்தித்து நான் எடுத்த முடிவுகளில் மாறுபட்டுப் போகாமலும், தனித்துத் “தாமரை இலைத் தண்ணீராய்த்” தெளிவோடு நிற்கிறேன் நான்.



உண்மை அன்பு கொண்டவர்களின் உள்ளத்தை உணர்வுகளால் அறிந்து கொள்கிறேன்.  பொய்யர்களின் நடிப்பைப் புரிந்து மகிழ்கிறேன். நன்றியில்லார்தம் செயல்களை நயந்து வருகிறேன். உவப்போடு என் வாழ்வு என்றும்போல் ஓடிக்கொண்டிருக்கிறது.



“உலகம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். உன்னை நீ பார்த்துக் கொள்” என்போரைத்தான் என்னால் விளங்க முடியாமல் இருக்கிறது. இங்ஙனம் உரைப்பவர்கள், தங்கள் வீட்டிற்குள் எவரேனும் புகுந்து தீமை புரிந்தால், துணை செய்ய வருவோருக்கு இதனையே உரைப்பார்களா?  தெரியவில்லை!



வீட்டிற்கு ஒரு நியாயம், நாட்டிற்கு ஒரு நியாயமா?  விளங்கவில்லை. பாஞ்சாலி சபதத்தில் பாரதி சொன்ன, “வீரமிலா நாய்கள்” என்ற வார்த்தைகள்தான் மனதில் வருகின்றன.



தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போராட்டம் என்பது, உலகம் தோன்றிய காலந்தொட்டு முடியும் காலம் வரை நிலைக்கப்போவது நிச்சயம்! அது இருளுக்கும், ஒளிக்குமான போராட்டம். இருள், ஒளியைக் கவ்வி சில நேரம் நிலைத்திருக்கும். மீண்டும் ஒளி, இருளை வீழ்த்தித் தானே வெளிவரும். நாளாந்தம் நாம் காணுகிற உண்மை இது.



உலக வரலாறு, இவ் உண்மையைக் காலாகாலமாய்க் காட்டி நிற்கிறது. நன்மையைத் தீமை விழுங்குவதும், பின்னர் தீமையை வீழ்த்தி, நன்மை உயர்வதும் இயற்கை அமைப்பில் எப்போதும் நடக்கின்றன. அது தான் இங்கு இப்போதும் நடக்கிறது.



எது நடந்தால் எனக்கென்ன? என்று எல்லோரும் இருந்து விட்டால் தீமையின் விரிவில் நம்மையும் இருள் சூழ்ந்து விடாதா? எல்லோரும் இங்ஙனம் இருந்திருந்தால் மனுக்குலம் இன்றளவும் நிலைத்திருக்குமா?



உண்மையை உரைக்கத் தலைப்பட்டதால்த்தான் நாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் போட்டார்கள். ஞானசம்பந்தரின் மடத்திற்குத் தீ மூட்டினார்கள். மணிவாசகரை நெற்றியில் கல் வைத்து நிற்க விட்டார்கள். பிரகலாதனை மலையிலிருந்து உருட்டித் தள்ளினார்கள். யேசுநாதரைச் சிலுவையில் அறைந்தார்கள். புறூனோவைத் தீயிட்டுக் கொழுத்தினார்கள். காந்தியைச் சுட்டுக் கொன்றார்கள்.இவர்களெல்லாம் எது நடந்தால் நமக்கென்ன? என்று இருந்திருந்தால் எம் நிலை என்னாகியிருக்கும்? வழிகாட்டுநர் இன்றி வாழ்விழந்து போயிருப்போம்.



சத்தியத்தின் வெற்றிக்காய்ப் போராடியவர்களுக்காகக் குரல் கொடுக்க அன்றும் ஆளில்லை. இன்றும் ஆளில்லை. போராடத் துணிந்த பெரியோர்கள் தமக்குத் துணையாய் மற்றவர்கள் வரவில்லையே என அன்றும் கவலை கொண்டதில்லை. இன்றும் கவலை கொள்ளவில்லை.



இந்த சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாய் ஆக்கத் துணிந்த எவரும், தர்மம் துணைசெய்யும் என நம்பினார்களே அன்றி, மற்றவர் துணைசெய்வார் என மனத்திலும் எண்ணவில்லை.   சத்தியத்தின் வெற்றிக்காய்ச் சலியாது போராடிய அவர்களைச் சரித்திர நாயகர்களாக்கிக் காலம் சன்மானம் தந்தது.



நான் பலதரமாய்ச் சொன்னதான ஒரு கதை இப்போது என் ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு முட்டாள் அரசனை ஏமாற்ற நினைந்த ஒரு வஞ்சகன் அவ் அரசனிடம் வந்து, அறிஞர்களின் கண்ணுக்கு மட்டும் தெரியும் ஓர் ஆடையினைத் தன்னால் ஆக்கித் தரமுடியும் எனக் கூறினானாம்.



அதை நம்பிய அரசன் அப்பணியைச் செய்துதர ஆணையிட அரசனிடம் வசதிகளைப் பெற்று அவ் வஞ்சகன் இல்லாத ஓர் ஆடையைப் பொய்யாய் நெய்தாற் போல் காட்ட, அது கண்ணுக்குத் தெரியாதது தெரிந்தும் தெரியவில்லை என்று உரைத்தால் தான் அறிஞன் இல்லை என்றாகிவிடுவேன் என நினைந்து, இல்லாத அவ் ஆடையை அரசன் பாராட்ட, அவனோடு சேர்ந்திருந்த மற்றைய முட்டாள்களும், தம்மையும் அறிஞராய்க்காட்ட நினைந்து அப் பொய்யனின் கருத்துக்கு “ஆமாம்” போட்டார்களாம்.



இல்லாத அவ் ஆடையை அணிந்து அரசன்  ஊர்வலம் வர வேண்டும் என வந்த வஞ்சகன் உரைக்க, முட்டாள் அரசனும் அதற்கு உடன்பட்டு நல்ல நாள் பார்த்து நிர்வாண ஊர்வலம் நிகழ்த்தினானாம்.



நாணமின்றி அரசனே செல்கிறான். நமக்கென்ன பிரச்சினை என நினைந்த பொய்யர்கள் பலரும்,

உண்மையை உரைத்தால் தாம் அறிஞராய் ஆகாமல் போய்விடுவோம் என அஞ்சி, அரசனின் இல்லாத ஆடையின் ஏற்றம் உரைத்து நிற்க, ஊரெல்லையில் நின்ற ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் நிர்வாணமாய் ஊர்வலம் வந்த அரசனைப் பார்த்து, “ராசா உரிஞ்சிட்டுப் போறாரடா” என்று கைதட்டிச் சிரித்தானாம்.



தாம் ஏமாற்றப்பட்ட உண்மை, அரசனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் அப்போதுதான் தெரிய வந்ததாம்.  மானம் போன பிறகு மதி தெளிந்து என்ன பயன்?



இன்றைய நம் ஈழத்தமிழ் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. உண்மை தெரிந்தும் நம்மவர்கள் பொய்யை மெய்யாய்ப் போற்ற முனைகின்றார். இருள் தரும் மறைப்பில் தம் இழிவுகள் வெளிப்படாது எனும் எண்ணத்தில் தலைவர்கள் இருளின் உயர்வைப் பிரேரிக்க, மக்களும் ஒளியை வெறுத்து, இருளை விரும்பி இழிவுற்றார்.



இத்தகையோருக்கு, இருளைக் காக்கும் கயவர்கள் கதாநாயகர்களாய்த் தெரிய, ஒளியைக் கொணர முயலும் உத்தமர்கள் கயவர்களாய்த் தெரிகின்றார்.  இது தான் நம் இனத்தின் இன்றைய நிலை.  காப்பார் எவருமின்றிக் கதிகலங்கி நிற்கிறது எம் இனம்.



ஆதரிப்போர் தொகை அதிகம் என்பதால் இயற்கை, இருளை அகற்றி ஒளியைக் கொணராமல் விட்டு விடுமா? ஆதரவாளர்களின் தொகையை வைத்து அரசமைக்க இயற்கையும் என்ன ஜனநாயகமா நடத்துகிறது. உண்மையானவன் ஒருவனேயானாலும் கோடியான அப் பொய்யர்களை விலத்தி அவ் உண்மையானவரோடு தான் இயற்கை கை கோர்க்கும். வரலாறு உரைக்கும் வலிய உண்மை இது.



அனுபவப் பாடத்தை அறிந்தவன் என்ற முறையில்த்தான் இயற்கையை நம்பி நான் உண்மையை உரைத்திருக்கிறேன். மீளவும் உரைக்கிறேன். நான் சொன்ன இரண்டு விடயங்களும் சத்தியமானவை. அந்த உண்மைகளை என்று உணர்கிறோமோ அன்று தான் எம் இனத்திற்கு விடிவு வரும். அதில் ஐயமில்லை!



பொய்மைகளை விலக்கி உண்மைகளை நிர்வாணமாய்க் காண, நாம் துணியாவிட்டால் வீழ்ச்சி தான் எஞ்சும். அதனால் முன் சொன்ன உண்மைகளைத் தெளிவுற கீழே மீள்பதிவு செய்கிறேன். அறிவார் அறிக!



•             எம் போராட்டங்கள் தோற்றுப் போய்விட்டன.

•             மக்கள் போராட்டத்தை உண்மையாய் நேசிக்கவில்லை.

•             உண்மை இனவெழுச்சியுணர்வு எம்மிடம் இல்லை.

•             தனிவாழ்வுக்காய் கொள்கைகளை விற்க நாம் தயாராக இருக்கிறோம்.

•             தனி ஈழக் கனவு இன்று எவரிடமும் இல்லை.

•             மக்கள் பொய்யான போராட்ட நேசிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

•             தலைவர்கள் அவர்களுக்கும் மேலே!

•             போராட்டத்தையும் போராளிகளையும் பயன்படுத்தி, வாழ வழி தேடும் எண்ணம் தான் அனைவர் மனத்திலும்.

•             இனப்பற்று இல்லாத தம் பொய்மை தெரிந்தால், மதிக்கப்படமாட்டோம் என்பதால், தேச பக்தர்களாய்த் தம்மைக்காட்டி “நாடகத்தால் நம் அடியார் போல் நடிக்கும்” வித்தையில் நம்மவர்க்குள் போட்டி நடைபெறுகிறது.

•             இறந்தவர்களுக்காகவும், இழந்தவர்களுக்காகவும் உண்மையாக் குரல் கொடுக்க இங்கு ஒருவரில்லை.

•             இன்றைய பொய்மையில் நாளைய வாழ்வை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

•             வேற்று நாட்டின் சுகவாழ்வுக்காக, நம்நாட்டில் போர் தொடர்ந்து நடக்கவேண்டும் என விரும்பும் பொய்யர்களால் புலம்பெயர்நாடுகள் பொழிகின்றன.

•             ஓடேந்தி நிற்பதால் அவர் கூறுவது உண்மையென உரைக்க இங்கும் பலர்.

•             என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என, இல்லாத தாகம் தணிக்க பலர் ஏக்கம் காட்டுகிறார்.



மேற் சொன்னவை நான் வைக்கும் வாதங்கள் அல்ல. அவை நான் எழுதும் தீர்ப்பு. உள்ளத்தில் உள்ளதை உரைத்துவிட்டேன். உண்மையானவர்களின் அன்புக்கு நன்றி.  இனி என் கருத்தில் மாற்றமில்லை. தூற்றுவார் தூற்றுக! போற்றுவார் போற்றுக! சத்தியம் என்றோ ஒருநாள் வெல்லும். அப்போது நான் சொன்ன உண்மைகள் உறுதிபடும்.

“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.