அரசியற்களம் 14 | சத்யமேவ ஜெயதே!

அரசியற்களம் 14 | சத்யமேவ ஜெயதே!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

ண்மையின் பலம் மிகப் பெரியது.
வல்லவர் எவரானாலும் வாய்மையின் முன்,
அவர் பணிந்தேயாகவேண்டும்.
இதுவரை வாய்மையை வென்றார் எவரும் இலர்.
அதனாற்றான் 'சத்யமேவ ஜெயதே' என்ற,
வடமொழித்தொடர் உருவாயிற்று.
'வாய்மையே வெல்லும்' என்பது அத்தொடருக்கான அர்த்தம்.
இந்தியத் தேசிய மகுடவாசகமாக கொள்ளப்படும் இவ்வாசகம்,
தேசியச்சின்னமான முச்சிங்கங்களின் கீழ் பதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் இலக்கியப் புலவர்கள் அத்தனைபேரும்,
ஏதோ விதத்தில் இக்கொள்கையைத் தம் நூலில் பதிக்கத் தவறினாரல்லர்.
 

☸☸☸

காந்தி தேசத்தின் இத்தேசிய மகுடவாசகம்,
இன்று அவர்தம் அரசியலில் இல்லாமல் போனது துரதிஷ்டம்.
அது அவர்கள் பிரச்சினை!
இன்று எங்கள் தேசத்திலும்,
அக்கொள்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
முப்பதாண்டுப் போரில்,
அப்பாவித் தமிழர்தம் உதிரத்தால் விளைந்த
அழிவு உரத்தைப் பயன்படுத்தி,
பதவிச்சுகம் என்னும் பாத்தி அமைத்து,
சுயநலப் பயிர் விளைக்க,
நம் தமிழ்த்தலைவர்கள் இன்று தமக்குள் போட்டி போடுகின்றனர்.
'வாய்மையே வெல்லும்" எனும் நம்பிக்கை,
அவர்களுக்குச் சிறிதும் இருப்பதாய்த் தெரியவில்லை.
☸☸☸

தலைமையால் மக்கள் பிழைத்தார்களோ?
மக்களால் தலைமை பிழைத்ததோ?
மொத்தத்தில் கடந்த சில தசாப்தங்களாக,
வாய்மையை மறந்து,
'பொய்மையே வெல்லும்" எனும் புதிய கொள்கையோடு,
நம் தலைவர்கள் தறிகெட்டு நடக்கத் தலைப்பட்டனர்.
அவர்தமக்கு மக்கள் விலைப்பட்டனர்.
உணர்ச்சியால் மக்களை உருக்கி,
பொய்மையால் வெற்றியைப் பெருக்கி,
உண்மையைக் கருக்கி,
உயர்ந்திட அவர் செய்த முயற்சி,
ஒவ்வொருதரமும் தோற்றுப்போனது.
தமிழர்தம் அரசியல் சக்கரத்தில் காற்றுப்போனது.
பொய்யுரைத்துப் பொய்யுரைத்து,
தலைவர்கள் செய்தனர் சதி.
வீழ்ந்தது தமிழர்கள் விதி.
☸☸☸

ஒவ்வொரு முறையும் தம் சொந்தப்புத்தியால் ஆராயாது,
தலைவர்களின் பொய்யுரையை நிஜமென நம்பி,
ஏமாந்து, தமிழினம்பட்ட இழிவுக்கு ஓர் அளவில்லை.
ஊர் கூட்டித் தமிழீழக் கொள்கையை அறிவித்து,
தேர்தலில் பெருவெற்றி கண்டு,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற்று,
திடீரென மாவட்டசபைக்கு மனம் ஒப்பிச் சம்மதித்தது அக்காலக் கூட்டணி.
ஏற்றியவர்கள் தம் வசதி கருதி இறங்கிவிட,
அவர்களை நம்பி ஏறியவர்கள் இறங்க மறுத்து எழுச்சி கொண்டனர்.
அதனால் விளைந்ததுவே முப்பதாண்டுப்போர்.
எழுந்த அலைகள், எழுப்பியவர்களையும் மாய்த்தது வரலாறு.
☸☸☸

ஆயிரம் அனுபவம் பெற்றும்,
திரும்பத்திரும்ப தவறுநோக்கியே நம் தலைவர்கள் செயற்படுவது,
வேதனைக்குரிய விடயம்.
மீண்டும் ஒருதரம் புயல் கிளப்பி,
கெட்ட துன்பத்தை பட்டகாலிலேயே படவைக்க,
இன்றைய தலைவர்கள் செய்யும் முயற்சி,
எரிச்சல் தருகிறது!
☸☸☸

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.......
அப்படிச் சொல்வதே தவறு போல்த் தெரிகிறது.
அது இன்று தமிழரசுக்கட்சியின் வீட்டமைப்பு.
தமது செயல்களால் தமிழரசுக்கட்சி,
அதைப் பலதரம் உணர்த்தியும்,
பதவிக்காய் ஒட்டிக்கிடக்க பரிதவித்து நிற்கின்றன,
சேர்ந்த கட்சிகள்.-மானம் பெயர்ந்த கட்சிகள்.
இன்று கூட்டமைப்பின் முடிவு என்பது,
தமிழரசுக்கட்சியின் தனித்த முடிவே.
முடிவெடுப்பவர் யாரென்று முடிவாய்த் தெரியாமல்,
தமிழரசுக்கட்சிக்குள்ளும் தடுமாற்றங்கள்.
சம்பந்தன், சுமந்திரன் இவ்விருவர் தம் முடிவே,
இன்று கட்சியின் முடிவாய்க் கருதப்படுகிறது.
அதற்காம் ஆயிரம் உதாரணங்களை அடுக்கலாம்.
☸☸☸

அமெரிக்கச் சார்பு பெற்று இயங்கும் சுமந்திரன்,
'மீகாமனாய்" சுக்கான் பிடிக்க,
கப்பலின் 'கப்டனாய்" பெயரளவில் இயங்கும் சம்பந்தன்,
அவர் செலுத்தலில் ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது உலகறிந்த உண்மை.
ஜனவரி எட்டில் நடந்த புரட்சியின் பின்,
ரணிலுக்குச் சார்பாக,
மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையை,
ஐ.நா. சபை ஆறுமாதம் ஒத்தி வைத்தபொழுது,
அதனை ஆதரித்த தன்மையிலும்,
அவசரமாய்ச் சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்க வைத்த முடிவிலும்,
ஐ.நா. மனித உரிமை அறிக்கை வெளியிடப்படுவதன் முன்னரே,
கலப்பு நீதிமன்ற விசாரணையே வேண்டும் என்று கேட்ட தெளிவிலும்,
நடந்தது இன அழிப்பில்லை எனும்,
இலங்கை அரசின் கருத்தை முந்தி நின்று வழிமொழிந்த தன்மையிலும்,
தற்போது உள்ளக விசாரணையை ஒப்பி வரவேற்கும் வேகத்திலும்,
அமெரிக்கச் சார்பாளராய் சுமந்திரன் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டதோடு,
கப்பலை அவரே ஓட்டுகிறார் எனும் உண்மையையும் தெளிவுற உணர வைத்தார்.
☸☸☸

அது அவர்கள் பிரச்சினை.
சமஷ்டிக்கொள்கையை முன் வைத்துத் தேர்தலில் குதித்து,
அக்கொள்கையை மருந்துக்கும் ஏற்காதவர்களுக்கு,
மனம் ஒப்பி ஆதரவளித்து,
தாங்களே தமிழர்களின் தனித்தலைவர்கள் என உரைத்த பொய்யை மறந்து,
தேசியத்தலைவர்களாகி எதிர்க்கட்சித்தலைவர் பதவியேற்று,
நடந்து முடிந்த அழிவுகளுக்கு,
ஐ.நா.வில் சர்வதேச விசாரணை வேண்டுமென முன்னர் வலியுறுத்தி,
பின்னர் உள்ளக விசாரணையை வரவேற்று,
ஓரிரு மாதங்களுக்குள் இவர்கள் செய்யும்,
ஒப்பற்ற பொய்மைகளுக்கு ஓர் அளவேயில்லை.
இவர்தம் களவே எல்லை.
☸☸☸

இத்தனை பொய்களும் எதற்கு?
அத்தனையும் 'சத்யமேவ ஜெயதே' எனும் கொள்கை மறந்த குற்றங்கள்.
ஏன் இந்த வீணான ஒளிப்பு மறைப்புக்கள்?
இனத்திற்கு நன்மை நடக்குமானால் எதுவும் சரியே!
அமெரிக்கச் சார்புபெற்ற பேரினப் பெருங்கட்சிகள் ஒன்றிணைந்த அரசு.
உலகின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து,
தமிழர்க்கு வாழ்வளிக்கத் தயாராகும் இன்றைய நிலையில்,
அமெரிக்கச் சார்புபெற்ற ஒருவர்,
தமிழர்க்குத் தலைமை ஏற்பதும் உகந்ததே!
அதீத உணர்ச்சிகளைக் களைந்து,
அவர்தம் வழிகாட்டலில் தமிழினம் இயங்குவது தவறில்லை என்றே படுகிறது.
ஆனால் இவ் உண்மைகளை வெளிப்படுத்துவதில் இவர்களுக்கு ஏன் இந்தத் தயக்கம்?
☸☸☸

ஈழத்தமிழர் இனம்,
நடந்து முடிந்த பேரழிவுகளுக்கான நீதியினை,
இப்போதைக்கு முழுமையாய்ப் பெறமுடியாது எனும் உண்மையையும்,
தனி ஈழம், சமஷ்டி என்பவையெல்லாம் வெறும் கனவே எனும் உண்மையையும்,
ஒரே தேசத்துக்குள் ஓரளவு உரிமை பெற்று வாழ்வதே,
இப்போதைக்குச் சாத்தியம் எனும் உண்மையையும்,
இறந்தகால அழிவைவிட எதிர்கால வாழ்வு முக்கியம் எனும் உண்மையையும்,
வலிமை பெற்ற வல்லரசும். உலகும் நமக்குச் சார்பாய்,
ஓரளவு குரல் கொடுக்க முன்வருவதை பயன்படுத்துவதைத் தவிர,
இப்போதைக்கு வேறு வழியில்லை எனும் உண்மையையும்,
புலிகள் செய்த தவறைப் போல,
கைக்கெட்டி வந்த வாய்ப்புக்களைக் களைந்து விட்டு,
கைகட்டி நிற்பதில் அர்த்தமில்லை எனும் உண்மையையும்,
காலமும், இடமும் அறிந்து நடப்பதே கற்றோர்தம் கடமை எனும் உண்மையையும்,
பொய்யின்றி வெளிப்பட உரைப்பதில் இவர்களுக்கு என்ன தயக்கம்?
☸☸☸

இன்னும் புலிகளின் பிரதிநிதிகளாய்த் தம்மை இனங்காட்டி,
மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்பி வளம் பெற்று,
வாக்குத்தேட வழி சமைக்காமல்,
புதியதோர் உலகம் செய்யப் புறப்பட்டோம் எனும் உண்மையை உரைத்து,
'சத்யமேவ ஜெயதே' எனும் கொள்கையில் மனம் வைத்து இவர்கள் நின்றால்,
சத்தியத்தின் வெற்றி இவர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.
☸☸☸

மற்றொன்று.
இன்று தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்ற,
மற்றொரு தமிழ்த்தலைவராய்த் திகழ்பவர்,
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள்.
தனது தோற்றத்தாலும், துணிவாலும் மக்களைக் கவர்ந்தவர் இவர்.
நீதிபதியாய் இருந்த போதும், ஓய்வின் பின்னரும்,
இலக்கிய, சமயக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள்,
தமிழ் மக்களைக் கவர்ந்திழுத்தன.
சமுதாய அக்கறையாளராய்த் தமிழினம் இவரைஇனங்கண்டது.
இன்றைய நிலையில் படித்த, ஆளுமைமிக்க, செயலாற்றலுள்ள, துணிந்த,
ஒரு தலைவரின் தேவை உணரப்பட,
வடக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராய் வரும்படி,
சமூகப்பிரமுகர்களிடமிருந்து இவருக்கு அழைப்பின் மேல் அழைப்பு வந்தது.
☸☸☸

'காத்திருந்தவன் மனைவியை நேற்று வந்தவன் கொண்டு போவதா?' என்று,
கூட்டமைப்புக்குள் சில தலைவர்கள் அந்நேரம் கொதித்தனர்.
தம் தியாகத்தகுதிகள் சொல்லி இவர் வருகைக்குத் தடைவிதித்தனர்.
நீதிபதியும் முதலில் ஒப்புக்கு அக்கோரிக்கையை மறுத்தார்.
பின்னர் ஒன்றுபட்டு அழைத்தால் வருவேனென உரைத்தார்.
முடிவில் அரசியலில் குதித்தார்.
அதிகாரத்தைப் பிடித்தார்.
☸☸☸

பதவிக்கு வந்தநாள் தொடக்கம்
அவருக்குப் பல பிரச்சினைகள்.
அகமும், புறமுமாக மோதல்கள் கிளம்ப
முட்டுப்பட்டார் அவர்.
நிர்வாகத்தில் குட்டுப்பட்டார் அவர்.
☸☸☸

அடுத்தடுத்து ஆயிரம் பிரச்சினைகள் அவருக்கு.
போராடிப்பெற்ற மாகாணசபை அவர் தலைமையில்,
வேரோடி விளங்காது வெம்பிற்று.
தமிழினமோ இன்னும் அவர் தழைப்பார் என நம்பிற்று.
ஆளுநருடன் பகை.
செயலாளருடன் பகை.
போராளிக்கட்சிகளுடன் பகை.
புலம்பெயர்ந்தாரோடு பகை.
புதிய பிரதமருடன் பகை என்று,
அவரது பகைப் பட்டியல் நீண்டு,
இன்று தனைக்கொணர்ந்த தமிழரசுக்கட்சியுடனேயே,
முட்டி மோதி நிற்கிறார் அவர்.
☸☸☸

நடந்து முடிந்த தேர்தலில்,
வாழ்வளித்த கட்சிக்கு வாக்குக் கோராமல்,
தனித்துவம் காத்துத் தனித்தார்.
'எவர் வந்தாலும் அவருடன் சேர்ந்து இயங்குவேன்' என்றும்,
'வாக்களிக்க வீட்டைவிட்டு வெளியே வாருங்கள்!' என்றும்,
இரட்டுற அவர் விடுத்த அறிக்கைகளின்,
உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலும்,
தேர்தல் நேரத்தில் பிரச்சினையைக் கிளப்பாமல்,
தமிழரசுக்கட்சி தணிந்து நின்றது.
பின்னர் பார்க்கலாம் எனத் துணிந்து நின்றது.
☸☸☸

முதலமைச்சரின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி,
கூட்டமைப்புக்கு மக்கள் பேராதரவு தர,
'தேர்தல் முடியும் வரை நான் ஊமை, அதன் பின்தான் பேசுவேன்' என்றவர்,
தொடர்ந்தும் ஊமையானார்.
தேர்தல் வெற்றியும், எதிர்க்கட்சித்தலைவர் பதவியும்,
கூட்டமைப்பைப் பலப்படுத்த,
மாவை, சுமந்திரன் போன்றோர் தமது கட்சிக் கூட்டத்தில்,
வெளிப்பட முதலமைச்சர்மேல் விமர்சனம் வைத்து,
விசாரணையை வேண்டி நின்றனர்.
☸☸☸

ஊடகங்கள் ஒன்றுபட்டு இப்பிரச்சினை பற்றிய செய்திகளை,
ஊருக்குரைத்தன- உண்மையை வாரி இறைத்தன.
அப்போதும் முதலமைச்சர் முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைத்து,
உண்மை உரைக்கும் துணிவில்லாமல்,
'எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை, ஒன்றாய்த்தான் இருக்கிறோம்' என,
பொய் ததும்ப அறிக்கை விட்டார். உண்மையதன் நெறி கைவிட்டார்.
இவ் அறிக்கை வந்து ஓரிரு நாட்கள் முடியும் முன்னரே,
தமிழரசுக்கட்சியை மறைமுகமாய்ச் சாடி,
யாழ் இந்துக்கல்லூரி விழாவில் அவர் பேசிய பேச்சு,
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
☸☸☸
 
'ஓரிருவர் தாம் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். வரும் தேர்தலில் நாட்டாமை முறைத் தெரிவுகள் தவிர்க்கப்பட்டு நிர்வாகத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லது கற்றத்தேற முடிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். நேர்மையாய்ச் செயற்படக்கூடியவர்களும், விலை போகாதவர்களும் தெரிவுசெய்யப்பட வேண்டும். எங்கள் கட்சி என்பதால் அவர் எப்படிப்பட்டவர் என்றாலும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிலை ஏற்படக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் நலம் சார்ந்தவர்களே தெரிவுசெய்யப்பட வேண்டும். எமக்கு இப்போது அவசியமாகத் தேவைப்படுவது, ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மையானதுமான ஓர் அரசியல் கட்டமைப்பாகும். நான் ஒரு அரசியல்வாதி அல்லன் எந்தக் கட்சி சார்ந்தவனும் அல்லன்.'
இதுவே முதலமைச்சர் உரையின் சாரம்.
அவர் யாரை அடிக்க விரும்புகிறார் என்று அனைவருக்கும் தெரிகிறது.
மற்றவர்கள் மேல் அவர் சாட்டியிருக்கும் குற்றங்கள் பல,
அவரிடமே பொருந்தியிருப்பது தெரியாமல்,
பொங்கும் தன் மன உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார் அவர்.
☸☸☸

'ஓரிருவர் தாம் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.'
மாகாண அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிப்பதில் முதலமைச்சர் இதைத்தான் செய்தார்.
'நிர்வாகத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லது கற்றத்தேற முடிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.'
இன்று வரை மாகாணசபை நிர்வாகம் மடங்கிக் கிடப்பதற்கு,
முதலமைச்சரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் என்பது அனைவரதும் ஒருமித்த முடிவு.
'நேர்மையாய்ச் செயற்படக்கூடியவர்களும், விலை போகாதவர்களும் தெரிவுசெய்யப்படவேண்டும்.'
தன் தனிப்பட்ட செயலாளர் பதவியைத் தவறான உறவினர்க்குக் கொடுத்ததில் தொடங்கி,
இப்படியான பல குற்றச்சாட்டுகள் அவர் மேலே சொல்லப்பட்டன.
'எமக்கு இப்போது அவசியமாகத் தேவைப்படுவது, ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மையானதுமான ஓர் அரசியல் கட்டமைப்பாகும்.'
இதில் முதலமைச்சர் எங்கு பொருந்துகிறார் என்பது பலரதும் கேள்வி.
'நான் ஒரு அரசியல்வாதி அல்லன் எந்தக் கட்சி சார்ந்தவனும் அல்லன்.'
கூட்டமைப்பின் சார்பாய் வீட்டுச்சின்னத்தில் நின்று வெற்றி பெற்று,
அரசியல்வாதியாய் அனைத்து உலகத் தலைவர்களையும் சந்தித்து வரும் இவர்,
இக்கூற்றை எங்ஙனம் சொல்கிறார் என்பது பலரையும் விழி உயர்த்த வைத்திருக்கிறது.
இப்படியாய் மற்றவர்களை வீழ்த்த முதலமைச்சர் எறிந்த வினாக்கள்,
'பூமராங்" ஆகி அவரையே வந்து தாக்கியிருக்கின்றன.
☸☸☸

பொய்மையின் விளைவு இது!
நீதியரசாரய் இருந்தபோது யாருக்கும் அஞ்சாமல் துணிந்து உண்மை உரைத்தவர்,
இன்று அரசியல்வாதியானதும் 'சத்யமேவ ஜெயதே"  எனும் கொள்கையை மறந்து நிற்கிறார்.
சத்தியத்தின் வெற்றியை யாரும் மறக்கலாம்.
'சத்திய வித்தகரே" மறக்கலாமா?
இந்த ஊமை விளையாட்டுக்களை உடன் நிறுத்தி,
'அரசியல் எனக்குப் பொருந்தவில்லை" என உண்மை உரைத்து,
ஒன்று அவர் அரசியலைத்துறந்து வெளிவரவேண்டும்.
அல்லது தான் இருக்கும் கட்சிக்குள் தவறுகள் நடப்பதாய் உணர்ந்தால்,
அவர்களைவிட, தன்னால் தமிழினத்துக்கு அதிக நன்மை செய்யமுடியும் என நினைந்தால்,
பொதுப்படப் பேசாமல் இன்னன்னார் குற்றவாளிகள்,
இவையிவை குற்றங்கள் என்று துணிந்து உரைத்து,
கட்சியை விட்டு வெளியே வந்து,
கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்துத் தலைமை தாங்கி,
புதியதோர் உலகம் செய்ய அவர் புறப்படவேண்டும்.
அங்ஙனம் அவர் புறப்பட்டால்,
நிச்சயம் தமிழ்த்தலைமையில் மாற்றம் வரும்.
தமிழர் தமக்கு ஏற்றம் வரும்.
☸☸☸

அதைவிடுத்து யாருடன் மோதுகிறார்?
ஏன் மோதுகிறார்?
யார் தூண்டி மோதுகிறார்? என்பது தெரியாமல்,
வெறும் கண்ணாமூச்சி விளையாட்டில் காலம் கழித்தால்,
அவர் பெருமை குன்றுவது நிச்சயம்.
'எவ்வாறான எதிர்ப்பையும், பழிச்சொல்லையும் ஏற்க நேர்ந்தாலும், 
அதுபற்றிக் கவலைப்படாமல் துன்பப்பட்ட தமிழ்மக்களுக்காக, எந்த மட்டத்திற்குச் சென்றும் செயலாற்றுவேன்.'
என்று இந்துக்கல்லூரியில் அவர் பேசியபேச்சு,
சத்தியத்தின் நம்பிக்கையில் பிறந்தது உண்மையானால்,
அவர் அதைச் சாதித்துக் காட்டவேண்டும்.
☸☸☸

மொத்தத்தில்,
தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் தலைவர்கள்,
வாய்மையின் வெற்றியை வழிமொழிந்து,
இனத்தைக் காக்கவேண்டும்!
தமிழரை மீட்கவேண்டும்!
'சத்யமேவ ஜெயதே'
☸☸☸☸☸
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.