நுண்மாண் நுழைபுலத்தரிசனம் -பகுதி 2: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

நுண்மாண் நுழைபுலத்தரிசனம் -பகுதி 2: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
அவர் பாதம் தொடுகிறேன். 'வாரும் இரும், என்ன காரியமாய் வந்தீர்' அளந்த வார்த்தைகளால் தளர்ந்த குரலில் கேள்வி பிறக்கிறது. 'உங்களிடம் படிக்க வேண்டும்' நெளிந்தபடி சொல்கிறேன். 'ஏன் ஏதாவது சோதனை எடுக்கப்போகிறீரோ?' கேள்வியா, கிண்டலா என்று புரியாத அவரது வார்த்தைகள், சாட்டையாய் அறிவில் விழ அதிர்ந்து பதில் சொல்லத் தொடங்கினேன்.

🔔🔔🔔
ள்ளம் நடுங்க,
'இல்லை படிக்க ஆசையாக இருக்கிறது ஐயா'
பதிலுரைக்கிறேன் நான்.
'ஏன் படிக்க ஆசைப்படுகிறீர்?'
ஐயாவிடமிருந்து மீண்டும் கேள்வி.
'நான் ஒரு பேச்சாளன் புதிது புதிதாய்ப் பேச விடயங்கள் தேவைப்படுகின்றன.
அதனால்த்தான் படிக்க ஆசைப்படுகிறேன்.'
மீண்டும் பதிலுரைக்கிறேன் நான்.
சிறிது நேரம் கண்மூடி இருக்கிறார்.
பிறகு கண் திறந்து என்னைப் பார்த்து,
'அதிகம் படித்தால் பேசமுடியாமல் போய்விடுமே' என்கிறார்.
அந்தநேரத்தில் அது கிண்டலாய்ப்பட்டது.
இன்று அவர் வார்த்தைகளின் நிதர்சனம் அறிந்து நெகிழ்ந்து நிற்கிறேன்.

🔔🔔🔔


'இதற்கு முன் என்ன படிச்சிருக்கீறீர்?'
ஐயாவின் கேள்வி தொடர்கிறது.
எதைச் சொல்ல,
ஏதாவது சொல்லப்போய் கேள்வி கேட்டாரானால்?
இவருக்குப் பதில் சொல்லுமளவுக்கு என்னிடம் படிப்பில்லை.
வெறுமை உணர்ந்த வெட்கத்தில், தலை குனிகிறது.
சிறிது நேரம் மௌனம்.
'கொஞ்சநாள் பொறுத்துப் பிறகு பார்ப்போம்.'
எனக்குள் எரிச்சல்.
'வேறென்ன?'
புறப்படு என்பதை நாகரீகமாய்ச் சொல்கிறார்.
சிவஞானமுனிவருடன் பேசும் அவசரம் அவருக்கு.
சோர்வுடன் விடைபெற்றேன்.

🔔🔔🔔
ஆனால் அவரை நான் விடவில்லை.
இப்படியே தொடர்ந்து மூன்று சந்திப்புக்கள்.
என் பசி கொஞ்சம் புரிந்திருக்கும் போலும்.
மூன்றாம் சந்திப்பில்,
'பஞ்சாங்கத்தைக் கொண்டுவாரும்' என்றார்.
என் நட்சத்திரம் கேட்டு,
படுபட்சி இல்லாத நாட்குறித்து,
வகுப்புக்கு வாரும் என்றார்.
'என்ன படிக்கப்போகிறீர்?'
ஆழப்பார்வையுடன் கேள்வி பிறக்கிறது.
திருக்குறள்,
இராமாயணம்,
சங்கப்பாடல்கள்,
சிலப்பதிகாரம்,
இலக்கணம் என,
என் அறிவுப் பசியைக் காட்டுவதாய் நினைத்து,
பட்டியலை நீட்டுகிறேன்.
'முதலில் ஒன்றைப் படிப்போம்'
கன்னத்தில் அறைந்தாற் போற் பதில்.
என் அறியாமை உணர்ந்து நாணிச் சுருள்கிறேன்.
'திருக்குறளைக் கொண்டுவாரும்',
வரம் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு.

🔔🔔🔔
குறித்த நாளில்,
திருக்குறளுடன் அவர் முன் உட்காருகிறேன்.
நான் போனபோது காலை எட்டுமணி.
எப்படியும் இன்று பத்து அதிகாரங்களையாவது படித்து முடித்துவிடவேண்டும்,
என்று எனக்குள் எண்ணம்.
'அகர முதல எழுத்தெல்லாம்'
முதல் குறளின் அரையடிக்கு,
விளக்கம் சொல்லத் தொடங்குகிறார்.
திடீரெனப் பசிக்குமாற் போல் ஓர் உணர்வு,
நேரத்தைப் பார்த்தால் மதியம் இரண்டு மணி.
இன்னும் அந்த அரையடிக்கான விளக்கம் முடிந்தபாடில்லை.
மேலோட்டமாகப் படித்துப் பழகிய எனக்கு,
அன்று ஒரு புதிய அனுபவம்.

🔔🔔🔔
இனி என்னால் ஏற்க முடியாது என,
மூளை பிடிவாதம் பிடிக்க,
மெல்ல நெளிகிறேன்.
'உமக்குப்பசி வந்திட்டுதுபோல',
குறிப்பறிந்த கேள்வியோடு பார்க்கிறார்.
உண்மையைச் சொல்ல முடியாமல் அசடுவழியச் சிரிக்கிறேன்.
'எனக்கு எண்ணங்கள் வந்திட்டுது நிற்பாட்ட முடியவில்லை.
இன்னும் கொஞ்ச நேரம் கேளும்'- தொடர்கிறார்.
ஒரு வழியாக மூன்று மணிக்கு,
அரையடிக்கான விளக்கமும் முடியாத நிலையில்,
வகுப்பு முடிகிறது.

🔔🔔🔔
களைப்பு, வியப்பு, பிரமிப்பு, திகைப்பு என,
பல உணர்ச்சிகளும் தாக்க,
அந்த நிமிடத்தில்,
நான் நானாக இல்லை.
'நுண்மாண்நுழைபுலம்' என்ற தொடரின் விளக்கத்தை,
முதன்முதலாக உணர்ந்தேன்.

🔔🔔🔔
தமிழ் இவ்வளவு ஆழமானதா?
தமிழை இப்படியும் படிக்க முடியுமா?
தமிழை இப்படியும் படித்தவர்கள் இருக்கிறார்களா?
என் மனதில் உளைச்சல்.
தமிழறிவைப் பொறுத்தவரை,
என்னுள்,
பாலமை நீங்கிப் பருவமடைந்த ஓர் உணர்வு.
என் இனத்தின் பெருமை.
என் மொழியின் பெருமை.
என் சந்ததியின் பெருமை.
ஏன் எனது பெருமை கூட,
அன்று என்னுள் விசுவரூபம் எடுத்தது.

🔔🔔🔔
அதன் பின் மூன்று ஆண்டுகள் அவரிடம்,
படிக்கும் வாய்ப்புக் கிட்டிற்று.
அந்த மகானின் தொடர்பில்,
எனக்குக் கிடைத்த தரிசனங்கள் பல,
உபதேசங்கள் பல,
தெளிந்த உண்மைகள் பல,
அறிவின் விஸ்வரூபத்தரிசனம் கிட்டியது.
'நுண்மாண்நுழைபுலம்' எனும் தொடரின் முழுவிளக்கத்தை,
அவர் அறிவில் கண்டு,
சிலிர்த்தேன்.

🔔🔔🔔
கட்டுரைத் தலைப்பின்படி,
இந்த இடத்தில் நான் கட்டுரையை முடிக்க வேண்டும்.
ஆனால் இன்னும் சில விசயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
'மற்றொன்று விரித்தல் எனும் குற்றம் இருக்கிறது.'
ஐயாவே இப்படிச் சொல்லப்போகிறார்.
அதுபற்றி எனக்குக் கவலையில்லை.
எண்ணங்கள் முடியாமல் கட்டுரை எப்படி முடியுமாம்.
ஆகவே இன்னும் சில சொல்லப் போகிறேன்.
வேண்டுமானால் இனிச் சொல்பவற்றை,
கடலைக்காரி சுண்டினால் அளந்த பிறகு,
உபரியாய்ப்போடும் ஒரு கைபிடிக்கடலைபோலவும்,
ஆய்வாளர்களின் கட்டுரைகளில் வரும்,
பின் இணைப்புச் செய்திகள் போலவும் கொண்டு,
தயைகூர்ந்து ஏற்றருள்க என வாசகர்களை வேண்டி நிற்கிறேன்.

🔔🔔🔔
தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரை,
ஐயாவுக்குச் சில தனி அபிப்பிராயங்கள் இருந்தன.
அவற்றுட் சில,
ஒரு நூலைத் தெளிவாய் விளங்கினால்,
பின் எல்லா நூலையும் தானாய் விளங்கலாம்.

புத்தகங்களில் அவாப்படத்தேவையில்லை.
உண்மையாய்ப் படிக்க விரும்பினால், 
புத்தகம் தானே கைக்கு வரும்.

தெரிந்தவர்மூலம் அணுகி,
பெரிய நூல்களோடு நட்புண்டாக்க வேண்டும்.

ஒன்றை விளங்குவதற்கு முதல், 
கேள்வி கேட்கக் கூடாது.

இவை அவர் எனக்கு உபதேசித்தவை.

🔔🔔🔔
ஆரம்பத்தில் அவரின் இக்கூற்றுக்கள் நகைப்புத் தந்தன.
நாளடைவில் அவற்றின் உண்மையை உணர்ந்து வியந்து சிலிர்த்;தேன்.
யாரேனும் கேள்வி கேட்டால்,
கேள்வி கேட்டவர் வாய்மூடுமுன்,
பதில்; சொல்லத் தொடங்குவதுதான்,
அறிவு என்று நினைக்கும் இன்றைய உலகில்,
கேள்வியை உள்வாங்கி,
நிதானித்துப் பதில் சொல்வதும்,
தேவை ஏற்படின்,
'நாளைக்கு வாரும் பதில் சொல்கிறேன்'
என்று சொல்வதும்,
அவரிடம் எனக்கு வியப்பூட்டிய விஷயங்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன்.

🔔🔔🔔🔔🔔🔔                                                                       (அடுத்த வாரமும் வித்தகர் வருவார்)
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.