அரசியற்களம் 03 | கூட்டமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்: விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுங்கள்.

அரசியற்களம் 03 | கூட்டமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்: விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுங்கள்.
 

உலகத்திற்குப் பதில் சொல்லவேண்டுமெனும் பொறுப்புணர்ச்சி,
எல்லாத் துறைகளிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
அரசியல் துறையில் அது பற்றிக் கேட்கவே வேண்டாம்.
நாட்டில் நடைபெறும் பல சம்பவங்களையும்,
மேற்கருத்துக்கான முன் உதாரணங்களாய்க் காட்டமுடியும்.
அவற்றைச் சுட்டுவது இக் கட்டுரையின் நோக்கமன்று.
எவர் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்.
தாம்தான் தமிழ் இனத்தின் ஏகத்தலைமை என்று உரைத்து,
தமிழ்மக்களின் கவனத்தை ஈர்த்து,
அடுத்தடுத்து வெற்றிகளையும் பதவிகளையும் கொட்டிக் குவிக்கும்,

 

தமிழர் கூட்டமைப்பின் செயற்பாட்டில்,
எம் இனத்தின் எதிர்காலம் தங்கியிருப்பதால் அவர்களிடம்,
வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கான பதிலை,
எதிர்பார்க்க வேண்டியே இருக்கிறது.
அண்மைக்காலமாய் அடுத்தடுத்து வரும் பல பத்திரிகைக் கட்டுரைகளிலும்,
கூட்டமைப்புப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
அக் கட்டுரைகளின் கருத்துக்களை உள்வாங்கி,
பொறுப்புணர்ச்சியோடு கூட்டமைப்புத் தலைவர்கள் எவரும்,
பதிலுரைக்க முன்வருவதில்லை.
அவர்தம் அலட்சியப் போக்கு கவலை தருகிறது.

*****

எவரும் எவரையும் விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம் என்பதான உரிமைகள்,
ஜனநாயகம் என்கின்ற குடியாட்சித் தத்துவத்தின் தனித்தகைமைகள்.
முடியாட்சிக்காலத்திலும் மேற் சலுகைகள்,
அரசை நெறிப்படுத்தத் தேவையானவை என,
தனது பொருட்பாலில் வள்ளுவர் உரைக்கின்றார்.
செவிகைப்ப சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ் தங்கும் உலகு"
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்பதான குறள்கள் மேற் கருத்துக்காம் சான்றுகள்.

*****
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள்,
ஜனநாயக விழுமியங்கள் அத்தனையையும்,
இழிவு செய்வதில் முதன்மை பெற்றிருந்தாலும்,
எதிராளிகளின் விமர்சனங்களுக்கான பதிலை மக்கள் முன் வைப்பதில் மட்டும்,
இன்று வரை ஜனநாயகப் பண்பினை பின்பற்றுகிறார்.
தனது கட்சிப்பத்திரிகையான முரசொலியில்,
அன்றன்று எழும்பும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்குமான பதில்களை,
தனது ஆசிரியர் தலையங்கத்தில் தர அவர் தவறுவதில்லை.
அவரது மேற் செயற்பாடு முதிர்ந்த இந்த வயதிலும் உறுதியாய்த் தொடர்கிறது.
எது எதற்கோ தமிழகத்தலைவர்களைப் பின்பற்றுகின்ற கூட்டமைப்பினர்,
இந்த விடயத்தில் அவர்களைப் பின்பற்றினால் நல்லது என்பது அறிஞர்கள் கருத்து.

*****
கூட்டமைப்பினரைத் தாக்குவதோ? குறை காண்பதோ? கேலி செய்வதோ?,
இக் கட்டுரையின் நோக்கமல்ல.
வரலாற்றிலேயே அதி உச்ச சோதனைக்களத்தில் வாழும்,
இன்றைய ஈழத் தமிழர்தம் வாழ்வின் வெற்றியும், தோல்வியும்,
இனத்தலைமை பூண்டிருக்கின்ற தலைவர்களின் வெற்றி தோல்விகளால்,
தீர்மானிக்கப்படும் அவலநிலை தொடர்ந்து வருவதால்,
தலைவர்களின் செயற்பாட்டை நெறிப்படுத்தும் பொறுப்பு,
ஜனநாயகத் தூண்களில் ஒன்றாய்ப் பேசப்படும் ஊடகங்களுக்கு இருப்பதாலேயே,
இத்தகு விமர்சனக் கட்டுரைகளை வரையவேண்டியிருக்கிறது.
கடந்த மூன்று தசாப்தங்களாக ஈழத்தமிழினத்தின் தலைமை ஏற்றிருந்த,
ஆயுதக் குழுக்கள் தம்மை விமர்சித்தோரை துரோகிகளாய்க் கருதி,
அழிக்கத்தலைப்பட்ட காரணத்தினாலேயே,
அவ் அமைப்புக்கள் இடிப்பாரின்றி இழிந்து போயின.
அவ் அமைப்புக்களின் இழிவு தமிழினத்தினதும் இழிவாயானதை,
நிகழ்காலத்தில் நிதர்சனமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

*****
மேலும் ஒரு தலைமையை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாய் விடுத்து,
அத் தலைமையின் வீழ்ச்சியில் தமிழ் இன வீழ்ச்சியையும் பொருத்திக்கொள்ள,
இனியும் தமிழினம் அனுமதிக்காது என்பதை,
இன்றைய தமிழ்த் தலைமையை ஏற்றிருக்கும்,
கூட்டமைப்பைச் சார்ந்த அனைத்து அரசியல் குழுக்களும்,
அறிந்து கொள்ளுதல் அவசியம்.
அது நோக்கியே அண்மைக்காலமாக,
கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களை நோக்கிய,
கடும் விமர்சனங்களை பத்திரிகைகள் முன்வைத்து வருகின்றன.

*****
ஆனால், மேற்படி விமர்சனங்களுக்கு பதிலுரைக்கும் கடப்பாடு தமக்கு இருப்பதாய்,
கூட்டமைப்பின் எந்தத் தலைவர்களும் கருதுவதாய்த் தெரியவில்லை.
சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கும்,
அரசியல் நடவடிக்கைகள் பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும்,
எந்தவித பதிலும் உரைக்காமல்,
எங்களைக் கேட்கவும், விமர்சிக்கவும் நீங்கள் யார்? எனும்,
சர்வாதிகார மனப் போக்கோடு கூட்டமைப்புத் தலைவர்கள் இயங்கி வருவது,
பகிரங்கமாகி விட்டது.
பத்திரிகைகளின் கேள்விகளுக்கு மட்டுமன்றி,
இணைந்திருக்கும் நட்பான கட்சிகளின் கேள்விகளையும் கூட,
உதாசினப்படுத்தி மௌனிக்கும் போக்கு,
நாளுக்கு நாள் அவர்களுக்குள் அதிகரித்து வருகிறது.
இப் போக்குத் தொடர்ந்தால் இயக்கங்களின் முடிவினையே,
இவர்களும் அடைவர் என்பதனை,
வருத்தத்தோடு வலிமையாய்ச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

*****
தமிழ்மக்கள் தம்மை மட்டுமே ஆதரிப்பார்கள் எனும் துணிவுதான்,
அவர்களது இந்த அலட்சியத்தின் அடிப்படை,
நம் தமிழ்ப்பெருமக்களிடமும் பெரியதோர் குறை உண்டு.
ஜனநாயக சலுகைகளை அனுபவிக்கும் தகுதி நமக்கு உண்டா? என்று,
நம்மை நோக்கியே நாம் விரல் நீட்டவேண்டியிருக்கிறது.
அறிவாளிகள் எனத் தம்மைத்தாம் பாராட்டிக்கொண்ட தமிழர்கள்,
அறிவைப் புறந்தள்ளி உணர்ச்சியின் அடிப்படையில் தலைமைகளை ஏற்பதும்,
அத்தலைமைகள் உரைக்கும் பொய்மைகளை அறிவாராய்ச்சியின்றி ஏற்றுக்கொள்வதும்,
அவர்தம் அடி பற்றி கேட்டுக்கேள்வியின்றிப் பின் நடப்பதுமாக இருந்து விட்டு,
அவர்தம் வீழ்ச்சியின் பின் அவ் வீழ்ச்சியில் தமக்குத் தொடர்பே இல்லை என்னுமாப் போல்,
பிறத்தியாராய் நின்று கைகொட்டிச் சிரிப்பதும்,
மீண்டும் அடுத்த தலைமையை ஆகாயத்தில் ஏற்றுவதுமாக,
தமிழர் தம் வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது.

*****
தலைவர்கள் பொய்யர்களாய் ஆக,
ஒருவகையில் நாமும் காரணர்களாய் இருந்திருக்கிறோம்.
அமிர்தலிங்கத்தை இப்படித்தான் ஆதரித்தோம்.
அவர் பேசிய கூட்டங்களுக்கு ஆயிரமாய் மக்கள் சேர்ந்தனர்.
அவர் பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது,
அங்கும் முன்பு போலவே ஆயிரமாய் மக்கள் சேர்ந்தனர்.
முன் சேர்ந்த கூட்டம் போற்றிச்சேர்ந்தது.
பின் சேர்ந்த கூட்டம் தூற்றிச் சேர்ந்தது.
இரண்டு கூட்டமும் ஒன்றென்பதுதான் துரதிஷ்டம்.

*****
இதே போல் தான் புலிகள் விடயத்திலும் நடந்து கொண்டோம்.
அவர்கள் சொன்ன அனைத்தையும் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டோம்.
அவர்கள் செய்த பிழைகளுக்கு நாமே சமாதானம் தேடினோம்.
தோற்ற பின், அவர்கள் செய்த சரிகளையும் இழிவாய் விமர்சிக்கிறோம்.

*****
இன்றும் அதே கதைதான் நடக்கிறது.
புலிகள் இருந்து இடத்தில் இன்று கூட்டமைப்பு.
அவர்களாவது போர்க்களத்தில் நின்றார்கள்.
அதனால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் வாய்ப்பை இழந்தார்கள்.
இவர்களுக்கு அத்தகைய இக்கட்டுக்கள் ஏதும் இல்லை.
தம் செயல்களுக்கான காரணங்களை,
மக்களுக்கு உரைக்கவேண்டிய கடமை,
இவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது.
ஆனால், எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல,
அவர்கள் தயாராகவில்லை.
அவர்களை நோக்கி நீளும் கேள்விகளைப் பட்;டியலிடலாம்.
அப் பட்டியலைக் கீழே தருகிறேன்.

*****
தமிழர்கள் ஒருமித்து தம் பலத்தைக் காட்ட,
தமக்கே வாக்களிக்க வேண்டும் என்று,
கடந்த தேர்தல்களில் சொன்னார்கள்.
பின்னர் மாகாணசபைத் தேர்தலிலும்,
அக் காரணமே வலிமையாய்ச் சொல்லப்பட்டது.
அவர்களின் கருத்தை ஏற்றுத் தமிழ் மக்களும்,
அங்ஙனமே வாக்களித்தார்கள்.
அங்கிருந்துதான் கேள்விகள் பிறக்கின்றன.

1. ஒருமித்த தலைமை பெற்று கடந்த ஆட்சிக்காலங்களில் தாங்கள் சாதித்தது என்ன?

2. இனிவரும் ஆட்சிக்காலத்தில் சாதிக்க நினைத்திருப்பது என்ன?

3. தனிஈழத்தைக் கைவிட்டு ஒரு நாட்டுக்குள் இரு இனம் எனும் கொள்கையை முன்வைத்த தாங்கள் அந்தப்பாதையில் அடைந்த முன்னேற்றம் என்ன? அடையக் கருதும் முன்னேற்றம் என்ன?

4. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கு நாங்களே காரணம் என்று கூறிவரும் நீங்கள் மீள்குடியேற்றம், புனருத்தாரணம் போன்ற அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுத் தமிழ்மக்களின் புனர்வாழ்வினை உறுதிசெய்யாமல் விட்டதன் காரணம் என்ன? அரசின் வெற்றியில் பங்கேற்கலாம். தமிழரின் நல்வாழ்வுக்காக அரசியலில் பங்கேற்கக் கூடாதா?

5. புதிய தேர்தலுக்கு முகம் கொடுக்கும் தாங்கள் பெரும்பாலும் பழைய முகங்களையே மீண்டும் நிறுத்தியிருக்கிறீர்கள். அவர்கள் தங்களது கடந்த பதவிக்காலத்தில் செய்த சாதனைகள் என்ன? அப்பட்டியலை வெளியிட முன்வருவீர்களா?

6. மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு உங்கள் அமைப்புக்குள் பலத்த போட்டி நடந்தது. அப்போட்டி வெறும் பதவிப் போட்டியென வெளிப்படையாய்த் தெரிந்தது. பேரழிவைச் சந்தித்த இனத்தின் பிரதிநிதிகளாய்க் கூறிக்கொள்ளும் நீங்கள் இனத்திற்காக எதனைச் சாதிக்க அப்பதவிக்காகப் போட்டியிட்டீர்கள்?

7. ஏதுமில்லை எனின் இன உரிமைப் போராட்டத்திலிருந்து ஓய்வுபெற்றுப் பதவி அரசியலுக்குள் நீங்கள் வந்துவிட்டதை ஒத்துக்கொள்கிறீர்களா?

8. மாகாணசபைத் தேர்தலில் இனஉரிமை பற்றிய பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கினீர்கள். அவ் வெற்றியை வைத்து இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?

9. ஆளுநர், செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்பின்மையை காரணங்காட்டி உங்கள் செயற்பாட்டின்மைக்கு விளக்கங்கள் கொடுத்தீர்கள். ஆளுநர், செயலாளர் ஆகியோர் மாற்றப்பட்டபின் கடந்த ஏழுமாதங்களில் தாங்கள் சாதித்தது என்ன?

10. முரண்பட்ட ஆளுநர், செயலாளர்களின் காலத்தில், அரசின் மேலாதிக்கத்தால் எதுவும் செய்யமுடியவில்லை என்று சொல்லிவந்த நீங்கள் உங்களுக்குரிய வாகனம் போன்ற வசதிகளை அவர்கள் காலத்தில் பெற்றுக்கொண்டது எங்ஙனம்?

11. மக்கள் சேவையைச் செய்யமுடியாமல் தடுக்கும் உங்களிடமிருந்து எங்கள் தனிப்பட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்ளமாட்டோம் என ஏன் நீங்கள் அவ் உதவிகளை நிராகரிக்கவில்லை?

12. திரும்பத்திரும்ப குறித்த பேர்வழிகளே பதவிக்காய்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? புதிய தலைமைகளை உருவாக்கத் தயங்குவது ஏன்? பதவிச்சுகத்தில் மூழ்கியவர்கள் அப்பதவிகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லையா?

13. அல்லது இன்னாரின் அறிவு, ஆற்றல், ஆளுமைக்குச் சமமாய் எம் இனத்தில் வேறெவரும் இல்லை, அதனாற்றான் திரும்பத்திரும்ப அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று உங்களால் சொல்ல முடியுமா?

14. இனஉரிமைப் போராட்டத்திற்காகவே ஒன்றுசேர்ந்திருக்கிறோம். இனத்தின் ஒருமித்த பலத்தைக் காட்ட எங்களுக்கே வாக்களியுங்கள் எனக் கேட்கும் நீங்கள் பதவிகளுக்கு மட்டும் இன அளவில் சிந்தித்து ஆற்றல்களைத் தேர்ந்தெடுக்காமல் கட்சி அளவில் ஆட்களைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பதன் காரணம் என்ன?

15. இதுவரை நீங்கள் தேர்ந்தெடுத்த பதவியாளர்களில் தம் தனிப்பட்டத் தேவைக்காக பேரின ஆட்சியாளர்களிடம் உதவி பெறாதவர்கள் எத்தனை பேர்?

16. தமிழர்களின் ஒருமித்த குரலாய் உங்கள் கட்சியே இருக்கவேண்டுமென நினைத்த நீங்கள், இனத்தை மேலும் பலப்படுத்த, ஒட்டுமொத்தத் தலைமைகளையும் உங்கள் கட்சியின் கீழ் இணைக்க முயலாதது ஏன்?

17. முரண்பாடு என்பது உங்கள் பதிலாக இருக்குமானால், இப்போதிருக்கும் உங்கள் அமைப்புக்குள் முரண்பாடுகள் இல்லையா?

18. புலிகள் காலத்தில் அவர்கள் நெறிப்படுத்தலில் முரண்பட்ட நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டது எங்ஙனம்? அது இனத்தின் மீதான அக்கறையா? புலிகள் மீதான அச்சமா?

19. கட்சி நலனைவிட இன நலம்தான் முக்கியமென்றால் இனநலத்தை நோக்கி கட்சி நலனைக் கைவிட்டு கூட்டமைப்பை ஒருகட்சியாய் இன்று வரை பதிவு செய்யாதது ஏன்? ஒருமித்து நிற்போம் என்பது மக்களுக்கான உபதேசம் மட்டும்தானா? அது உங்களுக்கு இல்லையா?

20. அண்மையில் முன்னாள் புலிஅமைப்பைச் சேர்ந்தவர்கள் உங்களோடு இணைய வந்தபோது இன்று வரை புலிகள் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தாங்கள்  சிறிதுகூட இடங்கொடாமல் அவர்களை நிராகரித்து ஏன்? அரசியலிலும் அவர்கள் உங்களை முந்திவிடுவார்கள் எனும் அச்சமா?

21. அவர்கள் பின்னால் புலனாய்வுத்துறை செயற்படுவதாய் ஓர் ஊகக் குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கான ஆதாரம் ஏதும் உண்டா? அல்லது பேரின அரசுடன் இணைத்துப் பேசிவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் எனும் எண்ணமா? இத்தகைய குற்றச்சாட்டின் பேரில்தான் ஒரு காலத்தில் கூட்டணித் தலைவர்கள் பலர் அழிக்கப்பட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்களையும் தமிழ் மக்கள் நம்ப வேண்டுமா?

கேள்விகள் இப்படியே விரிந்து செல்கின்றன.
பதில்  சொல்ல வேண்டியது உங்களுடைய கடப்பாடாகிறது.
பதில் இல்லாவிட்டால் பிழையை ஒத்துக்கொள்ளவேண்டியது,
அதைவிடப் பெரிய கடப்பாடாகிறது.
ஆனால் நிச்சயம் நீங்கள் இந்தக் கேள்விகள் எதற்கும்,
பதில் சொல்லத் துணியப்போவதில்லை.
தமிழ்மக்கள் உங்கள் வார்த்தை ஜாலத்திற்கு மயங்கி,
உங்கள் பின்னால் செம்மறி ஆடுகளாய் வருவார்கள் எனும் நம்பிக்கையில்,
ஒன்று கேள்விகளை நிராகரிப்பீர்கள்.
அல்லது கேள்வி கேட்டவரை நிராகரிப்பீர்கள்.

*****
விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுவதுதான் ஆரோக்கியமானது.
பதில் இருந்தால் பதில் சொல்லுங்கள்.
இல்லாவிட்டால் பிழைகளைத் திருத்துங்கள்.
தமிழர் மத்தியில் வலிமையான ஒரு அரசியல்  போக்கு உருவாகும்.
ஒன்றை உறுதிப்பட உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
பொய் நீண்ட நாளைக்கு நிலைக்கப்போவதில்லை.
நடந்து முடிந்த வரலாறே அதற்கான சான்று.
அதிலிருந்து பாடம்படிக்கத் தவறுவீர்களேயானால்,
முன்னைத் தலைவர்களின் கதிதான் நாளை உங்களுக்கும்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை விட,
உள்ளபோதே செய்வதுதான் உகந்தசெயல்.
மக்கள் உங்கள் பக்கம் என்று பெருமிதம் கொள்ளாதீர்கள்.
அவர்கள் இன்று உங்கள் பக்கமாய் நிற்பார்கள்.
உங்களைவிட அதிகமாய் இன உணர்ச்சியைக் கிளப்பி,
வேறு யாராவது அவர்களைக் கொந்தளிக்கச் செய்தால்,
பின்னர் அவர்கள் பக்கம் நின்று உங்களைத் தோற்கடிப்பார்கள்.
இதுதான் யதார்த்தம்.

*****

"உங்கள் பேச்சுக்களைக் கேட்க லட்சமாய் மக்கள் கூடுகின்றனர்.
இத்தனை ஆதரவா உங்களுக்கு?" என 'வின்சற் சேர்ச்சிலை' ஒருவர் கேட்ட போது,
"நாளை இவ் அரங்கில் என்னைத் தூக்கிலிடுவதாய்க் கூறிப்பாருங்கள்,
இதை விட அதிக கூட்டம் வரும் " என்றாராம் அவர்.
தமிழர்களைத்தான் அவர் சொன்னாரோ? என எண்ணத்தோன்றுகிறது.
காலம் தந்த பாடம் கொண்டு இனியேனும் நம் இனமும், தலைமையும்,
மேற்சொன்ன பொய் வழியைத் திருத்தாவிடில்,
தமிழர்க்குத் துன்பம் எப்போதும் தொடர்கதை தான்.

*****

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.