பண்பான தமிழர் இனம் உதவவேண்டும்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

பண்பான தமிழர் இனம் உதவவேண்டும்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
அவுஸ்திரேலிய மண்ணில் நிகழும் காட்டுத் தீ அனர்த்தத்திற்காய் எமது சேய்க் கழகமான அவுஸ்திரேலியக் கம்பன்கழகம் நிகழ்த்த இருக்கின்ற 'அமிர்த வருஷினி' நிகழ்வு வெற்றி பெற எமது வாழ்த்துகள்.
💦  💦  💦  💦  💦
லகமெலாம் அதிர்வுகொள ஓங்கி எங்கும்
உயிர் பறித்து வானோங்கி எழுந்து நிற்கும்
தழலதனைக் கண்டு மனம் தகிக்குதம்மா!
தாளாது நெஞ்சமெலாம் வலிக்குதம்மா!
நலமிழந்து எங்களுடை ஈழமக்கள்
நாற்றிசையும் ஓடுகையில் வருக! என்றே
பலமளித்த மண் அதனின் துயரம் கண்டு
பரிதவித்தோம் கண்சோரப் பணிந்து நின்றோம்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலந்தன்னில்
காலூன்றி நிலைத்திட்ட தமிழர் தங்கள்
உள்ளார்ந்த அறிவதனால் ஓங்கும் வேதம்
உணர்ந்தேதான் அற்புதங்கள் பலவும் செய்தார்
நல்லார்கள் வாழ்ந்திடவே யாகம் ஆற்றி
நலமுறவே தேவர்களை மகிழச்செய்து
பொல்லாத ஐந்தான பூதம் தன்னை
போற்றித்தான் இயற்கையினை நெறியே செய்தார்.

வாழ்வித்த மண்ணதனைத் தீயே கொள்ள
வாய்மூடிப் பார்த்திருத்தல் மனிதமாமோ?
தாழ்வான இனமென்று நம்மைச் சொல்வார்
தரணியிலே அவர் கைகள் பிடித்து நாமும்
மாளாத துயரதனில் உடனாய் நிற்போம்
மனத்துயரம் தவிர்த்திடுவீர் என்று சொல்லி
பாழான துயர் களைய உடனே எங்கள்
பண்பான தமிழர் இனம் உதவவேண்டும்.

அற்புதமாம் வான்மழையை ஈர்க்கவல்ல
'அமிர்தவரு ஷினி'என்னும் ராகம்பாடி
பற்பலவாம் அற்புதங்கள் செய்த எங்கள்
பழமைமிகு பெரியோர்கள் வழியைப்பற்றி
நற்புடனே எம் கம்பன் கழகந்தன்னின்
நயமிகுந்த சேய்க்கழக அன்பரெல்லாம்
உற்புகுந்து அப்பெயரால் உதவும் செய்தி
உளம் மகிழ எம் செவியில் வீழ்ந்ததம்மா!

மற்றவரின் துயரதனைத் தீர்க்கும் நல்ல
மனநிலைதான் அறமதனின் வேராம் என்பேன்
கற்றவர்கள் போற்றுகிற கம்பன்தன்னை
கடைப்பிடித்து வாழுகிற கழகத்தாரும்
அற்புதமாய் அவ்வழியில் நிற்றல்கண்டு
அகமகிழ்ந்து போயிற்று அரிதாம் உங்கள்
நற்பணியும் வெற்றி பெற நயந்து நாங்கள்
நல்ல இறைத் திருவடியைப் போற்றி நிற்போம்!
💦  💦  💦  💦  💦
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.