வீசாதீர் ! - மஹாகவி து.உருத்திரமூர்த்தி
கவிதை முற்றம் 21 Jul 2019
ஏனப்பா,
நீர்தாம் உலகு நிலை மாறிப்
பாதாளத்
தாழ விழாமல் அதன் வாழ்வைக் காப்பவரோ?
வாழி, என் தாழ்மை வணக்கங்கள்
ஆள் சுருளும்
வெய்யிலிலே
நீர்போகும் வீதி நடைப் பாதையிலே
உய்யும் வகை தெரியா ஓர் மனிதன்,
கை இல்லான்,
தூங்குகிறான் போலக் கிடக்கின்றான்.
துன்புறுத்தி
வீங்கும் பசியால் விழுந்தானோ?
ஆங்கயலிற்
கொத்தவரும் காகத்தைப் பாரும்
குறை உயிரோ,
செத்த உடலோ – தெரியவில்லை.
சற்றெனினும்
நில்லாது, நெஞ்சில் நெகிழ்வேதும் காணாது,
சில்லறையில் ஒன்றைச் செருக்கோடு
செல்லுங்கால்
வீசிவிடுதல் விரும்பினீர்;
வேண்டாம், ஓய்,
கூசும் அவமதிக்கும் கொள்கையேன்?
ஆசை மிக
ஆதலினால், காசு கணீரென்றிட அதிரும்
காதுடையான்;
அன்னோன் கடுந் தூக்கம்
பாதியிலே
கெட்டுவிடக் கூடும்;
கெடுக்காதீர் பாவம், இம்
மட்டும் புவியை மறந்திருந்தான்;
கிட்டப்போய்
மெல்லக் குனிந்து இடுக.
இல்லையெனில் உம் பாட்டில்
செல்க.
இதுவே சிறப்பு.
▲▲▲