காட்டு மல்லிகை -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-

காட்டு மல்லிகை -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-
 
கார் காலம் வரவும் வானம்
கவிழ்த்தது மழை நன்னீர்; இப்
பாரெலாம்  குளிரச் செந்நெற்
பயிரெலாம்  செழிக்க, நீ என்
ஊரெலாம் மலர்ந்தாய் கண்டேன்,
காட்டு மல்லிகையே! உன்னை
யார் தள்ளி னாலும் என்ன?
யானுளேன் பாடுதற்கு!
 
தாமரை பூக்க, அல்லி
தலை தூக்க, நீலம்  பார்க்க,
மா மலர்ந்தது; சம்பங்கி
மல்லிகை யொடு செவ் வந்திப்
பூ மலிந் தன; அங்கே ஓர்
புறத்திலே மிடுக்கினோடு
நீ மலர் நிறைந்து நின்றாய்
நிமிர்ந்தெனை மிகக் கவர்ந்தாய்!
 
கொல்லைகள் எங்கும் கண்ட
தில்லையே; உனைத்தம் வீட்டின்
எல்லைக்கு வெளியே வைத்தார்
இவ்வூரார்; அவர் கொடுக்கும்
செல்லத்தில் திளைத்து நின்று
செருக்கொடு மலரும் அந்த
முல்லைக் கெவ்விதத்திலே உன்
முகம் எழில் குறைவா யிற்று?
 
உன்னைப் போல் எனக்கும் வாழ்வில்
உலகத்தார் உயர்வு காணார்;
பொன்னை எம் காலிற் கொட்டிப்
போற்றிட வில்லை யாயின்
என்னம்மா நமக்கு? நாங்கள்
எதனிலும் குறை வதில்லை;
உன்பாட்டில் மலர்வாய் நீ! நான்
என் பாட்டில் எழுதுகின்றேன்!
❤ 
❤ ❤ ❤ ❤ ❤
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.