நேர்காணல் 11
இந்திய இராணுவத்தின் கட்டளையின் பேரில் சிலநாட்கள் நல்லூர்க் கோயிலுக்குள் இருந்தபின்னர், ஒரு மாதிரியாக அனைவரும், ஏற்கனவே நாம் தங்கியிருந்த வைமன் றோட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். யாழ்ப்பாணத்தார்க்கு இடையில் கிடைத்திருந்த மின்சாரம் இச்சண்டையால் மீண்டும் இல்லாமல் போயிருந்தது.
இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணம் முழுவதிலுமாகப் பரவி நின்றனர். ஆரம்பத்தில் இருந்த அவர்களின் சாத்வீக முகம், புலிகளுடனான சண்டையின் பின்னர் ராஜஷ முகமாக மாறியிருந்தது. அதனால் அனைவரும் அச்சத்துடன்தான் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அக்காலத்தில் இந்திய இராணுவத்தினருடன் இணைந்து, சில ஆயுதக்குழுக்கள் இயங்கத் தொடங்கியிருந்தன. ஆங்காங்கு அவர்களால் கொலைகள் நிகழ்த்தப்பட்டன. தலையற்ற சில உடல்கள் திடீர் திடீரென சந்திகளிலும், வீதியோரங்களிலும் வீசப்பட்டிருப்பதைக் கண்டு பொதுமக்கள் நடுநடுங்கிப் போனார்கள்.
அச் சம்பவங்கள் நடந்தபொழுது என் வாழ்வில் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்தது பற்றியும் இவ்விடத்தில் சொல்லவேண்டும்.
#கேள்வி :
அவ்வளவு தீமைகளுக்கு மத்தியில் உங்களுக்கு நன்மை நடந்ததா? ஆச்சரியமாக இருக்கிறதே.
#பதில்:
உண்மைதான்! அப்போது நான் அசைவ உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். இறை நம்பிக்கையால் ஏற்பட்ட பல நல்ல அனுபவங்களால், அந்த உணவை விட்டுவிடவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அது இலேசான காரியமாக இருக்கவில்லை. பலகாலப் பழக்கத்தைத் திடீரென மாற்றமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த காலம் அது.
திடீர் திடீரென மனதில் ஒரு ஊக்கம் வர, அசைவ உணவை இனிச் சாப்பிடுவதில்லை என விட்டு விடுவேன். சில காலம் அந்த வைராக்கியம் நிலைக்கும். பிறகு மனம் இழுக்க, மீண்டும் அந்த உணவை உண்ணத் தொடங்கிவிடுவேன்.
தொடர்ந்து அவ் உணவை உண்ணாமல் விட என்னால் முடியவில்லை. அங்ஙனம் நான் அசைவ உணவை உண்ணாமலிருக்கும் போது, சிறியதாய் ஒரு இருமலோ காய்ச்சலோ வந்தால், எனது வீட்டார் அசைவ உணவு சாப்பிடாததால்த்தான் அங்ஙனம் நோய்கள் வருகின்றன எனச்சொல்லி, என்னை அவ் உணவை உண்ணும்படியாக வலியுறுத்துவார்கள்.
என் மனதிற்குள்ளும் அசைவ உணவின் மீதான ஆசை மறைந்து கிடந்ததால் ஏதோ விருப்பமில்லாமல் அவர்களுக்காக உண்பது போல, மீளவும் அந்த உணவை உண்ணத் தொடங்கிவிடுவேன்.
அப்படி என் காலம் போய்க்கொண்டிருந்த பொழுதுதான் நான் முன் சொன்ன கழுத்து வெட்டிப்போடும் கொலைச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியிருந்தன. அப்போது ஒருநாள், நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே, யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாய் இருந்த ஒரு “ரியூட்டரி” ஆசிரியரைக் கொலை செய்து போட்டிருந்தார்கள்.
அன்று நாமெல்லாம் கலங்கிப் போனோம். அச்சத்தில் நான் உறைந்து போனேன். ஏனோ தெரியவில்லை. அன்று எனது மனம் அளவுக்கதிகமாய்ப் பயந்தது. அந்த ரியூட்டரி ஆசிரியருக்கு நடந்தது போல எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் நடந்துவிடுமோ என நினைந்து நடுங்கினேன்.
அக் காலத்தில் புலிகளோடு யாழிலிருந்த எல்லோருக்கும் ஏதோ தொடர்பு இருக்கத்தான் செய்தது. நாங்களும்கூட அவர்களில் ஒரு சிலரோடு தனிப்பட்ட தொடர்பு வைத்திருந்தோம். அதனால் புதிதாய் வந்த அக் கொலைஞர்கள் எங்களுக்கும் ஏதாவது தீமை செய்துவிடுவார்களோ என்று அச்சப்படாமல் எம்மால் இருக்க முடியவில்லை.
அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அனைவரும், பி.பி.சி. வானொலியின் தமிழ்ச்செய்தியைக் கேட்கத் தவறுவதில்லை. அச் செய்தியில் எங்கள் பிரச்சினை பற்றி அடிக்கடி சொல்வார்கள். அதனால்த்தான் அவ் வழக்கம் உண்டாகியிருந்தது.
அன்றிரவு நான் வழக்கம் போல பி.பி.சி. வானொலியின் இரவுச் செய்தியைக் கேட்கவென வானொலியைப் போட்டேன். பி.பி.சி. தமிழ்ச்செய்தி வாசிக்கும் சங்கர் என்ற அறிவிப்பாளர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, ஏதேனும் ஒரு திருக்குறளைச் சொல்லிவிட்டுத்தான் நிகழ்ச்சியைத் தொடங்குவார்.
அன்று நான் வானொலியைப் போட்டபொழுது, அவர் “மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல்என்ப தன்னுயிர் அஞ்சும் வினை” என்ற குறளினைச் சொன்னார். உயிர் அச்சத்தோடு இருந்த என்னை, அக் குறளின் பொருள் அதிரச் செய்தது.
மற்றைய உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அருளை ஆள்கிறவர்களுக்குத் தம்முடைய உயிருக்கு அச்சம் தரும் செயலேதும் நிகழாது என்பது தான் அக்குறளினுடைய பொருள். அன்றைய மனநிலையில் அக் குறளின் பொருளைக் கேட்டபொழுது, ஆண்டவனே எனக்குச் செய்தி சொல்வதாகப்பட்டது.
மற்றைய உயிர்களைக் கொன்று, அசைவ உணவை உண்டு கொண்டிருக்கும் நான், எனதும் என்னைச் சார்ந்தவர்களதும் உயிருக்கு ஆபத்து ஏதும் விளையக்கூடாது என, இறைவனிடம் கேட்பது எப்படி நியாயமாகும்? எனும் எண்ணத்தை அக் குறள் எனக்குத் தர நான் திகைத்துப் போனேன்.
அந்த நிமிடமே இனி, மற்றைய உயிர்களைக் கொன்று உண்பதில்லை என்று முடிவு செய்தேன். இன்றுவரை அந்த வைராக்கியம் தொடர்கிறது. ஒரு கெட்டதினூடாக ஒரு நல்லதை இறைவன் எனக்கு ஏற்படுத்தித் தந்தான். போர்க் காலத்தால் எனக்கு ஏற்பட்ட நன்மை அது.
கேள்வி :
நீங்கள் தற்காலிகமாய்த் தங்கிவிட்டுக் கோயிலுக்குள் சென்றபிறகு உங்களது கம்பன் கோட்டக் கட்டிடத்தில் எவரேனும் தொடர்ந்து தங்கியிருந்தார்களா?
பதில் :
போர்க்காலத்தோடு எமது கழகத்திற்கு ஏதேனும் தொடர்பு இருந்துகொண்டே இருக்க வேண்டுமென இறைவன் நினைத்திருப்பான் போல. அதனாற்றானோ என்னவோ நாங்கள் புறப்பட்ட பிறகு, இந்திய இராணுவம் எங்களது கம்பன்கோட்டத்தைத் தனது இராணுவ முகாமாக மாற்றிக் கொண்டது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இந்திய இராணுவம் சிற்சில இடங்களில் மிகப்பெரிய இராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டது. அது தவிர ஆங்காங்கு சில சிறிய முகாம்களையும் தேவை கருதி அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். அப்படி அவர்களால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய இராணுவமுகாமாக, நாங்கள் அரைவாசி கட்டி முடித்து வைத்திருந்த கம்பன் கோட்டமும் மாற்றப்பட்டது.
கேள்வி :
நீங்கள் கட்டிய கம்பன் கோட்டக் கட்டிடத்திலும், இதற்கு முன்னர் இலங்கை இராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதாக ஒரு செய்தி வந்ததே. அது உண்மையா?
பதில் :
உண்மைதான். இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. அப்போது இலங்கை இராணுவம் விமானத்திலிருந்தும் யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளிருந்தும் பலாலி இராணுவ முகாமுக்குள் இருந்தும் குண்டுகளாலும், ஷெல்களாலும் யாழ்ப்பாணத்தின்மேல் தாக்குதல் நடத்தியபடி இருந்தது.
ஒருநாள் இரவு, இலங்கை வானொலிச் செய்தி, யாழ்ப்பாணத்தி;ல் உள்ள புலிகளின் முகாம்களின்மீது விமானக்குண்டு வீச்சு நடத்தப்படும் என்று, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அறிவித்துள்ளதாய் தெரிவித்தது. அதை நாங்கள் “சீரியஸாய்” எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், அடுத்தநாள் விடியற்காலையில் திடீரென எங்கள் வீட்டிற்குள் கேட்குமாப்போல் ஒரு பெரிய உறுமல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து காது செவிடுபடும்படியாக பெரிய குண்டுவெடிப்புச் சத்தமும் கேட்க, நாங்கள் நடுநடுங்கிப் போனோம். அதுதான் நாங்கள் முதல்முதலாகக் கேட்ட விமானக் குண்டுவெடிப்புச்சத்தம். அந்தச்சத்தம், ஏதோ ஒரு குண்டு எங்களது வீட்டிற்குள் விழுந்து வெடித்தாற்போலத்தான் தோன்றியது. அன்றைக்கு நாங்கள் பயந்த பயத்திற்கு ஓரளவேயில்லை.
விமானம் குண்டுவீசினால் என்ன செய்வதென்றுகூட அப்போது எங்களுக்குத் தெரியாது. வெளியில் ஓடுவதா, வீட்டிற்குள் நிற்பதா என்றுகூடத் தெரியாமல் பரிதவித்துப் போனோம். பின்னர் யாழில் விமானக்குண்டுவீச்சு தொடர்ந்து நடக்கத் தொடங்கியது.
நாம் வீட்டிற்குள் இருப்போம். திடீரென பெரிய இரைச்சல் சத்தம் கேட்கும். வெளியில் ஓடிவந்து பார்த்தால், ஆகாயத்தில் அருகருகே எட்டு, ஒன்பது சிறிய குண்டுவீச்சு விமானங்கள் ஒன்றாய்ப் பறந்து வரும். நம் எல்லைக்குள் அவை வந்ததும், அந்த விமானங்கள் ஒரு மலர் விரியுமாப் போல அழகாகப் பிரிந்து விரியும். பின்னர் இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு ஒன்றின்பின் ஒன்றாய் அவை யாழ்ப்பாணத்தை வட்டமிடத் தொடங்கும். அங்ஙனம் வட்டமிடுகையில் ஒவ்வொரு இடமாய்க் குண்டுவீசும். இச் சம்பவங்கள் கிட்டத்தட்ட ஒன்று ஒன்றரை மணித்தியாலங்கள்வரை கூடத் தொடரும்.
விமானக்குண்டுவீச்சு தொடரத் தொடங்கியதும், யாழ்ப்பாண மக்கள் அவரவர் வீடுகளில் “பங்கர்” அமைக்கத் தொடங்கினார்கள். ஆறேழடி நீளமும், மூன்று நான்கடி அகலமும், மூன்று, நான்கு அடி ஆழமும், கொண்டதாக நிலத்தில் கிடங்கு ஒன்றை வெட்டி, அதன் மேல் தென்னை அல்லது பனை மரங்களைப் பரப்பி, பின்னர் அதற்கு மேலும் மண்ணைப் போட்டு குழி தெரியாதபடி பண்ணுவார்கள். உள்ளே நுழைய ஒரு வாசல் மட்டும் விடப்படும். மண்ணிலேயே அதற்கு ஒரு படியும் வெட்டி வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர்தான் “பங்கர்”.
குண்டு வீசும் விமானச்சத்தம் கேட்டதும், வீடுகளில் உள்ளவர்கள், ஆளையாள் கூப்பிட்டுக் கொண்டு, ஓடிப்போய் அந்த பங்கருக்குள் இறங்கிவிடுவார்கள். பெரிய கொடுமை என்னவென்றால், ஆட்கள் இல்லாத நேரத்தில் அந்தக் கிடங்குகளுக்குள் சிலவேளை பெரிய பெரிய சாரைப்பாம்புகள் குடிபுகுந்துவிடும். விமானம் வந்ததும் ஓடிப்போய் அதற்குள் மக்கள் இறங்க, பாம்பைக் கண்டு மக்களும், மக்களைக் கண்டு பாம்பும் பயந்து பதறும் காட்சி கொடுமையானது.
தொடர்ந்து வந்தால் துன்பமும் பழகிவிடும் என்பதற்குச் சாட்சியாக அக்காலத்தில் யாழ் மக்களிடம் ஒரு பழக்கம் உண்டாயிற்று. குழிக்குள் இறங்க ஓடும் அவசரத்திலும், அவர்கள் மறக்காமல் கையில் “டிரான்ஸிஸ்ரர் றேடியோவை” எடுத்துக் கொள்வார்கள்.
அந்த நேரத்தில் அது எதற்கு? என்று நீங்கள் நினைப்பீர்கள். விமானத்திலிருந்து குண்டு வீசுவோர் மேலிருந்தபடியே தமக்குள் “வயலஸ்” கருவிகளில் பேசுவார்கள். நாம் சரியாக “றேடியோவை செற்” பண்ணினால் மேலிருந்து அவர்கள் பேசுவது எங்களுக்குத் தெளிவாகக் கேட்கும்.
ஒரு விமானத்தில் இருப்பவர், அடுத்த விமானத்தில் இருப்பவர்க்கு, சில அடையாளங்களைச் சொல்லி “இன்ன இடத்தில் புலிகளின் முகாம் தெரிகிறது அதற்கு குண்டுவீசு!” என, சிங்களத்தில் சொல்வார். அது எங்களது வானொலி மூலம் கேட்க, அவர் சொன்ன அந்த அடையாளங்கள் எங்கள் வீட்டுச் சூழ்நிலையில் தெரிகிறதா? என ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்காகத்தான் மக்கள் “றேடியோவோடு” பங்கருக்குள் இறங்கும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.
விமானங்கள் குண்டுவீசும் வரையில், குழிகளுக்குள் இருந்துவிட்டு அவை போனதும் வெளியே வந்தால், அண்டை அயல்களில் சில வீடுகள் உடைந்திருக்கும், சில ஓலச்சத்தங்கள் கேட்கும், அம்புலன்ஸ்கள் இல்லாத காரணத்தால், காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு ட்றக்ரர்களும், லாண்ட்மாஸ்டர்களும் ஆஸ்பத்திரி நோக்கி ஓடும்.
கேள்வி :
அப்படி விமானங்களிலிருந்து வீசப்படும் குண்டுகள் மக்கள் இருக்கும் “பங்கர்களுக்குள்” விழாதா?
பதில் :
விழாது என்று யார் சொன்னது? பங்கர்களால் குண்டுகள் நம்மீது விழக்கூடிய வாய்ப்பு சுருக்கப்படுவதும், விழுந்து வெடிக்கும் குண்டினுடைய துண்டுகள் நம்மைத் தாக்கும் வாய்ப்பு குறைக்கப்படுவதும் மட்டுமே பங்கரால் ஏற்படும் நன்மைகள். அவ்வளவே!
கேள்வி :
உங்களுக்குத் தெரிந்து எங்காவது மக்கள் அமர்ந்திருந்த “பங்கருக்குள்” குண்டேதும் வீழ்ந்ததுண்டா?
(தொடரும்)