அதிர்வுகள் 14 | "வை திஸ் கொலவெறி?”

 
த்தமமான நிம்மதி ஒரு வாரம் கிடைத்தது.
சுன்னாகம் ஐயனார் கோயில் தொடர் சொற்பொழிவுக்காக,
யாழ்ப்பாணக் கம்பன் கோட்டத்தில்,
நீண்ட நாட்களின்பின் ஒரு வாரம் தங்கினேன்.
ஆலயத்தின் அறங்காவலர் நண்பர் குமாரவேல் அவர்கள்,
ஆயிரக் கணக்கில் மக்கள் கூடி,
என் பேச்சைக் கேட்ட “அந்த நாள்” ஞாபகத்தை மனதில் பதித்து,
இன்றும் அங்ஙனம் ஆகும் எனும் பெரிய கற்பனையோடு,
ஐந்தாண்டுகளாய் விடாமல் கோரிக்கை விடுத்து,
என் அலட்சியங்களையெல்லாம் சகித்துக் கொண்டு,
வேதாளத்தை முருக்கை மரத்திலிருந்து இறக்கிய,
விக்கிரமாதித்தனாய் வெற்றி கொண்டார்.
உத்தமமான நிம்மதி ஒரு வாரம் கிடைத்ததன் காரணம் இதுவே.
 

✦✦✦

அவரது விருப்பப்படி,
கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு அங்கு நிகழ்ந்தது.
பழமை பாராட்டி மேள, தாள, மாலை, மரியாதைகளுடன் வரவேற்று,
எனது உரையை ஆரம்பித்து வைத்தார்.
முதல் நாள் ‘மைக்’ கைகொடுக்காததால்,
மனம் சோர்ந்து போனேன்.
இரண்டாம் நாள் எனக்காக வெளியில் மேடையிட்டார்கள்.
அங்கும் அதே தோல்விதான்.
முன்பு அந்த ஆலயத்தில் எடுத்த வெற்றியை,
இம்முறை கெடுப்பதற்கு வந்திருப்பதாய் எண்ணி மருண்டேன்.
✦✦✦

அடுத்த நாள் எனது பிடிவாதத்தால்,
எங்கள் கழக அனுதாபி,
‘பட்டாசு’ மாமாவின் ஒலிபெருக்கி வந்து சேர்ந்தது.
எனக்கு உயிரும் வந்து சேர்ந்தது.
மெல்ல மெல்ல சபை பிடிபட்டு, நிறைவு நாள் அன்று,
எனது நிகழ்ச்சிக்கு அடுத்தாற்போல் இசைக்‘கோஷ்டி’ இருக்கவும்,
அதை அலட்சியம் செய்து ஆயிரக்கணக்கானோர்,
எங்கள் பட்டிமண்டபத்திற்குத் தந்த ஆதரவு,
யாழ் மண்ணில் மீண்டும் இலக்கியத்தை விதைத்துப் பார்த்தால் என்ன? எனும்,
ஆர்வத்தைத் தூண்டிற்று.
✦✦✦

இந்தக் கட்டுரையில் நான் சொல்ல வந்த விடயம் வேறு.
ஒரு முன்னுரைக்காய் மேல் அடித்தளம் இட்டேன்.
கோட்டத்தில் என் ஒரு வார வாழ்வு,
இன்பத்தின் எல்லை!
பேசவும் வேண்டுமோ?” என,
நண்பர்கள், மாணவர்கள் எல்லோரும்,
பிரிவின் பின்னான கூடலைத் திகட்டத் திகட்டக் கொண்டாடினர்.
அண்மையில் இதயம் அறுத்த (பைப்பாஸ் ஷேஜரி),
என் இனிய நண்பன் தன்னைப் பற்றிய கவலையின்றி,
ஓடியோடி உணவு தந்து உபசரித்தான்.
பல மைல்களுக்கு அப்பாலிருந்து உரைகேட்க வந்து,
மற்றை நண்பர்கள் உணர்வூட்டினர்.
இரவில் எனக்குக் காவலாய் வந்த நண்பர்கள் வாசுவும் மார்க்கண்டுவும்,
தமது ஒப்பற்ற இலக்கிய இரசனையால்,
எனது உறக்கத்தை நடுச்சாமம் ஒரு மணி வரை தள்ளி வைத்தனர்.
ஒரு வயிற்றுக்கு ஒன்பது வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது.
இந்த இனிய அனுபவங்களைப் பதிவதற்காகவும்,
இக்கட்டுரையை நான் எழுதவில்லை.
அப்படி என்னதான் எழுதப்போகிறாய் என்கிறீர்களா?
சொல்கிறேன்!
✦✦✦

நீண்ட நாட்களின் பின்,
இன்றைய யாழ்ப்பாணத்தை நிறுக்க,
இவ் வாய்ப்பு வழிவகுத்தது.
ஒட்டு மொத்த சமூக நிலை, மண்ணின் ஒழுக்கம்,
இன்றைய இளையோர் உலகம் என,
மூன்று விடயங்களை ஆழக் கவனித்ததில்,
ஒரு சோற்றுப் பதமாய்க் கிடைத்த சில பதிவுகளே,
இவ்வார அதிர்வாகின்றன.
✦✦✦

அதிர்ச்சிதரும் காட்சி ஒன்றை,
கணினியில் காண்பித்தான் நண்பனொருவன்.
ஒரு வீதிவிபத்தில் மாட்டி, வீழ்ந்து கிடக்கிறான் ஓர் இளைஞன்.
விபத்து கடுமையானதாய் இருக்கும்போல!
அவனது காதிலிருந்தும், மூக்கிலிருந்தும்,
இரத்தம் முகம் பூராகவும் வடிகிறது.
உயிருக்காய்ப் போராடிக் கிடக்கிறான் அவன்.
சுற்றிவர, ஆண்களும் பெண்களுமாய்ப் பெருங்கூட்டம்.
அத்தனை பேரிலும், வீழ்ந்து கிடக்கும் அவனுக்கு உதவ,
எவரும் முன்வந்ததாய்த் தெரியவில்லை.
பதிலாக, தம் கைப்பேசிக் ‘கமராவில்’,
ஓடியோடி பல கோணத்திலும்,
அவன் பரிதாபத்தைப் பதிவாக்க,
பலரும் முனைந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தேன்.
✦✦✦

அவலங்களுக்காய்க் குரல் கொடுத்துவரும் இனத்திடம்,
அவலத்தை இரசிக்கும் மனப்பாங்கு எப்படி வந்தது?
அவலங்களைக் கண்டுகண்டு மனம் மரத்துவிட்டதா?
அன்றேல் எவர் எப்படிப் போனாலென்ன என்னும் அலட்சியமா?
அல்லது எதையும் செய்தியாக்கி மகிழும் வக்கிரபுத்தியா? புரியவில்லை.
தற்செயலாய்க் காரில் அடிபட்ட ஒரு நாய்க்காகக் கதறியழுத,
அன்றைய எனது கிராமப் பெண்கள் மனதில் வந்தார்கள்.
இங்கு என்ன நடக்கிறது?
நாம் எங்கு செல்கிறோம்?
✦✦✦

மற்றது ஒரு பத்திரிகைச் செய்தி.
பருத்தித்துறைக்கு அண்மையில்,
வீதியோரத்தில் ஒரு காதலனும் காதலியும்,
தனிமையில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தனராம்.
அன்றைய யாழ்ப்பாணத்தில் நடந்திருக்க முடியாத விடயம்.
அது கூடப்பரவாயில்லை.
இயற்கை உந்துதல் என்று விட்டுவிடலாம்.
தொடர்ந்த செய்திதான் என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
திடீரென, அங்கு ஓட்டோவில் வந்த மூன்று இளைஞர்கள்,
அந்தக் காதலனை அடித்துப் போட்டுவிட்டு,
அவன் கண் முன்னாலேயே அக்காதலியைக் கற்பழித்திருக்கின்றனர்.
செய்தவர்கள் நம் இளைஞர்கள்.
இதையே, இராணுவத்தினர் செய்திருந்தால் கொதித்திருப்போம்.
கூக்குரலிட்டிருப்போம்.
ஊர்வலங்கள் நடத்தி, உலகுக்கு முறையிட்டிருப்போம்.
செய்தவர்கள் நம்மவர்கள் என்பதால்,
மேற்சொன்ன எந்த அதிர்வுகளும் சமுதாயத்தில் இல்லை.
✦✦✦

எல்லோரும் மேற்சம்பவத்தை செய்தியாய் வாசித்துவிட்டு,
சிறுகதையாய்ப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
யாராம்? எவராம்? பிறகென்ன நடந்ததாம்? எனும்,
வீணர்களின் ‘விசர்’ விசாரனைகள் கேட்டு சலித்தேன்.
✦✦✦

யாருக்கோ நடந்ததுதானே! எனும் அலட்சியம் யாவரிடத்திலும்.
“வீரமிலா நாய்கள்! விலங்காம் இளவரசன் தன்னை மிதித்து,
தராதலத்திற் போக்கியே பொன்னை,
அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?” என்று,
கொதித்த பாரதியாரின் கோபம் புரிந்தது.
✦✦✦

நம் மண்ணில்,
உயிரையும் துச்சமென மதித்து,
நாளைய இளைஞர்களுக்காக
நேற்றைய இளைஞர்கள் செய்த தியாகங்களுக்கு ஓரளவில்லை.
அந்தத் தியாகங்கள் விழலுக்கிறைத்த நீராகிவிடுமோ? என,
எண்ண வைக்கும் மற்றும் இரு சம்பவங்கள்.
ஒன்று, என்னுடைய முன்னை நாள் ஆசிரியரொருவர் சொன்னது.
✦✦✦

கனடாவிலிருந்து விடுமுறைக்காக அவர் வந்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் தலைமைக் கல்லூரி என,
பெயர் பெற்ற எங்கள் கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியர் அவர்.
கட்டுப்பாட்டிற்குப் பெயர் போனவர்.
அவர் வந்ததை அறிந்து,
கல்லூரியின் ‘ஸ்போட்ஸ்மீற்றுக்கு’ அவரை அழைத்திருக்கிறார்கள்.
மகிழ்ச்சியோடு சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
அதை வருத்தத்தோடு என்னிடம் சொன்னார்.
✦✦✦

வெற்றி பெற்ற இல்ல மாணவர்கள்,
தாம் பெற்ற பரிசுக் கோப்பையைக் கொண்டுசென்று,
அதிபர், ஆசிரியர்களிடம் வழமைபோல காசு சேர்த்திருக்கிறார்கள்.
ஆசிரியரும் இளைஞர்களின் உற்சாகத்தைக் கண்டு பணம் போட்டிருக்கிறார்.
அதிபரும் ஆசிரியரும் அருகருகே இருக்க,
பணம் சேர்த்து, அவர்களைத் தாண்டிச்சென்ற மாணவர்கள்,
அதிபர், ஆசிரியர்கள் பார்த்திருக்க,
அதே ‘கப்பினால்’ அருகிலிருந்த கல்லூரியின் யன்னல் கண்ணாடிகளை,
உடைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
✦✦✦

வெற்றி பெற்றால் எதுவும் செய்யலாம் என்னும் மதர்ப்பு!
அரசியலாளர்களிடம் பயின்றிருப்பார்களோ!
செய்தவர்கள் ஒரு சிலர்தான்.
இழப்புச் சிறியதுதான், பிரச்சினை அதுவல்ல.
இந்தச் சிறிய சம்பவத்தில்.....
அலட்சியம், சமூகப் பொறுப்பின்மை, ஆசிரிய - மாணவ அவல உறவு,
வெற்றியைக் கொண்டாடத் தெரியாத இழிநிலை,
கல்வி நிர்வாகத்தின் இயலாமை என,
எத்தனை விடயங்கள் பதிவாகியுள்ளன.
✦✦✦

கட்டறுத்துத் திமிற நினையும் இளமையின் வேகத்தை,
நான் விளங்காதவன் அல்லன்.
ஆனால், இச்செயல் வரம்பு கடந்தது.
வெற்றியைக் கொண்டாடுபவர்கள்,
வெற்றி தந்த இடத்தையே சிதைத்து மகிழ்வதின்,
வக்கிரத்தை விளங்க முடியவில்லை.
இதே மனநிலை, நாளை வீட்டிலும், நாட்டிலும்,
உலகத்திலும் நிகழுமானால்,
நம் கதி என்னாவது?
பிழைகள் நிகழ்வது இயல்புதான்.
அதனை, கட்டுப்படுத்த முனையாத சமூக நிலை,
இயல்பல்லவே!
எங்கு செல்கிறோம் நாம்?
✦✦✦

அடுத்த சம்பவம் ........
பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த விடயம் இது.
இரு கல்லூரிகளுக்குமிடையிலான,
‘கிரிக்கட் மச்சில்’ ஏற்பட்ட குழப்பத்தில்,
பலரும் பார்த்திருக்க ஓர் இளம் குடும்பஸ்தன்,
அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சூழ்ந்திருந்த மைதானத்தில்,
இவ் அவலம் நடந்திருக்கிறது.
அச்செய்தி வெளியான அன்று,
பத்திரிகைகள் விறுவிறுப்பாய் விற்பனையாயின.
✦✦✦

நான் அடுத்த நாள் பத்திரிகையை ஆவலோடு பார்த்திருந்தேன்.
ஊர் கொதித்தெழுந்ததா? தலைவர்கள் கண்டித்தார்களா?
குற்றவாளிகள் பிடிபட்டார்களா? என்பவை பற்றி அறிய.
அதுபற்றி எந்தச் செய்தியும் வந்ததாய்த் தெரியவில்லை.
சம்பவத்தைக் கண்டித்து.
மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலமாவது நடக்கும் எனும்,
என் எதிர்பார்ப்பும் கனவானது.
✦✦✦

தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர்,
வாயே திறக்கவில்லை.
கோபம், பகை, அடிபாடு எல்லாம் எப்போதும் இருந்தவைதான்.
ஆனால், விளையாட்டை வினையாக்கி,
ஓர் உயிரைப் பறிக்கும் அளவிற்கான வக்கிர மனம்,
இளையோர் மனதில் எங்கிருந்து வந்தது?
பரிதவித்து ஓருயிர் சாக, பார்த்திருக்கும் இழிநிலையை,
நம் இனம் எப்போது பெற்றது?
✦✦✦

1000 பேர் இருந்த சபையில்,
50 பேர் ஒருவனை அடித்துக் கொல்ல முடியுமென்றால்,
எஞ்சியிருந்த 950 பேரினதும் வலிமையை என் சொல்ல?
நபுஞ்சகர்கள்!
எங்கு கற்றோம் இவ் இழிவை?
நாம் எங்கு செல்கிறோம்?
✦✦✦

பிழையில்லாத சமுதாயம் எங்கும் இல்லை என்பது உண்மை தான்.
தெரிகிறது. ஆனால்,
பிழையை அங்கீகரிக்கிற சமுதாயம் இருக்கவேகூடாது.
மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் வெறும் விஷ வித்துக்கள்தான்.
ஆரம்பத்திலேயே கிண்டி எறியாவிட்டால்,
இவ் வித்துக்கள் நாளை விருட்சங்களாகும்.
அப்போது கதிகலங்கிப் போவோம்.
பிழை செய்பவர்களின் தொகை மிகச்சிறிதுதான்.
பெரிதாய் இருக்கும் எஞ்சிய இளையோர்தான்,
இந்தக் களைகளை அகற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.
✦✦✦

பாவத்தைப் பார்த்திருப்பதும் பாவம்தான்!
அடக்குமுறைகளுக்கு அஞ்சி, கும்பிட்டு வாழும் குணம்,
கொஞ்சம் கொஞ்சமாய் நம் இரத்தத்தில் ஊறிவிட்டதோ?
இளையோரே! நாளைய வாழ்வு உங்களது.
பாவத்தைப் பார்த்திருக்கப் பழகுவீர்களேயானால்,
நாளை அப்பாவம் உங்கள் வீட்டிலும் புகும்.
வெளியிலிருந்து வரும் எதிரிகளைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
உள்ளிருக்கும் எதிரிகளை உருவியெறிய முன்வாருங்கள்.
நம்மைத் தாழ்த்த நினைப்போரிடமிருந்து,
விடுதலை பெற நினைப்பதுதான் விடுதலைப் போராட்டமெனின்,
இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான்!
✦✦✦✦✦✦✦✦✦✦✦

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்