எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

யர் கவிஞர்களின் கவிதையுள்ளம்,
என்றும் உன்னதங்களிலேயே பதிந்திருக்கும்.
அதனால்த்தான் கவிஞர்களை,
அவர்தம் கவிதைக்கூடாக மட்டும் தரிசிக்கும் முறைமையை,
நம் தமிழ்ப்புலமை மரபு கொண்டிருந்தது.
கவிஞர்களின் கவிதைகளைப் பேணிய தமிழ்மக்கள்,
அவர்தம் வாழ்க்கை வரலாற்றை பேணத் தவறினர் என்று,
நவீன ஆய்வாளர் சிலர் இன்று சொல்லி வருகின்றனர்.
அஃது வரலாற்றின் மீதான அக்கறையீனத்தால் செய்யப்பட்ட செயலன்றாம்.
நம் கல்வி மரபு நினைந்தே அங்ஙனம் செயற்பட்டது.

✷ ✷ ✷
 


முக்குணவயப்பட்ட மனிதர் அனைவரிடமும்,
நன்மை, தீமை எனும் இரு தன்மையும் படிந்திருத்தல் இயல்பு.
அவ்வியல்பு உயர் கவிஞர்தம் வாழ்க்கையிலும் அமைந்திருக்கும்.
கவிஞர்களின் கவிதைகள் அவர்தம் சாத்வீக உயர்வில் பிறப்பவை.
அதனூடாக ஒரு கவிஞனைத் தரிசித்தபிறகு,
அவனது இராஜச, தாமச குணங்களால் பிறக்கக் கூடிய,
கீழ்மை இயல்புகளை அறிந்து கொள்வோமானால்,
அவ் உயர் கவிஞனின் கவிதை இலட்சியங்கள் கொச்சைப்படுத்தப்படும்.
அதனால்த்தான் நம் ஆன்றோர்கள் கவிதையூடாக மட்டுமே,
கவிஞனைத் தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

✷ ✷ ✷

கவிஞனின் ஏனைக் குணாதிசயங்கள்,
வெறுமனே நாம் பயனில் சொல் பாராட்டுதற்கும் புறங்கூறுதற்கும் மட்டுமே பயன்படுமாம்.
அறிவுலகிற்கு அவை தேவையற்றவை என்பதால்த்தான்,
கவிஞர்தம் வாழ்க்கைப் பதிவுகளைப் புறந்தள்ளி,
கவிதையூடாகக் காணும் கவிஞனின் உன்னத விம்பத்தை மட்டும்,
பற்றி நின்றது நம் தமிழர்தம் அறிவுலகம்.
'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' எனும்,
உன்னதக் கொள்கையின் விளைவு அஃது.

✷ ✷ ✷

காலத்தால் முந்திய கவிஞர்கள் ஓரளவு தப்பிவிட,
கால அருகாமை கொண்ட கவிஞர்களுக்கு,
இன்றைய நவீன அறிவியலாளர்கள்,
ஆராய்ச்சி என்ற பெயரால் செய்யும் கொடுமை எல்லையற்றது.
அக் கவிஞர்களின் வாழ்க்கையில் நடந்ததாய்க் கூறப்படும் கீழ்மைகளை,
தேடி இனங்கண்டு  நிச்சயமற்ற அக்குற்றங்களுக்குக் கவிஞனை ஆளாக்கி,
மாணவரை அக்குற்றங்களூடு கவிஞனைத் தரிசிக்க வைக்கின்றனர் இவர்கள்.
அச் செயலால்,
கவிஞனால் கிட்டும் உயர் பண்பாட்டு விளைவுகளை,
மாணவர் அடையாவண்ணம் சிதைத்து,
அறிவின் பெயரால் இவர்கள் வீணே பொழுது போக்குகின்றனர்.

✷ ✷ ✷

அங்ஙனம் இவ் ஆய்வாளர்களால் சிதைக்கப்படும் உயர் கவிஞர்களில் ஓருவனாய்,
நம் பாரதியும் ஆகியது வரலாற்றுக் கொடுமையாம்.
இலக்கியம் எனும் ஆகாயத்தில் பறக்கும் வாய்ப்பைப் பெற்றும்,
தம் இயல்பிற்கு ஏற்ப,
இரைதேடும் பருந்துகளாய்மேலிருந்து கீழ் நோக்கி,
அழுக்குக்கான ஆராய்ச்சி செய்யும் இவர்தம் இயல்பை என்னென்பது?

✷ ✷ ✷

இக்கட்டுரை பாரதியின் உன்னத தரிசனமொன்றை,
ஆராயும் நோக்கமாய் எழுதப்படுகிறது.

✷ ✷ ✷

கற்பனை உலகில் சஞ்சரிக்கும் கவிஞனுக்கு,
வையத்தில் வானம் நணித்து என்று வள்ளுவர் சொன்னாற்போல,
இப்பூவுலகை விட மற்றைய உலகுகள் அண்மித்தவையாம்.
இயற்கையில் மனம்பதித்து அதனுள் கரைந்து போவது,
ஓர் உயர் கவிஞனின் உன்னத இயல்பு.
கவிதா உலகில் சஞ்சரிக்கும் போது,
கவிஞன் தன் தனிவாழ்க்கை நிலையை மறந்து போகிறான்.

✷ ✷ ✷

ஆசையும், அவாவும் அதிகரித்த மனிதன்,
இறை தந்த வரங்களை என்றும் தரிசிப்பதில்லை.
அவன் இருப்பவற்றின் பெருமை உணராது,
இல்லாதவை தேடி ஏக்கமுறுகிறான்.
அதனால் துன்பத்தால் தாக்கமுறுகிறான்.
இவ்வேடிக்கை மனிதரைப்போல வீழ்பவனா நம் பாரதி?
அவன் பார்வை வேறுவிதமாய் அமைகிறது.

✷ ✷ ✷

உணவுக்கே திண்டாடும் அளவிற்கு பாரதியின் இல்லத்திலோ வறுமை.
பலதரம் தைத்த 'கோர்ட்டை' உடையாய் அணிந்து நிற்கிறான் அவன்.
கடன்கொடுப்பாரும் இல்லாத நிலையில் கருகும் வாழ்வு.
மனைவி செல்லம்மாள் வறுமையைப் பொறுமையால் வென்றுகொண்டிருக்கிறாள்.
இதுவே பாரதியின் யதார்த்தவாழ்வு நிலை.

✷ ✷ ✷

இந்நிலையில் ஒருநாள்,
தன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருக்கிறான் பாரதி.
அவன் மனம், இறைவனின் படைப்பில் பதிந்த,
வியத்தகு விந்தைகளில் மூழ்கி,
அதன் ஏற்றமும் எழுச்சியும் கண்டு சிலிர்க்கிறது.
தன்னை மறக்கிறான் அவன்.
வறுமையின் உச்சத்தில் தனிவாழ்வு அமைந்ததால்,
தன்னைத் துன்பங்கள் சூழ்ந்திருக்க,
இறைவனின் படைப்பான இவ்வுலகம்,
அப்பெருங்கவிஞனுக்கு இன்பமயமாய்த் தோன்றுகிறது.

✷ ✷ ✷

சாத்வீக குணம் உச்சம் பெற,
இயற்கையில் அவன் மனம் ஒன்றுகிறது.
இறைவனின் படைப்பு ரகசியங்களுள் உள்நுழைந்து,
ஒவ்வொன்றாய் அனுபவிக்கத் தொடங்குகிறான் அவன்.
அப்படைப்புகளுள் ஆழ்ந்திருக்கும் இனிய அனுபவங்கள்,
நெஞ்சை வருட திகைக்கிறது அவன் உள்ளம்.
இத்தனை இன்பக்கடலுக்குள்ளா நாம் ஆழ்ந்திருக்கிறோம் என ஏக்குறுகிறான்.
தன் தனிவாழ்வு வறுமை அவனுக்கு ஒரு பொருட்டாகவேபடவில்லை.
உலகெல்லாம் பரவிக்கிடக்கும்,
இறைவனால் படைக்கப்பட்ட இன்ப அனுபவங்களை நினைந்து,
பாடத்தொடங்குகிறான் அவன்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா!
கவிதை அடியின் நிறைவில் மூன்றடுக்காய் இறைவனை விளிப்பதன் மூலம்,
தன் வியப்பின் விரிவை வெளிப்படுத்துகிறான் கவி.

✷ ✷ ✷

திடீரென அவனின் எண்ணம் கலைத்து,
அவன் முன்னால் ஓர் பூனை ஓடுகிறது.
உயர் எண்ணத்தின் உச்சியில் இருந்த பாரதிக்கு,
அப்பூனையிலும் இறைவனின் புதுமை தெரிகிறது.
நம்மைப்போல அந்தப் பூனையை வெறுமனே விலங்காய்த் தரிசிக்காமல்,
அதனை, உயிர் உடல் எனும் இரண்டின் கூட்டாய்த் தரிசிக்கிறது பாரதியின் அறிவு.
அசைவது பூனையின் உடல்.
அசைவிப்பது அதனுள் அமைந்த உயிர்.
உயிர் சித்தென்று சொல்லப்படும் அறிவுப்பொருள்.
உடல் அசித்தென்று சொல்லப்படும் அறிவில் பொருள்.
அறிவுப்பொருளான உயிர் அசைவிக்க,
அறிவில்பொருளான உடல் அசைவதைக் காண்கிறான் அவன்.
வேறு வேறு இயல்பு கொண்ட,
அறிவில் பொருளையும் அறிவுள் பொருளையும் ஒன்றாக்கி,
இயங்க வைத்த இறைவனின் செயலில் அவனுக்கு வியப்புண்டாகிறது.
அவ்வியப்பைக் கவிதையாக்குகிறான்.
சித்தினை அசித்துடன் இணைத்தாய்.

✷ ✷ ✷

பாரதியின் தேடல் தொடர்கிறது.
அசித்தாகிய உடல் என்பது எது?
சிந்திக்கத் தொடங்குகிறான் அவன்.
சடஉலகு பலவாய் விரிந்துகிடக்கிறது.
எனினும் அவற்றின் உட்கூறுகளை ஆராய,
அவை ஐந்து பொருள்களில் அடக்கமாவதை,
அன்றே அறிந்துரைத்தனர் நம் ஞானியர்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களே,
பலவாய் விரிந்த அசித்துப் பொருட்கள் அனைத்தினதும் மூலங்களாம்.
அந்த ஐந்து மூலங்களை வேறு வேறு விதத்தில் கலந்து,
ஆயிரமாயிரமாய் வேறுபட்டு விரிந்த சடஉலகை அமைத்த,
ஆண்டவனின் அற்புதம் நினைந்து திகைக்கிறான் பாரதி.
அத்திகைப்பில், தொடங்கிய கவிதை தொடர்கிறது.
அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகம் அமைத்தாய்.

✷ ✷ ✷

பஞ்சபூதங்களாகிய மூலப்பொருட்கள் ஐந்தினையும் கொண்டு,
மூண்டெழுந்து விரிந்து முழுமைகொண்டு நிற்கும்,
இறைவன் படைப்பை ஆழ்ந்து காண்கிறது மாகவியின் மனம்.
ஐந்தான மூலப்பொருட்களின் விளைவுகளை,
வியக்கும் வண்ணம் வௌ;வேறு தன்மைகளுடன்,
வர்ணக்களஞ்சியமாய் ஆக்கி வைத்திருக்கும் ஆண்டவனின் அற்புதம்,
அவன் அறிவில் பதிய கவிதையின் அடுத்த அடி பிறக்கிறது.
அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியமாகப் 
பலபல நல் அழகுகள் சமைத்தாய்.

✷ ✷ ✷

மாயையே பஞ்சபூதங்களின் 'மூலம்' என்கின்றது நம் சாஸ்திரங்கள்.
அதுவரை மாயையால் விளைந்த இவ்வுலகப் பொருள்களில் மயங்கிய பாரதியின் மனம்,
இம்மாயா உலகின் மகிமைகளை ஒன்றாய்க் கண்டுகளித்தல் கூடுமோ? எனச் சிந்திக்கிறது.
சிற்றறிவு கொண்ட மனிதர்கள் இவ்வுலகத்தினை,
ஒருமித்து ஒன்றாய் நோக்கும் ஆற்றல் பெற்றிலர்.
தத்தம் அறிவுக்கருவிகளின் அளவை ஒத்ததே,
அவரவர்க்கு அமைந்த காட்சிகளாம்.
இவ் உண்மை புரிய,
இறைப்படைப்பின் முழுமையை உணர முடியாதோ? என,
திகைக்கிறான் பாரதி.

✷ ✷ ✷

விரிந்த இப்பிரபஞ்சத்தின் விளைவுகளை,
ஒன்றாய் நோக்கி உவக்க ஒருவரால் முடியுமா?
முடியும் என்கின்றனர் நம் தத்துவவியலாளர்கள்.
இப்பிரபஞ்சமே இறைவனின் வடிவமாம்.
அதனால்த்தான் உடல் முழுவதும் நம் உயிர் வியாபித்து நிற்பது போல,
இப்பிரபஞ்சம் முழுவதிலும் இறைவன் வியாபித்து நிற்கிறான்.
அவனாலன்றி இப்பிரபஞ்சம் முழுதினையும் முற்றாய் உணர்தல் ஆகாதாம்.
அம் முற்றுணர்வு நிலையை உயிர்கள் அடைதல் கூடுமோ?
மீண்டும் கேள்வி பிறக்க
கூடும் என்று  நம் தத்துவசாஸ்திரங்கள் பதிலுரைக்கின்றன.
அவ் இறைவனோடு வேறின்றி ஓர் உயிர் இரண்டறக்கலக்குமாயின்,
அவ் உயிரும் இறை நிலையுற்று,
இப்பிரபஞ்சத்தில் முழுமையாய் வியாபிக்கும் ஆற்றலைப் பெறுமாம்.
இறையோடு உயிர் இரண்டறக் கலக்க,
இப்பிரபஞ்சம் முழுதுடனும் கலந்தும் அதைக் கடந்தும் நிற்கும் ஆற்றல்,
அதற்கும் இயல்பாய் வாய்க்குமாம்.
இந்நிலையையே முத்தி நிலை என்கின்றனர் ஆன்றோர்.

✷ ✷ ✷

இன்பமயமாய்த் தோன்றும் இவ்வுலகைக் கண்டு மகிழ்ந்த பாரதி,
இன்பமயமான இவ்வுலகை,
இச்சிற்றறிவைக் கொண்டு முழுமையாய் உணர,
முத்தி என்ற ஓர் நிலையை அமைத்த,
இறைவனின் கருணையை நினைந்து வியக்கிறான்.
வியப்பு கவிதையாய் தொடர்கிறது.
முத்தி என்று ஒரு நிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய்.

✷ ✷ ✷

இவ்வுலகை முழுமையாய் உணர,
முத்தி நிலையே தீர்வு என்று அறிந்ததும்,
அம்முத்தி நிலையை அடைதற்காம் வழி என்ன? என்று,
ஆராயத் தலைப்படுகிறது கவியின் உள்ளம்.
அவ் ஆராய்ச்சியின் முடிவாய்,
முத்தியை அடையும் வழி பக்தியே எனத் தெளிவு பிறக்கிறது.

✷ ✷ ✷

இறைவனோடு ஒன்றுதலாகிய உயர் முத்தி நிலை என்பது அரிய விடயமாம்.
உயர்ந்த ஓர் நிலையை அடைய,
கடினமான பாதையைக் கடப்பது பொது விதியாகும்.
முத்தி எனும் உயர் நிலையும் அங்ஙனமோ எனின் அன்றாம்!
முத்தியை அடைதற்காம் வழியான பக்தியோ,
எய்துதற்கு எளிதான இனிய வழியாம்.
அன்பே அவ்வழியின் ஆரம்பநிலை.
அன்பு செய்யச் செய்ய அவ்வழி தானே திறந்து,
செய்வாரை உள் ஈர்த்துச் சிறப்பிக்கும்.
அன்பு செய்தல் ஆனந்தமன்றோ.
முத்தி எனும் பெரும் பேறிற்கு,
பக்தி எனும் எளிய பாதை அமைத்த,
இறைவன் தன் அருள் நினைந்து விதிர்விதிர்க்கிறது பாரதியின் உள்ளம்.
அவ்விதிர்ப்பு கவிதையாய்த் தொடர்கிறது.
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய்

✷ ✷ ✷

பக்தி நிலையினை விரிக்க நினைந்து தொடர்கிறான் அவன்.
முத்தி நிலையை முழுதும் உணரும் நிலையாய் வகுத்துரைத்த பாரதி,
பக்தி நிலையை வகுத்துரைக்க முயன்று முடியாமல் தோற்கிறான்.
அன்பில் மூழ்கும் அந்நிலையை,
வார்த்தைகளால் வரையறுக்கத் தெரியாமல் தடுமாறுகிறது பாரதியின் அறிவு.
அதனால் பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் என்று உரைத்த அவன்,
முன் உரைத்த மற்றை விடயங்களுக்கு விளக்கம் உரைத்தாற்போல,
பக்தி நிலைக்கு விளக்கம் உரைக்க முடியாமல் குழம்புகிறான்.
பக்தி எனும் விடயத்தை நினைந்து நெகிழ்ந்து உருகிய பாரதி,
வார்த்தைகளால் அதனை உரைக்கமுடியாது திகைத்து,
பரமா! பரமா! பரமா! என,
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கக் கதறி,
தன் கவிதையை முடிக்கிறான்.
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய்-எங்கள்
பரமா! பரமா! பரமா!

✷ ✷ ✷

ஓர் ஒப்பற்ற கவிஞனின் உயர் எண்ணப்பதிவை,
கேட்டுக் கிறுகிறுத்துப் போகிறது நம் நெஞ்சம்.
கவிதையே கவிஞனாம்.
கவிஞனே கவிதையாம்.
இப்பாடலூடு நல்ல கவிதையையும்,
நல்ல கவிஞனையும் தரிசித்த திருப்தி நமக்கு.
ஒரு சிறந்த கவிஞனின் சிறு கவிதையினுள்,
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
இறைவா! இறைவா! இறைவா! என,
வியந்து நிற்கிறது நம் அறிவு.

✷ ✷ ✷
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.