ஆண்டவனின் அம்மை- பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஆண்டவனின் அம்மை- பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(சென்றவாரம்)
மூப்பின் தளர்வாலும், முடுகிய பசியாலும் அயர்ந்திருந்த திருத்தொண்டர், அன்னையிட்ட மாங்கனி அமுதினால் அயர்வு நீங்க மகிழ்ந்து போயினர். அடியார் சென்றபின். பகல்பொழுதில் பரமதத்தன் இல்லம் சேர்ந்தான்.

உள்ளம் உவக்க இல்லம் வந்த காதல் கணவனை,
வரவேற்கிறாள் நம் அன்னை.
வந்தவன் நீராடி உணவருந்தத் தயாராக,
கற்புடைய நம்அம்மை கணவனுக்கு அன்போடு உணவிட நினைந்தார்.

மற்றவர் தாம் போயின பின் மனைப் பதியாகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்புற முன் நீராடிப் புகுந்தடிசில் புரிந்த இலக்
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்.

இல்லுக்குரியான் இவனே எனும் கருத்தில்,
முதல் பாடலில் இல்லாளன் எனப் பரமதத்தனை உரைத்த சேக்கிழார்.
இப்பாடலிலும் அக்கருத்தை அனுவயம் செய்கிறார்.
மனைக்கு உரியவள் என்பதால்,
இல்லறப் பெண்ணுக்கு மனைவி என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த மனைவி என்னும் பெண்பாற்சொல்லுக்கும் எதிரான,
ஆண்பாற்சொல் தமிழ் வழக்கில் இல்லையாம்.
சேக்கிழார் பெருமான் அச்சொல்லிற்கான ஆண்பாற்சொல்லினை,
கதைக்கருத்து நோக்கி, இப்பாடலில் வருவித்துரைக்கின்றார்.
மனைப் பதி என்பதே தெய்வச்சேக்கிழார் தரும் அப்புதிய சொற்றொடராம்.
இத்தொடரின் மூலம் இம்மனைக்குரியான் பரமதத்தனே என,
சேக்கிழார் குறிப்பால் உணர்த்துவது வியப்பேற்படுத்துகிறது.
 

புலவோர் சிலர்,
அடியாரை அன்னை அமுது செய்விக்கையில்,
மன மகிழ்ச்சியினால் அடியார் தமை அமுது செய்வித்தார்  எனவும்,
பின்னர் கணவனான பரமதத்தனுக்கு உணவிடுகையில்,
கடப்பாட்டில் ஊட்டுவார் எனவும்,
நம் தெய்வச்சேக்கிழார் உரைத்ததை வைத்து,
கணவனுக்கு அன்னை கடமைக்காக உணவிட்டாரே அன்றி,
அடியார்க்குப் போல அன்பினால் உணவிடவில்லை என்று,
நயம் உரைப்பதாய்க் கூறி ஓர் கருத்தினை வருவித்துரைப்பர்.

அங்ஙனம் உரைப்பது காரைக்காலம்மைக்கோ,
நம் கலாசாரத்திற்கோ, கதைப்போக்கிற்கோ நிச்சயம் சிறப்பன்றாம்.
அடியார்க்கு உணவிடுவது தொண்டு.
கணவர்க்கு உணவிடுவது கடமை.
அக்கடமையை உணர்த்தவே,
கடப்பாடு எனும் சொல்லினை இடுகிறார் தெய்வச்சேக்கிழார்.
இங்கு, கடப்பாடு என்பது இல்லற அன்புரிமை பற்றி வந்த ஒழுக்கத்தையேயாம்.
அன்னைக்குக் கணவன்மேல் அன்பில்லை எனின்,
அவன் பிரிய அவர் தன் உடல் களைவாரா?
தம்புத்தியின் விகாரத்தைப் புராணத்தில் ஏற்றுவது,
புலமைக்கு உகந்த செயலன்றாம்.

அதுதவிரவும் நம் அன்னை,
அன்பின் மிகுதியினால் கணவனார்க்கு உணவிட்டார் என்பதை உணர்த்தவே,
ஊட்டுவார் எனும் சொல்லைத் தேர்ந்தெடுத்து இடுகிறார்.
தாய் பிள்ளைக்கு உணவூட்டுதல்,
பசு கன்றுக்குப் பாலூட்டுதல் எனும் தொடர்களில்,
ஊட்டுதல் என்னும் சொல்லில் அன்பின் நிறைவை நாம் காண்கின்றோம்.
எனவே அன்னை கணவனார்க்கு உணவூட்டியமை,
அன்பின் மிகுதியினாலேயே என்பதை,
நாம் தெற்றென அறிந்து கொள்கிறோம்.

சுவை மிகுந்த கறிகளுடன் கூடிய சாதத்தை,
உணவிடும் முறையறிந்து கணவர்க்கு இட்டு,
அதன் பின் கணவன் முன்னர் அனுப்பிய எஞ்சியிருந்த மதுர மாங்கனியை,
வெட்டி இலையில் வைத்தார் அம்மை.

இன்னடிசில் கறிகளுடன் எய்து முறை இட்டதன்பின்
மன்னியசீர்க் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த
நன் மதுர மாங்கனியில் இருந்ததனை நறுங்கூந்தல்
அன்னம் அனையார் தாமும் கொடு வந்து கலத்தளித்தார்.

நம் சேக்கிழார், இப்பாடலிலும் பரமதத்தனை,
மன்னியசீர்க் கணவன் என மதிப்புறுத்துகிறார்.
நிலைத்த சிறப்புக்களை உடைய கணவன் என்பது
அத்தொடருக்காம் பொருளாம்.

மனைவியார் படைத்த இனிய மாங்கனியை உண்டு,
அதன் சுவையில் மயங்கிய பரமதத்தன்,
இருக்கும் மற்றை மாங்கனியையும் இடுக! என வேண்டுகிறான்.

மனைவியார் தாம் படைத்த மதுரமிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார்வணிகன்
'இளையதொரு பழம் இன்னும் உளததனை இடுக' என
அனையதுதாம் கொண்டுவர அணைவார் போல் அங்ககன்றார்.

கணவனின் விருப்பை நிறைவேற்ற முடியாத நிலையில்,
அன்னை அலமந்து போகிறாள்.
கனியை விரும்பிக் கேட்கும் கணவனுக்கு,
அதனை இடமுடியாத இக்கட்டான நிலமையால்,
தளர்வெய்திய அன்னை,
சிவனடியார்க்கு அக்கனியை இட்ட செய்தியை உரைக்காது,
மற்றைக் கனியைக் கொணரச் செல்வார் போல்,
அங்கிருந்து அகன்று உட்சென்றார்.

இவ்விடத்திலும் சில புலவர்கள் பரமதத்தன் மேல் பழி சுமத்துவர்.
மனைவிக்கு வைக்காமல் மறுபழத்தையும் கேட்டது குற்றம் என்றும்,
கணவனார் கேட்டதும் நிகழ்ந்தது கூறாமல் அன்னை விலகிச் சென்றதால்,
அவள் கணவர்க்கு அஞ்சி வாழ்ந்தனள் என்றும்,
மேற்புலவர்கள் தம் கருத்தைக் கதையிலேற்றி விரிப்பர்.
அஃது அற்றன்றாம்.
புராணத் தொடக்கத்தில் அன்னை,
தன்னை நாடிவந்த சிவனடியார்க்கு,
அமுது, பொன், மணி முதலியன கொடுத்து உபசரித்தார் என,
நம் சேக்கிழார் பெருமான் முன் உரைத்தமையை நினைய,
அவர்தம் கருத்தின் தவறு தெளிவாகும்.

நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் முதலன
தம்பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்

மேற்சொன்ன இரு செயல்களுமே இயல்பாய் நிகழ்ந்தவை.
சுவை தந்த பழத்தைப் பரமதத்தன் கேட்டது,
மனைவிமேல் அன்பு கொண்ட ஒரு கணவனின் இயல்பான வெளிப்பாடாம்.
நல்லவற்றைக் கணவர்க்கு இட்டு மகிழும் அன்னையின் இயல்புநோக்கி,
அதனை அவன் செய்தான் என்க!
அதுபோலவே கணவன் மறுபழத்தைக் கேட்க,
அவன் ஆசையை நிறைவேற்ற முடியாத அன்பு அவதியிலேயே,
அன்னை அவ்விடம் விட்டு அகன்றாள் என்க!
இயல்பாய் நிகழ்ந்த இச்சம்பவங்களை வைத்து,
பாத்திரங்களில் குற்றமேற்றிக் கருத்துக் காண்பதைவிட,
இயல்புநோக்கிக் கருத்துரைப்பதே பொருத்தமாம்.

அடியார்க்கு இட்ட அருங்கனியை அன்புக் கணவன் வேண்டி நிற்கிறான்.
காதல்க்கணவனின் கருத்தை நிறைவேற்ற முடியாது கலங்குகிறாள் நம்அன்னை.
ஆசைக்கணவனின் விருப்பை நிறைவேற்றுவதன்றோ ஓர் அன்பு மனைவியின் முதற்கடமை.
அதுமுடியாது போக அவள் உணர்வு துடிக்கின்றது.
இறைவன் முன் கையேந்தி நின்று ஏங்குகிறாள்.
ஒன்றிய மனத்தால் அவள் உள்ளம் சிவனில் பதிய,
அச்சிவனார்தம் திருவருளால்,
ஏந்திய அன்னையின் கையில் இனிய ஒரு கனி வந்து வீழ்கிறது.
அதிசயித்த நம் அன்னை அகமகிழ்ந்தாள்.
கையில் வீழ்ந்த கனியால் கணவன்தன் விருப்பினை நிறைவேற்ற எண்ணி,
ஆசையோடு அதனை அன்புக்கணவனின் இலையில் இட்டாள் நம்தாய்.

அம்மருங்கு நின்று அயர்வார் அருங் கனிக்(கு) அங்(கு) என்செய்வார்?
மெய்ம்மறந்து நினைந்துற்ற விடத்(து) உதவும் விடையவர்தாள்
தம்மனங் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த(து) அதிமதுரக் கனியொன்று.

மற்(று) அதனைக் கொடுவந்து மகிழ்ந்(து) இடலும் அயின்(று) அதனில்
உற்ற சுவை அமுதினும் மேற்பட உளதாயிட 'இதுதான்
முற் தருமாங் கனி அன்று மூவுலகில் பெறற்(கு) அரிதால்
பெற்றது வேறெங்(கு)' என்று பெய்வளையார் தமைக்கேட்டான்.

                                                                                        (அடுத்த வாரத்திலும் அம்மை வருவாள்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.