'கிரகண கால வழிபாடு பற்றிய எனது கருத்தும் - பதில்களும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'கிரகண கால வழிபாடு பற்றிய எனது கருத்தும் - பதில்களும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
'கிரகண கால வழிபாடுபற்றிய எனது கருத்தும் - பதில்களும்'
🌞கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்🌞

🌑🌒🌓🌔🌕🌖🌗🌘
லகின் உயர்வுக்காய்,
கிரகண காலத்தில் வழிபாடு செய்வது பற்றி,
நான் எழுதிய விடயங்கள் தொடர்பாக,
பலரும் கருத்துக்கள் உரைத்து வருகின்றனர்.
உடன்பட்டு கருத்துரைப்போர்க்கு என் நன்றிகள்.
மாற்றுக் கருத்தாளர்களின் பதில்களில்,
பலகாலம் நடந்த ஒன்றை மாற்றுவதா? எனும் தயக்கமே பெரிதும் வெளிப்படுகிறது.
கிரகண காலத்தில் ஸ்நானம், ஜெபம், ஹோமம் முதலியவை செய்யவேண்டி இருப்பதால்த்தான்,
ஆலயத்தைப் பூட்டுகிறார்கள் என்று ஒருசிலர் எழுதுகிறார்கள்.
அவர்தம் கருத்து சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.
நமது இந்து மதத்தில் ஸ்நானம், ஜெபம், ஹோமம் முதலியவை செய்யப்படவேண்டிய,
பல வழிபாட்டு விடயங்கள் பதிவாகியுள்ளன.
மேற்சொன்னவர்களின் கருத்து உண்மையானால்,
அக்காலங்களிலெல்லாம் கூட ஆலயங்களைப் பூட்டவேண்டி வருமல்லவா?
அது சாத்தியமா?

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘


ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
நான் சொன்னவை எனது கருத்துக்கள் அல்ல.
அவை நம் ஆகமங்களும் ஆன்றோரும் கூறும் கருத்துக்கள்.
அதனையே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
நமது இந்து சமயத்தின் ஒவ்வொரு வழிபாட்டு நிலையும்,
பிரமாண நூல்களால் வரையறுக்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் நிகழ்ந்த ஏதோ ஒரு தவறினால்,
கிரகண காலத்தில் கோயிலைப் பூட்டும் மடமைக்கொள்கை உருவாகிவிட்டது.
இப்போது அதன் பிழை நிரூபணத்துடன் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நேரத்தில் அவ் உண்மை உணர்ந்து நம் வழிபாட்டினைச் செம்மை செய்வதுதான் நியாயம்.
சிலர் இந்தியாவிலும் கோயிலைப் பூட்டுகிறார்களே என்கிறார்கள்.
அது அவர்கள் தவறேயன்றி,
அதனை உண்மைக்குப் பிரமாணமாய் ஏற்க முடியாது.
இந்தியாவில் காளத்தி போன்ற முக்கியமான பல ஆலயங்களில்,
இன்றும் கிரகண காலத்தில் ஆலயத்தில் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன.

உண்மையில் இதனை வெளிப்பட உரைக்கவேண்டியவர்கள் நம் அந்தணர்களே!
இவ் உண்மையை ஒப்புக்கொண்டால்,
இதுவரை இப்பிழையை ஏன் நீங்கள் எடுத்துக்காட்டவில்லை? எனக் கேள்வி வரும்.
அதற்கு அஞ்சியே அவர்கள் மௌனித்திருக்கிறார்கள்.

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘

முடிவுரையாக,
என் கருத்துக்கு மாறாகப் பதிலுரைப்பவர்கள் எல்லோரும்,
ஊகத்தின் அடிப்படையில் செய்திகளைச் சொல்கிறார்களேயன்றி,
உண்மையின் அடிப்படையில் நம் பிரமாண நூல்களில் சான்று காட்டி,
ஒருவர்தானும் மறுப்புரைத்ததாய்த் தெரியவில்லை.
எனக்குத் தெரிந்த உண்மையைச் சான்றுகளோடு உரைத்திருக்கிறேன்.
அதனைப் பின்பற்றுவதும் விடுவதும் அவரவர் விதியின் விருப்பாம்.

'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.