"ஆறுமுகம் ஆன பொருள்"-பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

"ஆறுமுகம் ஆன பொருள்"-பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 

(சென்ற வாரம்)

ஓரளவு வித்துவானை உணர்ந்திருப்பீர்கள். அவரது அறிவுவடிவம் உங்கள் அகம் புகுந்திருக்கும.; அறிவு அன்பாய்ப் பரிணமிக்க, சிலவேளைகளில் குழந்தையாகவும் குதூகலிப்பார். 'மூட்' வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இளைஞனாய் நின்று எங்களோடு போட்டி போடுவார். அவரின் ஆனந்தப்பரவசத்தை உணர்த்த, ஒரு சம்பவம் சொல்கிறேன்.



உயர்ந்த அந்த இந்துக்கல்லூரிக் கட்டிடம் முழுவதும்,
பெய்த பேய் மழையில் நனைந்து கொண்டிருந்தது.
இந்துக்கல்லூரி விடுதி அலுவலக வாயிலில் நானும் சில நண்பர்களும்.
அப்போது சிவராமலிங்கம் மாஸ்டர்தான் விடுதிப்பொறுப்பாளர்.
அந்த அலுவலகத்தின் முன்பு இருந்த விறாந்தையில்,
இரண்டு நீண்ட வாங்குகள் எப்போதும் கிடக்கும்.
அவற்றிற்கு இந்துக்கல்லூரியின் வயதிருக்கும்.
மதிய இடைவேளையில் அங்குதான் நாம் சந்திப்போம்.
மதிய உணவுக்காக, மானிப்பாய் இந்துவிலிருந்து வித்துவான் வேலன் வருவார்.
அந்தப்பழைய வாங்கு ஒன்றில், வித்துவான் வேலன், வித்துவான் ஆறுமுகம்,
சிவராமலிங்கம் மாஸ்டர் மூவரும் மும்மூர்த்திகளாய் அமர்ந்திருப்பர்.
மறுவாங்கில் நாங்கள்.
அங்கு,
அன்புத் தமிழிலிருந்து வம்புத்தமிழ் வரை அனைத்தும் அலசப்படும்.
தம் பழைய அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவனுபவங்களை எல்லாம்,
போட்டிபோட்டு அவர்கள் இரைமீட்க,
கன்றுக்குட்டிகளாய் நாம் வாய் பார்த்திருப்போம்.
தமிழைத் தரிசித்த நாட்கள் அவை.
'குஷி மூட்' வந்துவிட்டால்,
வித்துவான்களின் கல்லூரிக்கால காதல் கதைகளும் வெளிவரும்.


 


அன்றும் அப்படித்தான்.
கொட்டும் மாரியால் எங்கள் ஆறுமுகனாருக்கு அன்று ஆனந்த மனநிலை.
அவர் ஆனந்தம் எங்களுக்குள்ளும் தொற்றிக்கொள்ள,
சிரிப்புமழை பொங்கியது.
ஆண்கள் கல்லூரியான இந்துக் கல்லூரியில் பெண் ஆசிரியைகள் இல்லை.
'ட்ரெயினிங்' காலத்தில்  ஓரிருவர் வந்துபோவர்.
பெண் வாசனை இல்லா இடம் என்பதால்,
அங்குவரும் முதிர்கன்னிகள் கூட முக்கியம் பெறுவர்.
அப்படி வந்தவர்களில் ஓர் இளம் ஆசிரியை.
உணவுக்குச் சென்றுவிட்டு, கொட்டும் மழையில் குடைபிடித்து உட்புகுந்தார்.
கவிதை செய்யும் நண்பன் ஒருவன் எங்கள் கூட்டத்தில் இருந்தான்.
மரியதாஸ் என்று ஞாபகம்.
வித்துவானின் உற்சாகம் அவனையும் தொற்றிக்கொள்ள,
'சேர் உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி,
ஒரு கவிதையை நான் தொடங்குவன்.
அடுத்த அடி நீங்கள் சொல்லவேணும், முடியுமா?' என்று சவால் விட்டான்.



'ஓஹோ அப்படியா! எதைப்பற்றிப் பாடுவாய்.'
வித்துவான் கேட்கும்பொழுதுதான்,
அந்த இளம்ஆசிரியை மழையில் நனைந்தபடி உட்புகுந்தார்.
'அதோ! அவர்தான் பாடுபொருள்.'
நண்பன் சொல்ல வித்துவான் உற்சாகமானார்.
'தொடங்கு பார்க்கலாம்.'
வித்துவான் உத்தரவு கொடுக்க, அவன் முதலடியைத் தொடங்கினான்.



'மாரி மழை பொழிய' என்று அவன் பாட்டை நிறுத்தி,
வித்துவான் முகத்தைப் பார்க்க, நாங்களெல்லாம் உற்சாகமானோம்.
எங்கள் உற்சாகம் ஆசிரியர்களையுந் தொற்றிக்கொள்ள,
குலுங்கிச் சிரித்தபடி சிவராமலிங்கம் மாஸ்டர்,
'என்ன வித்துவான் தொடரலாமே' என்றார்.
'அப்படியா?' சிறிது யோசித்த வித்துவான்,
'மங்கையர்கள் குடைபிடிக்க' என்று கவிதையைத் தொடர்ந்தார்.
நாங்கள் நண்பனைத் தூண்டினோம்.
உற்சாகமடைந்த அவன் உடனே தொடர்ந்தான்.
'சாரி நனைந்திருக்க' என்று அவன் நிறுத்த,
வித்துவான் முகத்தில் வெட்கத்துடன் கூடிய திகைப்பு. சற்று நாணினார்.



'டேய் வம்புப்பெடி இவ்வளத்தோடவிடு' அவர் பின்வாங்க,
'அண்ணை, விட்டுட்டால் நீங்கள் தோற்றிட்டதாக அர்த்தம்.'
வித்துவான் வேலன் தூண்டினார்.
'எட தம்பி! நானா தோற்பேன். சொல்லட்டுமா?'
கேட்டு நிறுத்திய வித்துவான் பின் மீண்டும் நாணினார்.
'சொல்லுங்கோ? சொல்லுங்கோ?' என நாங்கள் 'கோரஸாய்' க் குரல் கொடுக்க,
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,
'டேய் நீ சொன்னவரிகளை திருப்பச்சொல்லு! நான் முடிக்கிறன்' என்றார்.
நண்பன் வரிகளை அடுக்கினான்.
'மாரிமழை பொழிய 
மங்கையர்கள் குடைபிடிக்க,
சாரி நனைந்திருக்க...'  நண்பன் நிறுத்த,
இரகசியமான குரலில் குறும்பு கொப்பளிக்க,
'சங்கதிகள் தெரியுதம்மா ஆஆ' என்று, வித்துவான் நீட்டி முடிக்கவும்,
நாங்கள் போட்ட சத்தத்தில், கல்லூரிக் கட்டிடமே ஒருதரம் ஆடிப்போனது.



ஆணவம், அகங்காரம், மமதை,
இங்ஙனம் பல சொற்களால் சொல்லப்படும் ஒன்று,
எல்லோரிடமும் இருக்கிறது.
'நான்' என்பதன் வெளிப்பாடாய் அமையும் சொற்கள் இவை.
இந்த நான் என்பது எது?,தத்துவமாய் ஆராய இக்கட்டுரை பொருத்தமானதல்ல.
ஆனால் ஒன்று,
இச்சொல்லை விளங்க முற்படுவது,
அறிவின் 'மூலம்' அறிய விரும்புவார்க்கு அவசியமான முயற்சி.
இது பற்றிப் பலதரம் யோசித்திருக்கிறேன்.
எமது செயற்பாடுகளில்,
'நான்' என்பதன் மூல வெளிப்பாடாய் அமையும் இயக்கம் எது?
அறிவுதான் என்பது என் கருத்து.
பல செயற்பாடுகளிலும், ஆணவத்தின் அடையாளம் வெளிப்பட்டாலும்,
அவ் எல்லாச் செயற்பாடுகளினதும்  'மூலமும்;' அறிவுதான் என்பதால்,
அறிவுதான் ஆணவத்தின் வித்தாய் விளங்குகிறது என்பேன்.



பலசாலி, தான் பலவீனப்பட்டால் அதை வெளிப்படையாய்ச் சொல்கிறான்.
பணக்காரன் தான் ஏழ்மைப்பட்டால் அதை வெளிப்படையாய்ச் சொல்கிறான்.
ஆனால் ஓர் அறிவாளி தான் மழுங்கிவிட்டால்,
அதை வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்குகிறான்.
நான் ஏழையாகிவிட்டேன் என்பதிலோ,
நான் பலவீனன் ஆகிவிட்டேன் என்பதிலோ,
இல்லாத ஆணவச்சிதைவு,
நான் முட்டாளாகிவிட்டேன் என்பதில் இருக்கிறது.
என்னிடம் வீரம் இல்லை,
என்னிடம் செல்வம் இல்லை.
என்னிடம் ஆற்றல் இல்லை.
என்றெல்லாம் சொல்வதில் இல்லாத தயக்கம்,
என்னிடம் அறிவில்லை என்று சொல்கையில்,
எல்லோருக்கும் உண்டாகிறது.
காரணம், அறிவுதான் ஆணவ வித்து என்பதேயாம்.



அதனால்தான் கல்வியையும் கடக்க நினைத்தனர் ஞானியர்.
'கற்பனவும் இனியமையும்' என்கிறார் மணிவாசகர்.
விளங்கியவர்களுக்கு இது விளங்கும்.
கல்வியைக் கடக்கமுடியாமல்,கஷ்டப்படும் கற்றோர் பலரைக் கண்டிருக்கிறேன்.
தெரியாது எனும் சொல் தெரியாதோர் நம் அறிவுலகிற் பலர்.
அதனால், அறியாததை அறிந்ததாய்ச் சொல்லி,
தம் அறியாமையை அறிவித்து நிற்பார் இன்னும் பலர்.
அத்தகையோரைக் காணும்போதெல்லாம்,
வித்துவான் என் நினைவில் வருவார்.
கல்வியைக் கடந்து காட்டியவர் அவர்.
கல்வியைக் கடப்பதாவது?ஆணவத்தைக் கடப்பது.
ஆணவத்தைக் கடப்பதாவது?தன்னைக் கடப்பது.
வித்துவான் கடந்தார். விபரம் சொல்கிறேன்.



என் குருநாதர், பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன்
பேச்சாளர்களின் பேச்சாளர் அவர்.
வாய் திறந்தால் தமிழ் ஆனந்தஅருவியாய்க் கொட்டும்.
சிந்தனைக் கதவுகள் ஆயிரம் சடசடவெனத் திறக்கும்.
எங்கள் கம்பன்விழாவில் அவரது பேச்சு.
முதல் தடவையாய் யாழ் வந்திருந்தார்.
வித்துவானைவிட பல வயது இளையவர் அவர்.
சபை நிறைந்து வழிந்தது.
முன்வரிசை முழுதும் கற்றவர்கள் கூட்டம்.
அன்றைய பேச்சின் தலைப்பு 'காரைக்காலம்மையார்;'.



வித்துவானுக்கு அம்மையிடம் ஏற்கனவே பெரிய அனுதாபம்.
இரண்டு பெண்களைப் பெற்றவர் வித்துவான்.
அவர்களில் உயிரைப் பதித்திருந்தார் அவர்.
காரைக்காலம்மையாரிலும்,
பிள்ளைகள்மேல் கொண்டதுபோல் அன்பு அவருக்கு.
'பாவம் வாழ்க்கையைத் துலைச்சுப்போட்டுது' என்று,
எத்தனையோ தரம் என்னிடம் அம்மையாருக்காய் அழுதிருக்கிறார்.
எனக்குக் தெரிந்து,
காரைக்காலம்மையார் கணவரைப் பிரிந்ததற்காக, அழுத ஒரே மனிதர் இவர்தான்.



ஒருநாள் இலங்கை வானொலியில்,
எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடல் ஒன்று ஒலிபரப்பானது.
ஒரு விருத்தத்தை இராகமாலிகையில் பாடி உருக்கினார் எம்.எஸ்.
பாடலின் கடைசி வரி கண்ணீர் வருவிக்க,
பதிவு செய்த பாடலை பின் ஒருநாள், வித்துவானுக்குப் போட்டுக்காட்டி,
'சேர் இது யார் கவிதை?' என்று கேட்டேன்.
'திருப்பிப்போடு பார்க்கலாம்' என்றார்.
முதல்வரி கேட்டார்.
பாடலை  இனங்காணாதது அவர் முகக்குறிப்பில்  புரிந்தது.
இரண்டாம் வரி, மூன்றாம் வரியிலும் அதே முகக்குறிப்பு.
நான்காம் வரி தொடங்க, திடீரென முகக்குறிப்பில் மாற்றம்.
காரைக்காலம்மையாரின் பாடல் அது என இனங்கண்டு விட்டார்.
அது ஒரு மார்கழிமாதக் காலைப்பொழுது.
அம்மையின் பாடல் என்று தெரிந்த மறுகணமே,
அவர் முகம் அஷ்டகோணலாய் மாறியது.
தலையில் கைவைத்துக் கும்பிட்டார்.
'டேய் தம்பீ! இது எங்கட அம்மாட பாட்டடா',
என்ற மறுகணம் குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினார்.
இவை அம்மையார்மேல் அவர்கொண்ட பற்றுதலுக்குச் சான்றான சம்பவங்கள்.



அம்மையார் பற்றி என் குருநாதர் இராதாக்கிருஷ்ணனின் பேச்சுத் தொடங்கியது.
பத்து நிமிடத்துக்குள் சபை தன்னை மறந்தது.
காரைக்காலம்மையார் எங்களோடு வாழத் தொடங்கினார்.
சபை ஸ்தம்பித்தது.
திடீரென வித்துவானின் நினைப்புவர,
காரைக்காலம்மையார் மேல், அவர்கொண்ட பற்றைத் தெரிந்து,
அவர் இருக்கும் திசை பார்த்தேன்.
விழுந்து உருளாத குறையாக விம்மி விம்மி அழுகிறார்.
ம(க)ப்ளரால் கண்ணைத் துடைப்பதும்,
பேச்சுக்கேற்ப முகபாவங்களை மாற்றுவதுமாக,
மெய்மறந்து நின்றார். பேச்சு முடிந்தது.



கற்றோர் பலர் பேராசிரியர் இராதாக்கிருஷ்ணனுக்குக் கைகொடுக்கப் போயினர்.
வேறு சிலர் கைபிடித்து வணங்கினர்.
இன்னும் சிலர் தாமும் அம்மையைப் படித்ததை,
பேராசிரியரைப் பாராட்டுவதுபோல் வெளிப்படுத்தினர்.
கூட்டத்தை விலக்கி விம்மியபடி உள்நுழைந்தார் வித்துவான்.
ம(க)ப்ளரை எடுத்து இடுப்பிற் கட்டினார்.
கண்ணீர் சோர நெடுமரமாய் எனது குருநாதர்; காலில் விழுந்தார்.
கூடியிருந்த கற்றோர் திகைத்துப்போயினர்.
என் குருநாதர் பதறினார்.



அழுதுமுடிந்து வெளியே வந்த வித்துவானை, சில 'பட்ட' மரங்கள் பரிகசித்தன.
'உங்கட படிப்பென்ன? அறிவென்ன? வயசென்ன?
அவரிட காலில நீங்கள் போய் விழுகிறியள், உங்களுக்கு விசரே'
அவ் 'வற்றல் மரங்களின்' வம்பு கேட்டு, துளியும் ஆணவப்படாமல்,
'அம்மாவ என்ர கண்ணில காட்டிப்போட்டாரடா.
கும்பிடாம எப்படி இருக்கிறது?' என்றபடி,
மீண்டும் அழத்தொடங்கினார்.
அன்பால் அறிவைக் கடந்த, அவ் அற்புதர்.



                                                                                               (அடுத்தவாரமும் வித்துவான் வருவார்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.