சிறு புல் - மஹாகவி து.உருத்திரமூர்த்தி
கவிதை முற்றம் 04 Aug 2019
செல்லவிட்டுச் செல்லவிட்டுச் செப்பனிட்ட
நல்லநெடு
வீதி.
அதனில் வெகுண்டோடும் வண்டிகளில்
மோதி நடப்போர் முடிவெய்தும்
தீதகல
இட்டநடைப் பாதை.
இவை இரண்டின் ஓரங்கள்
முட்டுகின்ற கோட்டின் முடுக்கினிலே
பட்டவிழிக்
கின்ப விருந்தாய், இருளில் ஒளிமின்னல்
முன் பல்லைக் காட்டி முறுவலித்த
பின் போய்
ஒளியா ததுபோல் ஒரு புல் இருகைத்
தளிர் நீட்டி நின்றாள்,
தலையில்
மிளிர்கின்ற
பூவொன்றைக் கூடப்
புதிதாய்ப் புனைந்திருந்தாள்.
காவிக்குயில் வாயில் காட்டிடையே
பாவொன்று
கேட்டதனை ஒக்கும்
கிடுகிடுத்துக் கொண்டிருக்கும்
பாட்டை இடை அப் பசுமையே!
நாட்டம்
பிறவாகிச் செல்கின்ற பித்தர் உளத்தோடு
உறவாடித் தந்தாள் உவகை.
இறவாது
வேரிற் கிடந்து, வெடுக் கென்று மாரிவரப்
பூரிக்கக் கண்டால், புளகம் மெய்
ஊராதோ !
ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள்
வாழ அவளுக்கென் வாழ்த்து.
◈◈◈