நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான் ! | கவிக்கோ அஞ்சலிக் கவிதை

நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான் ! | கவிக்கோ அஞ்சலிக் கவிதை
 
யர்தமிழின் ஆழமெலாம் கண்டு நல்ல
         ஒப்பற்ற பேரறிவை எமக்கு ஈந்த
நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான்
         நைந்துள்ளம் உருகிடவே வாடி நின்றோம்.
அயர்வறியாதென்றென்றும் தமிழை மாந்தி
         அமிழ்தமென அவனிக்கு ஈந்த வள்ளல்
வியந்துலகம் போற்றிடவே மண்ணில் வாழ்ந்து
         விண்ணுலகம் சேர்ந்தானாம் விம்மி நின்றோம்.

‘கவிக்கோ’வாம் பேரறிஞன் கடலைப் போல
         கற்றுலகின் இருள் நீத்தான் கண்ணாய் நின்று
புவிக்கேதான் அறிவதனின் நுட்பமெல்லாம்
         புகட்டினனாம் தமிழ்;த்தாயின் இதயம் பொங்க
தெவிட்டாத பல கவிதை செய்தே நாளும்
         தேன்மாரி பொழிந்தவனோ இன்று நல்லோர்
தவித்தேதான் வாடிடவும் தனித்து எம்மை
         தரணியிலே விட்டகன்று விண்ணைச் சேர்ந்தான்.

அல்லாவின் வழிநின்று அருளைத் தேடி
         அனைவரையும் நேசித்த அருளோன் இங்கு
வெல்லாத சபை உண்டோ! வீணாம் வார்த்தை
         விளம்பிடவே மாட்டாத வேந்தன் நல்ல
தள்ளாத வயதினிலும் தமிழை மாந்தி
         தரணிக்கு அதன் சுவையைத் தந்தான் இன்று
பொல்லாத விதியதுவும் கொடுமை செய்ய
         போனானாம் மண்ணுலகை விட்டு நீங்கி.

அறிஞரெலாம் வெண்திரையை நாடி ஓட
         அது தனக்குப் புகழன்று என்று சொல்லி
விரிந்த பெரும் உலகினிலே அம்மி கொத்த
         வீறான சிற்பியவன் வாரா னென்று
பெருமையுடன் கால் சேர்ந்த வாய்ப்பையெல்லாம்
         பேணாமல் உதறியவன் பெரிய யோகி
சிறுமைதனை அறியாத சிறந்த ஞானி
         சேர்ந்தானாம் பேரொளியில் சிந்தை நொந்தோம்.

அருமைமிகு தத்துவங்கள் அனைத்தும் நாடி
         அவன் சொல்லும் அழகதனை என்னவென்பேன்?
வெறுமையதன் உள் நுழைந்து விண்ணைத் தாண்டும்
         வித்தைதனைத் தெரிந்தமகன் வேற்றார் கூட
பெருமைமிகு அறிஞன் இவன் என்றே சொல்லி
         பேணித்தான் அடியதனில் வீழும் வேந்தன்
சிறுமையதன் நிழல் கூட வீழாதென்றும்
         சிறந்தறிவைப் பேணியவன் சிவத்தைச் சார்ந்தான்.

நித்தமுமே ‘பால்வீதி’ தன்னில் நின்று
         நினைப்பரிய பொருளெல்லாம் உலகுக்கீந்தோன்.
‘முத்தமிழின் முகவரி’யை தமிழர்க்கெல்லாம்
         முழுமையுறச் சொல்லியவன் ஞானம் தொட்டு
சத்தியத்தை ‘சுட்டுவிரல்’ அதனால் காட்டி
         சரித்திரங்கள் படைத்த மகன் பலரும் வாட
வித்தகனாய் ‘விதை போல வீழ்ந்தான்’ இன்று
         விண்ணுலகம் செய்திட்ட பலனதாலே.

ஈழத்துத் தமிழர்களின் இதயந்தன்னை
         ஈர்த்தபெரும் கள்வனவன் எமக்காய் அன்று
யாழுக்கு வந்தே தன்னுள்ளம் வாடி
         யாவர்க்கும் எம்மவரின் துயரம் சொன்னோன்
நாளுக்கு நாள் எங்கள் உள்ளம் ஏறி
         நற்குருவாய் அகத்தினிலே பதிந்த வேந்தன்
பாலர்க்கு யார் இனியென் றெண்ணாதிங்கு
         பதைபதைத்தே நாம் நிற்க விண்ணைச் சேர்ந்தான்.
                 ***
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.