ஆவதை அறிவதே அறிவு!

 ஆவதை அறிவதே அறிவு!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
ண்மையற்ற வார்த்தைகளைப் பேசி,
மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்புவதே,
இன்றைய அரசியலாளர்களின் வேலையாகிவிட்டது.
தனி ஈழக்கொள்கையில் எமது,
சாம, பேத, தான, தண்ட முறைகளெல்லாம்,
தோற்றுவிட்ட இன்றைய நிலையில்,
இயலாமையால்,
மீண்டும் சமாதான முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் நாம்,
அவ்வுண்மையைச் சரவரப் புரிந்து கொண்டோமா? என,
எண்ண வைக்கும் வகையில்,
நம் தலைவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன.
அவர்களது பேச்சுக்களை உண்மையென நம்பி,
தமிழ் மக்களில் பலரும் கூட,
நிதர்சனம் உணராது பொய் நிமிர்வு காட்டி,
மீண்டும் நம் இனத்தை அழிவின் திசைநோக்கி,
நகர்த்தத் தொடங்கியிருக்கின்றனர்.
 



சென்றவாரம் யாழ்ப்பாணம் சென்றபோது,
நியமன பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தினி அவர்கள்,
இராணுவம் தமிழ்மக்களின் காணிகளை விடுவிக்காவிட்டால்,
மீண்டும் ஆயுதப்போர் வெடிக்கும் என,
அறைகூவல் விடுத்த செய்தியை,
ஒரு பத்திரிகை, 
‘கொட்டை’ எழுத்துக்களில் பிரசுரித்திருந்ததைக் காணமுடிந்தது.
பொய்யான பொறுப்பற்ற ஒரு செய்தியை,
பொறுப்புடன் இருக்கவேண்டிய அரசியல்வாதியும், ஊடகமும்,
அக்கறையின்றித் தத்தம் பிரபல்யத்திற்காய்,
வெளியிட்ட அவலம் கண்டு திகைத்தேன்.



நாம் எங்கு நின்றோம்? 
எதைக் கடந்து வந்தோம்?
அதனால் பெற்ற அனுபவங்கள் யாவை?
நாம் இன்று நிற்கும் இடம் எது?
இனி அடையவேண்டிய குறிக்கோள் எது?
அதற்கான வழிகள் யாவை?
இவ்வளவற்றையும் திட்டமிடாத எந்த இனமும்,
உய்வடைந்ததாய் வரலாறு இல்லை.
அவற்றைத் தெளிவுறத் திட்டமிட்டு,
இனத்தை உயர்வடையச் செய்வதற்கே,
மக்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
அங்ஙனம் பொறுப்போடு இருக்கவேண்டிய தலைவர்களே,
தம் பிரபல்யம் நோக்கி நடக்கமுடியாதவற்றை,
நடத்தப்போவதாய் உரைத்து,
தம் நெஞ்சறிந்து பொய்மை உரைக்கத்தலைப்பட்டால்,
அந்த இனத்தின் கதி அதோகதிதான்.
தந்தை செல்வா தமிழினத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.
மேற்சொன்ன வகையினரான பொய்மையாளர்கள்தான்,
நம் தலைவர்களாய்த் தொடர்ந்தும் இருக்கப் போகிறார்கள் என்றால்,
நம் இனத்தைக் கடவுளாலும் காப்பாற்றமுடியாமற் போய்விடும் என்பது சத்தியமாம்.



நம் தலைவர்கள் இத்தனை அழிவுக்குப் பின்னும்,
தம் நிலையையும் உணரவில்லை,
இனத்தின் நிலையையும் உணரவில்லை,
உலக அரசியலின் நிலையையும் உணரவில்லை என்பது,
தெளிவாய்த் தெரிகிறது.
அதென்ன தன் நிலை, இனத்தின் நிலை,
உலக அரசியல் நிலை என்கிறீர்களா?
வாருங்கள் விரிவாய்ச் சொல்கிறேன்.



அரசியல் அறிய ‘மார்க்ஸையும்’ ‘லெனினையும்’ தான்,
கற்கவேண்டும் என்பதில்லை.
அவர்களைவிட ஆயிரம்படி உயர்ந்து அரசியல் கற்பித்த,
ஒரு கிழவன் நம் இனத்திலும் இருந்திருக்கிறான்.
அந்தக் கிழவனுக்கு வள்ளுவன் என்று பெயர்.



அந்த வள்ளுவக்கிழவன் தன் நூலில்,
ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதிகளை வரையறை செய்கிறான்.
ஒரு தலைவன் சிறந்த தலைவனாய்ச் செயற்பட,
ஆறு அங்கங்களை அவன் பூரணமாய்ப் பெற்றிருக்கவேண்டுமாம்.
அப்போதுதான் முழுமையான ஒரு தலைவனாய் அவன் இருக்கமுடியும் என்றும்,
அந்த ஆறு அங்கங்களையும் நிர்வகிக்க,
அவனுக்கு ஏழு தகுதிகள் வேண்டுமென்றும்,
தெளிவுபட எடுத்துச் சொல்கிறான் அந்த தமிழ் அரசியல் மேதை.



அதென்ன ஆறு அங்கங்கள், ஏழு தகுதிகள் என்கிறீர்களா?
சொல்கிறேன்.
தன் எண்ணங்களைச் சாதிக்கத்தக்க வலிமையான படை,
தன்மேல் நம்பிக்கை கொண்ட குடிமக்கள்,
மற்றவர்களிடம் கையேந்தவேண்டாத அளவிலான செல்வம்,
இறந்தகாலத்தை வைத்து வருங்காலத்தை உரைக்கவல்ல நுண்ணறிவு பெற்ற அமைச்சர்கள்,
ஆபத்துக்கு உதவவல்ல நட்பு,
சிறிய படையை வைத்துப் பெரிய படையை எதிர்கொள்ள உதவும் இயற்கை, செயற்கை அரண்கள்.

இவ் ஆறுமே ஓர் அரசன் பெற்றிருக்கவேண்டிய அங்கங்களாம்.



இவ் ஆறு அங்கங்களையும் வைத்து நிர்வகிக்க,
ஓர் அரசனுக்குத் தேவையான வள்ளுவன் சொன்ன ஏழு தகுதிகளை,
பின்னால் சொல்கிறேன்.
அதற்கு முன்பாக,
மேற்சொன்ன ஆறு அங்கங்களில் நம் தலைவர்கள்,
எவற்றையெல்லாம் பெற்றிருக்கிறார்கள் என்பதைச் சற்று ஆராய்வோம்.
அதை ஆராய்ந்தால் நம் தலைவர்கள்,
தம் நிலையை உணர்ந்து கொள்ளலாம்.



படை

நம் தலைவர்களிடம் ஏதேனும் படை இருக்கிறதா? வெளியில் சொன்னால் வெட்கக்கேடு, தம் கட்சிக்கென்று செயலாற்றவே உண்மைத்தொண்டர்கள் இல்லாத தலைவர்கள் நம்  தலைவர்கள். பதவிக்காகவும், புகழுக்காகவும் சூழ்ந்திருக்கும், ஒரு சில சுயநலமிகளைத் தவிர, இவர்களுக்கென்று ஒரு தொண்டர் கூட்டமே, இல்லாத நிலைதான் இன்றைய யதார்த்தநிலை. தம் கட்சி மாநாட்டைக்கூட  இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கூட்டி, இவர்களுக்குப் பின்னால் இத்தனைபேர் இருக்கிறார்களா என்று, எதிரிகளை வியக்கவைக்கும் ஆற்றல் கூட இல்லாதவர்கள்தான் இவர்கள். இவர்களுக்கு படையாவது மண்ணாவது. வள்ளுவன் சொன்ன இந்த முதல் அங்கத்தில், இவர்களுக்கான புள்ளி பூச்சியமே.



குடி

இந்த அங்கத்தைப் பொறுத்தவரையில் சிறு சிறு குறைகளைத் தவிர்த்துவிட்டால் இவர்கள் நல்ல புள்ளியையே பெறுகிறார்கள். தத்தம் குடும்பங்களை வெளிநாடுகளில் நல்லபடி வாழவைத்துக்கொண்டு, தம் பதவி ஆசைக்குத் நம்மைப் பலியாக்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டும், அதைப் பெற்றுத்தருகிறேன், இதைப்பெற்றுத் தருகிறேன் என்று இவர்கள் சொல்வதெல்லாம் பொய்கள் என்று தெரிந்து கொண்டும், தம் தாளத்திற்கு ஆடும் பொம்மைகளாய் மக்கள் எப்போதும் இருக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும், பதவிச்சுகம் கண்டால் தம் வாக்குறுதிகளைக் காற்றில் இவர்கள் பறக்கவிடுவார்கள் என்று தெரிந்து கொண்டும், முன் சொன்ன நிறைவேற்ற முடியாத தம் வாக்குறுதிகளுக்கான பொய்ச்சாட்டுகளுடன் அடுத்த தேர்தலில் தம்மைச் சந்திக்க இவர்கள் வருவார்கள் எனத் தெரிந்து கொண்டும், பாவம் இவர்களின் பொய்மைகளுக்கு தமக்குத் தாமே ஏதாவது சமாதானம் கூறி தமது ஏகோபித்த வாக்குகளால், விசுவாசம் காட்டி இவர்களை வெல்லச் செய்கின்ற குடிகளைப் பொறுத்தவரை நம் தலைவர்களைப் பெருந்தகுதியாளர்கள் என்றே சொல்லவேண்டும்.



செல்வம்

இந்த விடயத்தில் என்றும் மற்றவர்களிடம் கையேந்தும் பிச்சைக்காரர்களே நம் தலைவர்கள். தாமாகச் செல்வத்தைப் பெறும் வழியும் தெரியாது, யாரும் தரும் செல்வத்தை வைத்து செல்வத்தை வளர்க்கவும் தெரியாது, தானப் பசுக்களின் பல் ஆட்டிப்பார்க்கும் வித்தை மட்டுமே தெரிந்த வீணர்கள் இவர்கள். போர் முடிந்த நாள் தொட்டு மாகாணசபைக்காய்ப் போராடிய இவர்கள், பின்னர் தரப்பட்ட மாகாணசபையைக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏதும் செய்யத் தெரியாமல் நிற்கும் ஏமாளிகளாய் இருக்கின்றனர். உலக அனுதாபத்தைக் கொண்டும், புலம்பெயர்ந்து உலகெல்லாம் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெற்றும், தம் இனத்தின் பொருளாதாரத்தை வளர்க்கத் தெரியாத இவர்களுக்கு இந்த விடயத்திலும் புள்ளி பூச்சியமே.



அமைச்சு

மத்திய அரசில் அமைச்சுப் பொறுப்புக்களை நம் தலைவர்கள்  ஏற்காவிடினும் மாகாண அமைச்சில் அப் பதவிகளை இவர்கள் வகித்துக் காட்டுகின்றனர். அதுவும் நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது. வருடாந்த பட்ஜட்டில் மத்தியஅரசு செலவழிக்கத்தந்த பணத்தில் அறுபது வீதத்தைச் செலவழிக்கத் தெரியாமல் வருட முடிவில் விழிக்கிறார்கள். மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டியதும் ஒரே மாதத்தில் அத்தனையையும் செலவழித்து விட்டோம் என்று ‘கொலர்’ தூக்குகிறார்கள். ஆளுங்கட்சி, தமது கட்சி அமைச்சர் மேலேயே குற்றஞ்சாட்டுகிறது. சுன்னாகக் கிணற்றுநீரில்; கலந்தது பெற்றோலியப் பொருளா? என்று தெரியாமல் இன்று வரை கைபிசைகிறார்கள். பொருளாதாரம் வீழ்ந்து விட்டது, கல்வி வீழ்ந்துவிட்டது, ஒழுக்கம் அதிரடியாய் வீழ்ந்துவிட்டது, போர்ப்பாதிப்புற்றோரை இன்று வரை நிமிர்த்த முடியவில்லை. ஏனென்று கேட்டால் அத்தனையும் மத்திய அரசின் சூழ்ச்சி என்பதோடு அவர்களின் பதில் முடிந்து போகிறது. எனவே இந்த விடயத்தில் இவர்களுக்கு ‘மைனஸ்’ புள்ளிதான்.



நட்பு

மாகாணசபையில் வடக்கு மக்களையும்; பாராளுமன்றத்துள் வடக்குக் கிழக்கு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நடக்கும் சண்டை, தமிழ்ச்சினிமா கதாநாயகர்களின் சண்டையை விடப் பிரபல்யமாய் இருக்கிறது. இந்நிலையில் மற்றவர்களோடு நட்பாவது ஒன்றாவது. முதலில் தமிழ்நாட்டுக்காரர்கள் எமது பிரச்சினையில் தலையிடாதீர்கள் என்று கூறி தமிழ்நாட்டுக்காரர்களுடன் பகை தேடினர். வெளிநாட்டார் வெளியில் நில்லுங்கள் என்று கூறி புலம்பெயர்ந்தோர்களுடன் பிறகு பகை தேடினர். அதன் பிறகு பிரதமருடன் பகை, தமிழ் அமைச்சருடன் பகை, ஆளுநருடன் பகை, பிற தமிழ்க்கட்சிகளுடன் பகை என்பனவாய் இவர்களது பகைப்பட்டியல் நீண்டது. இவற்றை வைத்து நட்புக்கும் நமக்குமான தூரத்தை நாம் நன்கு கணித்துக்கொள்ளலாம். அயல் நாடுகளுடனான நட்பைக்கூட நம் தலைவர்கள் திட்டமிட்டு வழிப்படுத்துவதாய்த் தெரியவில்லை. மற்றவர்கள் மேய்க்க மேய்வதுவே இவர்களது அரசியலாய் இருக்கிறது. அதனால்  நம் தலைவர்களுக்கு இந்த விடயத்திலும் முழுத்தோல்வியே.



அரண்

ஒரு காலத்தில் காடு, மலை போன்ற இயற்கை அரண்களும் மதில், அகழி போன்ற செயற்கை அரண்களும் தேசக் காவலுக்குப் பயன்பட்டன. ஆகாய வழியாக யுத்தம் தொடங்கிய பிறகு அவ் அரண்களெல்லாம் பயனற்றுப் போனது உண்மை. இன்றைய நிலையில் வலிமையான புலனாய்வுத் துறையே தலைவர்களின் உண்மை அரணாம். நம் தலைவர்களுக்கு அத்தகு அரண் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. தம் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் மற்றொரு கட்சியை ஆதரிக்கப் போகிறார் என்பது தெரியாத நிலையிலும், தம் கட்சி மாகாணசபை அமைச்சர்கள் தமக்கெதிராகவே செயல்படப்போகிறார்கள் என்று தெரியாத நிலையிலும், தாம் நியமித்த முதலமைச்சரைத் தலைவராய்க் கொண்டே மாற்றணியினர் தமிழ்மக்கள் பேரவை  என்ற ஓர் அமைப்பைத் தொடங்கப் போகிறார்கள் என்று தெரியாத நிலையிலும்தான் தமிழர்களின் ஆளுங்கட்சித் தலைவர் இருக்கிறார். இவர்களுக்குப் புலனாய்வாவது அரணாவது. இவர்கள் படிக்கவேண்டிய விடயங்கள் அரசியலில் நிறைய இருக்கின்றன.



இனி இவ் ஆறு அங்கங்களையும் காக்க,
வள்ளுவர் சொல்லும்,
தலைவர்களுக்கு வேண்டியதான தகைமைகளைச் சொல்கிறேன்.
அதிலாவது நம் தலைவர்கள் வெற்றி கொள்கிறார்களா எனப் பாருங்கள்.
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை.
இவ் ஏழு தகுதிகளுமே ஆறு அங்கங்களையும் காப்பதற்கான அரச தகுதிகளாம்.
உங்களுக்கு விளங்குவதற்காக,
மேற் சொன்ன விடயங்களுக்கான விளக்கங்களைக் கீழே தருகிறேன்.

 
அஞ்சாமை உறுதி 
ஈகை  கொடைத்தன்மை
அறிவு  நுண்ணறிவு
ஊக்கம்  செயல் செய்வதற்கான மன எழுச்சி
தூங்காமை சோர்வின்மை
கல்வி  நூல் அறிவு
துணிவு முடிவெடுக்கும் திறன்



உறுதி - அதை கைதிகள் விடுவிப்பில் இவர்கள் காட்டிய உறுதிப்பாட்டின் இலட்சணத்தை வைத்தே நாம் அறியலாம். 

கொடைத்தன்மை - இவர்கள் தம் சொந்தப்பணத்தில் இனத்திற்குச் செய்த நன்மைகள் ஏதேனும் இருந்தால்த்தானே இது பற்றிச் சிந்திக்க முடியும். பொதுப்பணத்தில் கூட இவர்கள் செய்த கொடைகள் ஏதேனும் இருக்கிறதா என்ன?

நுண்ணறிவு - பொய்க்கும், தீமைக்கும் மட்டுமே இவர்களின் நுண்ணறிவாற்றல்.  காளியின் கொடி என்றபடியால்த்தான் சிங்கக் கொடியைக் காட்டினேன் என்ற சம்பந்தரின் சாட்டிலும், இரணைமடுக்குளத்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல அனுமதியாத இவர்களின் தலைகீழ் தீர்க்கதரிசனத்திலும் இவ் உண்மையைக் கண்டுகொண்டோம்.

மன எழுச்சி - இவ் ஆற்றலை தம் பதவிகளுக்காகவும் தம் உறவுகளின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

சோர்வின்மை - மாகாண முதலமைச்சரும் மத்திய எதிர்கட்சித்தலைவரும் தம்முதுமையையும், நோயையும் காரணங்காட்டி இனவளர்ச்சிக்கான முக்கிய கூட்டங்களிலும் கூட கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். மற்றவர்களில் பெரும்பான்மையினோரை தம் தொகுதிப்பக்கமும் காண முடிவதில்லை. தத்தம் தொகுதிகளில் இவர்கள் புதிதாய்ச் செயற்படுத்திய இனநலத்திட்டங்கள் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. இவற்றை வைத்து இவர்களின் சோர்வின்மையின் திறத்தை நாம் அறியலாம். 

நூல் அறிவு - அரசியல் நூல் அறிவு என்பதே இதற்கான அர்த்தம். இதில் இவர்களில் எத்தனைபேர் தேறுவார்கள் என உங்களுக்கே தெரியும்.

முடிவெடுக்கும்திறன் - கட்சியைக் குற்றம் சாட்டி மித்திரபேதம் செய்து அணிபிரிந்து நின்ற முதலமைச்சரின் பிரச்சினையிலும் கூட இன்றுவரை முடிவெடுக்க முடியாத  நிலைமையிலேயே தலைமையின் முடிவெடுக்கும் திறன் இருக்கிறது. தம்மைக் காக்கவே முடிவெடுக்கத் தெரியாதவர்கள் தமிழரைக் காக்கவா முடிவெடுத்துவிடப்போகிறார்கள்? 

இதுதான் நம் தமிழ்த்தலைவர்களின் இன்றைய தகுதிநிலை.
ஆறு அங்கங்களில் ஒன்றுமட்டுமே இருக்க,
அதைக் காக்க ஏழு தகுதிகள் எதற்கு என்று விட்டுவிட்டார்கள் போலும்.



தகுதிகள் அற்றவர்களிடம் தலைமைத் தரத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்?
அதனாற்றான் தம் நிலை அறியாது,
இனத்தை ஆபத்திற்குள் தள்ளும்,
பேச்சுக்களிலும், செயல்களிலும் நம் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
யதார்த்தத்திற்கு உதவாத உணர்ச்சிப் பேச்சுக்கள்,
மக்கள் மத்தியில் தமக்கு மவுசை உண்டாக்கும் என்பதற்காகப் பேசும் அவர்களுக்கு,
வேண்டாதன சொல்லி மக்களைத் தூண்டி விட்டுவிட்டால்,
பின் தாம் நினைத்தாலும் கூட,
அவர்களை இறக்க முடியாது எனும் உண்மை ஏனோ தெரியவில்லை.
இப்படித்தான் முன்பு கூட்டணியினர் மக்களின் உணர்ச்சிகளைக் கிளறி,
பின்னர் அவ் உணர்ச்சிகளுக்குத் தாமே பலியாகினர். 
பின்பு வந்த ஆயுதக்குழுக்களும் தனி ஈழத்தைத் தவிர வேறு பேச்சில்லை என்று,
மக்களின் உணர்ச்சிகளைக் கிளறி விட்டதால்,
பின்னர் உலகநாடுகள் நம் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்த போதும்,
அதனை இறங்கி ஏற்கமுடியாமல் வீணாய் அழிவு தேடினர்.
இவற்றையெல்லாம் அனுபவபூர்வமாகப் பார்த்தபிறகும்,
மீண்டும் முட்டாள்த்தனத்தை,
முதலாம் அத்தியாயத்திலிருந்து தொடங்க நினைக்கிறார்கள் நம் தலைவர்கள்.
தடுப்பார் இல்லாது போனால் கேடு விளையப்போவது நிச்சயம்.



தலைவர்களின் நிலையைக் கண்டோம்.
அடுத்து நம் இனத்தின் நிலையையும் காணல் வேண்டும்.
சனத்தொகையில் சிறுபான்மையினர்.
நில அளவில் குறுகி நிற்போர்.
பொருளாதார வளம் அற்றோர். 
இஸ்லாமியர், மலையகத்தார், கிழக்குத்தமிழர், வடக்குத்தமிழர் என பிரிந்து நிற்கும் நம் இழி நிலை.
தமிழ்த் தலைவர்களுக்கிடையிலான கட்சிச் சண்டையும், பதவிப்பித்தும்,

இவையெல்லாம் நம் இனத்தின் வெளிப்படையான பலவீனங்கள்.
ஒருவேளை உலகம் நெருக்கடி தந்து,
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? என்பது பற்றி,
தமிழர்கள் மத்தியில் ஓர் வெகுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், 
நாம் வெல்வோம் என்று எவராலும் உறுதி சொல்ல முடியாதுள்ளது.
இதுதான் நம் இனத்தின் யதார்த்த அவல நிலை.
பலவீனங்கள் நிறைந்துவிட்டன.
பலம் என்று பார்த்தால்,
இன்று ஈழத்தமிழர்கள் மேலான உலகத்தின் அனுதாபம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.



இவ்விடத்தில்த்தான் உலக அரசியல்நிலையை நாம் அறியவேண்டியுள்ளது.
இன்று உலகம் எம்மேல் காட்டும் அனுதாபம் கூட,
கருணையின் அடிப்படையால் விளைந்ததல்ல.
வல்லரசு நாடுகளின் தேவையின் அடிப்படையில் விளைந்தது.
இறுதிப்போரில் ஆயரக்கணக்கானோர் இறந்து கொண்டிருந்த போது,
நிறுத்து! என்று சொல்ல உலகின் எந்த நாடும் ஏன் முன்வரவில்லை?
ஏதோ வகையில் அவை எல்லாம் சேர்ந்துதான்,
அப்போரில் எம்மை அழித்தன என்பதுதான் நிஜம்.



இன்று எம்மீது அனுதாபம் காட்ட,
அந்நாடுகள் போட்டி போடுகின்றன.
தம் உறுப்பினர்களை அனுப்பி ஆராய்ந்து,
பிழை நடந்துவிட்டதாய் முதலைக்கண்ணீர் வடிக்கின்றன.
ஐ.நா.சபை போன்ற உலக அரங்குகளும்,
வலிமையுள்ள அந்த நாடுகளின் கைவயப்பட்டு,
அவை சொன்னதைச் சொல்லும் கிளிகளாய்த்தான் இயங்கும் நிலை.
பெரிய நாடுகள் போடும் வெற்றிக்கணக்கில்,
சிறிய நாடுகளைப் பலியாக்க, இனப்பிரச்சினைகள்தான்,
இன்று அவர்களுக்குக் கிடைக்கும் எளிய வழி.



இலங்கையின் நட்பால் தென்கிழக்காசியாவில்,
சீனா பலம்பெற்றுவிடாமல் இருப்பதற்காக,
மஹிந்த ஆட்சிக்கு எதிராக,
இந்தியாவும் அமெரிக்காவும் மனுதர்மம் பேசின.
இன்று தங்கள் சார்பான ஆட்சியாளர்கள் வந்ததும்,
அவர்கள் கருணை முழுவதும் இலங்கை அரசின் மீதாய் இருக்கிறது.
இடையிடையே ஒவ்வொருவர் வந்து எம்மீதான நியாயங்களைச் சொல்வதெல்லாம்,
இலங்கை அரசு மீண்டும் வேறு திசை திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே
இதுதான் பெரியநாடுகளின் உண்மையான அசுரமுகம்.
அனுதாபமாவது, மண்ணாவது.
அத்தனையும் சுயநல வியாபாரம்.



இந்த நிலையில்த்தான்,
தர்மம் நோக்கியோ,
உலகம் தந்த நெருக்கடியாலோ,
தற்போதைய ஆளும் தலைவர்கள்,
தமிழ்மக்களின் பிரச்சினையை ஒத்துக்கொண்டு,
அதனைத் தீர்க்க முன்வந்திருக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில்,
இது அவர்களுக்கான விஷப்பரீட்சை.
இனவெறியேற்றப்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்கள்,
தமிழர்கள் மீதான கருணை என்பதனையே,
தமது அழிவுப் பாதையின் ஆரம்பம் என்றுதான் கருதுவார்கள்.
இந்நிலையில் அவர்கள் வெறுப்பைத் தணித்து,
தமிழர்களை உரிமையோடு வாழ்விப்பது என்பது,
ஆமை மலையேறும் கதைதான்.



நிலைமை இப்படியிருக்க,
இவைபற்றி எவ்வித கவலையுமின்றி நம் தலைவர்கள்,
நம்மீதான உலக அனுதாபத்தைக் கண்டு,
இலங்கை முற்றாய் அஞ்சுவதாய்க் கருதி,
அவசரப்பட்டு தம் பேரத்தை.
அதிகாரத்துடன் பேச நினைக்கிறார்கள்.
அது தவறென்பதே என் கருத்து.
நமக்கான உரிமைகளை,
அவ்வளவு சுலபத்தில் ஒன்றும் பெற்றுவிடமுடியாது.
அவர்கள் சுரக்கமாட்டார்கள்.
நாம்தான் கறக்க வேண்டும்.
அதற்கு நிறைய நிதானம் தேவை.



பால் தொட்டுத்தான் பால் கறக்கலாம்.
அவசரப்பட்டு இதோ பால் கறக்கிறேன் என்று,
அழுத்தி மடியைப் பிசைந்தால் பால் வராது,
மாட்டிடம் இருந்து உதைதான் வரும்.
இவ் உண்மையை நம் தலைவர்களும், மக்களும்.
உடனடியாக உணர்ந்தேயாகவேண்டும்.
நம் பிரச்சினையை ஒத்துக் கொண்டு,
அவர்கள் ஓரளவு இறங்கி வந்திருக்கக்கூடிய இன்றையநிலையில்,
அதிகாரங்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவதைவிட,
அவர்களின் நட்பைச் சம்பாதிப்பதிலேயே நாம் முதலில் அக்கறை காட்டவேண்டும்.
பகைத்து நிற்கும் பேரினத்தார்க்கு நம் நட்பை வெளிப்படுத்த,
உலகக்காவலோடு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. 
அதைப் பயன்படுத்தி முதலில் இரு இனத்தாரிடமும் பதிவாகியுள்ள,
பல்லாண்டுப்பகையை நீக்க வழி செய்யவேண்டும்.
அங்ஙனமன்றி அதிகாரம் பேசினால் ஆகப்போவது ஒன்றுமில்லை.



இவ் உண்மையை நம் தலைவர்கள் தரிசிக்கிறார்களோ இல்லையோ,
பாதிப்புற்ற தமிழர்கள் தரிசித்தே ஆகவேண்டும்.
காரணம், துன்பம் வந்தால் நம் தலைவர்கள்,
எங்கோ ஓடி ஒளிந்து நல்லபடி தம் வாழ்வைத் தொடர்வார்கள்.
முன்பும் அப்படித்தான் செய்தார்கள்.
பொதுமக்களாகிய நாம்தான் துன்பத்தின் வலி அறியப்போகிறோம்.
நம்மைக் கிளறச் செய்து தம் வாழ்வின் வளம் தேடி நிற்கும்,
தலைவர்களைப் புறந்தள்ளி,
கடந்தகால சம்பவங்களிலிருந்து அனுபவம் பெற்று,
மக்கள் நிதானித்துச் செயற்பட்டால்,
தலைவர்கள் நிதானத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.



தலைவர்களால் சொல்லப்படும் வார்த்தைகள்,
செயற்படுத்தப்படக் கூடியவையா என்பது பற்றி,
ஆராயத்தவறுவோமானால் நாம் அறிவற்ற இனமாவோம்.
இக்கடமை ஊடகங்களுக்கும் உண்டாம்.
தலைவர்களை மட்டுமன்றி தம் கடமையை மறக்கும் ஊடகங்களையும்,
தமிழ்மக்கள் நிராகரிக்க முன்வரவேண்டும்.



ஒருதரம் அடிவாங்கினால் அது விதி.
திரும்பத்திரும்ப அடிவாங்கினால் அது அறிவீனம்.
தமிழர்கள் அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்கிறோம்.
அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றும்,
அறிவுடையார் ஆவது அறிவார்’ என்றும்,
நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என்றும்,
நம் தமிழ் அரசியல்ஞானி,
வள்ளுவன் சொன்னதை மறப்போமானால்,
நம்மை உலகம் அறிவாளிகளாய்க் கணிக்காது.
அது நிச்சயம்!
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.