"மாமனிதன் புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தான்" -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

"மாமனிதன் புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தான்" -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-
 
 
(எமது உறவாய் நின்ற புதுவைக் கம்பன்கழகத் தலைவர் 'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி
முதலியார் அவர்கள் விண்ணைச் சேர்ந்த செய்தி கேட்டு இலங்கைக் கம்பன்கழகத்தினர்
வாடி நிற்கின்றனர். அவர் தமக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்)
 
யர் வானம் தனில் வாழும் உம்பரெல்லாம்
உவப்போடு மலர் மாறி சொரிந்து போற்ற
தயவோடு அவர் தம்மின் அன்பை ஏற்றுத்
தாழ்வில்லாப் பெருமையனும் விண்ணைச் சேர்ந்தான்
சயமான தன் நூறு அகவை தாண்டி
தன்னுடைய நிறைவாழ்வால் உலகுக்கெல்லாம்
நியமாகப் பல நன்மை செய்து நின்றோன்
நிறைவினிலும் தன் உடலை ஈந்தே சென்றான்.
 
உலகமெலாம் புகழ் கம்பன் கழகம் தன்னை
உயிரெனவே நினைந்து நிதம் வளர்த்த எந்தை
பலர் அறிய தமதுடைமை அனைத்தும் ஈந்து
பார் புகழப் புதுவையிலே கம்பன் தன்னின்
வளம் மிகுந்த கழகமதை நிமிரச் செய்து
வாஞ்சையுடன் தன் மகவாய் நினைந்து போற்றி
தளமதனில் புகழ் கொண்ட மூத்தோன் இன்று
தன்னிகரில் இறையடியைத் தனித்துச் சேர்ந்தான்.
 
கலைமகளும் அலைமகளும் போட்டி கொண்டு
கண்ணியனாம் இவன் வாழ்வில் வரங்கள் ஈந்து
விலையதிலா அறிவதுவும் வெற்றிதானும்
விளங்குகிற செல்வமொடு அனைத்தும் ஈந்து
தலைநிமிரக் கம்பனது கழகமெல்லாம்
தன்னிகரில் தலைவனிவன் என்று போற்ற
நிலையதுவாம் புகழ் கொண்டு நிமிர்ந்து நின்றான்
நேர் விதியால் விண்ணுலகு அழைக்கச் சென்றான்.
 
வாய் திறந்தால் கம்பனது பாடல் கொட்டும்
வளமான தமிழ்நூல்கள் வந்து முட்டும்.
ஆய்ந்தறிந்து கற்றவரும் அதிசயிக்க
அத்தனையும் மனத்திருந்து சொல்லி நிற்பான்.
காய்ந்து பிழை உரைப்பவரைக் கடிந்து நல்ல
கனிவான குரலாலே அவரை மாற்றி
தேய்ந்த அவர் அறிவையெலாம் செழிக்கச் செய்வான்.
தெய்வமென வாழ்ந்த மகன் சென்றுவிட்டான்.
 
ஈழத்தில் கம்பனது கழகத்தார்கள்
இவர் எமது ஆளெனவே உறவு செய்ய
ஆழத்து அன்பதனால் எம்மை ஈர்த்தான்
அழைத்ததுமே இங்குற்றுப் பெருமை சேர்த்தான்.
சீலத்தில் உயர்ந்த மகன் சிறுமையில்லா
செழிப்போடு மலரெனவே அழகு செய்தோன்.
மாளத் தன் உடல்கூட பிறருக்கீந்தான்
மாமனிதன் புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தான்.
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.