எறிகணை 47

எறிகணை 47
எறிகணை 05 Sep 2026

 

#கேள்வி :

அண்மையில் ஏதாவது புதிய சினிமாப்படம் பார்த்தீர்களா?

#பதில் :

கம்பன்விழாவிற்காக டெல்லி சென்றபோது, நான் தங்கிய ஹோட்டலில் இருந்த ரி.வி.யில் தற்செயலாக ஒரு படத்தைப் பார்க்க முடிந்தது. படத்தின் பெயர் “எமெர்ஜென்ஸி” என்பதாகும். அது ஒரு ஹிந்திப்படம். இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கைதான் அப் படத்தின் கதை.

இந்திராகாந்தியின்மேல் எனக்குக் கொள்ளைப்பிரியம் உண்டு. அவருடைய ஆளுமைச் செயல்களால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். வெற்றியின் உச்சத்தில் இருந்தபோதும், தோல்வியின் அடித்தளத்தில் இருந்தபோதும் அவர் காட்டிய நிதானத்தையும், ஆளுமையையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

சிலரிடம் இந்திராகாந்தியைப் பற்றிய மறுதலைப் பார்வை ஒன்றும் இருக்கத்தான் செய்கின்றது. அரசியலில் அது தவிர்க்கமுடியாதது என்று நினைக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய ஒரு தேசத்தை தனித்த ஒரு பெண்ணாக நின்று பலகாலமாய் வழிப்படுத்திய அவரின் துணிவையும், வீரியத்தையும் யாராலும் இலேசில் நிராகரித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். அந்த ஆற்றல்கள் அவருக்குப் பயின்று வந்தவையல்ல.  அது இயற்கையால் அவருக்கு அளிக்கப்பட்ட கொடை.

•             இந்திய, பாகிஸ்தான் யுத்தத்தின்போது, எல்லைப் பகுதிக்குச் சென்று தனது போர் வீரர்களோடு நின்று அவர் காட்டிய கம்பீரம் ஆகட்டும்,

•             அந்த யுத்தத்தில் மூக்கை நுழைக்க வந்த அமெரிக்காவை, ரஷ்யாவின் துணையால் தடுத்து நிறுத்திய இராஜதந்திரம் ஆகட்டும்,

•             தேர்தலில் முழுத்தோல்வி அடைந்தபொழுது, “அத் தோல்விக்கான பொறுப்பை நானே தனித்து ஏற்கிறேன்” என்று அறிவித்த நேர்மையில் ஆகட்டும்,

•             இரும்புப்பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமரான மார்க்கிரட் தட்சர் அவர்கள் இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தியாவைக் கண்டித்து உரையாற்றிய பொழுது, மரபை மீறி உடன் எழுந்து அவருக்குப் பதிலுரைத்த துணிவில் ஆகட்டும்,

•             தேசத்தைப் பிளக்க முயன்ற சீக்கியத் தீவிரவாதிகளை, துணிந்து அடித்து நொருக்கிவிட்டு, “என் மக்களுக்கெதிராக, நானே போர் தொடுக்கவேண்டி வந்துவிட்டது. மனவருத்தத்தோடும், பதட்டத்தோடும், பிரார்த்தனையோடும் தேசத்தின் நலன் கருதி அதனைச் செய்தேன்” என்று பேசியதில் இருந்த பொறுப்புணர்ச்சி ஆகட்டும்,

•             தேர்தல் தோல்வியோடு காங்கிரஸ்கட்சி பிளவுபட, இந்திரா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, மீண்டும் உயிர்த்தெழுந்த ஆளுமையில் ஆகட்டும்.

•             அக்கட்சியை ஆரம்பிக்கத் தனக்கு முழு ஆதரவு தந்த, அப்போதைய கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், பின்னர் தன்னை நிர்வகிக்க முயல, முக்கியமான தேர்தல் நேரத்தில் அவரைக் கட்சியை விட்டுத் தூக்கி எறிந்து, அவரது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிமிர்வில் ஆகட்டும்.

•             ஜனதாக் கட்சியினர் பாராளுமன்றத்தில் தன்னைத் தடுப்புக்காவலில் வைத்தபோது, அங்கிருந்தே அமைச்சர் சரண்சிங்கின் பிறந்தநாளுக்குப் பூங்கொத்து அனுப்பி வைத்து, ஜனதாக் கட்சியினருக்குள் குழப்பம் ஏற்படுத்திய சூழ்ச்சியில் ஆகட்டும்,

•             முழுக்க முழுக்கத் தான் நம்பியிருந்த தனது இளையமகன் சஞ்சய்காந்தி, “ஹெலிகொப்டர்” விபத்தில் இறந்தபொழுது, வீட்டில் தன் பிள்ளையின் சடலம் கிடக்க, அவ் விபத்தில் மகனோடு இறந்துபோன அவனது நண்பன் வீட்டிற்குச் சென்று, அவனின் தாய்க்கு ஆறுதல் சொன்ன அந்த மன வைராக்கியத்தில் ஆகட்டும்,

•             தனது பாதுகாவலன் நேர் நின்று தன்னைச் சுட்டபோது அஞ்சி அலறாமல் “முட்டாள்! நீ என்ன காரியம் செய்கிறாய்?” என்று அதட்டிய வீரத்தில் ஆகட்டும்

இந்திராகாந்திக்கு நிகர் இந்திராகாந்தியேதான்! நமது ஈழத்தமிழர் பிரச்சினையையும் அவர் மிக அழகாகத்தான் கையாளத் தொடங்கினார். நமது போதாத காலம் அவர் மரணத்தோடு எல்லாம் குழம்பிப் போயிற்று.

சிறுவயதில் தனது தந்தை நேருவின் சகோதரியான பண்டிட் விஜயலக்ஷ்மி போன்றோரால் அலட்சியம் செய்யப்பட்ட அவர், பின்னாளில் எப்படியெல்லாம் தானாகத் தனது ஆளுமையை வளர்த்துக் கொண்டு நிமிர்ந்தார் என்பதுபற்றி, நம் இளையோர்கள் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை அறிந்து நான் பட்ட துயருக்கு ஓரளவில்லை. அவர் சுடப்பட்ட நாளிலிருந்து அவரது உடல் தகனம் செய்யும் நாள்வரை நான் உணவுகூட உண்ணாமல் கதறி அழுதுகொண்டிருந்தேன். ஆளுமையில் எனக்கு அவர் ஒரு குரு ஆவார்.

இந்தப் படம் அவரது இளமைக்கால வாழ்விலிருந்து தொடங்கி, சீக்கியத் தீவிரவாதியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது வரையிலான முழு வாழ்க்கை வரலாற்றையும் பதிவாக்கியிருக்கிறது. கதை மாந்தர்கள் நம் காலத்தில் வாழ்ந்த பாத்திரங்கள். ஆதலால், நடிகர்கள் தேர்வு என்பது இத்தகைய சினிமாக்களில் பொருத்தப்பாட்டுடன் அமைவதில் சிரமம் இருக்கும். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வரலாற்றை “தலைவி” என்ற பெயரில் சினிமா ஆக்கியிருந்தார்கள். அப்படத்தில் இந்திராகாந்தியும் ஒரு பாத்திரமாக அமைக்கப்பட்டிருந்தார். அப் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பெண்மணிக்கும் இந்திராகாந்திக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை.

ஆனால் இப் படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நடிகர்கள் பெரும்பாலும் நிஜப்பாத்திரங்களோடு ஒத்திருந்தது இப்படத்திற்கான தனிச்சிறப்பு. இந்திராகாந்தியின் யதார்த்த வாழ்வினை இப் படம் ஓரளவு முழுமையாக இனம் காட்டுகிறது. கட்டாயம் பாருங்கள்.

 

#கேள்வி :

இயற்கை, தான் பூமியில் அமைத்து வைத்திருக்கும் சமநிலையை நாங்கள் அழித்தால், அது நம்மை அழித்துத் தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்ளும் என்று சிலநாட்களுக்கு முன்புதான் எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்லி வாய்மூடும் முன்னர், நேபாளத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் இவ்வளவு பெரிய அழிவு நிகழ்ந்துவிட்டது. தீர்க்கதரிசியாகிவிட்டீர்களோ?

#பதில் :

இந்தக் கிண்டல்தானே வேண்டாம் என்பது. நான் சொல்லி அங்கு ஒன்றும் நடக்கவில்லை. நடக்கப்போவதைத்தான் நான் சொன்னேன் அவ்வளவுதான்!

இமயத்தில் நீர்த்தேக்கங்கள் உருவாகியிருப்பது பற்றியோ, அவை உடைந்தால் பேரழிவு நேரும் என்பது பற்றியோ இதுவரை ஏதும் பேசாமல் இருந்த அறிவியலாளர்கள், இப்போது இன்னொன்று உடையப்போகிறது என்று நம்மை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வளவுதான் இவர்களுடைய அறிவுத்திறன். வந்தபின் காக்கும் வல்லாளர்கள்.

இவர்கள் ஒன்றும் சொல்லாமல் இருந்தபோதுதான் இந்த அழிவு நடந்தது. இப்பொழுது இவர்கள் அதிகம் சொல்கிறார்கள். அதனால் இனி அழிவு நடக்காது என்று எண்ணத் தோன்றுகிறது.

 

#கேள்வி :

யாழ்ப்பாணத் திருவிழாக்களில் பழையபடி கவர்ச்சி நடனங்கள் அரங்கேறத் தொடங்கியிருக்கிறதே. பார்த்தீர்களா?

#பதில் :

பார்த்தேன் என்று நான் பதில் சொன்னால், இதையெல்லாம் நீங்கள் ஏன் பார்த்தீர்கள்? என்று கேட்பீர்கள். பார்க்கவில்லை என்று சொன்னால் உங்களுக்கு உலகம் தெரியவில்லை என்பீர்கள். நீங்கள் எதையும் சொல்லிவிட்டுப் போங்கள். உங்கள் கேள்விக்கான பதிலை மட்டும் நான் தருகிறேன்.

இது யாழ்ப்பாணத்தில் இன்று புதிதாய்த் தொடங்கியிருக்கும் பிரச்சினை அல்ல. முன்பும் இத்தகைய கூத்துக்கள் யாழ்ப்பாணத்தில் தாராளமாய் நடக்கத்தான் செய்தன. “சின்னமேளம்” என்ற பெயரில், அப்போதும் பெண்களை வைத்து சினிமாப்பாடல்களுக்குக் கவர்ச்சி நடனம் ஆட வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

போரினால் புதைந்து போன அந்தச் சின்னமேள விருட்சத்தில், சாகாமல் கிடந்த ஒரு வேரிலிருந்து இப்போது புதிய ஒரு விஷச்செடி முளைத்திருக்கிறது போல. மனிதப் பலயீனங்கள் எக்காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கும். சமூகத்தை வழிநடத்தும் பெரியவர்கள்தான் அவை விஸ்வரூபம் எடுக்காமல் தடுக்க முன்வரவேண்டும்.

வாக்கு வேட்டையை விரும்பி நிற்கும் நமது தலைவர்களோ, பதவிப் பெருமையில் மயங்கிக் கிடக்கும் நிர்வாகிகளோ, எது நடந்தால் நமக்கென்ன என நினைக்கும் கற்றவர்களோ இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை.

இப்போதெல்லாம் எங்கள் மண்ணில் நல்லவற்றை விதைக்கப் படாத பாடுபட வேண்டியிருக்கிறது. தீயவைகள் விதைக்காமலே விளையப் பார்க்கின்றன. இந்த இயல்பால் நம் மண்ணில் அடுத்தடுத்து இத்தகைய சின்னமேளக் கச்சேரிகள் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

#கேள்வி :

என்ன? திடீரென அர்ச்சுனா முஸ்லிம்களுக்காக உருகத் தொடங்கியிருக்கிறார்?

#பதில் :

அவரது திட்டுதல்களும் அவரது மனதிலிருந்து வருவதில்லை. அவரது பாராட்டுதல்களும் அவரது மனதிலிருந்து வருவதில்லை. அவையெல்லாம் வெறும் வாய்ச்சொற்கள்தான். அவர் தனக்குத் தேவையேற்பட்டால் அமிர்தத்தை நஞ்சாக்குவார். நஞ்சை அமிர்தமாக்குவார். அவரை நொந்து பிரயோசனமில்லை. அவரது வார்த்தைகளை நம்பி ஏமாந்தவர்களைத்தான் நொந்து தொலைக்கவேண்டி இருக்கிறது.

 

#கேள்வி :

உங்கள் கம்பர்  நமது மூதாதையனான இராவணனைக் கெட்டவனாய்ப் படைத்தது தவறில்லையா?

#பதில் :

ஒரு சிறு திருத்தம். உங்கள் கேள்வியில்  “நமது” என்கின்ற வார்த்தையை எடுத்து விட்டு “எனது” என்ற வார்த்தையை அவ்விடத்தில் நீங்கள் போடுவது நல்லது. அப்படி நான் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.

•             அந்தணனான இராவணன் எனது மூதாதையனாய் இருக்க வாய்ப்பில்லை என்பது அங்ஙனம் நான் சொன்னதற்கான முதற்காரணம்.

•             பல பெண்களைக் கெடுத்தும், பிறன் மனைவியைக் கவர்ந்து சென்றும் பண்பில்லாத செயல்களைச் செய்த அவன் பிராமணனாய் இல்லாதிருந்தாலும்கூட, அவனை நான் எனது மூதாதையனாய் ஏற்கத் தயாராக இல்லை என்பது, அதற்கான இரண்டாவது காரணம்.

•             தனது காமத்திற்காக,  தன் தேசத்தையும், பிள்ளைகளையும், தம்பியரையும் அநியாயமாகப் பலி கொடுத்த ஒருவனை எனது மூதாதையனாய் ஏற்க முடியாதென்பது, அதற்கான மூன்றாவது காரணம்.

•             இன்னொருவன் (குபேரன்) உருவாக்கி வைத்த நாட்டையும் செல்வத்தையும் தட்டிப் பறித்துக் கொண்ட ஒருவன் எனது மூதாதையனாய் ஏற்க நான் விரும்பவில்லை  என்பது, அதற்கான நான்காவது காரணம்.

•             முதல்நாற் போரில் தோற்று, “இன்று போய் போர்க்கு நாளை வா” என்று இராமன் சொல்ல அவ்விடத்திலேயே உயிர்விடாமல் வெட்கமின்றித் திரும்பிப்போன ஒருவனை நான் எனது மூதாதையன் என்று சொல்ல விரும்பமாட்டேன் என்பது, அதற்கான ஐந்தாவது காரணம்.

 

மேற்சொன்ன காரணங்களால்த்தான் இராவணனை எனது மூதாதையன் என்று சொல்ல நான் விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமானால் அவனை உங்களது மூதாதையனாய் சொல்லிக் கொள்ளுங்கள். அது பற்றி எனக்கு ஆட்சேபனையில்லை.

மற்றொன்று, கம்பர் இராவணனைக் கெட்டவனாய்ப் படைத்தது குற்றமென்றா சொன்னீர்கள்? உங்களது மனைவியை வேறொருவன் வந்து கடத்திக் கொண்டு போனால், அவனை நீங்கள் கெட்டவன் என்பீர்களா? நல்லவன் என்பீர்களா?

நல்லவன் என்றுதான் சொல்வேன் என்பீர்களானால், கம்பர் இராவணனைக் கெட்டவனாய்ப் படைத்தது குற்றமென்று நானும் ஒத்துக் கொள்ளுகிறேன். எப்படி வசதி?

 

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.